Sunday, March 17, 2013

சிரித்திரு மகளே


நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
. நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
. சொல்லும் சிரிப்பிதுவோ
ஓலையிடை தென்னங்கீற்றினூடு நிலா
. ஓடிச் சிரித்ததுவோ-மழை
போலும் இளந்தூறல்காண வண்ண வான
. வில்லும் சிரித்ததுவோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
. வைத்த முன் பூவரிசை -அது
தோழமை கொண்டு சிரித்தனவோ- கனி
. தேனைக் குழைத்தனவோ
கீழை வயற்கரை கோபுரவீதியில்
. கூடும் மந்தியினமும் - வந்து
வீழப் பொலிந்த கனிஉண்டு ஆனந்த
. வேளை என்றாடியதோ

பச்சை வயல்வெளி முற்றும் நிறைகதிர்
. பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
. சாய்ந்தே சிரித்தனவோ
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
. பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
. தங்கும் சிரித்ததுவோ

கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
. காணும் பசும் இலைகள் - நெடு
வானமழை விழும்நீர் துளி கொஞ்சிட
. வெட்கிச் சிரித்தனவோ
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களைத்
. தாங்கிச் சிலுசிலிர்த்து - எழி
லான சிறுஓடை மீதுமலர் தூவி
. ஆனந்த மென்கிறதோ

வெள்ளை மணல் மீது வந்துகடலலை
. வீழ்ந்து சிரித்தனவோ -கயல்
துள்ளிக் குளத்திடை தாமரைப்பூ இதழ்
. தொட்டுச்சிரித்ததுவோ
வெள்ளிப் பனி உச்சி ஏறும்கதிர்கண்டு
. வீழ்ந்து சிரித்ததுவோ -சுகம்
அள்ளித்தரும் இளம்தென்றல் சிலிர்ப்பிட
. ஆரத் தழுவியதோ

அத்தனை காணும் சிரிப்பு மியற்கையின்
. அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளோ
. இரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
. பட்டெழில் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச் சிரித்திடு
. அற்புத பூமியிதே

4 comments:

  1. ஆம், “அற்புத பூமியிது”. வரவேற்கவேண்டிய பாசிட்டிவ் கவிதை. சுவையான அனுபவம் ! – கவிஞர் இராய. செல்லப்பா, நியுஜெர்சி.

    ReplyDelete
    Replies
    1. நன்றிகள்! தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும்

      Delete
  2. Replies
    1. நன்றிகள் தங்களுக்கும்!

      Delete