Saturday, November 26, 2011

வீரம் வேண்டிடுவோம்

வானிருந்து பூமழைதான் தூவாதோ - மைந்தர்
வாழுமுள்ள மெங்குமொளி மின்னாதோ
மேனியெங்கும் புத்துணர்வு பொங்காதோ - கண்கள்
மின்னி யொரு வெஞ்சபதம் கொள்ளாதோ
தேனின்நிலா வான்நடந்து வந்ததென - மைந்தர்
தோன்றி எம்மில் ஒளி கொடுக்க மாட்டாரோ?
தானிருந்த மண்ணை நெஞ்சும் எண்ணாதோ - மனத்
தாகம் கொள் சுதந்திரத்தை தேடாதோ

பூங்கதவு தாள் திறந்து கொள்ளாதோ - ஒரு
பூகம்பமே தோன்றி நிலம் பிரியாதோ
தாங்கும் உரத்தோள் வலித்த மைந்தர்களும் - அவர்
தாளுடைத்து தடபடென்று வாராரோ
வேங்கையொன்று சீறி யங்கு பாயாதோ - தமிழ்
விம்மியழும் வேதனையும் தீராதோ
நீங்குதடா துன்பமென்று பாடோமோ?- உயர்
நீதிகாண ராஜநடை போடாரோ?

மானிருந்து துள்ளுவதாய் மருள்விழிகள் - கொண்ட
மாதர்களும் வீறுநடை கொள்ளாரோ?
தேனிருந்த பூக்கள்தீயும் கொட்டியதாய் - இத்
தேசம் கண்ட வீரம் மீண்டும் கொள்வாரோ?
ஏனிருந்த சேனைபடை முற்றழிய - மனம்
ஏங்கியழ இன்னல் வந்து வீழ்ந்ததுவோ?
கூனியெங்கள் குலம்விழுந்து போனதென்ன - எம்
கொள்கை சொல்லும் நாவழிந்த ஏதுவென்ன?

கோனிழந்து குடியிழந்து காணுகிறோம் - கொடும்
கோடையிடி மின்னல் பட்டுச் சாகுகிறோம்
நானிலமும் நீதிசாக விட்டதுமேன் - அதை
நாடு யாவும் சேர்ந்துமூடி வைத்ததுமேன்?
தானைபடைத் தலைவன் நெஞ்சிற் கொண்டதுமாம் - அத்
தாகம் தன்னை நாம் மறந்து போவதுவோ
ஏனய்யா இச்சோக மெங்க ளோடு இன்னும் - நாமும்
ஏங்கி ஏங்கிச் சாதல் இனி நிற்பதெப்போ ?

தூய வீரம் துணிவுதனை எங்கு விட்டோம் - இல்லை
சொந்தபுத்தி மானம் நேர்மை தவறவிட்டோம்
காயமின்னும் மாறவில்லை நோவெடுத்தோம் - இன்று
கத்திகொண்டு புண்ணில் கீறிக்கத்துகிறோம்
சாயம்தன்னும் தான்வெளுத்து போகமுன்பு - நாம்
சரித்திரத்தின் புருசர்களைச் சற்று எண்ணி
பாயும் வேங்கை யாக வில்லை பாதிதனும் - அதில்
பாதியிலும் பாதிதனும் பாய்ந்திடடா!

பச்சை வளம் பொங்கிய நல்லூர்க ளெல்லாம் - நற்
பனிபடர்ந்த புல்வளர்ந்த பூமியெல்லாம்
மிச்சமின்றித் தன்னுடமைத் தேசமென - அவன்
மெல்லமெல்ல உள்நுழைந்து கொள்ளுகிறான்
அச்சமின்றி நாமிருப்ப தாகுவதோ - ஓர்
அடிமையென்று காலமெலாம் வாழுவதோ
துச்சமென்று உயிர்விடுத்த தோழர்கள்பார் - சிறு
தூயமலர் சாத்தி வீரம் வேண்டிடுவோம்.

No comments:

Post a Comment