Friday, March 18, 2011

கண்ணீர்ப் பூக்கள்

ஈழத்தில் ஒரு சிறுமியின் குரலாக....

தேயும்நிலவே காரணமென்ன தேனாய் ஒளிதந்தாய்
தேகம்கொல்லும் பாவியர் உன்னைத் தீண்டியதுண்டோசொல்
பாயும்முகிலே பஞ்சென வானில் பறந்தே போவாயே
பாதகர் கொடுமை கண்டடி வானில் பயந்தேகிடந்தாயோ
சாயும்வானில் தூரக் காணும் புள்ளிப் பறவைகளே
சற்றே நில்லும் சாவைகண்டு சஞ்சலம் கொண்டீரோ
வாயும் கதறிக்கூடும் கருமை வண்ணக் காக்கையரே
வாழ்வை நோகச் செய்தார் யாரோ ஈழத்தெதிரிகளோ

காலை பூத்தாய் மலரேஉன்னைக் காயச் செய்தவரார்
கயவர்கைகள் உன்னைத் தொட்டுக் கருகச் செய்தாரோ
சோலைவீசும் தென்றல் நேற்று சுகமாய் மலர்வாசம்
சுகந்தம்தந்தாய் இரத்தம்போற்தலை சுற்றும் வாசனை ஏன்
மாலை வந்தால் இரவேஉன்னை மகிழ்ந்தே விளக்கேற்றி
மலர்கள்கொண்டு இறைவன் தொழுது மனதில் களிகொண்டோம்
காலன்போலே வந்தார் கயவர் கடவுள் காக்காமல்
கருமைஇரவாய் காலம்முழுதும் கருகச் செய்தார் ஏன்?

நானும் நேற்று நல்லோர் வாழ்வைக் கொண்டே வாழ்ந்திட்டேன்
நாடும் வாழ்வும் நாமும்கூட நலமே கண்டோமே
தேனும் பாலும் உண்டேதாயின் தோளில் தூங்கித்தான்
திங்களுன்னைக் காட்டி அன்னை தின்னச் செய்தாளே
மானும் எந்தன் துள்ளல் கண்டால் மகிழ்வில்விளையாடும்
மரத்தில் குயிலும் மகிழ்வில் எந்தன் குரலில்கவிபாடும்
தானும் மகிழும் தாயும்தந்தை தாவிஅன்பைத்தான்
தழுவிக்கொண்டார் இன்றோ நானும் தனியே நிற்கின்றேன்

வெள்ளை வானில் தந்தைசென்றார் விடிந்தால் வருவேனே
வேண்டாம் துயரம் என்றார் மீண்டும் விடியல் வரவில்லை
கள்ளர் போல வந்தார் எம்மைக் காக்கும்படையென்று
கதறிக் கேட்டும் அம்மா வைத்தான் கடத்திச் சென்றாரே
உள்ளம்உருகக் கையைகூப்பி உயிரைத் தாவென்று
உதவக்கேட்டும் சிலைதான் கண்டோம் ஒன்றும் வரவில்லை
அள்ளிக்காசும் பொன்னும் தாவென் றவர்கள் வேண்டுகிறார்
வெள்ளிக்காசு வேண்டிநீயும் வாளா திருந்தாயோ

வெள்ளம் வந்தால் எங்கள் வீட்டின் உள்ளேநிற்கிறது
வீசும்காற்று கூரைபிய்த்து விளையாட்டென்கிறது
பள்ளிக்கூடம் அகதிக்கான படுக்கைவீடாச்சு
பனியும் குளிரும் போர்வை என்று பழகிப் போயாச்சு
கொல்லும் கரடி சிங்கம் காணப் பயமே போயாச்சு
கொலைஞர் மட்டும்வந்தால் நெஞ்சு திக் திக் என்கிறது
செல்லும் பாதை தெரியாதெங்கள் மனமோகோணுவதேன்
செத்தாலென்ன பின்னால் வாழ்வு சுகமென்றேங்குகிறேன்

No comments:

Post a Comment