Saturday, February 9, 2013

காதலைத்தேடும் உள்ளம்

நானும்தான் எண்ணி நடக்கிறேன் நெஞ்சமோ
நாணமின்றி நடந்தே
தேனும்தான் என்றொரு சேதிசொல்லி யென்னைத்
தீயினுள் தள்ளுவதேன்
வானும்தான் ஏறிக் கடக்க நினைக்கிறேன்
வாலொன்று தான் முளைத்து
வீணும்தான் தொற்று கிளகளில் துள்ளென
வானர மாக்குவதேன்

நானும்தான் கெட்டே யுழன்று வறுமையில்
நாற்றம் எடுக்கையிலும்
ஏனும்தான் உண்ணும் உணவில் அறுசுவை
ஊற்றடி யென்கிறதே
மீனும்தான் போல்விழி மாதர் நிலாமுகம்
மோகம் விளைப்பது ஏன்
தானும்தான் எண்ணித் தலைவியை சேரெனத்
தாகம் மெடுக்கிறதே

மானம்தான் என்றெண்ணிமங்கை மறந்தங்கு
மாலையில் சோலைவர
மேனகையோ இவள் முன்னே நடமிட
மௌனம் கலைக்கிறதே
மானும்தான் துள்ளுது மாது இவள்கண்டு
மாமனம் துள்ளுவதேன்
ஊனும்தான் எண்ணி உருகுவதேன் இந்த
உள்ளம் துடிப்பது ஏன்

ஏனோதான் எந்தனின் எண்ணம் நிறைமனம்
இரட்டை இறகுகட்டி
தானும்தான் எட்டா இடமெங்கும் தாவிட
தாகம் எடுப்பது ஏன்
காணும்தா னென்றிரு கண்களைமூடிக்
கலைஎன்று காத்திருக்க
காணும்தன் சொப்பனம் கற்பனையில்ஒரு
காதலென் றாவதுமேன்

நீரும்தான் பற்றி நெருப் பெழுதே அது
நின்றிட ஏதுசெய்வேன்
கூரும்தான் கெட்டது கொண்ட வாளைவீச
கால்களில் வீழுவதேன்
யாரும்தான் சொல்லத் தெரியாவிடை கொண்டு
ஏனோ வினவுதலேன்
பாரும்தன் என்றிடக் கொண்டவள் சக்தியைப்
பார்த்திதைக் கேட்டனன் ஏன்?

No comments:

Post a Comment