Monday, November 26, 2012

இல்லாத தொன்றில்லை


இருக்குமா இல்லையா இருப்போர்தம்மில்
இருந்ததிது வொன்றாக இருந்தபோதும்
இருப்பதோ இல்லாமை  இருந்துபார்நீ
இருப்பதிது வொன்றேயாம் இருப்போர் சொல்ல
இருப்பதோ இல்லையோ இருந்தாலென்ன
இருப்பதைக் காண்போமென் றிருந்தோர்பாதி
இருப்பதென் றில்லையா இருத்தலின்றேல்
இருப்பதும் போகுமென் றிருந்தோர் மீதி

இருப்பது இல்லாது இருக்குமொருவன்
இருந்தாலென் இல்லையென் றானலென்ன
இருப்போரை இல்லையென் றாக்குவேன்காண்
இரு பாரம் இவ்விடம் இருத்தலாகா
இரு பாரென் றிரும்பு வாள் இருகையேந்தி
இருந்திட்ட இடத்தினுள் இருக்கவந்தான்
இருப்போரும் இருந்தபோர் இல்லையென்று
இருத்திவிட இல்லாமல் இறந்துபோனார்

இருப்போரை எளிதாக இல்லையாக்க
இருபாதி யாக்கிட இன்னல் கொண்டார்
இருந்துபார்  இருபாதி ஒன்றுமில்லை
இருக்கும்சுவ டிருக்காமல் இருக்குமென்றான்
இருந்தும் உயிரில்லையென் றாகும்போது
இரும்புமனம் கொண்டாலும் இருந்தவீரம்
இருப்பாக  இருந்ததாம் இருந்ததன்றி
இருளென்னும்   தீமைதனை இல்லையாக்க

இருக்கும் வழியறியாது இருந்தார் ஆனால்
இருந்தாலென் போனாலென் றெழுந்தசிலரால்
இருக்கும் மனவலிமையை எடுத்துஆள
இருட்டில்சில ஒளிதோன்ற , ‘இல்லையாமோ
இருப்பதோ என்றனை  இருக்கு’தென்றார்
இருக்குதாம் என்றமுதல் இருப்பேயின்றி
இருந்திடக் காண்கிறார்  இருப்பதாயின்
இருக்குதொரு எதிர்காலம் இல்லையாமோ

3 comments:

  1. மிக மிக அருமையான கவிதை
    கருத்தூன்றிப்படித்துக் களித்தேன்
    பொருள் ஆழமும் சொற்களின் பிரயோகமும்
    சொக்கவைத்தன
    பகிர்வுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை... வரிகள் மனதில் எப்போதும் இருக்கும்

    வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. அன்போடு வாழ்த்திய தங்கள் இருவரையும் நீடூழி வாழ வாழ்த்துகிறேன். ,மிகமிக மகிழ்ச்சியே !!

    ReplyDelete