Thursday, August 4, 2011

வசந்தம் வீசும் காலை.!

இனிதொரு நாளில் எழுகதி ரொனும் இலங்கிடு குவிவானம்
பனிதரு காலை பசும்விரி புல்லில் படகுளிர் மெய்காணும்
தனியிவன் பாதம் தரைபட மலராய் தருவது கிளர்வாகும்
புனிதமும் போற்றி இருளினை ஓட்டி எழுகதிர் ஒளிவீசும்

மனிதரின் வாழ்வும் மகிழ்வினைத் தேடும் மனதொடு விரைந்தோடும்
தனியிடம் போகும் பாதையில் எங்கும் தவறுகள் உருவாகும்
மனதினி லின்றி மகிழ்ந்திட வென்று மறுபடி மனம் வாடும்
கனவினில் காணும் வர்ணங்கள் யாவும் காலையில் மறந்தாகும்

தமிழது கண்டு தாகமென் றாகி தருவது எதுவேனும்
அமுதமென் றெண்ண அதுசுவை மாறின் தமிழது எனையேசும்
குமிழிடு குளிர்நீர் குமிழிக ளென்றும் கடுதியில் பெரிதாகும்
அமைதி என்றாலும் அளவினில்மாற அது உடைந்தழிவாகும்

புவனமும் காண இயற்கை யென்றெண்ணி பகலினில் நிலவோடும்
தவறென மீண்டும் இரவினில் வந்தே தண்ணொளி தனைவீசும்
அவசரம் வாழ்வில் எழுவதுஎன்றும் மனிதரின் மனமாகும்
நவமுகம்கொண்டு நாம்சிரித்தால் நல் மலர்களை மரம்தூவும்

பசுந்தரை மீது பனி வருமோடி பகலவன் அதை வெல்லும்
வசந்தமும் ஓடி வரும்மன தெங்கும் மலர் மணம் நிறைவாகும்
கசந்திடு மனமும் கனிவுற எண்ணக் கனவுகள் விரிந்தாடும்
இசைந்திட மனமும் இன்பமொன் றேதான் எண்ணியே உறவாடும்

No comments:

Post a Comment