Sunday, March 17, 2013

அரசனா? ஆண்டியா?

ஆண்டுபோய் ஆண்டொன்று சேரும் - இந்த
ஆனந்த வான் வண்ணமாகும்
மூண்டு தீ வானிடைஓடும் - அது
மூவர்ணமாய் ஒளிபூக்கும்
ஆண்டவன் ஆளுவன் யாரும் - என்ன
ஆனாலும்ஆணவம் மங்கா
தீண்டும் வாள் தேகங்கள் கேட்கும் - அது
தித்திப்பை இரத்தத்தில் காணும்

ஆண்டிகள் போல்மொழி மேன்மை - இனம்
அங்கென்றும் இங்கொன்றும் ஓடும்
வேண்டிப் பிழைப்பதை நாடும் - ராஜ
வீரம் சலித்த தென்றோடும்
ஆண்ட பரம்பரை மீண்டும் - ஆளும்
ஆசைகுன்றிச் சோம்பல் கொள்ளும்
வேண்டா மென்றெதள்ளி ஓடும் - என்ன
வேதனையில் இன்பங் கொள்ளும்

ஆண்டவன் என்செய்யக் கூடும் - அந்த
ஆறாம் எண்ணம் கெட்டதாகும்
மீண்டுமிவர் சக்தி மேன்மை - பெற
மேதினியில் வாழ்வுமிஞ்சும்
தீண்டாது புத்தியை மூடி - இது
தேவை யில்லை என்றுவீசி
வேண்டா தென்றே கூனிநின்றால் - என்ன
வேதனைதான் மீதியன்றோ

தோண்டப் பொருள்வரு மென்றும் - பொன்
தோட்டதில் காய்கொள்ளும் என்றும்
நோண்டிக் கூரைதனைப் பிய்த்தே - ஒரு
நாளில் கொட்டும்பணம் என்றும்
ஆண்டாண்டு எண்ணிக் களித்து ஆவர்
ஆயுள் முடியும் வரைக்கும்
பூண்டாகிப் புல்லாகி தேய்ந்தும் இவர்
புத்தி கெட்ட வாழ்வே மிஞ்சும்


**********

2 comments:

  1. நல்ல கருத்துக்கள் உள்ள வரிகள்...

    ReplyDelete
    Replies
    1. தங்களூக்கு மிக்க நன்றிகள்

      Delete