Wednesday, October 5, 2011

கலைமகள், அலைமகள், மலைமகள்

கலைமகள்:
பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து
காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன்
சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச்
சிங்கம் சிதைக்கவிட்ட தேன்

வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து
வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி
கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர
வாரி உடல்சிதைத்த தேன்

அலைமகள்:
சீரும் சிறப்புமெனச் செல்வந்தர் வாழ்வுதனை
ஊரும் உலகமெலாம் உண்டாக்கிச் - சேருமெம்
பொன்பறித்துக் கொண்ட புனர்வாழ்வு தானழித்து
வன்மைதனை செய்ததுவும் ஏன்

வேருடன் வெட்டி விதியாம் இனம்கொல்ல
யாருக்கும் பணியாத ஞாயிறோன் - நேருமொளிச்
செந்தமிழன் சீர்குலையச் சூழ்ந்து பொதுநிதியம்
தந்திரமாய் நீயழித்த தேன்

மலைமகள்:
தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப்
பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம்
உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை
அன்னைநீ மாளவிட்ட தேன்

கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே
இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய்
வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை
வீழ்ந்திடவென் றாக்கியது மேன்

..........வேறு.........

கலைமகள்:

வெண்டாமரை மலரில் வீற்றிருப்பாய் - கலை
வேண்டுமவர் எல்லோர்க்கும் வரமளிப்பாய்
வண்டாடும் பொய்கைமலர் வாழ்பவளே - அன்று
வாளெடுக்கும் வீரத்தைமுன் தொழுதோம்
கண்டோம் இப்பூவுலகில் காசிருந்தால் - காண்
கலைமகளும் மலைமகளும் அருள்புரிய
குண்டோடு நஞ்செறிந்து கொல்லவுமோர் -எக்
கோழைமனம் கொள்பவனும் வெல்வதென்ன

ஏடுதனைக் கற்றிடவும் தேவையில்லை - கத்தி
எடுத்தவனோ செவ்விழநீர் சீவும்தலைக்
கேடுதனைக் கொண்டிடினும் பொய்சொலவும் - கீழ்
குணங்களெலாம் உள்ளவனும் மன்னனென
நாடுதனை ஆளுவதேன், பொன்னிருந்தால் - இந்
நானிலமும் புகழெழுந்து நலன்காக்கும்
பாடு என ஆக்கியதேன் பங்கயத்தில் - கரம்
பாடுமிசை வீணைதனைக் கொண்டவளே?

..............வேறு.........

அலைமகள்:

செந்தாமரை யுறைந்து செல்வமெனக் கைவிரித்து
சிந்திடவே கொட்டுமெழில்
பந்தாம் இப்பூமியில்வாழ் பலர்வாழ்வும் செழிக்கவென
பகட்டான வாழ்வீந்தாய்
எந்நாளும் இருகரமும் கூப்பியுனை இரந்தவர்கள்
ஏழைகளின் கலண்டர்களில்
உன்தாமரைக் கரங்கள் சொரிவதுஎன் உள்வீட்டில்
ஒருபொன்னும் விழுவதில்லை

வந்தேமுன் வீழுமென வண்ணக் கனவெழவே
வாசல்தனைப் பார்த்திருந்து
நொந்தோ மிருந்தும்நீ நெறிதவறிச் சிங்களவன்
நிதிக்கிடங்கை நிரப்பலன்றி
செந்தேன் தமிழரெமைச் சிறிதேனும் காணாமல்
சிரம்திருப்பும் சிறுமைதனைச்
செந்தூரவண்ணச் சிலையே செய்ததென்ன? ஈழத்தைச்
சிதைத்ததுமேன் அலைமகளே?
மலைமகள்:

கொட்டும் இடியெனத் தட்டிதிறனொடு
எத்தனை வென்றவை போர்க்களங்கள்
விட்டுப் பகைவனை தொட்டுக் களமதில்
முட்டித் தடதட எனவீழ
கட்டுக் கலைந்திட காலும் பின்பட
உச்சித்தலை தெறித்தோடிவிட
கட்டிக் காத்தவர் இற்றைக் குழியினில்
கண்ணும் மூடவைத் தெதனாலே

பற்றுக் கொண்டதில் போரின் விதிமுறை
பற்றித் திறனொடு பாரினிலே
ஒற்றைப் படையதும் உலகில் எங்கணும்
இல்லயென வகைபோரடி
மற்றும் உயிர்களை மாளச்செய்வதை
விட்டுக் கடமையைக் கொண்டோராம்
இற்றைக் கெம்மிடை இனமே கொல்பவன்
இச்சை கொன்றிட என்செய்தாய்?

1 comment:

 1. பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து
  காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன்
  சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச்
  சிங்கம் சிதைக்கவிட்ட தேன்

  அறச்சீற்றம் தெளித்த வரிகள்!

  ReplyDelete