Sunday, February 10, 2013

சக்தியே ஆணையிடு

கண்கள்பாதி போனதென்ன காட்சிமங்குதே - இந்தக்
 காயமென்ன செய்தபாவம் காணும் துன்பமே
எண்ணமிங்கு மேகமிட்டு என்னைதூக்குதே - அங்கு
  ஏகும்பாதை வானின்  தோன்றி ஏறு என்குதே
கிண்ணமிட்ட பாலும் பொங்கி கீழே ஊற்றுதே - அந்த
   கேணி நீரும் வற்ற மீனின் மூச்சுமுட்டுதே
அண்டவானில் ஆதவன்கள் அள்ளிவீசினாய் - சக்தி
  ஆசைகொண்ட நெஞ்சம் வாழ ஆணைகூட்டுவாய்

வண்ணமிட்ட சித்திரங்கள் வாழ்வு வேண்டுதே  -சுற்றி
  வற்றும் நீரைகண்டு பூக்கள் வாடிச் சோர்வதேன்
மண்ணில் சுட்ட பாத்திரத்தை ஏந்தி நிற்கிறேன் - என்னை
   மன்னன் என்று பேரும் வைத்து மாலைசூடவா
வண்ணமிட்ட பூக்களாலே வாசல் தோரணம் - உள்ளே
   வைத்த பானை  அன்னமின்றி கொண்டகாரணம்
உண்மை நெஞ்சில் அன்னைநீயு மெண்ணும் நீதியும் - விட்டு
   ஓரம்வைத்துப் பார்ப்பதென்ன உள்ளே வைத்திடு

திண்ணையோரம் வந்தொருவன் காத்திருக்கிறான் - கையில்
   தேவையென்று பாசமென் கயிற்றைக் கொள்கிறான்              
கண்ணை மூடித் தூங்குமட்டும் காவல்நிற்கிறான் - போகும்
   காலம் என்னும் பாதைசெல்ல என்னை கேட்கிறான்
அன்னை சக்தி கண்கள்விட்டு உள்ளம் காண்கிறேன் - அவள்
  ஆக்கும் சக்தி ஈந்த அன்பில் வீறுகொள்கிறேன்               
                                                
எண்ணமெங்கும் சக்திதீபம் ஏந்திநிற்கிறேன்- இங்கு
  என்னயல்ல என்னையீந்த தாயென்றாகிறேன்

தொட்டுத்தொட்டுத் தூரிக்கையால் வண்ணம்பூசென - நல்ல
   தூய தமிழ்சொல் கொடுத்து தூண்டி விட்டவள்
கட்டியெனைப்  போட்டுவிட்டுக் காண்பதென்னவோ - இனி
   கால் விலங்கும் அன்பு கொண்ட காவல் என்பதோ
எட்டிநடை போடுமெந்தன் கால் நிறுத்தியே - எண்ண
   இறக்கை தந்து எல்லையற்ற வான்பறக்கவே
வட்டமிட்டு தேடும்வண்டு பூவின் காண்பதாய் - புவி
    வாழு மென்னை தீந்தமிழில் வாசமிட்டதேன்

அன்னைமீது சத்தியத்தின் ஆணை வேண்டினேன் . மேனி
  ஆலையில் கரும்புபோல  ஆகப் போகமுன்
நின்மனம் அருள் புரிந்து என்னைக் காத்திடு - எந்தன்
   நிழல்பிரிந்து  கொள்ள முன்நிறுத்தி வைத்திடு
தன்னை மீறி ஓடும் காற்று உள்நிறுத்திடு - நல்ல
   தாயின் அன்பு உள்ளத்தோடு என்னைப் பார்த்திடு
பொன்னையல்ல பூமியல்ல பொழுது வேண்டினேன் - வாழப்
   போகும்நாளும் புதிது கொள்ள விதியும் வேண்டினேன்

No comments:

Post a Comment