Thursday, October 25, 2012

புரியாத சக்தி (தேவி)

கண்கொள்ளக் காட்சி தந்தாள்
. காலைக்குக் கதிரைத் தந்தாள்
.. கனிந்திடும் காய்கள் பூவில் தேன் தந்தாள்
எண்ணுக்குள் கூட்டல் வைத்தாள்
. இணைவதில் மீட்டல் வைத்தாள்
..  இதயத்தில் அன்பை வைத்து இதம்செய்தாள்
பெண்ணுக்குள்  உயிரை வைத்தும்
. பிறப்பென்று வேரைஊன்றி
.  பிரிந்திடும் இயல்பை வைத்துப் புதிர்போட்டு
மண்ணுக்காய் ஆசைகொண்டு
. மானிடம் பகைத்து நின்றால்
.. மாதரின் மெய்யைத்தீண்ட ஏன்செய்தாள்

உண்ணென்றே அன்னம் இட்டாள்
. உலவென்று வானம் வைத்தாள்
..  உறங்கிட இரவைத் தந்தும் உளம்மீது
பண்ணோடு இசையும் தந்தாள்
. பாட்டுக்கு நடமும் செய்தாள்
..  பாரென்று இன்பம் எல்லாம் படைத்திட்டாள்
வெண்நீல மேகமெங்கும்
. விளையாடிச் சுற்றும் மதியை
..  விளக்கென்று வைத்துப் பகலுக் கெதிர்தந்து
கண்மூடித் தூங்கச் செய்து
. கருமைக்குள் கலகம் இட்டு
..  காணாத துன்பம்கொள்ளக் கதை செய்தாள்

தண்ணென்ற ஒடைநீரில்
. தாமரை தொட்டேஓடும்
..  தவிக்கின்ற காற்றில் மூச்சை உயிராக்கி
கண்ணீரில் வாழச் செய்ய
. களிப்புக்கோர் எல்லைபோடக்
.. காலத்தில் காணும்தீமை கொள்ளென்று
அண்மைக்குத்  துணையைத் தந்து
. அறிவுக்கும் இருளைகாட்டி
..  ஆக்கத்தில் பசியைத் தானும் பெரிதாக்கி
வண்ணத்தில் ஏனோ மின்னா
. வாழ்வுக்குப் புரியா தென்றோர்
..  வார்த்தைக்குப் பொல்லா தொன்றை ஏன் வைத்தாள்?

புண்ணுக்கு மருந்து மாவாள்
. புலமைக்குக் கவிதையாவாள்
..  போக்கிற்கு பாதைகாட்டிப் போவென்பாள்
வெண்ணெய்க்குள் நெய்யாய் நின்று
. விளக்கிடை ஒளியென் றாவாள்
..  விண்ணுக்குள் நின்றே காணா விளைவாகி
அண்டத்துள் சீறிக்காணும்
. அனலுகுள் வெம்மையாவாள்
.  அம்மையர்க்  கழகைத் தந்தே ஆளென்றாள்
திண்ணத்தில் நேர்மைகொண்டாள்
. திறனுக்குத் தாய்மை செயதாள்
..  தீண்டக்கை தொட்டாற் சிதைவும் ஏன்செய்தாள்


2 comments:

  1. அருமை அருமை... சிறப்பு...

    நன்றி...

    ReplyDelete
  2. நன்றிகள் அன்பின் சகோதரரே!உங்கள் வாழ்த்துக்கள் எவ்வளவு சக்தி கொடுக்கிறது என்பதை நான் வார்த்தையால் வர்ணிக்க முடியாது. தாருங்கள், என்றும் இன்றுபோல்!!

    ReplyDelete