Thursday, January 24, 2013

சிரிப்பொலி (புதிது)


வானெழுந்த வெயில் சிரிக்கும் .  வண்ணமலர் புன்னகைக்கும்
.  வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைவயற் கதிர்சிரிக்கும்   சிற்றோடை கிளுகிளுக்கும்
.  சேர்ந்துவளர் செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானகத்துப் புள்ளினங்கள் .  காற்றொலியில் கூச்சலிடும்
.  காட்டினிலே வண்டுமலர் கண்டு சிரிக்கும்
மானமிழந் தோனைஉயர் .  மாபுகழோன் கேலிசெய்ய
.  மாறும்விதி மாற்றிவிட்டு வீழ்ந்து சிரிக்கும்

தேன்குடித்து மந்தியினம் .  துள்ளி இளித்தாடிவிழும்
.  துயருறுவோன் வாழ்வுகண்டு துறவி சிரிப்பான்
போனவனைக் காட்டினிலே . போட்டெரித்து மீண்டவனும்
, போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்
மான்விழியில் மைந்தர்குலம் .  மருள்வுகண்டு சிரித்திருக்க
.  மங்கையவள் மனதிலென்ன எண்ணி நகைப்பாள்
கூன்விழுந்த பாட்டிமனம் .  குமரியெழில் பார்திளமை                                  
.  கொண்டதிமிர் எண்ணி நிலைகண்டு சிரிப்பாள்

நீரோடும் நதி குதித்து . நெளிந்து மெல வளைந்துசெல்ல
.  நளினமுடன் கரைஅலைகள் நாளும் சிரிக்கும்
பேரோடு பூமியிலே .  பேரரிய வீரமிட்டோன்
.  பெண்மொழிக்கு தோற்றுவிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே .  ஒருவனாகத் தனித்திருக்க
.  உண்மைவழி நின்றிடினும்  உலகம் சிரிக்கும்
யாரோடிச் சென்றிடினும் .  வாழ்வோடி முந்த அதைப்
.  போராட எண்ண விதி புன்னகை பூக்கும்

தானோடிச் சுற்றுலகு .  தாங்கும்சிறு மானிடனோ
.  தன்னுடைமை பூமிஎன தரணி சிரிக்கும்
வீணாகத் உயிரெடுத்து .  வீதியிலே சாகுமினம்
  வெறிபிடித்த நிலைமை கண்டு பேய்கள் சிரிக்கும்
தானமிடும் குணமகனைத் .  தரமறுப்போன் கேலிசெய்ய
.  தாவணிப்பெண் இருவர்கூடச் சிரிப்பொலி கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவரும் .  விதியறிந்து நகைபுரிய
.  தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

கண்டதும் காணாததும்

ஒன்று சேர்!
(ஒருவன்)
தேனூற்றும் மலர் கண்டேன் திங்கள் கண்டேன்
தினந்தோறும் வாசமிடும் தென்றல் கொண்டேன்
வானேறும் வெயில் கண்டேன் வானில்தூரம்
வளைந்தோடும் பறவைகளின் கூட்டம்கண்டேன்
தானூற்றி வீழ்ந்தருவி தெறிக்கக் கண்டேன்
தரைமீது விளையாடும் மானைக் கண்டேன்
பூநாற்றம் கொண்ட மலர்ச் சோலையெங்கும்
புதுமை யெழில் பொன்நிலவில் மின்னக் கண்டேன்

(இன்னொருவன்)
பன்சிலிர்த்த உணர்வோங்கும் மனங்கள் காணேன்
பனிதூங்கும் குளிர்வண்ணப் பேச்சைக் காணேன்
தென்னைதொடு இளங்காற்றின் சுகத்தைக்காணேன்
தித்திக்கும் செங்கரும்பில் இனிப்பைக் காணேன்
என்னசுகம் இதுவோஎன் றேங்கக் காணேன்
இசைக்கு மோர் இருள் வண்ணக் குயிலைக் காணேன்
அன்னஅசை செந்தமிழின் அழைக்கு மோசை
அடடா அங்கில்லை முழு நிசப்தங் கண்டேன்

(மூன்றாமவன்)
மின்னுகின்ற விண்மீன்கள் துடிப்பைக்கண்டேன்
மேகமெலாம் கலைந்தோடி அஞ்சக் கண்டேன்
செந்தணலும் நீர்பட்டு தணியக் கண்டேன்
சேதிசொலும் முரசங்கள் உறங்கக் கண்டேன்
சந்தமின்றி சொற்கவிதை சரங்கள் போலும்
சற்றுமிழையா மனிதர்வாழ்வைக் கண்டேன்
மன்னர் பரி வாரங்களும் மறையக் கண்டேன்
மாதவளின் புன்னகையில் துயரைக் கண்டேன்

(பொது)
சொன்னநிலை மாற்றிடவே சிந்தை கொள்வீர்
சோதிபலங் கொண்டுகிழக் கெழுதல் காண்பீர்
பொன்னிறத்து கதிர் வயலில் பொலியக்காண்பீர்
புதுவெள்ளம் பிரவகித்துப் புரளக் காண்பீர்
தென்னைமர இளங்கிளிகள்  சோலையெங்கும்
தாவியெழுந் தோடிமகிழ்வாடக் காணீர்
என்னவென மாந்தர் மனம் வியந்தேயின்பம்
ஏற்றமுறும் வாழ்வுதனை எடுக்கக் காண்பீர்

விண்ணிறைந்து தாரகைகள் விழிக்கக் காண்பீர்
வெண்ணிலவு முழுவட்டம் விளங்கக் காண்பீர்
கண்ணெதிரில் பொன்மணிகள் குவிதல் காண்பீர்
கனவிலன்றி பகைபணிந்து போகக் காண்பீர்
பெண்கள் மலர் தூவிஎழில் போற்றக் காண்பீர்
பெரும் உயர்வில் கொடிஒன்று பறக்கக் காண்பீர்
மண்ணிலெழில் நல்வளங்கள் மீளக் காண்பீர்
மாசற்ற வாழ்வு கொள்ள மாந்தர் சேர்வீர் !

வாழ் வும் தமிழும்


கடித்தேன் இனித்தேன் கனிகள் சுவைத்தேன்
கனிந்தேன் உள்ளம் களிப்புற்றேன்
படித்தேன் பலதும் பழத்தேன் தமிழைப்
பருகும் கள்ளுண் வண்டானேன்
குடித்தேன் கவிதை குளித்தேன் தமிழாம்
குலவும் தென்றல் குளிர்மேவத்
துடித்தேன் இதயம் தொலைத்தேன் தமிழின்
தொன்மை படைப்பில் இழந்திட்டேன்

அடித்தேன் அழித்தேன் எனவேஇல்லா
அழகிற் தென்னை அருகில்தேன்
வடித்தே ஒளிரும் வண்ணநிலாவின்
வகையாய் பிறைபோல் வளர்ந்திட்டேன்
வெடித்தேன் முகிழ்ந்தேன் மலர்ந்தேன் என்னும்
விடியல் பூவில் விளையும்தேன்
விடத்தேன் சுவைதான் எடுத்தேன் இயல்போ
எனத்தான் வியந்தேன் இணைந்திட்டேன்

குடித்தேன் குடமாய் கவிதை யின்பம்
கொள்ளா தேனோ சலிப்பற்றேன்
அடித்தேன் இனிப்பாம் கரும்பில் காணும்
அருந்தேன் தமிழும் அதையொத்தேன்
குடித்தேன் பழமை குடைந்தேன் தமிழில்
குவித்தேன் இன்பங் கொண்டேன்காண்
நெடிதென் வாழ்வில் நிகழ்வும் கடிதென்
நேரும் வரையும் நிலைத்திட்டேன்

கடந்தேன் வாழ்வில் தடைகள் பலதும்
களித்தேன் என்றும் சொல்லற்றேன்
நடந்தேன் பாதைநலிந்தேன் விழுந்தேன்
நாளும் துயரைச் சந்தித்தேன்
அழுதேன் தொழுதேன் இறைவா என்றேன்
அரைதேன் நிலவைஅணிந்தோன் கை
எடுத்தோன் மழுவை இழிந்தேன் என்னை
இழந்தேன் உயிரும் எனவாகா

செடித்தேன் மலராய் சிரித்தேன் நெகிழ்ந்தேன்
சிவந்தேன் இதழும் விரித்தேனாய்
கொடுத்தேன் வாழ்வில் கொள்ளையின்பம்
கொள்ளா செய்தாய் கொடுஎன்றேன்
அலைந்தேன் ஆழி அலைகள் எனவே
அவலம்கொண்டேன் ஆனாலும்
நிலைத்தேன் நினைத்தேன் நிகழும்துன்பம்
நிகழா சக்தி காவென்றேன்

குலைந்தே கொள்ளா தேனோ அண்டம்
கோடி எழுந்தீச் சூரியனும்
விழுந்தே அணையாதென்னே விந்தை
விளைத்தார் யாரோ விளைவெண்ணி
எழுந்தேன் சக்தி என்றே நாளும்
எண்ணித்தான் கால் எடுத்திட்டேன்
கலைந்தே துன்பம் கவிதைபாடும்
கலையும் கொண்டே காண்கின்றேன்

Saturday, January 19, 2013

கண்ணீர்

நான் என்பதேனிங்கு வந்துது - இந்த
நாளில் ஏன் பூமியைக் கண்டது
தானே எதை யெண்ணி வாடுது - அது
தண்ணீரில் மீனென ஆகுது
வானெண்ணி நீரிடை துள்ளுது - அலை
வாரிக் கரையினில் போடுது
தானோ அலை விட்டுப்போகுது - மீனும்
தண்ணீரை எண்ணித் தவிக்குது

வானரமாய் உள்ளம் ஆகுதோ - அது
வாலைவிட்டு ஆப் பிழுத்ததோ
கூனென்பதா யுள்ளம் நோகுமோ - அது
கொள்கையில் கொப்புகள் தாவுமோ
தேனெனத் தின்னப் பிடிக்குதோ - இல்லை
தின்னத் திகட்டிக் கசக்குமோ
ஏன் இன்று எட்டாப்பழமிதோ - வாழ்வு
இப்படியும் புளிக்குமோ

வான்நிறைந்த விண்ணின் மீன்களாம் -அவை
வந்து ஜொலித்திடக் காத்திட
கானக மின்மினி யாவதேன் - அதைக்
கண்ட மனம் ஏங்கலாவதேன்
மானின் விழிகொண்டு காணவா - உளம்
மல்லிகையாய் வாடிப் போகவா
தானெனத் தந்தன ஆடவா - இல்லை
தந்ததை மீண்டும் கொண்டோடுமா

மேன்மையில் என்னைப் படுத்துமோ - இல்லை
மேனியைத் தள்ளி கிடத்துமோ
ஊனுடையுள்ள உணர்வுகள் - என்னை
ஊர்வலம் கொண்டு நடத்துமோ
வானவில்லின் நிறம்கொள்ளுமோ - அன்றி
வாசலில் குப்புற வீழ்த்துமோ
ஆனவிதி சொல்வதென்னடா - அந்த
ஆனை மிதிக்குமோர் புல்லடா

வீணென்ப தெல்லை கடக்குது - அது
வீழ்த்திட மண்ணிடை தேயுது
காணெனக் கூறிக் கலங்குது - அதன்
காட்சியெல்லாம் கண் மறைக்குது
பெண்ணெனின் பேயும் இரங்குமோ - விலை
பேசிப் பொய்தன்னையும் விற்குமோ
பூணும் பொன்னாடையும் போகட்டும் - மீண்டும்
புன்னகை யைஇதழ் காணட்டும்

Friday, January 18, 2013

வண்ண மழை

ஒற்றைத் தாளில் கப்பல்செய்து ஓடும்நீரில் விட்டவன்
உற்றதா முள்ளாசை கண்டு ஓங்கியோர் புறத்தினில்
பெற்றவள் விடுத்தகிள்ளு பாவியெந்தன்மேனியில்
உற்றதோர் கடுத்தநோவு எண்ணியோ நீஆண்டவா

சொற்றுணை எனத்தொடங்கி சோதியாம் நல்வானவன்
உற்றதாம் சிறப்பையெண்ணி ஓதியுன்னைப் போற்றிட
கற்றுனைத் துதித்தல்கண்டு காகிதம் மறுப்பினும்
உற்ற அன்பினாலே வண்ணம் ஊற்றும் மேக மாக்கினாய்

முற்றமும் பொழிந்தநீரில் மேகம் வண்ணம் பற்பல
அற்புதம் நிறத்திலூற்றும் ஆனவிந்தை காண்கிறேன்
நெற்பயிர் விளைச்சலோடு நீண்டபுல் முளைத்திடும்
புற்தரை விரிப்பிலெங்கும் பெய்யும் வண்ண மானதே

நெஞ்சிலே கடுங்குரோத நீசரெங்கள் நாட்டினில்
கொஞ்சியே குலாவும் அன்னை கொண்ட மஞ்சள் குங்குமம்
வெஞ்சினத் தினாலே மேனி வெட்டிமண் புதைத்திட
கெஞ்சியும் அழித்தபாவம் மஞ்சள் நீரைக்கொட்டுதோ

அஞ்சியே துடித்தபோது ஆணவத்தி லோடவர்
வஞ்சியர் வளர்ந்த பிள்ளை வாலிபத்து மேனிகள்
நஞ்சிலே இழைத்த குண்டு நீலமாக்கி கொன்றதை
பஞ்சுமேகம் கண்டு நீலம் பெய்மழைக்கு தந்ததோ

கண்கள்தோண்டி கைமுறித்துக் காலுடைத்துக் கொன்றிட
மண்ணிலே சொரிந்த ரத்தம் மேலெழுந்து கொண்டதால்
விண்ணிடை கருத்தமேகம் வையகத்தில் கொட்டவும்
தண்மை கொள்மழை சிவந்த தானவண்ணம் கொண்டதோ

அச்சமின்றி உச்சிமீது வானின் ஊர்தி கொட்டினும்
துச்சமாய் மதித்துவாழ்சு தந்திரத்தை வேண்டியோர்
பச்சைமேனி கள்கிழித்துப் பாவம் செய்த காதகர்
இச்சகத்தில் வாழ்அநீதி எண்ணிப் பச்சை கொட்டுதோ

என்னவெண்ணி வான்மழைக்கு இந்தவண்ணம் வந்ததோ
அன்னைபூமி விட்டுச்சற்று அந்தப்பக்கம் கொட்டுதே
இன்னலைத் தரும்நிலைக்கு இட்டஎச் சரிக்கையோ
மின்னல் வானம் மெச்சியின்பம் மஞ்சள் நீலமானதோ

Wednesday, January 16, 2013

இயற்கையி லுள்ளம்

எழில் கொஞ்சும் இசையொன்று  எழுகின்றதே
இதுகாவின் குயில் பாடுமொலி யல்லவே
பொழிலாடும் அலையென்றே உணர்வாகுதே
புரியாத மழையொன்று பொழிகின்றதோ
தழலான உளவெம்மை தணிகின்றதே
தரைமீது நிலவொன்று தவழ்கின்றதோ
அழகோபொன் னொளியாஅல் லதுதாரகை
அதுமின்னும்  இய்ல்பாக மனம்கொள்வதேன்

நெளிந்தாடும் அலைகொண்ட நீரோட்டமோ
நிகழ்வான வில்லொன்றின் நிறமூட்டமோ
குளித்தாடும் மலர்கொண்ட குளிர்தேக்கமோ
குவிந்தாலும் பனிகொண்ட  நிறவெண்மையோ
அளித்தாலும் குறையாத அமுதானதோ
அருஞ்செல்வம் குவிகின்ற திறைசேரியோ.
தெளிந்தோடு முகிலற்ற பகல் வானமோ
தினம் தேய்ந்து வளர்திங்கள் முழுதானதோ

ஒளிவானின் வழிதோன்று மொருகாலையில்
உருகாத பனிதன்னும் நிறை காற்றினில்
அழியாத மெருகோடு அருகாமையில்
அழகான மயிலென்று விரிதோகையில்
பொழிகின்ற முகில்கண்டு நடம் கொள்ளுதோ
பொதுவாக  வலம்போகும் தெருவீதியில்
நெளிகின்ற நளினத்தின் அசைகாற்றுமே
நிகழ்வுக்கு இவள் கொண்ட அசைகற்குமே

வலை கொண்ட மீனென்றால் விழிதுஞ்சுமே
வளர்கின்ற பிறை யென்னில் வெகுதூரமே
அலைந்தோடும் நதியென்றால் விழும்பாவமே
அனல் வீசும் ஒளிர்வென்னில் சுடும்நோகுமே
மலைமீது எழும்காற்றின் குளிரானதே
மனம் போதை யுறச்செய்யு தெனில்போர்வையும்
நிலைகொள்ளச் செயும்பாவம் இவனல்லவோ
நெடும்வானில் முகில்மூடும் நிலவல்லவோ

காக்கையரே காக்கையரே


காலையிலே கண்விழிக்கக் காரிருளும் போகமுன்னே
கா..காவெனக் கரையும் கருங் காகமே
சோலையிலே பூமலர்ந்து தூவும்பனி  நீர்வழிந்து
சொல்லு நலம் உள்ளனவோ சேதியென்?
மேலைத்தெரு கோவிலடி மேட்டு வயல்காடுழுது
மாலையி`லே வீடுவந்த மாந்தரும்
ஓலையிலே கூரையென உள்ளசிறு குடிசையிலே
உள்ளனரோ இல்லனரோ கண்டுசொல்

கூவும் வெளிர் சங்கொலியில் கொட்டும்மொரு முரசொலிக்கக்
கொல்ல வந்தபகை நடந்த தறிவையோ
ஏவுகின்ற தொன்றெனவே எத்தர்பகை கூடிவந்து
எல்லை பற்றி நின்றனராம் உண்மையோ
சாவுவரும் மேனிவிழும் சத்திரங்கள் வீடுடையும்
சந்தணப் பொன்மேனி புவி தின்றிடும்
காவுகொண்ட வாழ்விழந்து கண்டவரை போதுமென்றோம்
காணுகின்ற சேதி நெஞ்சு வேகுதே

மாதர்தமைச் சீரழித்து மானபங்கம் செய்தழித்து
மங்கையரின் மேனிதொட்டு ஆடுறார்
மீதமுள்ள பூமியெலாம் மேன்மைகுலச் செந்தமிழர்
மேவியெங்கும் வாழ்ந்தும்ஒன்றும் காணனே
சாதமென்று வேகவைக்க சற்றுநேரம் போகவதில்
சோறு வெந்து அத்தனையும் ஒன்றெனும்
பேதம்கொண்டு பூவுலகில் பெண்ணிழிமை செய்தவரின்
பார்த்த வரை உள்ளம் வேக வில்லையேன்

வாழும் வழி நாமறியோம் வந்துலகில் தோற்றியதென்
வாயழுது  உணர்விழிந்து வாழ்வதா
பாழுமிந்தப் பூமிதனில் பைந்தமிழின் தொன்மையுமென்
பார்த்துயிரைக் காக்க மறந்துள்ளதேன்
ஆள ஒருநாடு விடு அழகியஊர் தேவையில்லை
ஆக மனைகுடிசைதனும் போகட்டும்
சூழுலகில் வாழ்தமிழும் சோதரிகள் இழிமைகொள்ளச்
சோர்ந்துலகில் காணுவதேன் கேட்டுவா

நிலை மாறும்

காடுமலை யெங்கும் ஓடும்நதிக்கொரு
காரணம் தேவையில்லை - அது
தேடும்பொருளெது தேவை கடல் ஏனோ
துள்ளி அலையும்நிலை
நீடுவெளி நீலவானத்திலே நிலா
தேயும் வளரும் தொல்லை - அதை
ஓடுமுகில் மறைத் தாலுமுள்ளே நின்றும்
ஓங்கு மொளிசெறிவை

கேடு கெட்டே அல்லல் கொண்டா லன்புதனும்
கெட்டுஅழிவதில்லை அதைக்
கோடு கிழித்தெவர் கூட்டில் அடைப்பினும்
கொள்ளன்பு தேய்வதில்லை
வீடுஇருக்கையில் வெட்ட வெளிவைத்த
வெள்ளியிற் செய்தசிலை என்ன
பாடுபட்டும் உள்ளம் பாசம் கொழிக்கையில்
 பாரம் எடுப்பதில்லை

நாடுசெழித்திட நாலும்தெரிந்தவர்
நல்லர சோச்சுகையில் - அங்கு
வாடுமுயிர்களாய்  வாழ்வுமுண்டோ அவர்
வாசம் உலர்வதில்லை
மூடுமந் திரங்கள் தேவையில்லை  இந்த
மோட்சம் இறைவன்கொடை -அதைப்
போடுஎன வீசிப் புன்னகைத்தால் அதைப்
போல மடைமையில்லை

ஆடும்வரை யாடும் அப்பன் நடமிட
ஆகிடும் வாழ்வழிவைப் - படும்
பாடு கொண்டும் விழி பார்க்கும்வேளை
சார்த்த பாரதிபோலுருவை
ஊடு நிறுத்தியே ஆடவைத்தவிதி
உண்மை மறைத்த நிலை ஒரு
பீடு கொள்ள முகில் போர்த்தநிலவெனப் 
போனது போல்நிலைமை

ஏடுஎடுத்தவன் என்னஎழுதியும்
இட்ட விதியின் வேலை - அது
சாடுஎனச் சொல்லி சோகம் பொழியினும்,
சேரும்மனதில் சுவை
சூடுகொண்டேகாலைதோன்று வெயில்வரச்
சூழுமிருள் மனதை - விட்டு
ஓடும்வகை செய்யும் உள்ளம் கொண்டதெல்லாம்
ஒரிரவென்ற நிலை

Saturday, January 12, 2013

வேண்டுதல்

தாம்தோம் தத்தோம் தத்தித்தோம்
தாவிடு வானரம் ஒத்திட்டேன்
தீம்தோம் தித்தோம் திக்கெட்டும்
தீமைகளால் மனம் பொய்த்திட்டேன்
பாம்பைப் போலும் கொத்திட்டேன்
பாலதில் நஞ்சும் சொட்டிட்டேன்
வேம்பின் காயை வெட்டித்தான்
விருந்தில் தேனுள் வைத்திட்டேன்

மாயக் கற்பனை கொண்டிட்டேன்
மாலைகள் பிய்த்தும் வீசிட்டேன்
தேயும் நிலவாய் தேய்ந்திட்டேன்
தீயில் விரலைச் சுட்டிட்டேன்
ஆய கலைகள் கற்றிட்டேன்
ஆனால் ஏட்டைத் தீயிட்டேன்
போயோர்  முத்தை சேற்றிட்டேன்
புறமும்பேசிப் பொய்யிட்டேன்

வேண்டும் வரையில் வெட்கித்தேன்
விடியல் அறியா தூங்கிட்டேன்
ஆண்டே இன்பம் தேர்ந்தக்கால்
அழிவே எண்ணிக் காத்திட்டேன்
அன்பில் உன்னை தண்டித்தேன்
அதனா லுள்ளம் சோர்ந்திட்டேன்
வெண்தண் இறையே நொந்திட்டேன்
விளையாடித்தான் வாழ்ந்திட்டேன்

காலைமலரைப் பிய்த்திட்டேன்
கானம் பாடக் கத்திட்டேன்
பாலில் உப்பைக் கொட்டிடேன்
பாமரன் வாக்கைப் பழியிட்டேன்
வேலை இன்றி சுற்றிட்டேன்
வீட்டில் மனைய வைதிட்டேன்
தோலில் கரியைப் பூசிட்டேன்
தெள்ளென் நீரில் தோய்ந்திட்டேன்

இறைவா என்னை மன்னிப்பீர்
இகமும் வாழ்வில் இன்பத்தை
குறையா தருவாய் கொண்டேன்நான்
கோபம் சினமென் றாகாமல்
மறையா துலகின் மன்னிப்பை
மலராம் உதயச் சூரியனாய்
உறையா துள்ளம் உருகித்தா
ஒர்நாள் பொழுதில் மலராதோ

பாவம் நீக்கப் பூசித்தேன்
பரமே சிவனே போற்றிட்டேன்
ஏவல் செய்தேன் இவன்மீது
இறையே சக்தி இரங்காயோ
தூவல்மழையில் நின்றிட்டேன்
தேகம் குளிர ஆடிட்டேன்
ஆவது ஏது அன்புள்ளம்
அணையா தீபம் காப்பாயோ

தமிழன் வீரம்

  
கடலலையும் ஓங்கியெழும்   காண் தமிழின் வீரம்
குடல்பிசைய வயிறலறும்  கொடும் பகையும் ஓடும்
திடமுடனே தமிழர் எழும்  தீரம்பெரு வானம்
தடையுடைத்துப் பாயப்பகை  தீபடும் பஞ்சாகும்
விடநினைந்து பயமெழுந்து  விரைந்து பகையோடும்
விரும்பிவிடு தலைநடந்தோர் வெற்றிவாகை சூடும்
புடமுமிட்ட தமிழர்மறம்  புனிதமெனக் காணும்
புரட்டும் பழிபொய் புனைந்த பகை யெதிர்த்த தமிழர்

கால்கள் நடை கொள்ளஒலி  கருமுகிலின் உறுமல்
காரிருளில் மின்னல் தரும்  கைசுழல்வாள் கூர்கள்
வீல் எனவேஅழும்குழந்தை  வீறு கொண்டு நிமிரும்
வெள்ளிநிலா முற்றமதில்  வீழ்ந்து நிலம் கொஞ்சும்
பால்குடித்த தமிழ்மழலை  பயமிழந்து தீரம்
பருகியவன் போலெழுந்து  பார்த்தெதையோ உறுமும்
மேல் பறந்த புள்ளினங்கள்  மேதினியில் வீரம்
மேன்மை கொள்ளும் செந்தமிழர்  மண்ணி தென்று பாடும்

வீதியெல்லாம் தோரணங்கள்  வெற்றிதனைக் கூறும்
விடியலிலே வந்தவர்கள்  வேகம்தனைக் காற்றும்
பாதிதனும் தானறியாப்  பண்புதனைப் பாடும்
பனியெழுந்து புகழ்பரந்த  விதம் பரந்து தோற்கும்
மோதிவரும் மேகமெல்லாம்  முகம் கறுத்து  கோணி
மின்னல் இடி விட்டுத் தமிழ்  மண்ணில் மழை தூவும்
சேதி கேட்டுப் பூமரத்தில்  சிறுகுரங்கு தாவி
சிலுசிலுத்த மலருதிர்த்து  செந்தமிழைப் போற்றும்

ஆக இவைகொண்டதெல்லாம்  அறம்மிகுந்த காலம்
அன்னைபூமி நேர்மை திறன்  அகமெடுத்த நேரம்
போக யிவை நஞ்செழுந்து  போட்டவைகள் யாவும்
பச்சைமஞ்சள் செந்நிறத்தில்  பெய்மழைகள் ஆகும்
தேகமதில் தீரமுள்ளோர்   தலையெடுத்த வீரம்
தேவையில்லைக் கோழைகளும்  தீமைசெய்து வெல்லும்
பாகமிது காலமெனப்  பச்சை வண்ணப் பூமி
பார்த்திருக்க செந்நிறத்தில் பாவமழை தூவும்

சக்தியின் வேண்டுதல்


 வேண்டும் வேண்டும் வரம்வேண்டும் - உயிர்
வீணையில் நாதம் எழவேண்டும்
ஆண்டும் ஆண்டும் பலவேண்டும் தமிழ்
ஆண்டே பலமுறும் நிலைவேண்டும்

மீண்டும் மீண்டும் பெருவாழ்வாய் - இம்
மேதினி வாழ்வில் பலங்கொண்டே
தாண்டும் தாண்டும் உரம் வேண்டும் என்
தலைவி நீயதைத் தரவேண்டும்

நீண்டும் நீண்டும் மகிழ்வோடு - நான்
நெஞ்சம் கனிவாய் தமிழ்பாடி
தூண்டும் தூண்டும் உணர்வோடு - கவி
தூவும் மலர்கள் தொகை வேண்டும்

பூண்டும் பூண்டும் பலவேடம் - இப்
பொழுதில் புவியில் கூத்தாடி
தோண்டும் தோண்டும் இன்பங்கள் - பெருந்
தொகையாம் எனவே பெறவேண்டும்

தீண்டும் தீண்டும் பொருள் யாவும் - அடை
தேனாய் வழியச் சுவைகொண்டு
நாண்டும் நாண்டும் தொகை வேண்டும் - என
நாளும் கேட்டும் குரல்வேண்டும்

மாண்டும் மாண்டும் புவிமீதில் - உயிர்
மீண்டும் பிறக்கும் செயலாகக்
கூண்டும் கூண்டிற் கிளியாகும் - இக்
கோலம் மாறும் வரம்வேண்டும்

மூண்டும் மூண்டும் பெருந்தீயாய் - பகை
மோசம் செய்தும் ஒருதீவில்
யாண்டும் யாண்டும் செய் தீமை - தனை
யாவும் நீக்கும் வரம்வேண்டும்

சீண்டும் சீண்டும் சினம் மேவி- என்
சிந்தை கெட்டுச் சிதறாமல்
வேண்டும் வேண்டும் நின்பாதம் - தலை
வைத்தே தூங்கும் மகிழ்வோடும்

டாண்டும் டாண்டும் எனவோடிப் - பெரும்
அண்டம் பாய்ந்து சுழல்கோள் கொள்
நீண்டும் பெருத்த உயர்வானின் - பொருள்
நீயே என்னுள் வரவேண்டும்

**********************

ஆற்றாமை (தலைவி)



உள்ளம் கலங்குதடி தோழி - மன
ஓசை அழிந்த திந்த நாழி
கள்ளம் ஏதறியேன் மோதல் - தனைக்
காலம் வளர்த்தடி கேள்நீ
வெள்ளம் வரும்பொழுதுமேனோ - அதன்
வேகம் புரியவில்லைத் தோழி
அள்ளும் போதுமதை யறியேன் -விதி
ஆழிகலந்திடவே தெளிந்தேன்


துள்ளும் இளமையடி குற்றம் - என்னை
தேடு துணை எனவே பற்றும்
எள்ளிநகைப்பதென்ன இன்று - அதன்
எண்ணம் அறிவளில்லை என்றும்
கிள்ளிச் சிவக்கும் இருகன்னம் - அதில்
கொட்டும் துளிகள் இதழ்கொள்ளும்
மெல்லச் சுவைக்குதடி உவர்ப்பு - இனி
மேலோ எனதுநிலை தவிப்பு

தள்ளும் நினைவுகளும் சென்றே - எனைத்
தனிமை நிலையில் விடவேண்டும்
வெள்ளி முளைக்கு வரைவிடடி - கதிர்
வேகமெடுத்து வரும் உதயம்
புள்ளின்இனங்க ளெழுமோசை - இளம்
பூக்கள் மலரும் அதிலோடி
கள்ளைச் சுவைக்கும் கருவண்டு - இவை
காணச் சகிக்கவில்லை தோழி

எள்ளி நகைப் பதுண்டோ தோழி - என
தெண்ணம் விளைத்த செயல் மீறி
கொள்ளியெனச் சுடுதே தோழி - இந்தக்
குற்றம் எதுவிலகுக்கும் சொல்நீ
பள்ளிச் சிறுமியென ஆனேன் - வெறும்
பாதி மெலிந்து உடல்நொந்தேன்
அள்ளிகொடுப்பரென வந்தால் - அவர்
அன்பைத் தெரியவில்லைத் தோழி

கள்ளிச் செடியிருக்கு தோழி - அதை
காலம் அளித்த கொடை போநீ
நள்ளி ராவில் வரும் தென்றல் - ஒரு
நஞ்சாய் மனதிழைந்து ஓடி
உள்ளம் அழித்ததடி தோழி - இந்த
உலகில் இருப்பின் இவள்பாவி
வள்ளம் திசை திரும்பி ஓடின் - அதன்
வாழ்வும் நிலைப்பதுண்டோ பார்நீ

*********

எங்கே சுதந்திரம்?


காலை புலர்ந்திடக் காட்சி  விரியுது
காணும் புவியொளி ஞானப்பெண்ணே
ஞால முழுதிலும் நன்மை பரந்தின்ப
நாளும் விடியுமோ சொல்லுபெண்ணே
கோலஞ் சிவந்திடக் கீழ்த்திசை வானிடை
கூடிப் பறந்திடும் புள்ளி னங்கள்
கால காலமெனக் கொள்ளும் சுதந்திரம்
கையில் கிடைக்குமோ சின்னப்பெண்ணே

ஆலமர நிழல் ஆடிவருந் தென்றல்
அல்லிசெந் தாமரை நீர்க்குளத்தின்
சீலமொடு மேவு சிற்றலை நீர், கயல்
சேரடிவானத்து வெண்முகில்கள்
நீலவானவெளி நீந்திடும் போததில்
நித்திய இன்ப சுதந்திரத்தை
சாலச் சிறந்துடன் கொள்வது போற்றமிழ்
சற்றும் கொள்ளாதேனோ ஞானப்பெண்ணே

கோலமும் தீயவர் கொள்கை பரந்தது
கூறடி ஏனிது செல்லபெண்ணே
தூலமென்றே துயர் தூரப் பறந்திடத்
தோன்றும் விடிவெங்கே கூறுபெண்ணே
ஆலமென் றாகிய வாழ்வு சிறக்குமோ
அச்சமின்றி உயிர் சின்னபெண்ணே
மூலவிதி கெட்டு வாழும்நிலையற்று
முன்னே சுதந்திரம் கொள்வதெப்போ

வாசலில் வஞ்சகம்வந்து இருப்பதோ
வாழ்வின் கனவுகள் நீரெழுத்தோ
மோசமென்றே நிலை முற்றும் எழுந்தது
மூடு கதவினைச் செல்லபெண்ணே
தேசம் இருளுறத் தெய்வம் மறந்தது                                                                           
தேவையென் னாவது  கூறுபெண்ணே
வாச மெழுமன அன்பினை காவவும்
வீசுந்தென்றல் வரவேண்டும் பெண்ணே

காகங் கரையுது சேதி வருகுது
காணத் திடமெடு சின்னப் பெண்ணே
மேகம் குவிந்திட மின்னலிடியெழும்
மேனி நடுங்கிட ஆக்கும்பெண்ணே
பூகம்பமா யுந்தன் வாழ்வு பொழிந்திடும்
தீமழை காணவும் நெஞ்சு நொந்தே
தேசம் நினைந்துள்ளம் தீயின் விரலிட்ட
தாகப் படும்பாடு சொல்லுபெண்ணே

பூவிதழ் காணவும் பொன்னெனும் காலையில்
‘புத்துணர் வாகிடும் நாள்மலர்ந்தே
நாவில் சுதந்திர கீதமிசைத்திட
நாட்டில் குழுமிய மாந்த ரூடே
கோவில் தெய்வமெழக் கொண்டகுடிமனை
கூடித் திரண்டவர் அச்சம்விட்டே
தாவிக் குழந்தைகள் சத்தமிட அன்புத்
தாய்நில பூமடி கொள்வதெப்போ?

***********

புகழ்

உளமலர் விரிந்தொளி பெறுகுது பெறுகுது
உவமையும் எதுவில்லையே
தளம்பிடுங் குளஅலை தவித்திடு மழகுடன்
திகழ்வது மனவுணர்வே
மளமள வெனவரு மழையெனும் புகழ்மொழி
மகிழ்வினைத் தரசுகமே
விழவிழ மலர்களில்  வழிநெடு நடையிடும்
விதமெனச் சிலிர்த்திடுமே

குளஅலை களில்முகம் தெரிந்திடும் வகைமனம்
குதித்திடும் புகழ்ச்சியிலே
நிழலது முகில்வர நிலமிடை அழிந்திடும்
நிலை யெனப் புகழ் கெடுமே
இளமன திடை வரும் நினவுகள் பலஎழும்
இவையெது கனவுகளோ
அழவென வருவது தொகைதொகை மகிழ்வென
அடைவது சிறிதல்லவோ

புகழ் தரும்  உணர்வுகள்  பெரிதுவ கையுமெழ
புரிவது புதுச் சுகமே  
நிகழ்வது சரியெனில் நெறியெழும் புகழ்பெரு
நெருப்பென எழும் மகிழ்வே
பகலவன் ஒளியென பரவிடும் இருள்மறை
பனிவிடும் புல்லெனவே
அகமிடை -இருளற அதியுயர் தகவுற
அடைவது பெருமகிழ்வே

மழைதரு முகிலென மனமதில் கனமெழ
மதுவென இனித்திடிலும்
உளதினி மையில்பொலி வுறமதி யுதவிட
உருவெடு திறன் பெரிதே
துளையிடு குழலிடை  நுழைவளி இசைஇடும்
நிகரெனும்  இன்னிசையோ
வளர்ம்தி முகமதில் வரும்மகிழ் வுறப்புகழ்
தனையெடு மருந்தெனவே

****************

Monday, January 7, 2013

மரணம் கொடியதா?

காணப் பிறந்திட்டோம்
.  கானகத்தை கடல்நீரைக்
.  கடுமழையும் கண்டுணர்ந்தோம்
பேணச் சிறந்தவராய்
.  பிள்ளையென நாள்வளர்ந்து
.  பேதமை கொண்டுலகிணைந்தோம்
பூணப் பொன்னணிகலனும்
. புத்தாடை ரத்தினங்கள்
. புதுவாசம் தரும் மலர்கள்
வீணென் றுடுத்தியதில்
. விளைவென்ன கண்டோமோர்
. விதிவந்து கொள்ளப் போமாம்

வாழப் பிறந்தழுதோம்
.  வாழ்ந்தழுதோம் வாழ்விழந்து
.  வீழமுன் கூடியழுதோம்
ஆழக் கொடும்வாழ்வில்
. ஆசைகொண்டு மன்பிற்காய்
. ஆறாது ஏங்கியழுதோம்
கூழைக் குடித்தழுதோம்
. கோலப் பொற்கிண்ணத்தில்
.  கொண்டமது வுண்டு அழுதோம்
நாளில் நேற்றழுதோம்
. இன்றழுதோம் நாளையினி
. நாம் படுக்க யார் அழுவார்காண்

எய்த உடல் எமதல்ல
.  இருக்குமுயிர் காற்றாகும்
.  எல்லாமே இரவல்வாங்கி
பொய்யில் உடல்போர்த்து
.  பூவும் துகில்கொண்டு
.  புனல்சொரியும் துளைமறைத்து
தெய்யத்தோ மென்றாடி
.  திக்கெட்டும் தொலையோடித்
.  திரிந்திடத் தெய்வமிடையில்
பொய்யைக் கொள் மெய்யைத்தா
. பூவுலகே என்றிடவும்
. மெய்வீழப் பொய்விட்டோடும்

செயல்போகச் சிந்தைகெடச்
.  சுடுமுடலும் எமதல்ல
.  சொந்தமே யல்ல அல்ல
வியப்பேநா மென்றாலென்
.  விழிகண்டு மொழிபேசி
.  விளைந்த உணர்வொன்றே நாமும்
பயத்தோடு இச்சை,சுகம்
.  பசி நாணம். பெருங்கோபம்
.  பட்டதுயர் இவையே மிச்சம்
மயக்கமிடுங் கனவுணர்வும்
.  மழைவானின் வில்லாகி
.  மறைய நிஜம் சூனியமன்றோ!

Friday, January 4, 2013

புத்தாண்டே புரிவாயா?


கடுமன மிடையெழு கருணையி னொளி
  குறைவுறக் கயமையில் கரமெடு பழி
விடுநின துயிரெனத் தரைவிழப் பொறி
  விளைவுறச் செயுமனம் விரைந்துநீ ஒழி
படுநிலமிடை எனப் பறித்துயிர் வெளி
   பறமுகி லொடுஎனப் புரிபவர் இனி
தடுநில மிடைமலர் தரணியில் ஒளி
   தகைமிகு வழமுற வருடமே அளி

விடமுள அரவமென் றுருபெறச் சிலர்
  விடுதலை எனிலெது விரைதுடி யுடல்
படவலி யுறச்சிதை பிரியதை யழி
  கடதுன துலகமும் கரம்விடு தனி
நடயினி விடுதலை நரகமே வழி
  நவஉல கமுமெம துமைநமன் வழி
இடமது பெறவிடின் இலகெனும் வழி
 எனுங் கயவரைஒழி அவரொழி ஒழி

”தரு”வதும் நிலைகொள்ள இடமுள்ள புவி
  தமிழெனில் இலையிடம் தவறிடு அழி
எருவெனப் புதையிடு வெனக்கொளும் வெறி
  இதமென உலவிடும் இவர்மன மழி
கருவொடு தறிதமிழ் கருகிடு மினி
  கடமையு முனதென சொலுமொரு விதி
மருகிட புதுவழி புதிதெனும் ஒளி
  மறுபடி உயிர்கொள்ள` வருடமே அளி

இருபதி னருகினி லிதனரை வர
  இழைந்திடு சிவனவர் விழிதொகை சக
தருவிடை வருடமும் தணல்பிரி வெடி 
  தெருவினில் பெரிதெனும் படபட ஒலி
இருளுற இரவெனில் பன்னிரண்டு மணி
   இதனிடை வரும்புது வருடமு மினி
தருமமும் தழைவுறத் தமிழ் பெரும் ஒளி
  தருமெழில் விழுமியம் பெறவழி புரி

**************

Thursday, December 13, 2012

முடியாத தொடர்



நிலைமாறி ஒருநாளும் எதிர்காலம் பின்னாலே
நிகழ்காலம் வருவதில்லை
தலைமாறி எழுஞ்சூர்யன் தடுமாறி மேற்கென்ற
தானுதய மாவதில்லை
வலைமாறி நீர்பற்றி மீன்நழுவி ஓடவிடும்
வழமைக்கு ஆவதில்லை
தலைசீவி கொலையாக்கும் தரம்கெட்ட மனிதகுலம்
தவறியும் திருந்தவில்லை

இலை மாறி அழகோடு இதழ்கொண்டு வாசமெழ
இனிதேனை சுரப்பதில்லை
கலைமாறிக் கவின்பாடும கனிபோலும் செந்தமிழின்
காண்சுவை கசப்பதில்லை
அலைமாறி கரைதோன்றி ஆழநடு கடல்நோக்கி
அசைந்தோடி அழிவதில்லை
புலைகீறிக் கொல்லென்ற பொதுவானகொள்கைதனை
பகைவர்கை விட்டதில்லை

சிலைமாறி உயிர்கொண்டு சிற்பிகை உளிநொந்து
செயல்கொண்டு அழுவதில்லை
மலைமீது வருங்காற்று மலர்வாசம் கொண்டோடி
மூச்சாக மறுப்பதில்லை
விலை என்று கருவாடு விளைபொன்னின் அருகோடு
விற்கச்சம மாவதில்லை
தலை கொண்டு உயிர்வாங்க தமிழ்கொன்று மகிழ்வாக
தயக்கமோ தீயர்க்கில்லை

பலம்கொண்டு தமிழ்வாழ பலநாடும் எதிர்வந்த
பரிதாபம் நேர்மையில்லை
நலம்கொண்டு உயிர்காக்க நாளன்று கொண்டநிலை
நானிலம் புரிந்ததில்லை
புலம் பெயர்ந்து வாழ்ந்தாலும் புறமென்று தமிழ்தன்னை
பிரிந்தின்று வாழ்வுமில்லை
நிலமென்ப தொருநாளில் நிம்மதியைக் காணும்வரை
நித்திரை முழுமையில்லை

Tuesday, December 11, 2012

மாறாத துயர்


கதிர்கள் நடமாடக் குருவி இசைபாடக்
கழனி எழில் காணுது
எதிரில் இளவானின் ஒளியைத் தரமேக
இடையில் வெயில் ஓடுது
புதரின் அயலோடு போகும்வழி தன்னில்
பயந்து முயலோடுது
விதமென் றுயிரஞ்சி விரைந்து வழிகாணும்
விடிவை மனம் தேடுது

மதியவெயில் கூடி மந்தி விளையாடி
மரத்தில் கிளை தாவுது
விதியும் பிழையாகி விடிவின் நெடுந்தூரம்
விரிந்து தொலையாகுது
பதிய வளைதென்னை பரவுமிளங் காற்றில்
பணிந்து தலையாட்டுது
புதிய அலைதோன்றிப் புரண்டு நதியோடப்
பொங்கி மனமேங்குது

எதிலும் குறையாத புகழின் மகன்போல
எழுந்து மலை நின்றது
முகிலும் நேரோடி இணைய மனம்கொண்டு
மலையின் மடிதூங்குது
அகிலம் தனைஆக்கி அனைத்து முயிர்வாழ
அவனும் படைத்தானன்று
பதிலுக்கிவை துணித்து எனது உனதுவெனப்
பரமன் சிரித்தானங்கு

உயிரைக் கொடுத்தேனும் உரிமை யுடன்வாழ
எளியோர் மனமேங்குது
பயிரை விதைத்தோனே பருவம்வரக் கொள்ளும்
பயனை விதி மாற்றுது
வயிறைப் பசியுண்ண விலங்கு உடல்கொள்ள
வாழ்வில் உயிர்போகுது
கயிறை எறி மாயன் கருதும் நொடிமட்டும்
காணும் துயரோ இது

Saturday, December 8, 2012

இரங்காயோ எம்மில்.!

தெய்வத் திருவுருவே தேனூற்றே உயிர்களிவை
உய்யத் திருவருளும் ஈயாயோ பொன்னடிகள்
கையிற் தொடவிழுந்து காலமெலாம் அழுதிடினும்
எய்யும் ஒருஅம்பாய் எம்மிதயம் துளைப்பதென்ன?


மெய்யைக் கிழித்தங்கு மேனியதன் குருதி யொரு
பெய்யும் பொழிமழையாய் பீறிடவே கொட்ட நிலம்
மையத்திடை படுத்தி மாடுகளை உதைப்பதென
வையத்திடை செய்யும் வதையிருந்து காவாயோ

செய்யாப் பெருங் கொடுமை சேறாக்கி தாழ்வெண்ணி
நையப் புடைத் தெம்மை நாடகன்று ஓடவைக்க
குய்யக் கூவென்றுநாம் குரல் அலறி நீர் சொரிந்தும்
கையைக் கொடுத்தெம்மை காவாது நிற்பதென்ன

அய்ய நின்அரைமேனி அணைந்தவளும் உன்னழகில்
மையலிட் டெம்மை மறந்தனளோ மாதேவி
நெய்யை பெறுவிழிகொள் நீலத்திருமேனி யளே
பொய்யைப் பெருவாழ்வுக் கீந்தெம்மைக் காவாதேன்

தொய்யத் தமிழ் தன்னும் தூயஒளிச் சுடர்மாயக்
கொய்சிரசும் கொல்லென்று குலம்தமிழைக் குபபையிலே
துய்யத் துடித்தலறத் துவம்சம்செய் பகை கண்டும்
வெயில் எழப் புல்நுனியின் வீழ்பனியென் றாக்காதேன்

(வேறு)

வையத்தே ஆயிரம் கோடியெனப் பல
வாழும் இனங்களைச் செய்தவரே
தையத்தை என்று நடமிடவும் தமிழ்த்
தாய் தந்தமேனியைக் கேட்பதென்ன
பொய்யைத்தான் கூறி யினமழிக்கும் அந்தப்
புல்லனும் இரத்த வெறி பிடித்துக்
கையைத்தான் காலை இழுத்துவெட்டிச் சுகம்
காணப் பொறுத்தனை, காத்திடவா!

தெய்வந்தான் காத்திடு மென்பவரையொரு
தேவதை வந்துமே காக்கவில்லை
எய்யத்தான் பூங்கணை கொண்டுமதன்இவர்
மெய்யைத்தான் தீயெழச் செய்வரென
அய்யோதான் என்றே அழுதவளும் அவன்
ஆவிபிரித்திட ஆளனுப்பி
மெய்யைத்தான் தீயெழச் செய்வதென்ன இனி
மீளத்தான் எம்மைநீ காப்பதெப்போ

Thursday, December 6, 2012

நம்பியெழு நடக்கும்

அழுதிடுங்கள்  ஒருதடவை ஆவெனக்கதறி
  அடுத்து வருங் காலமதில் அதுவிருக்காது
விழுந்திடுங்கள் மேனிதொட்டு வேதனைகூடி
   விரும்பிடினும் விழுவதினி வேண்டிவராது
மெழுகெனவே உருகிடினும் மின்னொளிபோயும்
    மேற்கில்மறை ஆதவன்கீழ் மீளவருங்காண்
எழுமதனின் ஒளிபரவ முழுதிருளோடும்
   ஏற்றமுறும் வாழ்வமையும்   இன்பமுண்டாகும்

கழுகுயரப் பறந்திடினும் காலமெப்போதும்
 காற்றினிலே வாழ்ந்திடுமா கீழ்வர வேண்டும்
பழுதுகொண்ட சக்கரத்தைப் பூட்டியதேரும்
  பயணமதில் பாதிவழி போகையில்வீழும்
தொழுதல் விடு துடித்தெழுவாய் துன்பமுமெங்கள்
  துணைநடந்த நிழலில்லையே தொலைத்திடப் போகும்
எழுந்தவரும் நடப்பவரும் விழுந்திடும்நேரம்
  விழுந்தவர்நாம் எழுந்து இனி நடந்திடும்காலம்

வியர்வைமட்டும் விழுந்திருக்க, வெள்ளையில்மாடு
  விரட்டிவயல் உழுதவாழ்வு வீணெனப்போயும்
உயர் உழுவை நிலமுருண்டு ஓடும்வண்டிகள்
   ஓசையிட கதிரறுக்கும் உன்னதம் காண்போம்
துயர்விடுத்த குருவிகளும் துணையுடன்கூடித்  
  தொலைவில்நுனிக் கிளையிருந்து தொங்கிஆடிடும்
வயிறெடுத்த பசியுடனே வாழ்ந்த வாழ்வெல்லாம்
  வரண்டுவிட வசதிசெழித் தோங்கிடும் நாடும்

நரியிருக்க நாய்கள்குரைத் தோடிடச்சுற்றி
 நர்த்தனமென் றாடிடும்பேய் நடுநிசி வந்து
எரியவைத்த வீடுகளில் இருந்திடும் கரியை
 எடுத்துடலில் பூசியபின் எண்ணெயும் ஊற்றி
புரிந்த வதம் வெறிபிடித்த பொழுது களெல்லாம்
  பிணமடுக்கிப் பார்த்தழுத பாவங்கள் நீங்க
தெரியவென வரைபடத்தில் தோன்றிடும் நாடும்
  தீந்தமிழர் பெருநகரம் தேனொளி கொள்ளும்

புரியடுத்து புறப்படுநீ பொழுதுகள் விடியும்
 புன்னகையை மட்டுஎடு புன்மைகள் துன்பம்
வரிந்தடுக்கி வைத்துவிலை விற்றிடவேண்டும்
  வாங்கவெனப் பெரியமகா  வம்சங்கள் கேட்கும்
சரிகொடுத்து விட்டிடுவோம் சரித்திரம் மாற்றிச்
  சாவுகளும் நின்றுவிடச் சுதந்திரம் வாங்கப்
பெரிதெடுத்த கடமைமுடி புத்தொளி யேற்றிப்
  புனிதமண்ணில் பிறந்தவர்க்குப் புன்னகை ஈவோம்

Tuesday, December 4, 2012

ஒருதலை ராகம் (நகைச்சுவையாக..)



செந்தேன் கருத்தவிழி சித்திரமோ அற்புதமாய்
சேர்ந்தழகு கொள்ளை கொள்ளுதே
வெந்தேனோ என்மனதுள் விண்ணதிரப் புவிசுழல
வெள்ளிமலை தீவெடிப்பதேன்
வந்தாளோ வஞ்சியிவள் வாசமெழப் பூமுடித்து
வானமகள்  ரம்பை மேனகை
சொந்தமென் றானவளோ சுந்தரியோ கண்டுளமும்
சின்னதாகப் பூவிரிப்பதேன்

அந்தோ நிலாவொளியில் ஆளவென வந்தவளோ
அல்லியெனக் காணுகின்றவள்
சிந்தோமெனச் சிறிதோர் புன்னகையை பூட்டிவைத்து
சிந்தை கொளக் கண்டுபோற்றினேன்
நந்த வனத்தினிடை நான் பறித்த பூக்களெலாம்
நாட்பொழுதில் வாடுகின்றதே
இந்தா இவள்மலர்ந்த புன்னகையோ என்மனத்தில்
இல்லை வாட்டமென்று காண்பதேன்

என்தேன் இளம்மனத்தில் இன்னிசைக்கும் ராகமெலாம்,
எப்படிதான் வந்துசேர்ந்ததோ
சந்தேன் வளைமதியும் சந்தமெழும் பாதநடை
சஞ்சலத்தைத் தந்திருப்பதேன்
மந்தி மரக்கிளையின் முன்னேறித் தாவுதென
மாவிலங்கு போலவந்தனன்
அந்தோ விழித்திருக்க ஆரணங்கைச் சேருகிறான்
அதிசயித்து விழிசிவக்கிறேன்

மந்த மனம்மயங்கி மாதவளோர் புன்னகையை
மதிபிழன்று அள்ளிவீசிட
வந்தோனவ் விண்ணிலெழும் வானமகள் தேவதையின்
வண்ணக்கரம் பற்றி நிற்கிறான்
என்தேகம் சூடெழவும் இப்படியும் விட்டிடவோ
என்மனதின் ராஜகுமாரி
முந்திநடை நடந்து மோகினியை முன்மறித்து
மோசமிது என்செயலென்றேன்

வந்தீர் என்னோடுபிற வாயினுமென்  சோதரனே
வாழ்விலெனைக் காத்திட வந்தீர்
பந்திஉணவுமிட்டு பார்த்திருக்க ஊரவர்முன்
பாவையிவள் தோளிணைவார் காண்
தந்தை நின்சொல் மதிப்பார் தாமிதனைகூறியெமை
தானிணையத் தா வரமென்றாள்
அந்தோ அதைவிடவோர் ஆனந்தமென் வாழ்விலுண்டோ
அகமிருந்த மெய்யிழந்தேன் நான்

வாழ வழி காண்போம்

தித்திக்கும் தித்திக்கும்  தீந்தமிழ் சந்தங்கள்
சித்தத்தி லூறிடத் தித்திக்குமே
எத்திக்கு மேகினும் இன்பத் தமிழ்ஒலி
சத்தத்தி லுள்ளம் மகிழ்ந்திடுமே
புத்திக்கும் சந்தங்கள் போதைதருமுடல்
ரத்தத்தில் புத்துணர் வூட்டிடவும்
கத்திக் கும்மாளமிட் டேமனமெங்கணும்
காற்றென வானிற் பறந்திடுமே

விக்கித்து விக்கித்து வீணாக வாழ்வினில்
வேதனை கண்டுமனம் சினந்து
பக்கத்தில்காணுநற் பாதை விடுத்துள்ளப்
பார்வை கெட்டுக்குரு டாதலின்றி
துக்கித்து துக்கித்து துன்மென்றாகிடத்
தோல்வி யென்றே மனம் தேய்தல்விட்டு
சுத்திக்கும் அன்பெனும் சொல்லை மனத்தெடு
சேர்ந்திடு வோம்நல் மனங்களொடு

நற்கதி லோகங்கள் நட்டநடுவெளி
நாட்டிய மாட்டிக் களிப்பவளும்
கற்பிக்கும் போதனை காலத்தின் கட்டளை
காத்து மதிகொண்டு வாழ்ந்திடுவோம்
சிற்பமெனப் பொழிந் தற்ற உணர்வுகள்
சொற்ப மகிழ்விற் படைத்திடினும்
அற்ப பிறவியின் ஆழம் வரைகண்டு
ஆற்றல் புரிந்ததை காத்திடுவோம்

நர்த்திக்கும் நாதன் நடனம்விரும்புவோன்
நாடியெம் தீமை யழித்திடுவோம்
வற்றும் குளத்திடை வாழும் மீனாகிய
வாட்டம் போகமழை வேண்டிடுவோம்
முட்புதர் தோன்றியெம் முன்னேசெல்லும்வழி
மூடிபரந்திட்ட போதினிலும்
நற்புரிவோடுயர் ஞான மளித்தனள்
நம்முளத்தீ கொண்டெரித்திடுவோம்

சொற்பதம் கொண்டுநல் சுந்தரகீதங்கள்
சொல்லித் தமிழிற் கிறங்கிடுவோம்
நற்பெரு நாத நவரச முத்தமிழ்
நாவிற் பொழிபவள் நாம்தொழுவோம்
முற்று மினித்திடா வாழ்வு உலகத்தில்
மூச்சைஅடக்கிடும் காலம்வரை
அற்புததேவதை அன்புத் தமிழ்சொல்லி
ஆனந்த மிட்டவளைத் தொழுவோம்
*********************

Sunday, December 2, 2012

வாழிய தேவி



இந்தமேகம் இடியிடித்தால் எழுவது நாதம்
இடையிடையே இதயமதில் இன்கவி மின்னும்
வந்தமழை வழிவதென்ன வார்த்தைகளாகும்
வாரியன்புத் தூறல்கொட்டிச் சோவென வீழும்
அந்தரவான்  கொட்டுமழை ஆறிட மௌனம்
அகத்திடையின் கவிதைவிழைந் தாற்றிடும் சாந்தம்
சந்தமெழுங் கவிதை வெள்ளம் சலசல ஓட்டம்
சாலையோரம் தேங்குநீரில் துளிகளின் தாளம்

மெத்தையெனும் மேகங்களின் மௌன ஊர்வலம்
மேலெழுந்து வான்பறக்கும் பட்சிகள் கூட்டம்
முத்தமிட நீள்மலையை மேகமும் தேடும்
முற்றிணைவில் நதிபிறந்து கிளுகிளுத்தோடும்
சத்தமிடும் குயிலினிசை சுனையலை தாளம்
சாரல்மழை தேகம்தொடச் சலசல த்தாடும்
அத்தனைநீள் தருவினிலை அழகிய ஆட்டம்
ஆகுமின்பம் தமிழிசைக்க அற்பமென்றாகும்

நிந்தனைகள் இல்லையிங்கு நித்தமும் ராகம்
நீலவிண்ணில் காயுமொளி நினைவெழு மோகம்
சுந்தர விண்மீன் மறைத்து சென்றிடும் மேகம்,
சொல்ல வருங் கவிதையின்பின் சக்தியி னூற்றும்
மந்திரங்கள் அல்லத் தமிழ் மாற்றிடும் உள்ளம்
மதுவழியும் பூவிருந்து மாந்திடும் வண்டும்
எந்தவிதம் போகுமென்ற இயல்புடன் நாளும்
இன்கவிதை யுண்பவரும் எடுத்திடக் காணும்

முத்தொளி வெண்சூரியனும் முழுமதிபொன்னும்
மோகமிட மாலைசெய்து தாரகை கூட்டி
சத்தியத் தாய் நீலவிண்ணென் னாடையும் பூண்டு
சாகரத்தின் ஓசையிலே சிரிப்பதைக் கண்டோம்
கொத்துமலர்ச் சோலைதொடும் தென்றலின்வாசம்
கூட்டியதாய் சந்தணமும் கொள்ளொரு மேனி
வைத்தவளிவ் வண்ணத்தமிழ் வாழ்வதிலின்பம்
வாய்த்திடவே தந்தவளாம் வாழிய வாழி!

**********************

Thursday, November 29, 2012

தமிழ் பேசித் தவழ்ந்தோம்

கலை கொஞ்சுந் தமிழ்மீது கடுங்கோப மேனோ
கனிமாவின் பழமென்ன கசக்கின்ற வேம்போ
தலையான புகழ்கொண்ட தமிழென்ன தாழ்வோ
தனதன்பு தாய்தன்னைத்  தாழ்வென்ப தாமோ
நிலைதாழத்  தமிழெங்கே நிரைதன்னிற் கடையோ
நினைவென்ப தொலியாகி நினைக்கூட லிகழ்வோ
மலை போல நிமிர்ந்தாளும் மறங்கொண்ட தமிழோ
மடிமீது பிறதேச மொழிகொள்ளுந் துயிலோ

கலை கொண்ட தமிழ்காண மயிலாடு மழகே
கனிகொண்ட சுவைதேனை நிகரென்னத் தகுமே
தொலைதூர ஒளிதன்னிற் திகழ்கின்ற கதிரோ
தினந் தோன்றி ஒளிதந்தும் திசைமேற்கில் விழுதோ
குலைவாழைக் கனிகண்டு கொள்ளாது ஓடிக்
கூடைக்குள் கனிஅப்பிள் கொள்ளென்ற மனமோ
சிலைபோலு மெழில்வண்ணச் சிற்பங்கள் கொண்டும்
சேர் ரப்பர் பொம்மைகாணச் சிறப்பென்ற கதையோ

கலைமேவு மழக்கென்று கடதாசி மலர்கள்
கரமேந்தி இறைபோற்றிக் கனிவோடு தொழவோ
விலையற்ற வெறுமைக்குள் வீழ்கின்ற மனமோ
வெளிநாட்டின் பொருள்மோகம் விளைத்திட்ட செயலோ
தாய் ஊட்டப் பாலுண்டு தமிழ்கேட்டுத் தூங்கி
தாலாட்டும் சந்தங்கள் தனிலின்பங் கூட்டி
வாய்பேசத் தெரியாது வாவ் வென்று அழுதும்
வருங்காலம் புரியாது வளர்ந்தோமே தமிழில்

தாய்மைக்கும் தன்னோர்மைத் தமிழ்என்னும் வீரம்
துவள்கின்ற தேயின்று யார் செய்தபாவம்
தேய்வின்றித் தமிழ்காக்கத் திறன்கொண்டு நீயும
தெளிவான வழி சென்று தமிழ் காக்க வேண்டும்
வேய்கூரை வீட்டிக்குள் விளைகின்ற  தங்கம்
விரும்பாது வெளிநாட்டில் விதி தந்த கோலம்
தூய்மைகெட் டிரந்தாலும் தமிழ் உந்தன் தாயாள்
திசை மாறித்திரும்பாதே தமிழ் பேசி உயர்வாய்!

*******

Monday, November 26, 2012

இல்லாத தொன்றில்லை


இருக்குமா இல்லையா இருப்போர்தம்மில்
இருந்ததிது வொன்றாக இருந்தபோதும்
இருப்பதோ இல்லாமை  இருந்துபார்நீ
இருப்பதிது வொன்றேயாம் இருப்போர் சொல்ல
இருப்பதோ இல்லையோ இருந்தாலென்ன
இருப்பதைக் காண்போமென் றிருந்தோர்பாதி
இருப்பதென் றில்லையா இருத்தலின்றேல்
இருப்பதும் போகுமென் றிருந்தோர் மீதி

இருப்பது இல்லாது இருக்குமொருவன்
இருந்தாலென் இல்லையென் றானலென்ன
இருப்போரை இல்லையென் றாக்குவேன்காண்
இரு பாரம் இவ்விடம் இருத்தலாகா
இரு பாரென் றிரும்பு வாள் இருகையேந்தி
இருந்திட்ட இடத்தினுள் இருக்கவந்தான்
இருப்போரும் இருந்தபோர் இல்லையென்று
இருத்திவிட இல்லாமல் இறந்துபோனார்

இருப்போரை எளிதாக இல்லையாக்க
இருபாதி யாக்கிட இன்னல் கொண்டார்
இருந்துபார்  இருபாதி ஒன்றுமில்லை
இருக்கும்சுவ டிருக்காமல் இருக்குமென்றான்
இருந்தும் உயிரில்லையென் றாகும்போது
இரும்புமனம் கொண்டாலும் இருந்தவீரம்
இருப்பாக  இருந்ததாம் இருந்ததன்றி
இருளென்னும்   தீமைதனை இல்லையாக்க

இருக்கும் வழியறியாது இருந்தார் ஆனால்
இருந்தாலென் போனாலென் றெழுந்தசிலரால்
இருக்கும் மனவலிமையை எடுத்துஆள
இருட்டில்சில ஒளிதோன்ற , ‘இல்லையாமோ
இருப்பதோ என்றனை  இருக்கு’தென்றார்
இருக்குதாம் என்றமுதல் இருப்பேயின்றி
இருந்திடக் காண்கிறார்  இருப்பதாயின்
இருக்குதொரு எதிர்காலம் இல்லையாமோ

Sunday, November 25, 2012

தமிழே நீ நதியாக ஓடு

தமிழே நீ நதியாக ஓடு - இந்தத்
தரைமீது வழிமாறித் தொலையாம லோடு
எமதாசை மனம்மீதும் ஓடு - உனை
இசைபாடித் தொழுவோரின் இதயத்தில் ஓடு
அமர்ந்தே நில் ஆற்றுப்படுக்கை - இன்னும்
அகல்வாவி குளமென்று அலைகொண்டு ஆடு
நிமிர்ந்தோடு நேராக ஓடு - நீ
நெடுந்தூரம் நடந்தாலும் புவிகண்டு வாழு

நிமிர்ந்தாலும், புவிகொண்ட மொழிகள் - பல
நினையுண்டு தலைதூக்க நெருங்கு மப்போது
துமிதூறச் செல்வங்களோடு - நீ
தொலையாது பெரிதாகு மழைகொண்டதாகு
சுமந்தோம் உன் புகழ்தன்னை ஆண்டு - பல
சொல்லவும் முடியாத பெருந்துன்பங் கொண்டு
எமதன்பின் தமிழென்று கண்டோம் - இனி
எதிர்காலம் உண்டோவென் றோரச்சம் கொண்டோம்

அழிகின்ற மொழிநூறு உண்டு - இந்த
அகிலத்தில் தொலைகின்ற மொழியோடு சேர்ந்து
வழிகண்டு தமிழ்போகின் தீது - இது
வருங்காலம் நடைபெறக் குறி கொண்டதேது
செழிக்கின்ற மரம்வேண்டும் நீரும் - நீ
திரும்பும் உன் வழியெங்கும் தமிழ்பேச வேண்டும்
தெளிவோடு ஒளிதோன்ற வேண்டும் - இதில்
தேவையெனில் புதுப்பாதை நாம்காண வேண்டும்

மொழிஎன்ப துயிருக்கு நேராம் - இந்த
மூச்சில்லை யென்றிடில் முழுவாழ்வும் போமாம்
பொழிகின்ற மழை நின்றுபோனால் - கொண்ட
பசுமைக்கு புவிமீது இடமேது கூறு
எழில்கொண்ட தமிழ்வாழ வேண்டும் - இதற்
கெமதன்பு இதயத்தில் இடம் நல்கவேண்டும்
வழிஉண்டு வகை செய்ய வல்லோம் - இந்த
வையத்தில் தமிழ்என்ற பெருமையும் கொள்ளோம்

உருள்கின்ற கல்லென்ப குன்றின் - நிலை
யுயர்நின்று விழும்போது உடன் கையிலேந்து
வருகின்ற கல்வீழும் பாதை - அது
வரவர வேகமும் பெரிதாகும் கொள்ளு
பெரும் வீழ்ச்சி கொண்டோடி அருவி - நிலை
பிறழ்வுண்டு விழமுன்புதடையொன்று போடு
தருமின்பத் தமிழ்காத்து வெல்லு - இன்றேல்
தரைவீழும் அருவிக்குப் பெயராழி யென்று

விடியாத வாழ்வு வேண்டாம்


 தேயாத வெண்ணிலா தீண்டாத தென்றலும்
துவளாத கொடிதானும் வெயிலில்
காயாத ஈரமும் கலையாதமேகமும்
கருதாத எண்ணமும் உண்டோ
பாயத நீர்நதி பரவாத வான்வெளி
பருகாத தாகமும் நன்றோ நிலை
சாயாத நேர்மையும் சரியாத வீரமும்
சரித்திரம் தமிழ்கொண்ட தன்றோ

வேயாத கூரையும் விடியாத காலையும்
வெயிலெண்ணி ஏங்காத பயிரும்
மேயாத மான்களும் மிதவாத ஓடமும்
மிகையான அழகற்ற பூவும்
தாயாகின் வன்மையும் தவளாத குழந்தையும்
தகிக்காத உச்சியின் வெயிலும்
நோயாக போனாதாய் நிற்குமோர் நெஞ்சமும்
நிலையீது கொள்ளுதல் தகுமோ

வெல்லாத வீரமும் விளைந்திடா ஆற்றலும்
வெறிகொண்ட பகைகொல்ல வெகுண்டு
கொள்ளாத நெஞ்சமும் குறிவைத்துத் தாக்கிட
கொதிக்காத உணர்வோடு தூங்கி
துள்ளாத ஆறெனத் துடிக்காத பூவிழி
தொடங்காத ஆரம்பம் போலே
நில்லாந டந்திடு நெஞ்சை உயர்த்திடு
நீகாணும் வெற்றியை எண்ணு

செல்லாத கால்களும் தெரியாத பாதையும்
திக்கற்ற விதமான போக்கும்
கல்லாக நெஞ்சமும் கடமைக்கு ஆற்றலும்
கருவற்ற கவிதைபோல் நேர்மை
அல்லாத பார்வையும் அளவற்ற பொறுமையும்
அடிமைக்கு நிகரான வாழ்வும்
இல்லாது போகவே இறைமைக்கு வேறென
எண்ணுதல் நிறுத்தி நீசெல்வாய்

கல்லாத மூடனும் கனிவற்ற காதலும்
கடலோடு சேராத நதியும்
சொல்லாத இரகசியம் தூண்டா விளக்கொளி
தொட்டேசு கம்காணாத் தேகம்
புல்லென்ற கீழ்மையும் புனல்வீழும் தாழ்மையும்
பொழுதாகின் இருள்கொண்ட வாழ்வும்
இல்லாது வீரமும் வல்லாண்மை கொண்டுநீ
இயங்கிடு சுதந்திரம் தேவை

Wednesday, November 21, 2012

ஓய்வு

அனைவருக்கும அன்பு வணக்கம். ஒரு வாரம் ஓய்வு எடுக்கலாமா  என்று எண்ணுகிறேன் கவிதைக்கு ஓய்வு. ஒருவிளையாட்டு  தயாரிக்கலாமா என எண்ணுகிறேன். முடிந்தால் செய்வேன்.
எப்படி விளையாட்டு இருக்கும்.  இதோ இதை விளையாடிப் பாருங்கள்

யார் அந்தக் கொலைகாரன் ?
http://www.mediafire.com/?2u1lt5x2189nblb








மேலும் தேவையென்றால்

http://www.tamilvimbam.com/

நீ வாராயோ?




          நீ வாராயோ


விண்ணெழில் மதி வான்வருகுது
--வீசுங் காற்றதும் வாசங் கொள்ளுது
--வண்ண மென்முகம் வாடிக் காணுது ஏன்தானோ
கண்ணிரண்டினில் நீர்வருகுது
--காவ லெண்ணிடத் தீ எழுகுது
--காட்சி கொண்டெனைக்  கனவு கொல்லுது ஏன்தானோ
எண்ணம் துஞ்சிடத் துயரெழுகுது
--ஏழை நெஞ்சினில் தீபரவுது
--என்னவளென  நீஅழைத்ததும் நான்தானோ
பெண்மை அஞ்சிடத் தலைகுனியுது
--பேச்சிழந்திட ஊர் சிரிக்குது
--பேதை என்றிவள் ஏளனமிடப் பேசாயோ

கால் நடந்திடச் சோர்வுகொள்ளுது
--காற்று வந்துடல் சேர்த்துத் தள்ளுது
--காணும் நெஞ்சிடை ஏக்கம் கொள்ளுது வாராயோ
வேல்க ளென்றிடும் விழி ஒழுகுது
--விம்மிஎந்தனின் குரல்நடுங்குது
--விடிகிற அடிவான் சிவப்பது போல்நானோ
நால்குணத்தினில் நாணம்கெட்டது
--நாஇனித்திடும் தேவைவிட்டது
--நல்லிசைக்குமென் நாட்டம் கெட்டது நான்யாரோ
பால்நிலவினில் பார்குளிருது
--பாய்ந்தலைகடல் வேகம் கொள்ளுது
--பாவை நெஞ்சினைப் பார்த்திரங்கிடல் ஆகாதோ

காக்கை குருவி சேர்ந்து கத்துது
--காளை மாடுகள் தேடிமுட்டுது
--காட்டுத்தோப்பினில் ஆந்தைகத்துது  ஏன் தானோ
பூக்கள் மொக்கினை மெல்லவிழ்க்குது
--போயிதழ்களைக் காற்றுத் தொட்டது
--பார்க்க நெஞ்சினில் வேர்த்துக் கொட்டுது பாராயோ
வாக்குத் தந்ததை நீமறக்கவும்
--வாரிகொட்டிமண் நான்கிடக்கவும்
--வாழ்க்கை என்பது ஆகிவிட்டது வீண்தானே
தீக்கு மென்னுடல் சூடுபட்டது
--தென்றல்தொட்டதில் நோவும்கொண்டது
--திங்கள் போலுடல் தேய்ந்து கெட்டது கேளாயோ

ஊர் நகைத்திட ஓரம் நிற்பதும்
--ஊமைப் பெண்ணென வார்த்தை விட்டதும்
--ஓடித் துள்ளிடும் பாவம்கெட்டதும் உன்னாலே
ஊற்று நீரணி கீழ்க்குளிக்கவும்
--உண்மை கண்டிளம் பெண்கள் வந்ததும்
--ஓடிஎன்மன எண்ணம் கண்டவர் ஒன்றாகி
வேர் பரந்திடும் ஆல் மரமென
--வேகம்பெற்றயல் ஊர் பசப்பிட
--வேடன் விட்டம்பு  தைத்தபுள்ளென வீழ்வேனோ
கார்முகிலுக்குத் தோகை என்றிடக்
--களிநடமிடும் உன் நினைவினில்
--காலிடை கொண்ட பாம்பென நான் சாவேனோ?

அழகுக்கு அழகு !

வான் நிலவென்றால் முழுமதியழகு
வரும் மழைகாட்டும் வானவில்லழகு
தேன்மலர் பூத்தால் தினம்தினம் அழகு
திரிந்திடும் தென்றல் தொடுமுணர்வழகு

மான்களும் ஓடி மருளுவ தழகு
மனமதில் காணும் மாற்றங்க ளழகு
வான்முகில் திரளும் வடிவங்கள் அழகு
வரும் இடராகின் துணிவதும் அழகு

மின்னலில் தோன்றும் மென்பயம்அழகு
மேகத்தின் இடியில் தாய்மடி அழகு
புன்னகை பெண்ணில் பொலிந்திட அழகு
பூத்தொடு மாலை  பூசையில் அழகு

பொன்முடிவேந்தன் புகழ்பெரி தழகு
புத்தொளி ஞானம் புலமைக்கு அழகு
நன்னெடு மரங்கள் நயமுறும் சோலை
இல்லையென்றீதல் இருப்போர்க் கழகு

வன்செயல் நீத்தல்  வாழ்வினில் அழகு
வறுமையைப் போக்கல் ஆள்பவர்க் கழகு
துன்பங்கள்  வாழ்வில் தொலைந்திட அழகு
தூய மனங்கள் சேர்வதும் அழகு

எண்ணங்கள் கொள்ளும் கற்பனை அழகு
இளமையில் காதற் பிரமையு மழகு
மண்ணிடை தவறை மன்னிப்ப தழகு
மனையவள் பணிந்து மகிழ்வது மழகு

புன்மையி லூறிய பொய்யனும் அரசைப்
பேயெனும் ஆட்சி பிழைசெயு மன்னன்
பெண்வதை, மண்ணில் பெருபலியிடுவோன்
புவியிடை அழிவது அழகிலும் அழகே

Saturday, November 17, 2012

தமிழைத் தவிக்க விடலாமா?



ஒன்று பட்டாலுண்டு வாழ்வு - நம்மில்
ஒற்றுமை நீங்கிடின் விளைவது கேடு
என்றுமெம் தமிழ்மனம்மீது - நிதம்
ஏற்படும் பிரிவினை ஏனிந்தக் கேடு
நன்றி கெட்டே பகையோடு - இவர்
நடந்திடும் உறவுகள் நாட்டிற்கு ஊறு
தொன்று தொட்டே தமிழோடு - இந்த
துயர்தரும் சரித்திரப் பலகதையுண்டு

மனமது பண்படவேண்டும் - அதில்
மலர்வது உணர் வுடல் மாளிகை போலும்
கனஎழில் வண்ணங்கள் தூங்கும் - அதில்
காட்சிகள் கற்பனைச் சரங்களும் ஆடும்
இனமொழி யுணர்வுகள் மேலும் - அதில்
இருப்பது பொன்னுடை நகைக ளுமாகும்
உனதெழில் அணிந்திடக் கூடும் - இவ்
வுலகதில் தமிழது  உயர்வென ஆகும்


உணர்வுக ளிருந்திட வேண்டும் - உன்
உதிரத்தை  உறைத்திடும் சுரம்கொள்ள வேண்டும்
தணலென மனம்கொள்ள வேண்டும் - அத்
தகிப்பினில் உதிரமும் சுடும்நிலை வேண்டும்
மணமற்ற மலர்களைப் போலே - நீ
மதியற்ற செயலினை மறந்திட வேண்டும்
குணந்தனில் தமிழ் எனும் பெருமை - உன்
குருதியில் சிவப்பெனும் நிறந்தர வேண்டும்

இழிவதில் இறப்பதுமேலாம் - நீ
இருந்திடில் உறுதிதன் மானமும்வேண்டும்
பழிஎனும் பெயரையும் தாங்கி - நாம்
பலதுறை நடப்பினும் தாய் ஒன்று ஆகும்
வழிபல போய்ப் பணம் தேடு - நீ
வருவது பகையெனில் தமிழ் எனக்கூடு
மொழியுன தறிவினில் தருமே - அது
முழுமை யிலிலையெனில் அகந்தனில்குருடே

இவன் ஒரு தமிழன் என்றுலகில் - நீ
எதுமுனை காணினும் உனதெழில் பெயரே
தவழ்திடும் பொழுதினி லிருந்து - நாம்
தரைவிடும் வரைதனும் தமிழென ஒன்றே
எவனினம் தமிழ்தனைப் பழிப்போன் - அவன்
எதிரியென் றுணர்; உன தாயவள் தன்னை
அவ மரியாதை  செய்திழுத்தே - அவன்
அழகினைகெடுத்திடும் அரக்கனைஎன்றும்

மனமது மன்னிக்கலாமோ - அவன்
மணிமுடி கொள்ளினும் மறந்திடப் போமோ
சினமது எழுந்திட வேண்டும் - அவன்
செயலினை நிறுத்திட உணர்வெழ வேண்டும்
இனமிவன் தமிழென இழிய - நீ
இளித்தவன் கரம் பற்றல் எதுவிதம்- அன்னை
தனிலன்று பால்குடித்தாயோ - இல்லை
தரம்கெட மதுவுடன் விசம் குடித்தாயோ

தமிழெனில் உயிரென எண்ணு - உன்
தாயினும் சிறந்தவள் மொழிஎன்று கொள்ளு
அமிழ்திடும் தாய்சில காலம் - உன்
அகமதில் ஒலித்திடும் தமிழ்முழுவாழ்வும்
தமிழினை மறந்தவன் இழியோன் - அவன்
தொடுமிடம் எங்கணும் விசமெனும் கொடியோன்
தமிழ்தனை விற்பவன் மூடன் - அவன்
தரணியில் புழுவிலும் இழிவெனும் தேகன்

திருந்திடு தமிழ்தனை எண்ணு - நீ
தேன்சுவைத் தமிழினை உயர்த்திட நில்லு
வருவது பெருந்தொகையென்று - உன்
வாழ்வினை எண்ணிடில் பெருதவறொன்று
தருமமும் நீதியும் வெல்லும் - அது
தருமொரு வாழ்வென தலைநிமிர் சொல்லு
அருந்தமிழ் சிதைந்திட அன்னை - அவள்
ஆருயிர் காப்பவர் யார் எமைவிட்டு....!

************************

Friday, November 16, 2012

வாழ வைத்த தெய்வம்

'செந்தமிழா' என்றகுரல், அண்டையிலே நின்றவள்யார்
சந்தணமோ செந்தணலின் தோற்றம்
சுந்தரமண் மேனியெழில் ’”சுற்றும்புவி யென்பவள் நான்
சொல்லுகவி சந்தமுடன்” என்றாள்
தந்தன வென்றாடி அதோ எந்தனுயிர் சூரியன்முன்
தாவி நிதம் நாட்டியமும் செய்வேன்
சந்தமுடன் நீகவிதை தந்திடுவாய் என்னிலிவள்
சிந்தைகவர் அங்கநயம் செய்வேன்

வந்தனம்பார் பேருலகே வாழஇடம் தந்தவளே
வாட்டமுறும் மல்லிகை போலானேன்
இந்தநிலை கொண்டவனை இன்தமிழும் சொல்வதெனில்
என்னசெய்வேன் ஏழையென நின்றேன்
உந்தன் விதிஅவ்வளவே இங்குனது பங்கிலையேல்
வந்தவழி சென்றுவிடு என்றாள்
எந்தவழி யென்றலறி அந்தரவான் நோக்கிடநான்
எங்கிருந்தோ செந்தழல்தீ கண்டேன்

வெந்துசுடும் வெம்மையின்றி அன்பொடுதீ ஒன்றெழுந்து
விண்ணிருந்து வேகமுடன்வந்து
செந்தமிழின் சேவகனே சிந்தையதில் எண்ணமென்ன
சொல்லுகவி இக்கணமே என்றாள்
விந்தையிது அன்னையெனும் விண்ணொளியே என்னுயிர்நீ
வேடிக்கையோ சொல்லிவிடு என்றேன்
மந்தமதி கொண்டனையோ மனமறியும் உண்மைநிலை
தந்திடுவாய் உன்தமிழ்தா என்றாள்

முந்தி எழும்கற்பனயோ முத்தமிழைக் கையளவே
மோகமுறக் கற்றவன்காண்  என்றேன்
தந்தனனே தானதென்ன தந்தனதான் தந்தனையேல்
தந்தனென தானதென தாகும்
தந்தனதை தானிதென தானறியா தானதெனில்
தன்னதனை தானிழித்த தாகும்
தந்திரமோ தந்தனளோ தாகமெளக் கண்டனனோர்
தங்க ஒளி கொண்டுலகில் நின்றேன்

நந்தவனம் ஒன்றதிலே நல்லெழிற்பூ பூத்தனகாண்
நதியெழவும் குளிர் நிலவும் கண்டேன்
எந்திசையில் கீதமெழ இன்னிசைகள் தாளமிட
எங்குமெழில் பரவுதலைக்  கண்டேன்
சந்தமெழப் பாடிடஎன் சிந்தைகளிகூடிட நான்
செல்லுகிறேன் அந்தரவானூடே
பந்தமெழக் காணுமிவன் பைந்தமிழின் போதைகொளப்
பாடுகிறேன் விந்தையென்னில் கண்டேன்

சந்தனமும் வாசம் அது கொண்டதென மேலும்பல
செந்தமிழில் நன்கவிதை செய்தேன்
விந்தைவெளி யெங்குமொளி வேகமெடுத் தோடுகிறேன்
விண்ணிடைநான் வீறுடனே சென்றேன்
சந்திரனில் தூங்கியிவன் சிந்தைமகிழ் வாகிடவான்
சுற்றுகிறேன் பூமியென நானும்
வந்தவளைக் கானவில்லை வட்டமுகம் சுற்றுகிறாள்
எந்தனொளித் தாய் புகழைச் சொல்வேன்

**********

( தந்தனனே தானதென்ன தந்தனதான் தந்தனையேல்
. தந்தனென தானதென தாகும்
. தந்தனதை தானிதென தானறியா தானதெனில்
. தன்னதனை தானழித்த தாகும்

இதற்குப் பொருள்கவிஎழுதும் ஆற்றலை தந்தேனல்லவா அதற்கு ஆனதென்ன நான் அளித்த ஆற்றலை வெளிபடுத்தி கவிதையாக்கி தருவாயானால் இவன் கொடுத்ததை தந்துவிட்டான் என ஆகும். அல்லாமல் நான் தந்த ஆற்றலை இதுதானென நீயறியாமல் போவாயாயின் உன் திறமையை நீயே அழித்ததாகும் என்ற பொருள் வரும் . தவறிருப்பின் சுட்டிக்காட்டவும்

Wednesday, November 14, 2012

அணையாதோ?

( அன்பு)
திங்கள்தனை முகிலணைக்கும்
  தீந்தமிழைக் கவியணைக்கும்
மங்குமிருள் இரவணைக்கும்
  மாலைதடந் தோளணைக்கும்
பொங்குகட லலையணைக்கும்
  பூவிழியை  இமையணைக்கும்
எங்குமுயிர் அன்பணைந்தால்
 இதயமகிழ் வெய்தாதோ

பொங்குமொளி பயிரணைக்கும்
    பூத்தகொடி மரமணைக்கும்
பங்கயத்தை நீரணைக்கும்
    பனித்துளியைப் புல்லணைக்கும்
செங்கரும்பின் சாறுஇனிக்கும்
   சேர்ந்தசுவை நாவணைக்கும்
பங்குகொளும்  வாழ்வுதனில்
    பண்பைமனம் அணைக்காதோ

காலையொளி புவியணைக்கக்
  கனவுவெழுந்து துயிலணைக்கும்
ஓலை மறை வெடுநிலவை
  உள்ளமதன் உணர்வணைக்கும்
சோலைவருங் காற்றலைந்து
  சொல்லாம  லுடலணைக்கும்
ஞாலமதில் அன்பெழுந்து
   நம்வாழ்வை அணைக்காதோ

( அழிவு)
கங்குல்வரப் பகலணையும்
  காற்றெழுந்து சுடரணைக்கும்
பொங்கும்சினம் அறிவணைக்கும்
   போதைகொளப் புகழணையும்
அங்கமெங்கும் நோயணைக்க
  ஆனந்தமென் உணர்வணையும்
தங்குமிந்தப் புவிவாழ்வில்
   தவிப்பென்ப தணையாதோ 

சேலையணி மாதரது
   சேல்விழிகள் நீரணைக்கும்
நாலுமறி மதிஅறிஞர்
   ஞாபகத்தை வயதணைக்கும்
மேலுமுயிர் வாழுடலை
   மோகமுடன் விதியணைக்கும்
காலமெனும் சக்கரத்தில்
   கனவெனவாழ் வணைவதுமேன்

குருட்டு உலகமடா !

வாழ ஒருவழி தேடிநின்றோம் அவர்
வஞ்சகர் என்றுரைத்தார்
சூழுந் துயர்கள்பந் தாடிநின்றோ மெங்கள்
தூய்மை அழிப்போ மென்றார்
பாழுங் கொடுமைகள் செய்தவரைப் பழி
கூறுதல் விட்டேயெமைத்
தோளில் உரங்கொண்ட தாலுலகோ கொடுந்
தீயரென்றே உரைத்தார்

பாலைக் குடித்திடப் பிள்ளைபசி கொண்ட
பாங்கொடு நாமழுதால்
நாலை ஐந்து குற்றம் நாமிழைத்தோமென
நஞ்சினைக் கொட்டுகிறார்
காலை விடிந்திடும் சேவல்கூவுமெனக்
காட்சியும்காண நின்றால்
தோலைஉரித்துக் கிடத்தியெமை மெல்லத்
தூள் அள்ளி பூசுகிறார்

சேலை வழுகவைத் தார்சின்ன மாதரைச்
சித்திர வதைசெய்து
காலை எடுத்து மிதித்து அவளுடல்
கொன்று களிப்படைவார்
சாலை வழிபெரும் சீறிடுவாகனம்
சூரப்பயணம் செய்வார்
மேலை வழி  தேசமண் சிவக்கும்
 எங்கள் மெய்யின் குருதிகொள்வார்

ஊருக்குள் வீட்டுக்குள் எங்கும் கொலை என்னும்
உத்தம போதனைகள்
யாருக்கு யார்சொல்லிக் கொண்டனரோ பெரும்
வம்சத்தில் பற்றுடையார்
பேருக்கு ஓர்தமிழ் பிள்ளைதனும் இந்த
பொன்னெழில் நாட்டிலின்றி
வேருக்குள் வெட்டித் தறிப்பதுவே இனி
வேலை நமக்கு என்றார்

யாருக்கு என்ன நடப்பதெல்லாம் ஒரு
யாகமென் றோ உலகு
கூருக்கு தீட்டிய கத்தியினால் வெட்டக்
கூசாமல் கண்டுநின்றார்
மாருக்கு குத்தியும் மண்ணில் விழுந்தழும்
மானிட ரெம்மைவிட்டுப்
போருக்குள் நீதியைக் கொன்ற கயவரை
பூவள்ளி போற்றுகிறார்

தேருக்குள்ளே நின்று வீதியைச் சுற்றிடும்
தெய்வத்தை கேட்டுநின்றோம்
பாருக்குள் தேவரின் மைந்தர்களாய் இந்த
பச்சை யிளமனதும்
நேருக்கு வன்பகை வந்து நின்றா லதை
நீறென ஆக்கும் ‘கனல்’
நீருக்குள் பூத்தகமலமதில் எரி
நெய்கொண்ட தீயின் அழல்

வாரிச் சுருட்டியும் வந்தவர்கள் ஓட
வைக்கும் திறனும் கொண்டார்
பாரின் குருட்டவை பார்க்கத் தவறிய
பாழும் செயல்க ளெல்லாம்
சூரிய னின்கதிர் போலத் தரணியில்
சுட்டெரித்தே தருமம்
நேரிய பண்புடை செய்ய முயன்றவர்
நம்மைப் பிரிந்திடினும்

வீரியம் இல்லையென்றே குனிந்தோடிட
வேளை இது இல்லைடா
காரிய மாற்றிக கருமிருள் போக்கிடக்
கண்களை நீ திறடா
சூரியன் தோன்றிடச் சுற்றுமுலகில்நம்
தேசமதை மீளடா
பாரிய மாற்றமிட்டே பகைவென்றிடப்
பார்த்தொன்று கூடிடடா

****************

தீப ஒளிகள்

ஆயிரம் ஆயிரம் தீபங்கள் ஏற்றியும்
ஆனந்த மென்ப தில்லை
போயின்னு மேற்றிடப் போகுது வாழ்வுகள்
பொன்னெழிற் தீவின் நிலை
மாயினும் மாளினும் ஏற்றிடும் தீபங்கள்
மேலும் இருக்குத் தொகை
ஆயினும் அச்சம்கொண் டாடுது தீபங்கள்
ஆவேசக்காற்றின் தொல்லை


கோவிலுமில்லைக் குளக்கரை பூவனம்
கூடிய மண்டபங்கள்
தாவி ஏறிவிளையாடிடும் மாமரம்
தானதரும இல்லம்
மேவிவளர் தென்னை வீட்டருகே வேம்பு
வீதியெல்லாம் பறித்தே
போவீரெனச் சொல்லி  நாலுபக்கவேலி
போட்டவர் பூட்டுகிறார்

தீபம் ஒளிர்வது தேக்குமரக்காடு
திங்கள் வரும்பொழுது
தூபமிடும் மலர் தூக்கி எறிந்தவர்
தெய்வமென் றன்னை தங்கை
சாபமிட்ட நிலை சற்றுவணங்கவும்
சீறுவர் கொண்டுவெம்மை
ஆபத்துடன் வாழ்வில் அன்றாடம் பூவிட
உண்டோ இன்னும் வருகை

*******************

Wednesday, October 31, 2012

உயிர் தமிழுக்கு...



கவிக்கு உயிர் ஈவேன் கண்டதுண்டமாய் ஆக்கி
புவிக்குள் எனைப் புதைத்துப் பூமலர வைத்தாலும்
தவித்தே அலைதென்றல் தனில் ஓசைமீட்டியொரு
கவியாய் உயிர்கொண்டு  காற்றில் இழைந் தோடிடுவேன்

மடித்தே எனதுடலை  மாகடலில் எறிந்திடினும்
அடித்தே எழும் அலையில் ஆவென்று பாட்டிசைப்பேன்
துடித்தே உடல்நடுங்கத் தீயிடையே எறிந்திடினும்
படித்துப் பெருங்கவிதை பாட்டெழுதித் தீய்ந்திடுவேன்

வெடித்துச் சிதறவொரு வானிருந்து போடும்பொதி
அடுத்தென் அருகிலிடி ஆகாயம் வீழ்ந்ததென
பொடித்தே உடல் சிதறப் பூகம்பமாய் வெடித்தும்
நொடிக்குள் கவிபாடி நிம்மதியாய் செத்திடுவேன்

செழித்த சோலையிலே சிங்காரக் குருவிகளும்
களித்து குலவ அதைக் கண்டு கவிபாடிடுவேன்
குளித்தே எழும்குளத்தில் குமுதமுடன் அல்லிமலர்
விளித்துகிடப்பதனை விரும்பக் கவிசெய்வேன்

நெளிந்தே சிறுநாணல் நிலத்தை வணங்கிடினும்
தெளிந்த உரமெடுத்துத்  தேக்குமரம் நின்றிடினும்
புளித்த மா தருவும் பின்னாலே   ஆலமரம்
அளிக்கும் எழில்கண்டு ஆடியேநான் பாடிடுவேன்

தோகை மயில் விரிக்க துவானம் நீர்தெளிக்க
நாகம் படமெடுக்க  நாரைகொளத் தவமிருக்க
பூகை யேந்தியொரு பெண்ணொருத்தி மலர்சூட
ஆகா அ\ழகென்றே ஆனந்தப்பாட்டிசைப்பேன்

வடித்துக் கொடுப்பதவள் வாரித் தெளிப்பதிவன்
குடித்துக் களிப்ப மனம் கூடிக்கிடப்ப துளம்
துடித்துக் கிளம்பி உயிர் தேகம் அடங்கும்வரை
நடித்துக் கவிகூற நாட்டியங்கள் ஆடிடுவேன்

தேனைக் கவிவடிக்கத் தென்றலதி லேறியுயர்
வானை க்கடந்தோடி வானவரின் நிலமேகி
சேனை படைஎதிர்த்து சிரம் கொள்ளவந்திடினும்
ஞானபழம் தருவாள் நாடிவரம் வென்றிடுவேன்

ஓடைமலர் பூக்கும் ஒளிவெள்ளம் பூமிகொளும்
ஆடை விரித்த அலை அசைவதிலே அழகூறும்
கூடை மலர் கவிதை கொண்டுலகின் சக்தியவள்
ஏடு எழுதவைத்தாள் இறையவளைப் போற்றிடுவேன்

Sunday, October 28, 2012

இயற்கை, வாழ்க்கை, கயமை, கவலை



(இயற்கை)
                       கிராமம்

பூக்காடும் புள்ளினங்கள் போம்வானமும்
பொழுதோடிக் கதிர் வீழும் பொன்மாலையும்
தேக்கோடு பெருஞ்சோலை சில்வண்டினம்
சிறுமந்தி விளையாடும் மூங்கில்வனம்
தீக்காடோ என்றஞ்சச் செம் பூக்களும்
சிதறும்பின் சேர்ந்தோடும் மந்தைகளும்
நீக்காத திரைமூடும் முகிலோவியம்
நின்றாலும் நடைபோடும் இளஞ்சூரியன்

பூக்காது முகை தூங்கும் அயல்தாமரை
புனலாடக் குதிபோடும் நிரையாயலை
தேக்காது தேன்ஈயும் மலர்கொள்வனம்
திகழன்பு மாதர்கள் தெரு ஊர்வலம்
போக்காக நடைபோடப் பொழுதோடிடும்
பூங்காற்று வயலோரம் பாடுங்குயில்
நாக்கோடு சுவைகூட்டக் நறுந்தேனடை
நாள்தோறும் கண்முன்னே பேரின்பமே


(வாழ்க்கை)
                     நகரம்

மூக்காலே புகைதள்ளும் பெரும்வண்டிகள்
முன்னாலே நெடுஞ்சாலை மிதிவண்டியும்
சாக்காலே நிறைமூட்டை இழுமாடுகள்
சரிந்தும்கீ ழுருளாத பெருவண்டியும்
போக்காலே குறுக்கோடும் ஒருஜன்மமும்
போறேன்னு சொன்னாச்சா எனும் கூச்சலும்
நோய்க்காக விரைவண்டி கூப்பாடிட
நிறைகின்ற வாழ்வோடு மரத்தினடி

தீக்காயும் வெயிலுக்கு திருமண்டபம்
தின்றாறித் துயில்கொள்ள திருமஞ்சனம்
நோக்காயம் படுமேனி கொண்டோமிந்த
நிலமைக்கு விதியென்ற உழைப்பாளிகள்
ஆ..காணும் இடமெங்கும் நிறைந்தாரென்ன
அநியாயம் ஏமாற்றம் அதிகாரமும்
நாக்காலே பொய்சொல்லும் நடிப்போரினால்
ஞாலத்தில் உருவான நடையானதே!

(கயமை)
                     வறுமை,செல்வம்

ஆக்காத சோறெண்ணி அடுப்போடுநல்
ஆனந்த சயனத்தில் ஒருபூனையும்
வேக்காடு இல்லாத வெறும்பானையும்
விரதத்தை தினங்காணும் சிறுபிள்ளைகள்
நீக்காத வறுமைக்கு நீருண்டுவாழ்
நலிந்தாலும் எலும்பொடு நடைகொண்டவர்
போக்காத ஏழ்மைக்கு பதில்சொல்பவர்
போகத்தின் மாயைக்குள் சிக்குண்டிட

தூக்காக பணமூட்டை தொலைதேசமும்
தெரியாமல் மறைக்கின்ற செல்வந்தர்கள்
வாக்காக பலநூறு மொழிகூறிப்பின்
வந்தேறும் அரசாட்சி வாழ்வென்றபின்
நோக்காக தன்பாடு நிறை கண்டிடும்
நீதிக்கு கண்கட்டு நெறியாளர்கள்
காக்காது கைவிட்ட மாந்தர்களே
கடிதென்ற வாழ்வுக்கு கதியாவரே

(கவலை)
                   இளைய சமுதாயம்

நன்நூல்கள் தமிழ்கூறி நயம்பேசிடும்
நன்மாடம்  பூஞ்சோலை நிகழ்மண்டபம்
புன்னகைச் சிறுவர்கள் பெண்கூடியே
பந்தாடும் மகிழ்வெங்கே; பரிதாபமாய்
எந்நேரம் கணனிக்கு இரையானதோர்
இடும் சத்தம் சுடுமோசை எதிராட்களும்
வன்மைக்கு துணையாகும் விளையாட்டுகள்
வளர்பிஞ்சு மனங்கொல்லும் கொடுநஞ்சுகள்

எண்கற்றல் எழுத்தோடு இறைபக்தியும்
இல்லாது புயல்போன்று எதுஎண்ணினும்
கண்ணுக்குமுன்காணும் கடுவேகமும்
கைகெட்டா தாயின்கொள் கடுங்கோபமும்
பெண்ணுக்கு ஆண் நேரென் நிகர்வாழ்வென்று
பிழைசெய்யும், சிலபோக்கும் மென்மைகெட
தண்மைக்கு சூடேங்கும் மனமானது
தருமோ நல்லெதிர்கால வாழ்வென்பது

***********

Saturday, October 27, 2012

ஒருநாள் ராஜா 2


தேவஎழிற் பூவையர்கள் தீந்தமிழ் பாட
தென்திசையின் காற்றுவந்து தேகம்தொட்டிட
கூவியொரு சங்கொலித்து கொள்புகழ்போற்ற
கொற்றவனென் பக்கமொரு கோதையும்காண
தேவிமலர் சூடியயல் தென்ற லென்றாக
தேன்நிறைந்த கிண்ணமதை தேவதை சேர்க்க
யாவு மினி தென்றொருவர் ஆளுமை போற்ற
யௌவனத்து பெண்சுழன்று நாட்டியமாட

மேவியெழு வான்சுடர்போல் வீர மார்பதை
மென்னிதழ்கொள் கன்னியர்பூங் கைகள் தொட்டிட
மாவிருந்து வீழ்ந்தகனி மாதர் கன்னமும்
மையிதழ்கள் பேசியெனை மகிழ்வினில் ஆழ்த்த
நாவினித்த கனிபிளந்து நங்கையர் ஊட்ட
நடையமைந்த ராஜகளை நற்புகழ் சேர்க்க
தேவர்களும் பூஎறிந்து என்பெய்ர்கூற
தோன்றுசுகம் இன்பமன்றோ இன்பமேயன்றோ

பால்நிலவில் மாடமதில் பைங்கிளியாட
பனியெழுந்து குளிர்நடுக்கி போர்வையைத் தேட
வேல்விழியாள் மான் பயந்து வெகுண்டது போலும்
விளங்க பெருந்தீ எழுப்பி வெம்மையில் காய
நால்திசையும் போர்முரசு சங்கொலி கேட்க
நாடு கொள்ள வந்தவனும் நடுவினில் தோன்ற
கால் நடக்க கைஉருவி வாளினைத்தேட
காலைவெயில் சுட்டது நான் கண்களை விழித்தேன்

மென்மையில் வலிமை

( தலைவியின் பிரிவுத்துயர்)

பொன்னெழில் கொண்டது வானம் - அங்கு
போவன பஞ்செனும் மேகம்
என்னழ கென்பது யாவும் - அங்கு
ஏகும் முகிலெனக் காணும்
தன்னிலை விட்டவை ஓடும் - எனைத்
தன்னந்தனி யென்ற  தாயும்
மன்னவன் நீசெய்யும் மாயம் - இதில்
மாறுவ தில்லைச் செய்காயம்

தென்கடல் சுற்றியே வீசும் - அந்த
தென்றலும் என் பகையாகும்
புன்மை செய்தே மனம்நோகும் - வரை
பூந்தளிர் தேகம் தொட்டோடும்
சந்திரனும் முந்த நாளும் - மன
சஞ்சலத்தில் வந்து கண்டும்
இந்தளவோ என்று காயும் - எந்தன்
ஏக்கம் கண்டே உடல்தேயும்

மந்திகள் மாவினி லேறும் - இவள்
மங்கையைக் கண்டு கூத்தாடும்
வந்தானோ என்றுபல் காட்டும் - மனம்
வானரம் தானென்று வையும்
அந்தியில் சிற்றலை யாடும் - குளம்
யாவும் மலர்ந்த செம்பூவும்
விந்தை குளிர்ந்தும் செவ்வானம் - வெயில்
விட்டும் எனையெண்ணி வாடும்

பந்தியில் உண்டிடும் வேளை - பயன்
பட்ட இலை கருவேம்பை
நிந்தை செய்தே தள்ளி வீசும் - தன்மை
நேர்ந்தே யெனை எறிந்தாலும்
வந்திடுவர் என வாசம் =  தரும்
வண்ண மலர் தெம்பு கூறும்
அந்தோ மதுகொண்ட வண்டோ - பொய்
யாமெனப் பூவை விட்டோடும்

வெண்பனி போல்நெஞ்சு காணும் - விழி
வந்து சொரிந்திடும் நீரும்
எண்ண எண்ணக் கொள்ளும் துன்பம் - அந்த
ஏகாந்தமே யெனைக் கொல்லும்
கண்ணிரண்டும் இருளாகும் - அதில்
காவிய நாயகர்போலும்
அண்ணளவில் நீயும் நானும் - கண்ட
அந்தநாளின் நிழல் தோன்றும்

செங்களமோ எனவானும் - ரத்தம்
சிந்தியதோ வெனக் காணும்
பங்கயம் பூமுகம் தானும் - அது
பட்டது போற் சிவப்பாகும்
குங்குமம் கொள்ளெனத் தானும் - இவள்
கொண்ட மனஎண்ணம்யாவும்
பங்கம் விளைந்து புண்ணாகும் - கத்தி
பட்டதில்லை இரத்தம் சிந்தும்

தெங்கு வளர்ந் துயர்ந்தாலும் - அது
திங்கள் தொடஎண்ணினாலும்
அங்கு முகில்வந்துமூடும் - மதி
ஆகத்தொலைவு என்றாகும்
மங்கு மொளிகொண்ட வானில் - என்ன
மந்திரங்கள் போட்டபோதும்
தொங்கு மதி உயர்வாகும் - தொட்டு
கொள்ளு மெண்ணம் கனவாகும்

தங்கம்சுடச் சுட மின்னும் - உந்தன்
தாமதமும் என்ன செய்யும்
பொங்கும் கடலலை துள்ளும் - அந்தப்
போதை கொண்டே காணும் உள்ளம்
எங்கும் கடற்கரை காணும் - அங்கு
ஏக்க மிழந்தலை மீளும்
இங்கும் இவள் நெஞ்சினோரம் - இனி
இல்லை யெனும் உரம் காணும்

Thursday, October 25, 2012

புரியாத சக்தி (தேவி)

கண்கொள்ளக் காட்சி தந்தாள்
. காலைக்குக் கதிரைத் தந்தாள்
.. கனிந்திடும் காய்கள் பூவில் தேன் தந்தாள்
எண்ணுக்குள் கூட்டல் வைத்தாள்
. இணைவதில் மீட்டல் வைத்தாள்
..  இதயத்தில் அன்பை வைத்து இதம்செய்தாள்
பெண்ணுக்குள்  உயிரை வைத்தும்
. பிறப்பென்று வேரைஊன்றி
.  பிரிந்திடும் இயல்பை வைத்துப் புதிர்போட்டு
மண்ணுக்காய் ஆசைகொண்டு
. மானிடம் பகைத்து நின்றால்
.. மாதரின் மெய்யைத்தீண்ட ஏன்செய்தாள்

உண்ணென்றே அன்னம் இட்டாள்
. உலவென்று வானம் வைத்தாள்
..  உறங்கிட இரவைத் தந்தும் உளம்மீது
பண்ணோடு இசையும் தந்தாள்
. பாட்டுக்கு நடமும் செய்தாள்
..  பாரென்று இன்பம் எல்லாம் படைத்திட்டாள்
வெண்நீல மேகமெங்கும்
. விளையாடிச் சுற்றும் மதியை
..  விளக்கென்று வைத்துப் பகலுக் கெதிர்தந்து
கண்மூடித் தூங்கச் செய்து
. கருமைக்குள் கலகம் இட்டு
..  காணாத துன்பம்கொள்ளக் கதை செய்தாள்

தண்ணென்ற ஒடைநீரில்
. தாமரை தொட்டேஓடும்
..  தவிக்கின்ற காற்றில் மூச்சை உயிராக்கி
கண்ணீரில் வாழச் செய்ய
. களிப்புக்கோர் எல்லைபோடக்
.. காலத்தில் காணும்தீமை கொள்ளென்று
அண்மைக்குத்  துணையைத் தந்து
. அறிவுக்கும் இருளைகாட்டி
..  ஆக்கத்தில் பசியைத் தானும் பெரிதாக்கி
வண்ணத்தில் ஏனோ மின்னா
. வாழ்வுக்குப் புரியா தென்றோர்
..  வார்த்தைக்குப் பொல்லா தொன்றை ஏன் வைத்தாள்?

புண்ணுக்கு மருந்து மாவாள்
. புலமைக்குக் கவிதையாவாள்
..  போக்கிற்கு பாதைகாட்டிப் போவென்பாள்
வெண்ணெய்க்குள் நெய்யாய் நின்று
. விளக்கிடை ஒளியென் றாவாள்
..  விண்ணுக்குள் நின்றே காணா விளைவாகி
அண்டத்துள் சீறிக்காணும்
. அனலுகுள் வெம்மையாவாள்
.  அம்மையர்க்  கழகைத் தந்தே ஆளென்றாள்
திண்ணத்தில் நேர்மைகொண்டாள்
. திறனுக்குத் தாய்மை செயதாள்
..  தீண்டக்கை தொட்டாற் சிதைவும் ஏன்செய்தாள்


Tuesday, October 23, 2012

முத்தேவியர்க்கும்...!


வீணை கரமெடுத்து வெள்ளைமலர் இருந்து
வேண்டும் கலைகள் தரும் வாணியம்மா -நல்ல
ஆணை பிறக்கவென அன்பிலுனை யழைத்தோம்
ஆகும் வரமெமக்கு தாருமம்மா - புவி
காணும் உயிர்களுக்கு கல்வி உயர்வுதந்து
காக்கும் குணம்மிகவே செய்யுமம்மா -இனி
வீணிற் கலகம் செய்து வீம்பில் உடலழித்து
வெள்ளை மணல் சிவக்க வேண்டாமம்மா

ஞாலம் முழுதும் பொன்னை நாடிச் சொரிந்து ஒரு
நாளில் உயர்வு பெறசெய்யு மம்மா -இன்று
காலம் முழுதும் சிலர் காவல் அதற்கிருக்கக்
கந்தை யுடுத்தவரும் காண்பதென்ன - ஒரு
கோலம் இதுவுமென்ன கொண்டோர் உயரிருந்து
கொட்டும்குவை நதியென் றோடிப் பெருங் - கடல்
போலும் வறுமைகொண்டு பிள்ளை பசியிலழும்
பள்ளம் நிரம்ப வழி காட்டுமம்மா

வாளைக் கரம்பிடித்து வந்தோர் வலியரெனில்
வீரம்,அறம் இணைய வேண்டுமம்மா - வெறும்
கோழை மனத்தினொடு கொள்கை சிறந்திருக்கக்
குற்றம் கொடுமை தீரம் கொள்வதுண்டோ - கருந்
தேளை அரவமென்னில் தீண்டும் விடம் கொடுத்து
தப்பும் முயல்களுக்கு கால் படைத்தாய் - இனி
நாளை உலகமதில் நல்லோர் துணிந்துஎழ
நாசம் விளைப்ப ரச்சம் கொள்ள வைப்பாய்

குற்றம் புரிந்தவர்கள் கோலைப் பிடிப்பதெல்லாம்
முற்றும் தடுங்கள், மூன்று தேவியரே - நன்கு
கற்றுத் தெளிந்தவர்கள் காட்டும்வழி நடப்பர்
பெற்றும் வெற்றி முடி சூடவேண்டும் - இனிப்
பற்றும் உயிர்களிடை பாசம் உடையவனே
கொற்றம், குடைவிரித்துக் குந்தவேண்டும்  இவை
சற்றும்  இழந்தமூடன் முற்றம் நிறைந்தகுவை
பொற்கல், பணம் குவித்தல் நிற்கவேண்டும்

***********************

Friday, October 19, 2012

நவராத்திரிபாட ல் 2

        கருணை காட்டு
              
அடிமனதிலெழும் கவலை
.  அதையறிவ துனதுநிலை
.  ஆற்றிவிடு சக்திதேவி
துடித் துளமும் துயருறவும்
.  தொலைவிலிருந் தெமையறிவ
.  திலைஎனவும் மறுப்பதா நீ
விடிவுகொள இவரெமது
.  விளைவிலெழும் புதல்வரென
.  விரும்பி எமக்கன்பை யருளி
முடிவையெடு இருகரமும்
.  முகை மலரென் றிணையவுனை
.  மனமுவந்து கேட்டோம் தேவி

தினம் நடந்த திங்கள்முகம்
.  தனையிழந்து குறுகுதென
.  தமிழ் சுவைத்து வாழ்ந்த இனமும்
தனமிழந்து தரமழிந்து
.  தமிழ் குலைந்து தமையிழந்து
.  தவிக்கும்வகை காண்பாய் சக்தி
மனமழிந்து வாழ்விழந்து
.  மதிபிழன்று மானிடத்தின்
.  மகிமைதனும் இழந்தே தேவி
கனமிழந்து வாடுமெமைக்
.  காப்பதற்கு வேண்டுமுடன்
.  கருணை கொண்டு காண்பாய் சக்தி

நகையிழந்த சிறுவர்முகம்
.  முகையழிந்த மலர்க்கொடியும்
.  சிகையிழந்த பெண்ணின் வடிவாய்
புகையிழந்த தீயுமொரு
.  புனலிழந்த பொய்கையென
.  வகையிழந்த வாழ்வில் இணைந்தோம்
பகையெழுந்த பூமிதனில்
.  பழியெழுந்த விதமெதுவோ
.  குகையொழித்த இருளும்போலே
மிகையழிய மேதினியில்
.  அகமகிழ இருப்பதென்ன
.  தொகையழியு முன்னர் காப்பாய்

Thursday, October 18, 2012

தளர்வுறும் மனம் தள்ளு

                   தளர்வுறும் மனம் தள்ளு


பெண்:

தேனைத்தான் தந்தேனே காசைத்தான் தாவென்று
தேன்மலர் கேட்டதுண்டோ
வானைத்தான் தந்தேபின் வீசத்தென் றல்தன்னை
வாடகை வான் கேட்குமோ
ஏனத்தான் இப்பூமி எல்லோர்க்கும் ஆனாலும்
இருக்கத்தான் இடமில்லையே
ஊனைத்தா உயிரைத்தா உனதில்லை ஓடிப்போ
உரிமைக்கு நாமென்பதேன்

வாழத்தான் எழுந்தோமே வாளைத்தான் கொண்டெம்மை
வீழத்தான் கொன்றார்களே
நாளைதான் நமக்கென்று நம்பித்தான் இருந்தோமே
நலியத்தான் செய்தார்களே
ஏழைதான் என்றே எம் இயல்பைத்தான் மீறி இவ்
வுலகுந்தான் எதிர் வந்ததே
சூழத்தான் நின்றெம்மை சுற்றித்தான் படைகொண்டு
சொல்லித்தான் கொன்றார்களேன்

உள்ளந்தான் எண்ணித்தான் உரமும்தான் கொண்டாலும்
தன்னைத்தான் புரியாமலே
அள்ளத்தான் குறையாத அன்பைத்தான் கொள்ளாமல்
அறிவற்ற நினைவாகியே
பள்ளந்தான் முடிவென்று பாயுந்தண் ணீராகிப்
பலமாந்தர் நிலைகெட்டுமே
கள்ளந்தான் கொண்டோரைக் காலத்தின் கோலத்தில்
காணும்  இந்நிலையானதேன்

ஆண்:

எண்ணந்தான் தளராதே இன்னும்தான் துணிவுண்டு
எழவுந்தான் உரமுண்டடி
கண்ணைத்தான் போலும்நாம் காத்திட்ட மண்போக
கொள்ளத்தான் திறன்கொள்ளடி
பெண்ணைத்தான் கொன்றாலும் பிள்ளைதான் தின்றாலும்
பிறந்திட்ட தமிழ் எண்ணடி
விண்ணைத்தான் வெளிச்சம் செய் வெயிலும்தான் மேலேறும்
விடியும் வாழ்வுனை நம்படி

நவராத்திரி பாடல் 1

வீரத்தின் தேவி வெற்றியின் ஊற்றே
வேண்டுவ தீந்துவிடு
சாரமும் கெட்டுத் தளர்ந்தவருண்டு
சக்தியை ஊற்றிக் கொடு
தூரத்தில் தோன்றும் சூரியன்மீது
சொல்லொணாச் சக்தி வைத்தாய்
பாரத்தைக் கொண்டு பற்றினோம் கையைப்
பணிந்தனம் சக்திகொடு

ஆற்றுக்குவேகம் அனலுக்குதீய்ப்பு
அடித்திடும் புயற் துடிப்பு
சீற்றத்துக் காழி  செழிப்பதில் பூக்கள்
சிறப்பென நீ படைத்தாய்
வீற்றிருக்குமுன் வெள்ளிமலைபோல் 
வீறுடன் நாம் நிமிர
போற்றுகின்றோமெம் புன்மையழித்துப்
பூமியில் மாற்றவிடு

சேற்றுக்குள் பூத்தால் செந்தாமரைப்பூ
சீ யென்று தள்ளுவதோ
காற்றுக்கு எம்மேல் கடுஞ்சினமேவி
கணமேனும் நின்றிடுமோ
மாற்றுக்கு ஏதும் வழியில்லையோ எம்
மனதுக்கு மகிழ் வெல்லையோ
நூற்றுக்கு ஒன்றாய்  நாம்வாழல்விட்டு
நிலைதனில் கெடுவதுவோ

கொட்டலாம் மேகம் குமுறலாம் ஆழி
கூரைகள் பிய்த்தெறிந்தே
பட்டதைச் சூறை பாதி முறித்தே
பலமென்று காட்டிடலாம்
வெட்டலாம் மின்னல் வீழலாம் தாரை
வெள்ளமாய் நீர் கொட்டலாம்
விட்டெலாம் நீங்கும் விதமிவை வாழ்வில்
வந்திடத் தேறுவமோ

Sunday, October 14, 2012

யாரங்கே..!

 நீரினுட் கல்லை எறிந்த பின்னும் - குள
நீரலை தோன்றிடக் காணவில்லை
வாரியிறைத்து மழை பொழிந்தும் -வெள்ளம்
வந்து நிலமோடக் காணவில்லை
போரில் முரசமும் கொட்டியது - எந்தப்
போரிடு வீரனும் காணவில்லை
தேரினில் தெய்வமும் ஏறி நிற்க-  எந்தத்
திக்கிலும் சக்கரம் சுற்றவில்லை

பாரியும் தேடியலைந்து விட்டான் பாவம்
பார்வையில் முல்லைகொடி யுமில்லை
கூரிய அம்புகள் விட்டிருந்தும் - அது
குத்தும் இலக்குகள் ஏதுமில்லை
வேரின் அடியிற் பழுத்த பலா - அதை
வேண்டிக் கவர்ந்திட யாருமில்லை
பாரில் இருள்ஓடிக் காலை வந்தும் - சுடர்
பற்றி யெரிந்திடக் காணவில்லை

ஓடித்திரிந்தே உழைத்தவனும் - வாழ்வில்
ஒன்றுமே செய்யா திருந்தவனும்
ஆடிக் களித்து மகிழ்ந்தவனும் - ஏதும்
ஆகட்டுமென்றே யிருந்தவனும்
கூடிக் கலந்தங்கு வாழ்ந்தவனும்  - எந்த
கூட்டமும் இன்றித் தனித்தவனும்
தேடிடும் ஞானியும் மூடனவன் - இவர்
சேர்ந்து கிடக்குமிப் பூமியிலே

வாடிக்கிடக்குது  தோட்டமொன்று - அங்கு
வண்ண மலர்களோ ஆயிரமாம்
மூடிக் கிடக்குது மேகமொன்று வானம்
முற்றும், மழையின்றிச் சூனியமாம்
ஒடித்திரிந்திவர் வேண்டி நின்றும் அந்த
ஒற்றைக் கண்மட்டும் திறக்கின்றதே
நாடி அருள் செய்வதார் இறையே இங்கு
நாமுள்ளம் வேண்டு மாதி சிவனா

ஓடித்திறக்குது  வாசலொன்று - அங்கு
உள்ளே வருவது நீதியொன்றா
தேடியெடுப்பது ஏடுதானா - அல்ல
தீட்டிய கூருடை வாளினையா
நாடி வருவது நன்மைகளா - அல்ல
நாலு முழக்கொடி காலன்சொத்தா
ஓடித்திரிவது உண்மைகளா - இல்லை
ஒசையற்ற காலச் சக்கரமா?

*******************

Tuesday, October 9, 2012

ஒருநாள் ராஜா !

கோட்டையில் மன்னன்சிங் காசனம் - அதில்
கொற்றவன் நான் சுற்றிப் பாவையர்
பாட்டிசைத்து நடமாடிட - என்
பக்கத்தில் சாமரை வீசுவோர்
தேட்டம் நிறை திறைசேரியில் -முட்ட
தேங்கிக் கிடந்த பொற்காசுகள்
நாட்டில் மக்கள்முன்னே வீசிட - இங்கே
 நாளும் பொழுதும் கும்மாளமே

மஞ்சள் நிறவெயில் மாலையில் - இனி
மாங்கனிச் சாறினை உண்டபின்
கொஞ்சும் மலர்க் காவின் ஊஞ்சலில் -பல
கூடுமிள மங்கை நாணத்தில்
மிஞ்சி நகைசிந்தல் போலவே -ஞான்
மன்னன் வீசிய பொற்காசுகள்
பஞ்சில் மெதுவிளங் காற்றினில் - நிலம்
பட்டெழுந்தஒலி இன்பமே !

(வேறு)

எத்தனை எத்தனை வீரமுடன் அதில்
ஏறி அமர்ந்திருந்தேன்
புத்தம்புதுவொளி வீசிய கண்களில்
பொற்கதிரோன் ஒளிர
முத்தெனக் காணும் மணிச் சரங்கள்மின்னி
மோகனமாய்த் திகழ
சத்தமிட் டாடிடும்  நங்கையர் கள்குதி
தாங்கி நிலம்அதிர

வித்தைகள்போல் மனமேடையில் இன்பத்தின்
வேகம்துடிதுடிக்க
முத்தமிடும் இளங்காற்று வந்தே அங்கு
மெய்தனைத் தொட்டிழைய
நித்தம் அழகிய மாலையிலே இங்கு
நின்றிடும் ஏழைகளின்
சித்தம் மகிழ்ந்திட அள்ளி எறிகின்றேன்
செம் பொன்னிற் காசுகளை

பொத்தெனக் கீழே விழுந்து விடச்சில
சத்தம் கிளுகிளுக்க
 கத்திக் குடிமக்கள் பொத்திப் பிடித்திடக்
கண்டு மன மகிழ்வால்
கொத்து மலர்களின் தோரணங்களூடே
சுந்தர வீரனென
எத்தனை தான்இறு மாப்புடன் கண்டனன்
இன்பக் கனவினிலே

*********************

Wednesday, October 3, 2012

வாழப் பழகிவிடு


நீரின்றி வெம்மையில் காயும்பஞ்சு அந்த
நீலவான் மேல்மிதந் தோடிவரும்
நேரின்றி எண்ணிடும் எந்தநெஞ்சும் என்றும்
நிம்மதி குன்றிட வாடி நிற்கும்
வேரின்றிப் பட்டிட எஞ்சும் மரம் வெட்டி
வீழ்த்துவதாய் மண்ணில் வீழ்ந்துவிடும்
யாரின்றி நீகொள்ளும் இந்த துயர் கண்ணில்
ஆறென நீர் வழிந்தோட வைக்கும்

தேரின்றிக் கோவிலில் நிற்கும் தெய்வம் என்ன
செய்யினும் பேரெழில் கொண்டிடுமோ
கூரின்றிக் வீரனும் கொண்ட வாளால்அவன்
கீர்த்தியுடன் வெற்றி மாளுமன்றோ
பாரின்று வாடிடும் உந்தனுள்ளம் வாழ்க்கைப்
பாதையில் கல்லுகள் காணுவதோ
கூர்எழில் கொண்டிட வேண்டின் வாழ்வில் சில
குற்றங்கள் மன்னித்தல் வேண்டுமன்றோ

மஞ்சள் நிலவோடும் நீல விண்ணும் ஒரு
மா மலை மீதுறை வெண்முகிலும்
கொஞ்சுங் கிளிகளின் ஆரவாரம்  வாசக்
கொத்து மலர்களின் கொள்ளையெழில்
அஞ்சும் சிறு பிள்ளை போல்வெகுளும்  அந்த
ஆற்றங்கரை மான்களின் கூட்டமெல்லாம்
கெஞ்சு மிருவிழி கொள்வதென்ன ஆகா
கோடிகோடி இன்பம் கொள் சுகமே!

தீரம்கொண்டே நீ எழுந்திடடா மனம்
தேறு உறுதியைக் கொண்டிடடா
ஓரம் நடந்திடல் விட்டுக் கண்ணே நீயும்
உண்மை தனை எதிர் கொண்டிடடா
பாரம் இறக்கிவை உள்ளம் இரு நீண்ட
பட்டுச் சிறகுகள் கொண்டதென்றே
தூரம் பறந்திடு துள்ளி யெழு வானில்
துன்பம் மறந்தின்பம் கொண்டுநில்லாய்

சொல்லும் பலகதை சுற்றும் பூமி அது
சொர்க்கம் தடுத்திடும் முள்ளுவேலி
கல்லும் பெருவிஷ தேளரவம்   எங்கும்
காணும் வாழ்வு செல்லும் வீதிவழி
வல்ல மனமெனில் வாழ்ந்துகொள்ளும் இள
வஞ்சியே எண்ணு எந்நாளும் இதை
சொல்லமுடிந்தது யானும் இந்தப் புவி
சொந்தமிலை வாழ்வு செல்லும்வரை

Monday, October 1, 2012

விதி தானோ!

கிட்டும் கவலைகள் வெட்டித்தறி யவை
கட்டிக் கடலிடை எறி நீயும்
பட்டுத் துடியிடர் விட்டுப் போனது
வட்டப் புவியிடை எனநாளும்
கட்டிக் குலவிடு கையில் தினமெடு
காணும் மகிழ்வினை விட்டோடி
எட்டுதிக்கிலும் இருளைக் கண்டனன்
எனநீ வீணே அலையாதே

தட்டிக் கதவினில், கொட்டக் கூரையைப்
பிய்த்துத் தருவது நிஜமல்ல
சுட்டுக்கொள்ளென  வட்டப் பரிதியில்
பட்டுப் பொசுங்குதல் வாழ்வாகும்
கொட்டும் மழையுடன் சட்டச் சடவென
வெட்டும் மின்னலும் இடிபோல
இட்டுத் தடைகளை இடரைச் செய்வது
இந்தப் புவியுடை வாழ்வாகும்

பட்டுத் தெளியெது விட்டுபோனவை
பகலின் வானச் சந்திரனாய்
எட்டும் வகையில என்றேதள்ளிடு
எதிரே கொண்டது இன்பமென
கிட்டும் வாழ்வினில் கட்டுப்பாடுடன்
கொண்டது வரையில் போதுமென
தொட்டுத் துணிவுடன் விட்டுக் கொள்கையில்
துவளா வாழ்வுடன் நடைபோடு

நெட்டைச் சிறகுடை பட்சிக்கூட்டமும்
நீள்விரி வானில் நெடிதோடிக்
கட்டைப் புல்வெளி காட்டுப் புதரெனக்
குட்டை குளங்கள் கடந்தேகி
வெட்டக் குனிந்திடும் விளையுங் கதிருள
வயலைக் கண்டே வாழ்வு பெறும்
முட்டும் வலியுடை முடியா வாழ்விலும்
மட்டும் விதிகளை மீறாதே

நட்டுக்கழனியில் பச்சை நெல்லினை
நாளும் புனலுற   வழிசெய்து
இட்டும் உரமதை இருகண் பார்த்திட
எதுவும்  இடைபுகுந் தழியாது
வெட்டிப் பதரிட வீசுங் காற்றிடை
விதமும்  பிரித்து விற்றாலும்
கட்டிப் பலமனை காசும பணமென
காரில் திரிந்திட வாழ்ந்தானோ

எட்டிப் பறித்திடும் இயல்பைக் கொண்டது
இருளின் வண்ணக் காக்கை யென
தட்டிப் பறித்திடு தன்னலப் பித்தரும்
தம்முடை வாழ்வில் முன்னேறி
சட்டை பையினுள் மொத்தக் காசுடன்
சார்ந்தோர் தம்மை ஏமாற்றி
விட்டுக் காசினை வட்டிக்கென பலர்
வாழும் வாழ்வும் விதிதானே

Sunday, September 30, 2012

கூவாத குயில்!

(மனதில் சிறுகவலை! கவிதை எழுத உள்ளம் மறுக்கிறது. அந்த உள்ளே கூவும் குயிலை நோக்கி)

கூவிக் களித்திடும் கோகிலமே உனைக்
கூட்டி லடைத்தவர் யார்
ஆவியிழந்தவன் போற்துடித்தேன் துயர்
ஆகிடச் செய்தவர் யார்
நாவிலிருக் கும்நற் தேன்மொழியை தினம்
நீயும் தர மகிழ்ந்தேன்
ஈவிரக்கம் அறியார் எவர்தான் உன்னை
இன்னல் செய்தாருளதோ

காவிவரும் இசைத் தென்றல்நிதம் இன்றோ
காணு மினிமை யில்லை
மேவி உலகினில் கேட்குமொலி  இன்று
மிச்சமெதுவு மில்லை
பா விதுவோ நறும் பூமலர்வோ எனப்
பார்த்து களித்திருந்தேன்
நாவினோத மொழி நல்கவில்லை ஏது
நாளில் நடந்ததென்ன?

தூவிக் களித்திடும் பூக்களுன்மேல் மரம்
தூவ மறுத்ததுவோ
தாவித் திரிந்திடும் மந்திகளும் கண்டு
தம்முள் நகைத்தனவோ
ஏவிவிட்டே வரும் அம்பென உள்ளமும்
ஏதும் துயர் பட்டதோ
கேவியழும் வகை திண்மை குலைந்திடக்
கூவலை ஏன்மறந்தாய்

மாவிலிருந் திளங்காலை யிற்கூவிட
மா சுகம் கொண்டிருந்தேன்
பூவிலிருந்த மதுவிது வோவென
புத்தின்பம் கொண்டிருந்தேன்
கூவுமிளங்குரல் வேண்டியே மாமரக்
கூடலை நோக்கிநின்றேன்
காவிப் பெருந்துன்பம் கொண்டனையோ
எனக் காணத் துடிப்பிலுள்ளேன்

நீதியில்லை மலர் நித்தம் மலர்ந்திடும்
நின்றிடப் பார்த்ததில்லை
பாதியிலே வருஞ்சூரியனும் விட்டுப்
பாதை விலகவில்லை
ஏதிளங் காற்றுக்கும் என்னநடப்பினும்
இல்லை யென்றாவதில்லை
வா தினம் கூவுங் குயிலே மறந்தொரு
காலமிருப்ப துண்டோ?

Saturday, September 29, 2012

அறம் சொல்ல வருவீர்!

முல்லைக் கொடிவாழத் தேர்கொடுத்த மன்னா
மீண்டும் பிறந்து வந்தே - இங்கே
கல்லில் கடிதாம் மனங்களுண்டு மென்மை
கற்றுத் தெளிய வைப்பீர் -நல்ல
சொல்லைப் புறந்தள்ளிப் பொய்யுரைத்துப் பல
செய்கையில் வஞ்சங்கொண்டும் - இங்கே
அல்லுற வைத்து ஆள்பவர்க்கோர் என்ன
அன்பென் றுணர்த்திடுவீர்

நெல்வளர் நீர்கொள்ளு நீள்வரம்போங்கியே
நல்வளம் கொள்ளுமென்றே -சிறு
சொல்லில் குடிவாழக் கோமகன் வாழுவன்
கொள்ளென்ற ஔவைப்பாட்டி - இங்கு
நல்ல அறநெறி குன்றியது வந்து
நாடு நலம் பெறவும் - சொல்லில்
அல்லுற மக்கள் ஆளும் மன்னர்தம்மின்
ஆசைக்கு எல்லையிடு

எல்லை மணியடித் தென்மகன் கொன்றனை 
ஏந்தலே என்றழுது - ஒரு
நல்லபசுக் கொண்ட வேதனையை கொண்டு
நீதி வகுத்தவரே -இங்கே
எல்லை யில்லாதுயிர் கொல்வது வேலையென்
றெத்தனை பேர்களுள்ளார் - இவர்
புல்லையுண்ணும் பசு அல்ல மனிதர்கள்
புத்தி உரைத்துவிடும்

நெல்லிக்கனிகொண்டு நீடுவாழவென
நல்வழி கொன்றைவேந்தன் -இவை
சொல்லிய பாட்டியாம் ஔவையிடம் தந்து
செந்தமிழ் வாழவைத்தார் - இந்த
வல்ல அதியமான் கொண்ட தமிழன்பை
வாருக்கள் தீங்கிழைப்போர்  - அவர்
நல்ல தமிழ்மீது அன்புகொள்ளக் காட்டி
நானிலம் மாற்றிடுவோம்

தொல்லை யிழைப்பவர் தொன்மைத் தமிழினைத்
தூய தெங்கள் வளத்தை - அது
இல்லையென தாக்கி முற்று மழித்திடும்
இற்றைப் பொழுதினிலே - வளர்
நெல்லுக் கிடையினில் நீசக் களைகளை
நின்று விளைத்திடுவோர் - தமை
இல்லை என்றாக்குவோம் எம்வழிகாட்டிய
அன்புடைத் தெய்வங்களே

வல்லதிறம் கொண்டீர் வாழ்வின் புன்மைகளை
வானின் றழித்திடுங்கள் - மன
அல்லதெனும் எண்ணம், கொள்கை யுடையோரை
அன்பு வழிக்கெடுங்கள்
சொல்லிக் கொடுங்கள் தெரிந்திடுவர் விட்டுத்
தன்சுகந் தான் பெரிதாய் - உள்ள
கல்லின் மனங்கொண்ட இவ்வுலகோரன்பு
காண ஒளிகொடுங்கள்!