Wednesday, May 25, 2011

விரைந்து வாருங்கள்


விடைகொடுத்த மைந்தர்களே வெளியில் வாருங்கள்- நீங்கள்
விதைத்தமுளை வளரவிட்டோம் விரைந்து பாருங்கள்
தடை கொடுத்த விதியழித்தோம், தலையின் பாரங்கள் - இந்த
தரணிமீது இறக்கிவைக்கும் தருணம் பாருங்கள்
கடைஇழிந்த சிங்கமகன் கதியைப் பாருங்கள் - இனிக்
காண்பர் அவர் கைவிலங்கு கட்டிப் போடுங்கள்
படை இழைத்த துன்பம் இனிப் போகும் பாருங்கள் -எங்கள்
படகுதமிழ் ஈழம் செல்லும் பயணம் பாருங்கள்

நாளை எங்கள் விடிவுதேடி நடந்து செல்கிறோம்- ஒரு
நாடு காணத் துன்பங்களைக் கடந்து செல்கின்றோம்
வேளைஒன்று விடியுமென்று விரைந்து போகிறோம் - எங்கள்
வேதனையை தோள்சுமந்து விம்மி அழுகிறோம்
காளைகளே நெஞ்சில்உரம் கொண்ட மைந்தரே - பக்கம்
காணும் தீரக் கனல் எறித்த காரிகை களே
வாழவேண்டி வாழ்வையீந்த வண்ணப் பூக்கள்நீர்- இனி
வாசம் வீச விடியல்நேரம் வந்து சேருங்கள்

காடு காணும் நாலுகாலில் கொல்விலங்குகள்-  கூடக்
கண்ணியத்தைக் கையில் கொள்ளும் கயவராமிவர்
கேடுசெய்து பெண்மை, பிள்ளை கொன்றுவீசிய -அந்த
கீழ் நிலைத்த கேவலத்தைக் கேட்கும்காலமே
வீடு,மக்கள், வீதி,சந்தை வீழ்த்திக் குண்டினைக் - கெட்ட
விசமெடுத்த வகைகருக்கி வேகவிட்டனர்
ஆடை நீக்கி அவர் உதைத்து ஆனந்தித் ததும் - நாமும்
ஆணையிட்டு நீதிகேட்க அணி திரள்கிறோம்

ஆடு,மாடு,கோழி கூட மிச்சமில்லையே-  ஒரு
ஆலகாலநஞ்சை வீசி யாவும் கொன்றவர்
கோடுபோட்டு நோயைத் தீர்க்கும் கோவில்போன்றவை- கூட
குற்றம் செய்யும் கயவர்கண்ணில் கொலையின்பீடமே
கேடுசெய்த தீயஅரசு கொன்றபூமியில் புத்த
கோபுரங்கள் போட அத்திவாரமிட்டது
தேடுவோர்க்குதெய்வம் ஈயும், கேடு கேட்டவர் தம்மை
கேள்வி கேட்டுக் கேடுஈந்து கீழ் உதைத்திடும்

ஏவிவிட்ட பேய்கள் எங்கள் இனமழிக்கவே என்றும்
ஏழையாக நாமிருந்து ஏங்குவதாமோ?
கேவி அழும் நேரம் இனி கெட்டவர்பக்கம்- தீர்வு
கிட்டவரும், காலமினி எங்களின் பக்கம்
சாவு எங்கள் சொந்தமென்று ஆகியதெல்லாம் மாறி
சரித்தி ரத்தை எழுதுகைகள் நிறத்தை மாற்றிடும்
நீவிர் மீண்டும்பிறந்து மண்ணில் பூத்திட வேண்டும் இன்னல்
நீங்கி மீண்டும் ஈழம் தேசம் புதிதென ஆகும்

2 comments:

  1. ஆற்றொ ழுக்காய் போகிறதே கவிதை
    அருமையான ஓசைநயம் மிக்கக்
    கவிதை
    அன்பு அண்ணன்
    சா இரா

    ReplyDelete
  2. மிக்க நன்றிகள்! தங்கள் பாராட்டு மிக மகிழ்வைத்தருகிறது!! நன்றிகள்!

    ReplyDelete