Tuesday, March 15, 2011

ஆகுமோ? ஆகலாமோ?

கங்கை குதித்தோடிக் கடலோடு சேர்ந்திடலாம்
மங்கை மனம்நாடி மன்னவனைக் கூடிடலாம்
தங்கம் பெண்விரும்பித் தன்கழுத்தில் சேர்த்திடலாம்
சிங்கமுடன் புலியைச் சேர்ந்துவாழ் என்பதுவோ?

தெங்கி னிளநீரும் சேர்வழுவல் உண்டிடலாம்
நொங்கு விழமுக்கண் நோண்டிருசி கண்டிடலாம்
தொங்கும் கனிவாழை தோலுரித்து உண்டிடலாம்
சங்கத்தமிழ் இனத்தைச் சிங்களமும் தின்பதுவோ

மங்கு மிருள்சூழ மறைந்தகதிர் தூங்கிடலாம்
எங்கும் மானிடனே இரவென் றுறங்கிடலாம்
வெங்கண் சினம்கொண்டேவினைபேசி எம்குலத்தை
சிங்கத்திமிர் அழிக்கப் சீறாமல் தூங்குவதோ

செங்கதிரோன் உச்சிவரத் தீயாய் எரிந்திடலாம்
பொங்கி வெடித்தமலை புகைவந்து எரிந்திடலாம்
சங்குதனும் வெண்மைதரச் சற்றே எரிந்திடலாம்
எங்களது இனங்கொன்று எரிக்கநாம் விட்டிடவோ

பொங்கும் அலை கடலில் புரண்டுவிழுந்திடலாம்
எங்கோ மலையிருந்து எழுந்த நதி விழுந்திடலாம்
மங்கு மிருள் மாலை மலர்கள் துவண்டிடலாம்
தங்கத் தமிழீழத் தாய்க்குலமும் துவளுவதோ

கொட்டும் நஞ்சரவம் கொத்தவந்து சீறிடலாம்
பட்டுவிடக் கைகள் பத்தினியும் சீறிடலாம்
கிட்ட எலிஓடக் கிழப்பூனை சீறிடலாம்
வெட்ட உடல்வீழ வெங்குருதி சீறுவதோ

தொட்டில்படுத்த பிள்ளை தோன்றும்பசிக் கழலாம்
விட்ட கனி நாள்போக விழுந்து அழுகிடலாம்
பட்டதொரு காதலுக்கு பாவையுமே அழுதிடலாம்
சுட்டொழிக்க நாமோ சும்மா அழுதிடவோ

ஒன்றாகச் சேர்வதற்கு உள்ளவையோ பிரிவினைகள்
தின்றுமுடிக்கவுண்டு தோன்றுகின்ற துயரங்கள்
நின்றுமனம் சீறுவதோ நீசர்தம் செயலெண்ணி
வென்று முடிப்பதுவே வேலைஇனி எழுந்திடடா

துவண்டுவிழுவதுவோ துயர்செய்யும் அரசபடை
கவிழ்ந்து விழுவதுவோ கயவர்தம் ஆட்சிமுறை
அவிழ்ந்து கருகுவது அன்னியவன் கொடுமாட்சி
புகழ்ந்து எழுமெங்கள் புதியதொரு தமிழரசு

1 comment:

  1. அக்கிரமங்கள் அலைபோல் கரிகாலன் தேசத்தில் தலைகால் புரியாமல் தறிகெட்டுப் புரல்கிறபோதும் !சமயம் வளத்த சந்ததிகள் கலாச்சாரத்தை சீரலிக்கிண்ற போதும் சத்தமிடாமல் காத்திருப்பதும் புது வரவு ஓன்றுக்காக! --வாழ்த்துக்கள் நண்பனே

    ReplyDelete