Sunday, November 25, 2012

விடியாத வாழ்வு வேண்டாம்


 தேயாத வெண்ணிலா தீண்டாத தென்றலும்
துவளாத கொடிதானும் வெயிலில்
காயாத ஈரமும் கலையாதமேகமும்
கருதாத எண்ணமும் உண்டோ
பாயத நீர்நதி பரவாத வான்வெளி
பருகாத தாகமும் நன்றோ நிலை
சாயாத நேர்மையும் சரியாத வீரமும்
சரித்திரம் தமிழ்கொண்ட தன்றோ

வேயாத கூரையும் விடியாத காலையும்
வெயிலெண்ணி ஏங்காத பயிரும்
மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
மிகையான அழகற்ற பூவும்
தாயாகின் வன்மையும் தவளாத குழந்தையும்
தகிக்காத உச்சியின் வெயிலும்
நோயாக போனாதாய் நிற்குமோர் நெஞ்சமும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ

வெல்லாத வீரமும் விளைந்திடா ஆற்றலும்
வெறிகொண்ட பகைகொல்ல வெகுண்டு
கொள்ளாத நெஞ்சமும் குறிவைத்துத் தாக்கிட
கொதிக்காத உணர்வோடு தூங்கி
துள்ளாத ஆறெனத் துடிக்காத பூவிழி
தொடங்காத ஆரம்பம் போலே
நில்லாந டந்திடு நெஞ்சை உயர்த்திடு
நீகாணும் வெற்றியை எண்ணு

செல்லாத கால்களும் தெரியாத பாதையும்
திக்கற்ற விதமான போக்கும்
கல்லாக நெஞ்சமும் கடமைக்கு ஆற்றலும்
கருவற்ற கவிதைபோல் நேர்மை
அல்லாத பார்வையும் அளவற்ற பொறுமையும்
அடிமைக்கு நிகரான வாழ்வும்
இல்லாது போகவே இறைமைக்கு வேறென
எண்ணுதல் நிறுத்தி நீசெல்வாய்

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை

3 comments:

  1. வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
    இயங்கிடு சுதந்திரம் தேவை

    விடியல் தேடும் வரிகள் அருமை !

    ReplyDelete
  2. உற்சாக மூட்டும் வரிகள்...

    வீரமிகு வரிகளுக்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. இருவருக்கும் மனமார்ந்த நன்றிகள்! தமிழைக் கவிதையை விட்டு இருக்க முடியவில்லை. வந்துவிட்டேன்
    நன்றிகள்...

    ReplyDelete