Thursday, November 29, 2012

தமிழ் பேசித் தவழ்ந்தோம்

கலை கொஞ்சுந் தமிழ்மீது கடுங்கோப மேனோ
கனிமாவின் பழமென்ன கசக்கின்ற வேம்போ
தலையான புகழ்கொண்ட தமிழென்ன தாழ்வோ
தனதன்பு தாய்தன்னைத்  தாழ்வென்ப தாமோ
நிலைதாழத்  தமிழெங்கே நிரைதன்னிற் கடையோ
நினைவென்ப தொலியாகி நினைக்கூட லிகழ்வோ
மலை போல நிமிர்ந்தாளும் மறங்கொண்ட தமிழோ
மடிமீது பிறதேச மொழிகொள்ளுந் துயிலோ

கலை கொண்ட தமிழ்காண மயிலாடு மழகே
கனிகொண்ட சுவைதேனை நிகரென்னத் தகுமே
தொலைதூர ஒளிதன்னிற் திகழ்கின்ற கதிரோ
தினந் தோன்றி ஒளிதந்தும் திசைமேற்கில் விழுதோ
குலைவாழைக் கனிகண்டு கொள்ளாது ஓடிக்
கூடைக்குள் கனிஅப்பிள் கொள்ளென்ற மனமோ
சிலைபோலு மெழில்வண்ணச் சிற்பங்கள் கொண்டும்
சேர் ரப்பர் பொம்மைகாணச் சிறப்பென்ற கதையோ

கலைமேவு மழக்கென்று கடதாசி மலர்கள்
கரமேந்தி இறைபோற்றிக் கனிவோடு தொழவோ
விலையற்ற வெறுமைக்குள் வீழ்கின்ற மனமோ
வெளிநாட்டின் பொருள்மோகம் விளைத்திட்ட செயலோ
தாய் ஊட்டப் பாலுண்டு தமிழ்கேட்டுத் தூங்கி
தாலாட்டும் சந்தங்கள் தனிலின்பங் கூட்டி
வாய்பேசத் தெரியாது வாவ் வென்று அழுதும்
வருங்காலம் புரியாது வளர்ந்தோமே தமிழில்

தாய்மைக்கும் தன்னோர்மைத் தமிழ்என்னும் வீரம்
துவள்கின்ற தேயின்று யார் செய்தபாவம்
தேய்வின்றித் தமிழ்காக்கத் திறன்கொண்டு நீயும
தெளிவான வழி சென்று தமிழ் காக்க வேண்டும்
வேய்கூரை வீட்டிக்குள் விளைகின்ற  தங்கம்
விரும்பாது வெளிநாட்டில் விதி தந்த கோலம்
தூய்மைகெட் டிரந்தாலும் தமிழ் உந்தன் தாயாள்
திசை மாறித்திரும்பாதே தமிழ் பேசி உயர்வாய்!

*******

4 comments:

  1. தமிழைத் தாயாய் சில தமிழர்கள்தான் போற்றுகிறார்கள் எனும்போது வருத்தமாகத்தான் இருக்கிறது..

    ReplyDelete
    Replies
    1. அன்புடன் நன்றிகள் உரித்தாகட்டும்

      கிரிகாசன்

      Delete
  2. தமிழை தாங்கும் தாலாட்டு. அருமை வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. மகிழ்வின் தாலட்டை நான் கொண்டேன் நன்றிகள்!

      -கிரிகாசன்

      Delete