Friday, June 17, 2011

ஆனந்தக் கூத்தாடு !

கூட்டி லடைத்திடும் கொல்லும் விலங்கினம்
நாட்டினை ஆள வைத்தாய்
நாட்டி லிருத்திட வேண்டிய மக்களை
நன்கு சிறையி லிட்டாய்
ஏட்டி லெழுதிடக் கூசும் கொலைகளை
ஏனோ எம்மேல் விதித்தாய்
வாட்டி வதைப்பதென் றாலிவர் தாமென்று
வாழ்வி லெழுதி விட்டாய்

ஓட்டிக் களைத்துமண் மீது விழுந்திவர்
உள்ளம் தவிப்ப தெல்லாம்
கூட்டிக் கைகள்தட்டிக் கொண்டாட வோஇந்த
கோல மெமக் களித்தாய்
போட்டி போட்டாயிரம் ஆயிர மாய்வந்து
புண்பட மேனி செய்தாய்
காட்டிப் படம்செய்து காணக்கொ லைசெய்ய
கன்னிய ரும்கொ டுத்தாய்

ஊட்டி வளர்த்தவர் ஓர்விரல் வாயினில்
இட்ட சிறுவ ரெல்லாம்
நாட்டின் எதிர்கால மன்னர் களென்றுமே
நாமும் நினைத் திருந்தோம்
சூட்டில் சிதறிடச் சுக்கு நூறாகிட
சொல்லி இன மழித்தே
மூட்டி எரிதீயில் முன்னே வைத்தேயவர்
முற்றும் கருகச் செய்தாய்

ஆட்டிப் படைத்திடும் ஆண்டவ னேஇதற்
காமொரு தீர்வில் லையா
போட்டி யிட்டேபல நாடுகள்சேர்ந் தெமை 
பொல்லா வதை யிடவா
வேட்டை யிட்டேவெறி நாய்களைபோ லெமை
வீழ்த்திக் கடித்த வர்க்கே
நாட்டை யும்நம்தமிழ் தேசத்தையும் தந்து
நல்ல வர மளித்தாய்

கேட்டு மிரங்காது எம்மைய ழிக்கஏன்
இத்தனை கோபம் கொண்டாய்
போட்டுப் புரட்டியு டல்கொத்திக் கொன்றிடப்
புல்லருக் கெல்லா மீந்தாய்
கூட்டுச் சதிசெய்து கொள்கையி லொப்பந்தம்
கொண்டது முண்டோ சொல்லு
ஆட்டு சுழன்றோடி ஆனந்தக் கூத்தாடு
அள்ளிடக் கொஞ்சம் என்று

2 comments:

  1. தம்பீ
    நலமா

    !
    கூட்டி லடைத்திடும் கொல்லும் விலங்கினம்
    நாட்டினை ஆள வைத்தாய்

    தொடக்கமே உள்ளத்தைத்
    தொடுகின்ற வரிகள்
    நல்ல ஓசை நயமும்
    கருத்து வளமும் அமைந்த கவிதை
    வாழ்த்துக்கள்
    தங்கள் வலைத்தை, தமிழ் மணம் தமிழ் வெளி ஆகியவற்றோடு
    இணைத்துள்ளீர்களா இன்றேல் உடன்
    ஆவன செய்யுங்கள்
    புலவர் சா இராமாநுசம்

    ReplyDelete
  2. good share thanks

    http://www.usetamil.net/

    ReplyDelete