Thursday, November 24, 2011

தமிழர் மறம்

கடுமற முடனும் திடமெடு மனமும்
கல்லெனும் தோளுரமும்
விடுஎன அதிரும் விளைவொடு திமிறும்
வீங்கிய திடமார்பும்
கொடுமை கண்டுழற குமுறிடும் மனமும்
கூழென தீ பாயும்
சுடுஎரி மலையின் சொரிகனல் சினமும்
சூழ்வலி மைந்தர்களே!

கொடுமை செய்படையும் கூடியபோரும்
கொன்றுநம் மினமழிய்
எடுகரமீதில் இதையெனக் கொண்டு
இயல்பொடு தலைநிமிர
நெடுமுள தாகத் தமிழினில் மோகம்
நிறைதலை வரும் இவரை
தடு எனவிழியில் ஒருஇமைஅசைய
தடபுட லென மைந்தர்

கிடுகிடு எனவே களமிடை புகவும்
பொடிபடும் பகைவர்களே
நடுவினில் பகையின் வளைபெருவியூகம்
நொறுங்கிட உடைமறவர்
தொடு விரிவானின் சுடர்தரும் ஒளியும்
அதைவிடப் பெரிதெனவும்
எடுமறவீரன் எம்துடை தலைவன்
இயம்பிட வினைமுடிப்பர்

வடுவிலதமது வஞ்சியர் மேனி
வளமொடு உயிர் காப்போன்
கெடுஎனக் குதறும கீழ்மகன் சிங்கம்
தொடும்விலை உயிரெனவே
சடுகுடு ஆட்டம் புலியுடன் ஆடும்
எனமகிழ் வொடுஆடும்
கொடுமையை நீக்க குழுமியமைந்தர்
கொண்டபுகழ் கடலே

குடிபல கொல்லும் கொடியவ னரசும்
கொலையிடும் விலங்கினமும்
அடிதடிப் படையென் றொருதிரு நாமம்
இடுஎன ஈந்தணியாய்
பிடிஎவன் தமிழன் பிரிஅவ னுயிரை
பிணமெனப் புதையெனவே
கொடிதிவர் உலகை கூட்டியே எம்மை
கொன்றது இழிசெயலால்

படைவர மைந்தர் களமிடைபுகவும்
கிடுகிடு எனவெடியும்
குடைசரிந் துடையும் அரசுடை
வளவும் குழுமிய எதிரிகளும்
தொடையது நடுங்கி தொகையென வீழும்
துணைப்படை வகைஎண்ணி
உடை விழ ஓடும் பகைவரென்றாகும்
நிகழ்வினைச் சொலவழகே

1 comment:

  1. வல்லின எதுகைகளோடு ஒரு காட்டாறு
    ஓடுவதைப் போல போகும் தங்கள் படைப்பைப் படிக்க படிக்க
    மெய்சிலிர்த்துப் போனேன்
    கலிங்கத்துப்பரணிப் பாடலைப் படித்த நிறைவு
    மனம் கவர்ந்த அருமையான படைப்பு
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete