Wednesday, June 1, 2011

மே 18

வெட்டுதோ மின்னல் வீழ்ந்ததோ வானம்
வெடிவெடித் தெங்கணும் அதிர
முட்டுதே புகையும் மூளுதே தீயும்
மேகமே வீழ்ந்திடத் தோன்றி
தட்டியே சிதறித் தடதட வென்றே
தாவுதே துண்டுகள் அய்யோ
சுட்டுமே தீயிற் துடித்ததே உடல்கள்
சூழ்பெருந்தீ எரித்திடவே!

கொட்டிட வானிற் குண்டுகள் நூறாய்
குடிசைகள் வீடுகள் கூரை
பட்டுமே சிதறிப் பறந்தன உள்ளே
படுத்தவர் எழுந்துமே பதறிச்
சட்டென ஓடித் தப்புவோம் என்று
சற்றொரு கணமதில் எண்ண
விட்டதோ குண்டு விஷமெனப் பரவி
விழுத்தியே உடல்கருக் கியதே!

தந்தையும் தாயும் பிள்ளையும் சேர்ந்து
தழுவிக் கிடந்தனர் செத்து
அந்தநாள் பூமி கண்டதோர் பிஞ்சும்
அழுதிட எரிந்ததீ பற்றி
வெந்திடும் தீயால் வேகிடும் தேகம்
விளைதிட்ட ஓலங்கள் கோரம்
முந்தையர் முதியோர் மங்கையர் பாலர்
மரணித்த விதமோபயங் கரம்

வந்ததும் புரியா வாழ்வதும் அறியா
வசந்தங்கள் தேடிய பூக்கள்
கந்தகம் தூவி கருகியே முறுகி
கால்கை துடித்திடச் செத்தார்
எந்தநல் லிதயம் இறைவனைத் தொழுதும்
எரிந்திடும் தீவிட்ட தில்லை
செந்தமிழ் பேசிச் சிரித்தவர் மேனி
சிங்களம் கொன்றிடத் தீய்ந்தார்

பச்சைம ரங்கள் படுத்திடும் வீடு
பதுங்கிய குழிகளே சிதையாய்
இச்சைகொள் மாந்தர் இருத்தியும் நிறுத்தி
எரிந்திடக் கொள்ளியும் வைத்து
துச்சமாய் எண்ணித் துடித்துடல் அலற
தீயெனும் குண்டுகள் போட்டு
மிச்சமே யின்றி முழுஊ ரழித்து
மூடிஓர் சுடுகாடு செய்தார்

வந்திடும் உலகம் வாழ்வினைக் காக்க
என்றவர் நம்பிய போதும்
சுந்தர தேசம் சுழல்புவி யாவும்
செத்துநீ போஎன விட்டார்
மந்தைகள் நாமோ மனிதமே இல்லை
மரம்செடி கொடிகளை விடவும்
எந்தவோர் வகையில் இழிந்தவர் சொல்லு
இதையும்போய் யாரிடம் கேட்போம்

செந்தமிழ் ஈழம் சிறியதோர் பூமி
சிவந்திட இரத்தமாய் ஆறு
கொந்தளித் தோட குற்றுயிர் ஆகிக்
குரலின்றி கிடந்துமே அழுது
கந்தனே நல்லூர், கதிர்காம வேலா
காத்திடு என்னைநீ யென்று
நொந்துமே சோர்ந்து நீள்கரம் கூப்ப
நினைந்துமே அறிவழிந் திட்டார்

சிந்தியே கண்ணீர் தேகமும் பதற
சேர்ந்துமே அலறிடக் கேட்டும்
வந்தவர் யாரோ வாளெடுத்தங்கே
வெட்டியே மீந்தவர் கொன்றார்
எந்தவோர் தெய்வம் இரங்கவேயில்லை
ஏனய்யா கந்தனே கூறு
சந்தண மேனிகள் செந்தணல் தின்றிட
சென்றது எங்கு நீசொல்லு

1 comment:

 1. தம்பீ வணக்கம்
  நெஞ்சைத் தொட்ட
  கவிதை மே-18 அருமையாக உள்ளது
  வாழ்க கவிவளம் வளர்க கவியுளம்
  புலவர் சா இராமாநசம்

  ReplyDelete