Thursday, February 14, 2013

என்நாடு போல வருமா?

பனிதூங்கு மிலையாடப் படர்காற்றில் குளிர்மேவப்
பெரும்போர்வை கொளும் நாடிதே
இனிதான தமிழோசை எழுங்காலைப் பொழுதெங்கே
இடி மேகம் இசைகீதமே
குனிந்தெங்கள் நடைமாறிக் குணம் மாறிக் குரல்மாறி
கொளவென்று விதிகூறுதே
இனியென்று மனதாசை இன்பங்கள் பொலிகின்ற
எழில்நாட்டைக் கண்காண்பதோ

கனிதூங்கு மாவின்கிளி கலகலத் தோடு மணில்
கிளை தூங்கி மந்தி யாடும்
நுனி தாங்கி நெல்முதிர நிலம் நோக்கு வயற்கதிரும்
நிமிர் வானம் தொடுமாலயம்,
புனை பானை நிரைக ளயல் புதுவாழை கனியழகும்
பேச்சினொலி தமிழ்நயந்து
நனைந்தாடு தாமரைகள் நங்கை மதிமுகம்போலும்
நளினமிவை காண்பதெப்போ

இலைமீது தனைமோதி எழுந்தோடி வருங்காற்று
இன்பவரு டலின்போதையும்
கலைவண்ண நடமாடும் கண்கவருந் தோகையொடு
காயும் புகை யிலைவாசமும்
அலையோடு குளக்காற்று ஆலமரத்தடி, கோவில்
அயலுள்ள பெட்டிக்கடையும்
இலையென்ற வாழ்வாகி இருந்திங்கே என்பாடு
எனதாகு மேமாற்றமே

பனை உரசல் சர்ரென்று பழம்வீழ அணிலோட
பயந்தோடும் குருவி கூச்சல்
தனியாகக் குயிலொன்று தருமீது துணையின்றித்
தருமோசை துயர் கீதமும்
மனையோடு ஒருவேம்பு மாதுளையும் கமுகென்று
மனம் பொங்கு மெழிற்காட்சிகள்
இவைகாணா தொருவாழ்வும் இருந்தென்னபோயென்ன
எனமனது அலைந்தோடுதே

நீள்சாலை நிலம்கீழே நெடிதோடும் வண்டிகளும்
நிழல் மரங்கள் அற்றபாதை
தோள் மாறித் திடமற்ற துணிவழிந்த கோலமுடன்
தோல்வி மனம் தொய்ந்ததான
வாழ்வுணர்வு என்றாகி வண்ணங் கரு காக்கைநிறம்
வகையேனோ தோலென்றெண்ணி
நாளென்ன பொழுதென்ன நலமாயி னுளம்காணும்
நலிவு மிகுந்தேங்கும் வாழ்வே!

No comments:

Post a Comment