Sunday, July 3, 2011

குடைவானம் கூப்பிடுதூரம் 1


காதலிளங் கன்னியவர் கண்ணசைவைக் காட்டிவிடக்
காளையர்க்கு மாமலையும் கடுகாம்!
மாதர்களின் புன்னகையில் மேகமும்வ ளைத்திடுவர்
மின்னலெனப் பாயுஞ்சக்தி வீச்சாம்!
நாதஒலி ஓமெனுமோங் காரயிசை கேட்கும்விரி
வானிடையே காணுமிறை தேவி
யாதுமவ ளானவளின் பார்வைதனை நீபெறவே
வானம்வரும் கூப்பிடுமோர் தூரம்

ஒதுமறை வேதஒலி வானெழுமோர் காலைதனில்
உள்ளமதில் தேவஇசை பாடி
மாதினையோர் பாகனருள் மூடிவிழி நாமும்தொழ
மேன்மையுறும் வாழ்வதனைப் போல
ஏதும்மனந் தான்முயல எட்டுவது கிட்டாதென்
றெண்ணிமனம் சோர்ந்தநிலை மாறி
யாதுமென தாகுமென வீரமனம் கொள்ளுகுடை
வானம்வரும் கூப்பிடவே ஓடி


நிலவெழுந்து  புவிதழுவும் நேரமதில் ஓரிரவு
நின்றிருந்தேன் வான்விரிப்பின் கீழே
பலதுயரம் பட்டதிலே பால்நிலவின் குளுமைபெறப்
பார்த்திருந்தேன் குவிமணலின் மேலே
உலவிவருந் தென்றல்தொட ஒளிவிழியால் தாரகைகள்
உலகமதைக் கண்சிமிட்டிக் காணும்
அலைகடலின் மீன்களென ஆயிரங்கள் கோடியென
அழகொளிர விண்மீன்கள் தோன்றும்


நேர்தெரியுந் தாரகைகள் நிர்மலவான் வீதியிலே
நிற்கும்விதம் கற்பனையைத் தூண்ட
போரெடுத்துப் பூமிகொள்ளப் பால்தெருவின் வாசிகள்தீப்
பந்தங்களைக் கொண்டதுபோற் கண்டேன்
தேரோட்டி மகன்தீண்டத் தேவி யவள் இடைமணிகள்
திமிறிநிலம் விழுந்தவிதம் போலும்
காரிகையர்  ஊர்முழுதுங் கார்த்திகையின் தீபஒளி
ஏற்றியதாய் வானிருக்கக்  கண்டேன்


ஒருகணமென் திகிலடையும் உள்ளமதி லோர்நினைவு
உருளுமிந்த புவிமடியில் நின்றே
பெருவிரியும் வானிடையில் புரண்டுருள ஓடுகிறேன்
புவியிழுத்த தாலுலகில் நின்றேன்
கருமையினுட் சுழல்புவியுங் கதியெடுத்த வேகமிடை
காந்தவிசை வலுவிழந்து போனால்
உருண்டகன்ற விண்ணிடையில் உதிருமொரு பூவெனவே
உலகிதைவிட் டுச்சி வானில் வீழ்வேன்


பொதுவிலெந்த பொருளுமின்றி பூமிவெறும் கல்லெனவே
பெரியதொரு வெடிவெடித்துப் போகும்
இதுவுமொரு அதிசயமே இயற்கையதன் தருமகுணம்
எமையிருத்தி உயிர்கொடுத்த தாகும்
புதுமைசிலர் பூமியையே பங்குவைத்து எல்லையிட்டு
பொருளெனவோர் விலைபேசி விற்பர்
இதைவிடப்பே ரரசுகளோ இதுஎமது பூமிஎன்று
எளியவரை இனமழியக் கொல்வர்


முதுமைவரை ஆடுமவர் முடிவுதனில் ஆவதென்ன
மோனஇருள் சூனியத்தில் தூக்கம்
கொதிகுழம்பு சீறுமொரு கோடிஒளிச் சூரியன்கள்
கூட்டமதில் ஆவிகலந் தேகும்
இதுவிருக்க ஒருபுறமாய், உண்மையில்நா மிருப்பதெது
இத்தரையிற்  பாதமுள்ள போதும்
பொதுவினி லெம் மீதியுடல் பூமியுடன் வான்வழியே
பெரியதொரு வட்டமிட்டு ஓடும்

கடுகதியில் விரையுமொரு புகையிரதம் உலகமெனில்
காசுகொடா பயணிகளே நாமும்
நடுவழியில் இறங்குமொரு நாள்வரவும் எவரறியா
நழுவுமொரு விதிமுடியும் யாவும்
தொடுவதிவர் பாதம்நிலம், தேகமெதில் வான்வெளியில்
திரிவரிவர் கதிரவனைச் சுற்றி
விடுஒருசந் தேகமிலை விரல்தொடுமிவ் வானமதே
விரிந்ததெனில் கூப்பிடுமோர் தூரம்


உச்சிவானக் குடைவிரித்தும் உள்ளேநீல வண்ணமிட்டு
உண்மையிலே வைத்தவரை அறியேன்
நிச்சயமாம் பூமிதனை நம்முயிர்க்கு வாழ்வளித்து
நித்திரைக்கு தொட்டிலென ஆட்டி
அச்சினிலே தான்சுழன்று ஆடிப்புவி பாயுமொளி
ஆதவனைச் சுற்றிவரச் செய்தார்
உச்சகடு வேகமதில் ஓடுகிறோம் வான்வழியே
உடல்தொடுவான் கூப்பிடுமோர் தூரம்


ஆழவெளி விண்பரவி ஓடுகின்ற சீற்றமுடன்
ஓங்கியெரி வான்சுடர்கள் மோதி
வீழவெடித் தாயிரமாய் வேகமுடன் வான்சிதற
வீதியெங்குந் தூசெனவே மாறும்
வாழுமெங்கள் வையகமும் வண்ணபுயல் தீபறந்து
வந்துடலை வேகவைக்கு மென்றோ
சூழுங்குடை தான்விரித்துச் சுற்றிவளி வட்டமிட்டுச்
சுந்தரவாழ் வீந்தனளோ சக்தி!

(கவியரங்கம் ஒன்றிற்கு எழுதியதன் ஒரு பகுதி )

No comments:

Post a Comment