Wednesday, August 31, 2011

வந்தென்? வாழ்ந்தென்?

வந்துமென் பூமியில் வாழ்ந்துமென் இன்பங்கள்
தந்துமென் தமிழன்னையே
சொந்தமண் இன்றியே துன்பமென் றுள்ளமும்
சோரும் நிலையானதே
பந்தமென் பாசமும் கொண்டுமென் நீதிகண்
பாரா விழிமூடியே
கொன்றுமென் மேனியை குற்றமிழைத்தவன்
கூத்தாடத் தூங்குவதேன்

நின்றுமென் கண்டதென் நெஞ்சில் இலட்சியம்
கொண்டுமென் கொல்லுபவன்
வென்றதென் றாடியே வீரமென் றெம்மினம்
வேருடன் வெட்டுகின்றான்
தென்றல் அணைத்திடும் தீபந்தனை, பெருந்
தீயெனில் ஓங்கவைக்கும்
கொன்றவன் ஆடிக் குதித்திடக் கைதந்து
கொண்டாடும் இவ்வுலகும்

மலரும் மலர்ந்துமென் மதுவை நிறைத்துமென்
மனதில் மகிழ்வில்லையேன்
உலகம் சுழன்றுமென் னொளிவான் எழுந்துமென்
உரிமை எமக்கில்லை யேன்
பலரும் பெருந்துன்பம் பட்டுடல்கொன்றிடப்
பிரியும் உயிர்களும் தென்
னிலங்கை அரசன்கை எடுத்தொரு வாளினால்
ஈழம் சிவந்திட்ட மண்

செழித்தென் சிரித்துமென் சீர்கொண்டு வாழ்ந்துமென்
சிதைகின்ற தெமதீழ மண்
களித்தென் கண்டுமென் கனவுகள் ஆயிரம்
கடுந்துயர் கொண்டது மண்
விழித்தென் வெகுண்டுமென் வீரம் எடுத்துமென்
விலைபேசி விற்றனர் மண்
அழிந்ததென், அடடா ஆகுமோ ஈழமென்
றன்புடை தம்பியர்முன்

உளித்தன் கைகொண்டு உடைத்தனன் சிற்பியும்
உருவாக்கும் கற்சிலை காண்
அழித்தனன் கல்தனை அடித்தனன் உடைத்தனன்
அதனாலே வந்தது பொன்
னெழில்தேன் வடித்தன்ன எண்ணத்தின் அற்புதம்
எழுந்தது கற்சிலைப்பெண்
மொழிதான் இதற்கிலை மௌனத்தின் பரிசென்று
மனம்கொள்ளு செயல்,வார்த்தை பின்

பிறந்தென் வளர்ந்துமென் பேசரும் வாழ்விலே
பெருநிலை அடையினுமென்
மறந்தேன் கிடந்தனன் மயங்கும் நினைவென
மற்றெதும் எண்ணாதுமுன்
னிறங்கிடு வாழ்வினில் சுதந்திரமொன் றுதான்
இருப்பதில் சிறந்ததுஎன்
றுறங்கிடா தேடுநீ உரிமையைப் பெற்றிடு
உன் நிலம் உன்னுடை கண்

இருந்தென் நடந்துமென் இறையெண்ணிக் கைகளை
எடுத்தென் இறைஞ்சியு மென்
வருந்தென் றல்தானுமெம் வாழ்வென்ற தாயினோர்
வீசும்புய லென்று எண்
பருந்துமென் பாம்புமென் படும்சண்டை யாவுமமுன்
பாதையில் வரும் தடை காண்
வருந்தேல் எழுந்துநில் வாழ்வில் சுதந்திரம்
வரும்வரை போராடு, வெல்!

No comments:

Post a Comment