Tuesday, August 23, 2011

என்ன? என்ன? என்னடா?


நேர்மையென்ப தென்ன என்ன, நீதி என்பதென்னடா?
போர்புரிந்து மென்ன என்ன, போர்விதிகள் எங்கடா
பாரிழைத்த தென்ன என்ன, பார்த்து நீதி கேளடா!
ஊரழிக்க மன்னன் என்ன, எமன் விடுத்த தூதனா?

கோலமிட்டு மென்ன என்ன, கோவில்கட்டி என்னடா?
ஆலமிட்ட கண்டன் என்ன, அசுரனைஅ ழிப்பரோ?
காலமிட்ட தென்ன என்ன, கன்னியர்க்கு மேனிதான்
கால்மிதித்துக் கொல்லு என்று காலதேவன் சட்டமா?

காலைப்பூ மலர்ந்த தென்ன, காய் வெயிலும் கொல்லவா?
பாலையில் விழுந்த நீரைப் போலஈழம் செல்லவா?
சேலையை இழந்த பெண்கள் சீரழித்தல் கண்டுமா?
மூலையிற் படுத்துறங்க மேனிஎன்ன கல்லோடா?

வீறுகொண் டெழுந்து நில்லு வெல்லவென்று துள்ளடா
ஆறுபோ லெழுந்துஓடு அன்னைபூமி வெல்லடா
நீறுகொள்ள மேனிகொன்று நித்தம்தீ கொளுத்துவோர்
கூறுபோட முன்பிடித்துக் கூட்டில்தள்ளிப் பூட்டடா  

வாழையுங் கனிந்துவந்து வாயில் சேருமென்றடா
நாளைஎண்ணி நீஇருப்ப தாகுமாமோ கூறடா
வேளையில் பழுக்குமென்று விட்டுகாத் திருக்கவே
ஏழைஅஞ் சுகம் பறந்த இலகுபஞ்சை எண்ணடா

பொன்னிழைத்த தட்டிலில்நாடும் புன்னகைத்து மெல்லவே
நன்மைசெய்து நாமளித்தோம் நாடுஉங்க ளானதே
என்றுருக்க உள்ளங்கொண்டு ஈழமீவ ரென்பதை
இன்னும்நம்பி அண்டைநாட்டை எண்ணிக்காத் திருப்பியோ

முன்னெடுத்த கால்களோடு மெல்லஉண்மை கண்டுநீ
தன்நிகர்த்த தாருமற்ற தன்மைகொண்டாய் நம்புநீ
உன்னெடுப்பில் நீதகர்த்த போர்களங்கள் எத்தனை?
நின்னைநீயே நம்பு வாழ்வில் நீதிஒன்று காணடா !

No comments:

Post a Comment