Monday, August 1, 2011

காண்பது பொய்யா?

ஆழவெளி விண்ணோடை அழகுத் தோற்றம்
அதனூடே  வெடித்தோடும் ஒளியின் சீற்றம்
கோளமெனச் சுழல்கின்ற குண்டுக் கற்கள்
குலைந்தோடும் தீநாக்கு குழம்பின் வீச்சு
தாழமுக்கக் குளிர்தணலைத் தணியாத் தன்மை
தாமிவைகள் விழிகொண்டும் தெரியக் காணேன்
ஏழையிவன் அறியாதோர் அதிசயங்கள்
இருப்பனவோ, பொய்யோ யான் ஏதும் அறியேன்

 
நீலவிண் பொய்யென்றால் நிலவும் பொய்க்கும்
நீள்நதியும் குளிரோடை நீந்தும் மீனும்
காலமெழும் தேன்கனிகள் கடலும் பொய்க்கும்
கதிரெழுந்து வீழுமதன் காட்சி பொய்க்கும்
ஆலமரம் அதனூடே அணையும் பட்சி
அலைந்து வரும் தென்றலதும் அழகுப்பூக்கள்
கோலமயில், கூவுங்கருங் குயிலும் பொய்யே
குவலயமும் பொய்யேஎன் கூற்றும் பொய்யே

வாழுகிறோம் மெய்கொண்டு வந்தோம் மண்ணில்!
வாசமெழும் மலர்க்கண்டு கொண்டோம் இன்பம்!
வீழுகிறோம் எழுகின்றோம் வீசும் காற்றில்
வாசமது கொண்டோம் பின் வாழ்வும் கண்டோம்
நாளும்பொழு தாகவரும் நம்மைக் காக்கும்
நாணலிடை தொட்டசையும் நல்லோர் தென்றல்
ஆழவிடும் மூச்சின்றிப் பொய்க்கு மாயின்
அத்தனையும் பொய்த்து விடும் அகிலமன்றோ?

அலையாடும் தூரத்தே அணில்கள் ஓடும்
அழகுமயில் துளிவீழ அசைந்து ஆடும்
தலையாடும் இளங்காற்றில் தருக்கள் ஆடும்
தானாடி சலசலக்கும், தொலை தூரத்தில்
நிலவோடும் நிற்காது நெருங்கி மேகம்
நிலமோடும் அதனோடு நிதமும் ஓடும்
கலைகொண்டு காண்கின்றேன் காணுமிவை எக்
காலமும் பொய்யாவதிலைக் காணல் மெய்யே!

No comments:

Post a Comment