Sunday, March 13, 2011

அனல் பூக்களாய் இரு!

கண்ணே அன்புகனியே- உந்தன்
கைகள் வீசம்மா
கால்கள் இரண்டும் சோர்ந்தேநிற்கக்
காணுவ தென்னம்மா?
மண்ணில் வீழ்ந்து மனமும்வாட
மறுகுவதேனம்மா
மன்னனமகளே மகிழ்வேகொள்ளு
மலர்கள் பார்ப்போம் வா!

தோட்டத்தில்...

அழகுமலர்கள் பூத்து காணும்தோட்டம் பாரடி -என்றும்
அவைக ளின்பமாக தோன்றும் காட்சிகாணடி
மெழுகுபோலு மிதழ்கள் கொண்ட மென்மைபாரடி -தொட்டு
மெல்ல வீசும்காற்றில் வாசம் மிதக்கும்பாரடி

வண்ணப்பூக்கள் பூத்து வாசம் வீசிநிற்குது -அவை
வட்டமாக சுற்றி காணு மொட்டு அவிழுது
கண்ணில்காண காலைநேரம் களிப்புமாகுது -அது
காற்றிலாடி மெல்லமெல்லக் கதைகள்பேசுது


வெள்ளை மஞ்சள் நீல வண்ணபூக்கள் பாரடி- பாதை
வீதியோரம் வேலிமீது வைத்ததாரடி
உள்ளவிதங்கள் வேறுவேறு உண்டு ஆயினும் -அவை
ஒன்றுசேர்ந்து வாசம்வீசும் உணர்வு ஒன்றடி

அள்ளி இன்பம் தந்து காற்றில் ஆடிநின்றிடும் -எந்த
அல்லல் தீமை செய்யும் பூக்கள் அங்கு இல்லையாம்
கள்ளமற்ற மென்மை கொண்ட உள்ளமாகவே -அங்கு
கண்ண சைப்பதாக ஆடிக்காற்றில் நிற்குதே

என்ன வண்ண மென்னும்பேத மில்லைப் பாரடி -தீய
எத்தராக ஒன்றை ஒன்று ஏய்ப்பதில்லையே
கன்னத்தோடு கன்னம்சேர்த்துகதைகள் கூறியே -நல்ல
கட்டுமலர்கள் கூட்டமாகக் காணுமின்பமே

நீயும் அந்தப் பூக்கள்போல நெஞ்சம்கொண்டிடு -என்றும்
நித்தம்காலை புத்தம் புதிய வாழ்வென்றெண்ணிடு
பேயும் பாயும்கொல் விலங்கு போல மாந்தரும் -இந்த
பாவம்கொண்ட பூமிகாண்பர் பார்த்துநடந்திடு

பூக்கள் போல உள்ளம்கொண்டபோதும் கண்மணி -பாரு
பொய் புரட்டுதீமை கொள்ளை செய்யும்தீயவர்
நீக்கமின்றி பூமியெங்கும் நிற்கக் காண்கிறோம் - வாழ்வில்
நீயும் அந்த நீசருக்கு நெஞ்சம் இறுகிடு

பூக்கள்போலப் பேச்சில்பார்வை மென்மையாகவும் கெட்ட
புல்லர் காணும் போது தீயைப்போல வன்மையும்
ஆக்கிஉன்னைஅழிவு செய்யுமகிலம் மீதிலே -நின்று
அனலைக் கக்கும்பூக்கள் போல ஆகி வாழ்ந்திடு

No comments:

Post a Comment