Tuesday, June 7, 2011

அன்றும் இன்றும்

அன்று

நீலவான நெற்றி நீறென மேகத்தை
நீள இழுத்துக் கிடந்தது
காலக்குமரனும் கால்நடந்த வழி
காற்றி லழிந்திட போனது
சேலை முகிலணி கீழடி வானிலே
சென்றன புள்ளின மானது
மாலையல்ல அது மாதவம் செய்தவர்
மங்கிய பொன்னொளிநாளது

ஆலைகளில் தங்கள் வேலைமுடிந்தவர்
ஆனந்தித்து வீடுசென்றனர்
காலைமுதல் இல்ல வேலைமுடித்திட்ட
காரிகைகள் எழில்கொண்டனர்
சாலையோரம் விழிவைத்துத் தமதவர்
சற்று பொழுதினில் வந்திடும்
மாலைத் தனிமையை காதல்மொழிகொண்டு
மாற்றும் துணைவரைக் காத்தனர்

போதை யெடுத்திடும் இன்கவிபாடியே
பேதையர் நாட்டியமாடினர்
மாதை அழகிலும் மல்லிகை வாசமும்
மற்றவர் கண்டுளம் ஏங்கினர்
காதை இனித்தமிழ் கீதமடைந்திடக்
காணப்பொறுக்காது சின்னவர்
பாதை தனில் பெருங் கூச்சலிட்டோடிடப்
பற்றி இழுத்தனர் பெற்றவர்

காகம் பலகூடி நீர்நிலையோரத்தில்
கங்கை நீராடிக் களித்தன
போகும் நிறமெனப் பார்த்தனவோஎனப்
போயொரு சின்னவன் கண்டனன்
தேகம் சிலிர்த்து தெளித்தன நீரினை
துள்ளிப்பறந்த பறவைகள்.
தீமைகளற்று சிறந்தது அன்றைய
தீந்தமிழீழமென் தேசமேஇன்று

தேரைச்சிறிதொரு சின்னச் செடிக்கீந்த
தேசத்தின் மன்னன் தமிழ்வழி
பாரை வணங்கியே அஞ்சியும் கெஞ்சியும்
பாவம் பழியில்கிடந்தது
போரைநடத்திய வீரமும் தீரமும்
பற்றிய தீயினில் நீரென
ஊரை அழித்திடும் தீயெழ ரத்தமும்
ஊற்றி அணைத்துக் கிடந்தது

மார்பில் அடித்துக் கதறிய மங்கையர்
மானம் அழியக் கிடந்தனர்
போர்வை கிழித்தெழு பேய்களோ சிங்களம்
புத்தநீதி விட்டுக்கொன்றனர்
வேர்வைவிழ வயற் பக்க முழுதவர்
வீதிகளிற் பிணமாகிட
கூர்கொடும் வாளினைக் கையிற்பிடித்தவர்
கொன்று குவித்து விரைந்தனர்

கோவில்களின் மணியோசை இறப்பவர்க்
கூதும் சங்கின் ஒலியாயின
ஆவி பறந்தது நீர்கொதித்து அல்ல
ஆட்கள் உடல்செத்துப் போயின
பாவிகள் வெட்டிட ஆடிஅடங்கின
பாவையர் பூவுடல் பார்த்துமே
கூவிக்கதறியே ஓடினர் சின்னவர்
கூட்டிவர யாரு மில்லையே

மாலை மலர்ந்திட தென்றலில்வந்தது
மக்கள் இறந்தமெய் வாசமும்
வேலைமுடித்தவன் கைகளில் ஊறிய
வெட்ட வழிந்ததோர் ரத்தமும்
பாலைவனமென ஊருமழிந்தது
பாலையில் நீர்வற்றிப்போனதாய்
காலை நிலமூன்றி கொல்லப்பகை அழக்
கண்ணீரற்று ஈழம் நின்றது

6 comments:

 1. அந்தக்காலம் இந்தக்காலம் அழகாக வேறுபடுத்தியுள்ளீர்...

  கண்டிப்பாக வசந்தம் திரும்பும் என்ற நம்பிக்கையில் தொடர்வோம்...

  ReplyDelete
 2. பாராட்டும் தங்களுக்கு மனமார்ந்த நன்றிகள்!

  ReplyDelete
 3. ஐயா எப்படி நலமாக இருக்கிறீர்களா
  உங்கள் வலைப்பூவை இணையப்பக்கத்தில் பார்க்கமுடிந்தது
  சிறப்பான கவிதைகள் தொடர்ந்து எழுதுங்கள்

  உங்களை தொடர்பு கொள்ளக்கூடிய முறை பற்றி நீங்கள் குறிப்பிடவில்லை அதனால்தான் இப்படி தொடர்புகொள்ளவேண்டியதாயிற்று
  சரி மடலின் நோக்கத்திற்கு வருகிறேன்

  நானும் வலைப்பூ ஒன்றை இலங்கையிலிருந்து எழுதிவருகிறேன்
  முற்றுமுழுதும் கவிதையால் வார்த்திருக்கும் வலைப்பூ அது
  நீங்கள் அதைப்பார்க்க வேண்டும் விமர்சனம் கூறவேண்டும்
  எனக்கும் ஓர் தூண்டுகோலாக இருக்குமே
  நன்றி
  உங்கள் பதிலின் எதிர்பார்ப்புடன்

  www.masteralamohamed.blogspot.com
  sirajmohamed21@gmail.com

  ReplyDelete
 4. நன்றிகள் தங்களுக்கு! தங்கள் வலைப்பூவுக்கு வருகிறேன். என் தொடர்பு கொள்ள உடனே விபரங்கள் சேர்க்கிறேன்.
  அன்புடன் கிரிகாசன்

  ReplyDelete
 5. அன்றும் இன்றும் கண்டேனே-நெஞ்சில்
  அனலை அள்ளி உண்டேனே
  என்று மாறும் இக்கொடுமை-உலகில்
  எவரும் அடையா வன்கொடுமை
  வென்றுக் காண்போம் தனிஈழம்-வெகு
  விரைவில் இன்பம் நனிசூழும்
  இன்றுக் காணும்நிலை மாறும்-சிங்கள
  இனவெறி கெட்டு வெளியேறும்

  புலவர் சா இராமாநுசம்

  ReplyDelete