Sunday, March 20, 2011

சலசலப்பு

சலசல வென்று சலங்கை குலுங்க
கலகல வென்று குலுங்கி நகைத்து
தளதள வென்றுடல் தாங்கிய கன்னி
மழைபொழி நீரிடை மகிழ்ந்து குதித்தாள்

விழவிழ நீர்த்துளி வியன்தரு உடலில்
பளபள வென்றுமே பருவம் மினுங்க
மளமள வென்றிடை மனதினில் ஏக்கம்
விளைவிளை என்று விளைந்திட அவனோ

எழஎழ நெஞ்சினில் இச்சையும்பெருகி
குளுகுளுவென்றுமே குலவிடத் தேகம்
அழகெழு மயிலென ஆடிடும் அவளை
தொழுதெனும் வேண்டத் தோன்றிட அவனோ

சளசள வென்றுமே நீரிடைபாதம்
வழவழ வென்றுமெ வழுக நடந்து
பழமெழு நிறமும் பனியென விழியும்
விளையிள வதனத் திருமகள்பார்த்தே

துளிதுளி யாகவே அச்சமும் விலக
களிகளி என்றுமே காத்திடும் மனது
பிழிபிழி என்றுமே பிழிந்துள்ளம் உந்த
கிளைகிளை தோறும் தாவிடும் மந்தி

கொளும் உணர்வோடு கொடியிடைமகளை
சிலைகலை ஓவியச் சித்திரப் பாவை
குலைகுலை வகையாய் கனிகளின் கூட்டம்
பலபல கொண்டவள் பக்கம ணைந்து

விலையிலை உனதே விந்தைகொள் அழகு
அலைமகள்எழிலும் அஞ்சிய நடையும்
வலைகளை வீசும் விழிகளும் கண்டேன்
நிலைகுலைவாகி நெஞ்சமி ழந்தேன்

அலையுலைந்தாடும் ஓடமும்போல
வலைவிழுந் துளலும் விழிகயல்போலே
பலதுயர் தந்தாய் பாவையே நீக்க
இலதொரு வழிதான் இணைவது ஒன்றே

நலமெனக்கூறி நனி இதழ்தேனே
சலசலப்பின்றி சம்மதம்தாராய்
பொலபொல வென்றே கொட்டிடபணமும்
அளவில எந்தன் அகமுண்டுவாராய்

சொலுமவன் இதனைச்சொல்வதும் இன்றி
பிழைபிழையாகவே சிந்தனை முடிவாய்
வலதொரு கையால் வஞ்சியை அணைக்க
விளைந்திட அவளோ விலகியே சற்று

கடுகடு உரமும் காதலும் கண்ணில்
விடுவிடு என்றே வேகமும் கொண்டோன்
திடுதிடு வென்றுமே தேர்திடமுன்னே
நடுதொரு நிலையை நினைவது இலையோ

தொடுதொடு என்றெனைத் தொட்டுமே தாலி
குடுகுடு என்றுமே கொட்டிட மேளம்
சுடுசுடு தீயதும் எரிந்திட முன்னே
விடுவிடு என்றுமே விரைந்தவர் கட்டி

இடுமென தன்பை ஏற்றவர் அந்தோ
சிடுசிடு என்றுமே சினந்திட எம்மை
கொடுகொலை வாளுடன் நெருங்குவர் காண்க
விடுவர்உன் னுயிரெனில் வருகபின் என்றாள்

1 comment:

  1. ஓசை வரிகளின் ஆட்சியில் வாயடைக்க வைக்கிறது வைரவரிகள் களஞ்சியமாய் உங்களின் சொல்லாடலுக்கு நீங்களே நிகர்

    நன்றி அண்ணா

    எனது பக்கத்திற்கும் வந்து செல்லுங்கள்
    முடிந்தால் உங்கள் மேலான திருத்தங்களை அறிவியுங்கள் என்னை நான் திருத்திக்கொள்ள வழியாகிடும்

    நலங்காத்திடுவான் இறைவன்

    நன்றி அண்ணா
    http://hafehaseem00.blogspot.com/

    ReplyDelete