Tuesday, October 9, 2012

ஒருநாள் ராஜா !

கோட்டையில் மன்னன்சிங் காசனம் - அதில்
கொற்றவன் நான் சுற்றிப் பாவையர்
பாட்டிசைத்து நடமாடிட - என்
பக்கத்தில் சாமரை வீசுவோர்
தேட்டம் நிறை திறைசேரியில் -முட்ட
தேங்கிக் கிடந்த பொற்காசுகள்
நாட்டில் மக்கள்முன்னே வீசிட - இங்கே
 நாளும் பொழுதும் கும்மாளமே

மஞ்சள் நிறவெயில் மாலையில் - இனி
மாங்கனிச் சாறினை உண்டபின்
கொஞ்சும் மலர்க் காவின் ஊஞ்சலில் -பல
கூடுமிள மங்கை நாணத்தில்
மிஞ்சி நகைசிந்தல் போலவே -ஞான்
மன்னன் வீசிய பொற்காசுகள்
பஞ்சில் மெதுவிளங் காற்றினில் - நிலம்
பட்டெழுந்தஒலி இன்பமே !

(வேறு)

எத்தனை எத்தனை வீரமுடன் அதில்
ஏறி அமர்ந்திருந்தேன்
புத்தம்புதுவொளி வீசிய கண்களில்
பொற்கதிரோன் ஒளிர
முத்தெனக் காணும் மணிச் சரங்கள்மின்னி
மோகனமாய்த் திகழ
சத்தமிட் டாடிடும்  நங்கையர் கள்குதி
தாங்கி நிலம்அதிர

வித்தைகள்போல் மனமேடையில் இன்பத்தின்
வேகம்துடிதுடிக்க
முத்தமிடும் இளங்காற்று வந்தே அங்கு
மெய்தனைத் தொட்டிழைய
நித்தம் அழகிய மாலையிலே இங்கு
நின்றிடும் ஏழைகளின்
சித்தம் மகிழ்ந்திட அள்ளி எறிகின்றேன்
செம் பொன்னிற் காசுகளை

பொத்தெனக் கீழே விழுந்து விடச்சில
சத்தம் கிளுகிளுக்க
 கத்திக் குடிமக்கள் பொத்திப் பிடித்திடக்
கண்டு மன மகிழ்வால்
கொத்து மலர்களின் தோரணங்களூடே
சுந்தர வீரனென
எத்தனை தான்இறு மாப்புடன் கண்டனன்
இன்பக் கனவினிலே

*********************

2 comments:

  1. இரண்டிற்கும் நல்ல வித்தியாசம்...

    ReplyDelete
  2. ஒருகோடு வரிதானும் தொடராக தரும்வாழ்த்து
    உயர்வான மனம் காட்டுது
    தரும்ஏடு தனில்காணும் தமிழான சுவையென்று
    தரம்கூற மனம்பாடுது
    தரைமேடு பள்ளங்கள் தடியோடு பெருங்கல்லும்
    தடை செய்யும் வாழ்வானது
    வரைகோடு இல்லாது வழிகின்ற பூந்தேனாய்
    வாழ்வில்நற் சுவை கூட்டுது

    உரையோடு நான்வாராப் பொழுதெல்லாம் தொலைநின்றும்
    உதிர்கின்றேன் விழிசிந்துது
    அரைகோடி லட்சங்கள் அதுபோலும் இலட்சங்கள்
    அளித்தேன்நன் றிகளென்பது
    விரைவோடு ஒருபோதும்தவறாது வருகின்ற
    வீணையின் இசைபோன்றது
    திரையோடு கடல்மீது திசைகாணா படகென்னை
    திசைகாட்டி மகிழ்வூட்டுது

    - கிரிகாசன்

    ReplyDelete