Wednesday, August 24, 2011

இயற்கையில் கொலைஞர்

கனிந்து களித்தனகாண் காய்நிறைந்த சோலைமரம்
குனிந்து களித்தனநீர் கொள்கழனி விளைகதிர்கள்
பனித்து களித்தனநற் பச்சைவெளிப் புற்தரைகள்
மனிதர் தலையெடுத்து மகிழ்ந்தனவாம் மன்னர்படை

மணந்து களித்தனமென் மலரிதழோ வாசம் அதை
கொணர்ந்து கொடுத்தின்பம் கொண்டதிளம் பூங்காற்று
வணங்கிக் களித்தனஎம் வாழ்குடிகள் தெய்வம் எனில்
பிணங்கள் கிழித்தின்பம் பெற்றனவாம் எதிரிபடை

விளைந்து களித்தனநல் வயலோடு பெருந்தோட்டம்
வளைந்து களித்தனவான் வில்லெடுத்த ஏழுநிறம்
நுழைந்து களித்தனபெண் நெஞ்சமதில் அன்பர்முகம்
களைந்து களித்தனராம் காதகர் நற்பெண்டிர்உடை

பொழிந்த மழைகுளித்து பூமரங்கள் சிலிர்த்தன,வான்
எழுந்த ஒளிகுளித்து இளம்பயிர்கள் வளர்ந்தன,எம்
அழிந்த உடல் கிழித்து ஆறாகிக் குருதிதனும்
வழிந்த கடல் குளித்து வாழ்ந்தனராம் எங்கள்பகை

எட்டநின் றாடியது இன்னிசைக்குப் பாம்பு, மரத்
தொட்ட இலைஆடியது தென்றல்வர, வானமுகில்
விட்டு மழைதூறல்விழ வண்ணமயில் ஆடத் தலை
வெட்டிமகிழ்ந் ஆடினராம் வீதியிலே எமையெதிரி

கொட்டியடி முரசமதைக் கொண்டபகை தீரவெனக்
கட்டியெம தீழமதைக் காத்திடுவோம் நாளுமென
எட்டிநட இன்தமிழின் ஏற்றமதைக் கண்டுவிடு
சட்டமதைக் கொண்டுபகை தள்ளிச்சிறை பூட்டிவிடு!

No comments:

Post a Comment