Monday, July 2, 2012

பெண்ணே உன்னை நீ மறந்தாய்


விண்வெளி யாம்பிர பஞ்சமெனும்ஒரு
விந்தைதனைப் படைத்து
துண்டெனச் சூரியக்குஞ்சுகள் செய்ததை
திக்கெங்குமே விதைத்து
வண்ண மென்தூரிகை கொண்டொரு மஞ்சளும்
வார்த்தே சிவந்தநிறம்
கண்ணைக் கவர்எழில் நீலமும் வெள்ளையும்
கற்பனைக்கோலமிட்டு

ஓடி உருண்டிடும் இராட்சதகோளமும்
உருண்டிடும்  பந்துகளும்
ஆடி அதிர்ந்திட அண்டசராசரம்
அத்தனையும் அமைத்து
கூடிஒன்றாகிடக்  குமுறுமோர் தீயெனும்
கோடி அனல்குழம்பும்
தேடியிழுத்திடும் காந்தமென்னலையினில்
சிக்கா துருள வைக்கும்

எண்ணவும் எட்டாத  விண் படைத்தவ்விடம்
வைத்ததும் யாரவரோ?
கண்களும் காணாத சக்தியின் ஆக்கமாம்
காரணிதான் இதுவோ?
மண்ணை யுமாக்கியே மானிடம் செய்தது
மாபெரும் சக்தியெனில்
பெண்ணெனக் கண்டிடும் தோற்றமும் பூமியில்
பெற்றதும் சக்தியதோ!

சக்தியே தோற்றமாம் சக்தியே மாற்றமாம்
சக்தியே நம்முருவம்
சக்தியே ஏற்றமும் சக்தியேவீழ்ச்சியும்
சக்தியேஎம் உலகம்
சக்தியின்உருவமே பெற்றவ ளன்னையாம்
அத்தனை உயிர்களுக்கும்
வித்தெனஆக்கியே விளைந்திட வைத்திந்த
வையக வாழ்வளித்தாள்.


2. பெண்வதை
உயிரைத்தந்தாள் உடலைத்தந்தாள்
உலகைக் காட்டிவிட்டாள்
பெயரைத் தந்தாள் பிறப்பைத் தந்தாள்
பெண்ணென அன்புதந்தாள்
வயிற்றுக்காக உணவும் தந்தாள்
வைரம்கொள்ள வைத்தாள்
உயிரைத் தந்தவள் உடலை வதைத்து
உலகம் சிரிப்பதுஏன்?

சக்தியின் கூறாம் பெண்ணவள் இன்று
சஞ்சலம் கொள்ளுவதேன்
சக்திகள் எல்லாம் சக்தியேஇன்றிச்
செத்து மடிந்திடல் ஏன்
எக்கதியாகும் இப்புவி மாந்தர்
இவளொரு தாயின்றேல்
நிர்க்கதியாய்ஒரு வெற்றிடக் கோளம்
நின்றே சுழலுமன்றோ

பெண்ணே உந்தன் பேரரும்சக்தி
பிறப்பில் இருக்குதம்மா
மண்ணில் இந்த மாபெரும் உண்மை
மறைந்து கிடக்குதம்மா
உன்னை நீயே உணர்ந்து வெகுண்டால்
உலகம்மட்டுமல்ல
விண்ணும்வானும் வியன்தரு அண்டம்
வெடித்துச் சிதறாதோ

அண்ட மனைத்தும் ஆளுவள் சக்தி
அன்னையின் உருவன்றோ
மண்ணில் மானிடம் செய்திடவென்றே
மாதரை வடிவாக்கி
எண்ணிய நல்லோர் இயற்கைவடிவில்
ஈன்றிடும் சக்திதனை
பெண்ணில்உள்ளேவைத்து பேறாய்
பெரிதும் உவந்தளித்தாள்

பெண்ணேயின்றில் பேருலகில்லை
பிறவிகள் ஏதுமில்லை
பெண்ணேயின்றேல் பேச்சும் மூச்சும்
பிழைப்பும் இங்கில்லை
பெண்ணேயின்றில் ஆணும் இல்லை
பெண்ணே அவள்இல்லை
பெண்ணே இன்றில் எதுவுமில்லை
பெரிதோர் காரணியாம்

மாபெரும் சிங்கம்புலியை யானை
மதமெடு விலங்குகளை
யாவரும் காணக் காட்சிநடத்தும்
கட்டிப் போட்டதென
பாவையர் தம்மைபாவிகள் கட்டிப்
பாதகம்செய்வதுண்டு
பூவையர் சக்திபுரிந்து எழுந்தால்
புவியோ தாங்காது

3. சக்தியை வேண்டு!

பெண்ணே உன்னைப் புரிவாய் உன்னில்
பெரிதோர் சக்தியுண்டு
மண்ணில் வெல்லும் மனதும் வல்லமை
மறமும் தீரமுண்டு
உண்மை சத்தியம் உத்தமஎண்ணம்
உயர்வைமனமெடுத்து
கண்முன் வானம் கடந்தோர் சக்தி
கருத்தில் கொண்டுவிடு

உள்ளத்தாலே சக்தியை எண்ணி
ஒருமைப் பட்டுவிடு
உள்ளே உன்னில் மாற்றம் தோன்றும்
ஓங்கும் சக்தியது
தெள்ளத் தெளியும் மனதும் அன்பு
தோன்றும் மகிழ்வூறும்
வெள்ளம் ஆகி வேகம்பெருகி
வியக்கும் வேளைவரும்

பேயின் கையில் உலகம் இன்று
பெண்ணைக் கொல்லுவதும்
தாயைக் இழிந்து தன்னிலை கெட்டுத்
தலை கீழாக்குதடா
மாயதெருவாம் வானக்குழியின்
மாறா சக்தியினை
ஓயாதென்றும் வேண்டிகொள்ளு
உள்ளே வாவென்று

அண்டம் ஆளும் சக்தி உன்னில்
ஆளுமைகொள்ளவர
திண்மை பெருகும் திறனும்கூடும்
தேகம்வலிகொள்ளும்
கண்ணில் ஒளியும் கருத்தில்தெளிவும்
காரியமாற்றுவதில்
விண்ணைப் போன்று வேகம் மாறும்
வியந்து உலகாடும்

உள்ளப் பொறுமை கொண்டவள்சக்தி
ஒருநாள் வெகுண்டெழுந்தால்
வெள்ளம் பெருகி வானம்வெடிக்கும்
வீசும்புயல் காற்று
அள்ளிதின்ன அனலாய்தீயும்
அண்டம்தனிலோடி
சுள்ளித் துகளாய் தூசாய் கரையும்
சுந்தரபூமியிது





கண்ணீர்

நான் என்பதேனிங்கு வந்துது - இந்த
நாளில் ஏன் பூமியைக் கண்டது
தானே எதை யெண்ணி வாடுது - அது
தண்ணீரில் மீனென ஆகுது
வானெண்ணி நீரிடை துள்ளுது - அலை
வாரிக் கரையினில் போடுது
தானோ அலை விட்டுப்போகுது - மீனும்
தண்ணீரை எண்ணித் தவிக்குது

வானரமாய் உள்ளம் ஆகுதோ - அது
வாலைவிட் டாப்பை இழுத்ததோ
கூனென்பதா யுள்ளம் நோகுமோ - அது
கொள்கையில் கொப்புகள் தாவுமோ
தேனெனத் தின்ன இனிக்குமோ - இல்லை
தின்னத் திகட்டிக் கசக்குமோ
ஏன் இன்று எட்டாப்பழமிதோ - வாழ்வு
இப்படித்தானும் புளிக்குமோ

வான்நிறைந்த விண்ணின் மீன்களாம் -அவை
வந்து ஜொலித்திடக் காத்திட
கானக மின்மினி யாவதேன் - அதைக்
கண்ட மனம் ஏங்கலாவதேன்
மானின் விழிகொண்டு காணவா - உளம்
மல்லிகையாய் வாடிப் போகவா
தானெனத் தந்தன ஆடவா - இல்லை
தந்ததை மீண்டும் கொண்டோடுமா

மேன்மையில் என்னைப் படுத்துமோ - இல்லை
மேனியைத் தள்ளி கிடத்துமோ
ஊனுடையுள்ள உணர்வுகள் - என்னை
ஊர்வலம் கொண்டு நடத்துமோ
வானவில்லின் நிறம்கொள்ளுமோ - அன்றி
வாசலில் குப்புற வீழ்த்துமோ
ஆனவிதி சொல்வதென்னடா - அந்த
ஆனை மிதிக்குமோர் புல்லடா

வீணென்ப தெல்லை கடக்குது - அது
வீழ்த்திட மண்ணிடை தேயுது
காணெனக் கூறிக் கலங்குது - அதன்
காட்சியெல்லாம் கண் மறைக்குது
பெண்ணெனின் பேயும் இரங்குமோ - விலை
பேசிப் பொய்தன்னையும் விற்குமோ
பூணும் பொன்னாடையும் போகட்டும் - மீண்டும்
புன்னகை யைஇதழ் காணட்டும்

தமிழ் வாழ்த்து

சிங்கார வண்ணத் திகழமுதே  எங்கள்
 சிந்தை தனுக்கின்பம் தாரமுதே
சங்காய் மிளிர் வெண்மைத் தூய்மையதே- நினைச்
 சார்ந்தோர் கவித்துவம் மேலெழவே
எங்கும் கவிமணம் வாசமெழ - வந்த
 எங்களின் இன்பத் தமிழ் அமுதே
தொங்கும் மணிச்சுடர் தீபமென்றாய் நீயும்
  திக்கெங்கும் பொன்னொளி காட்டிநிற்க

மங்காப் புகழ் உனை மாவுலகில் - என்றும்
 மாறாக் கதிரென ஆக்கிவைக்கும்
செங்காய் பழுத்துக் கனிவதன்ன - கவி
  சொல்வார் மனங்கள் கனிந்திருக்க
தங்காய் என்றும்நல்ல பாவலர்கள் - நின
  தாக்கிப் பெரும் மணி மாகவிஞர்
பொங்காய் எனப் பல பாப் புனைந்து - என்றும்
 பாலொடுதேனினி பாகு தர

மங்கை மடிகொண்ட மாதேவனின் -முடி
   மேலிருக்கும் பொன்னை நேர்நிலவை
எங்கே தொடுவே னென்றே உயர்ந்த  - மலை
  என்றே உயர்ந்திட வாழ்த்து கின்றோம்
கங்கை குளித்த குளிரு ணர்வும்   - அலை
   கொண்டே தெளிக்கும் கடல்விரிவும்
தெங்கின் குணத்தொடு கொண்டதாகம்  - தனை
  தீர்க்கும் கவிவண்ணத் தாய் நீயன்றோ

உயிரில்லா மனிதம்??

ஆடுமுலகில் அரனே ஏனோ
அரவம் நீ  படைத்தாய்
தேடும் அரவம் தீண்டத் தீங்காய்
தேகந்தான் படைத்தாய்
பாடும் குயிலும் படைத்தே ஏனோ
பருந்தும் நீசெய்தாய்
நாடும் வாழ்வில் நலிவும் கொள்ளப்
பொலிவும்நேர் வைத்தாய்

கூடும்வாழ்வும் கொண்டோர் நாட்டில்
குடிகள் பலசெய்தாய்
சூடும் குளிரும் உள்ளே வைத்தாய்
சுட்டும் அழி என்றாய்
வீடும் மனையும்இல்லா வாழும்
விளைவும் தந்தவனே
கேடும் துன்பம் செய்யச் சிலரில்
கொல்லும் குணமீந்தாய்

காடும் விலங்கும் படைத்தாய் போலக்
காணும் மாந்தரையும்
ஓடும் மானின் அழகும் துள்ளல்
உள்ளோர் பலர்செய்து
நாடும் இச்சைகொண்டே கொல்ல
நரிகள் கொடுஞ்சிங்கம்
சாடும் வகையில் சிலரைச் செய்தே
சாரும் துயரீந்தாய்

மலரும் பூவின் வாசம் தென்றல்
மழையின் தூறலென
புலரும் பொழுதும் பறவை, கீதம்
பகலும் வானிலெழ
விலகும் அனலும் விரையும் இருளும்
விண்ணில் நிலவென்றே
பலதும்செய்தாய் பாவத் தோற்றம்
மனிதம் ஏன் செய்தாய்?

உலகை மட்டும் படைத்தாலென்ன
உள்ளம் மகிழாதா
கலகம்காணாக் கண்கள் தூக்கம்
கொள்ளப் பெரும் பாடா
நலமொன்றாம் நல்லுலகில் பாவை
நளினச்சிலையாக
நரம்பும் சூடும் உயிரும் இல்லா
நரனைச் செய்தாலென்

ஆளும் வகையில்  அறமும் இன்பம்
அதிகம் பெருத்தாலும்
வாழும் இயற்கைச் சூழல் கொண்டோர்
வனப்பில் சிறந்தாலே
தாழும் சொர்க்கம், தகமைகூடி
தரணிக் கெழில் வண்ணம்
மீழும் உயர்வைக்கொள்ளுமென்றே
மேனி படைத்தாய் நீ

பட்டுப் பூவும் பனிநீர் சிந்தப்
படரும் இளங் காற்றும்
தொட்டுச் செல்லச் செய்தாய்நீயே
தோன்றும் புயலென்று
வெட்டிக் கொலையும்  வீரிட்டலற
வேறொர் இனம்செய்து
குட்டுப் பட்டே கதறும் பாவக்
குணமும் செய்தாயே

பாடும் துன்பப் பட்டே அழியப்
பாரில்  ஓரினமாய்
பேடும் பிள்ளை பெரிதோர் இல்லம்
பேசும் தமிழ் என்றே
கோடும் எல்லை இல்லாக் கொலைகள்
கொள்ளும் வகை செய்தாய்
ஓடும் குருதி உடலும் சாகும்
உணர்வும் இனிதாமோ

Sunday, June 17, 2012

இல்லாத ஒன்று


பூவிருக்கும் தென்றல்வரும் புன்னகைத்து பூவிரியும்
போது மலராசை கொள்ளும் தென்றல் நில்லாது
தாவிவரும் காற்றிணையத் தன்சுகந்தம் தந்தும் அதை
தானெடுத்து ஓடும் பூவைத் தென்றல் எண்ணாது
மேவிவரும் முகில் அணைய முழுநிலவுந் தனையிழக்கும்
மேகம் கணம் நிற்பதிலை மோகம்கொள்ளாது
நாவில் எழும்சொற்களுக்கு  நல்ல சுவை கொண்டுதரும்
நோக்கமுண்டு உள்மனதில் நெறியிருக்காது

கனி பழுக்கும் காய்மறையும் காக்கையுடன் குருவிகளும்
கண்டு உண்ணும் உண்டபின்பு அதிலிருக்காது
ஏனிதயம் கொண்ட அன்பு என்றும்,என்றும் நிலைத்திருக்கும்
எண்ணங் கொண்டு வாழ்வமைக்க இடமிருக்காது
வானிருக்கும் நீலநிறம் வாழும்வரை தான்தெரியும்
விண்ணடைய வெட்டவெளி நிறமிருக்காது
தானெடுக்கும் கரும்பினிலும் தன்மைஅடிக் கரும்பினிலே
தேனினிக்கும் மேல் நுனியில் சுவையிருக்காது

ஆவிவரும் நீர்கொதிக்க ஆனந்தமோ துள்ளும்புனல்
அத்தனையும் விதிமுடிக்கும் மீதியிராது
கோவிலிலே சிலையிருக்கக் கொள்கைஇறை நம்பிமனம்
கொண்டுஅதைக் காண்பவர்க்குக் கல்லிருக்காது
பாவிமன எண்ணமெலாம் பட்ட வாழ்வின் துன்பமதைப்
பங்குகொள்ள யாருமின்றிப் பயன் இருக்காது
தேவியவள் சக்தியெனத் தேகமதில் கூடிவிட்டால்
தோன்றும் துயர்தானும் கணம் நிலைத்திருக்காது

புல்நுனியில் தூங்கும்பனி பச்சைஇலை குளிர்ந்திருக்கப்
பட்டு இணைந் தங்கிருக்கும் பகலும் விடாது
கால் நடக்கும் பாதையிலே கவனம் வைத்தால் முள்ளிருந்தும்
கண்டபடி குத்தி நிலை கடுகடுக்காது
மேல் நிலையில் பொன்விளையும் மனங்களிலே எதுஇருக்கும்
மென்மை எனும் நிழலிருக்கும் வன்மைகொள்ளாது
போலிருக்கும் பார்வையிலே பட்டிருக்க எண்ணமுள்ளே
பூத்திருக்கும் உண்மை அதில் பொலிந்திருக்காது


************************

Sunday, June 10, 2012

கவிதை போதும்


கவிதை எண்ணக் கசக்குதே யடிகண்ணே - இந்த
கணம் நிறுத்தடி கலங்குது மனம் பெண்ணே
அவிந் துடைந்துளம் வலியெடுத்தது புண்ணே - மனம்
ஆற்றிட வென எது இருக்கடி கண்ணே
குவிஇதழிடை மதுவடித்திடும் பூவே - நானும்
குடித்ததில் மதி மயங்கிட வழி செய்யேன்
செவி இனித்திடச் சொலும் பதமினிப் போதும் - இந்த
சிறு மதிமயங் கிடகிடக்கணும் நாளும்

புதிதொரு கிண்ண மதுவெடுத்தடி சேர்ந்தே - நீயும்
புதுச்சுவை கண்டு எனைமயக்கடி தேர்ந்தே
விதி அறுக்குது துடிதுடிக்குது மெய்யே - பட்ட
விதம் சுறுக்கென இதயங் குத்திடும் முள்ளே
நதி நடக்கிற விதம் நடக்கிற அழகே - நீயும்
நடமிடும்மயில் என விரிக்கணும் மெய்யே
குதிகுதிக்கிற அழகெடுத்திடு பெண்ணே - அந்த
குளுகுளுப்பிலே துயர்பறக்கட்டும் கண்ணே

மணிஅடித்திட கதவிரண்டுமே விண்ணில் - அவை
மளமளவென திறந்திருக் கட்டும் பெண்ணே
கணி சகசய எனக் கழித்தவன் கணக்கும் - தீர
கதைமுடித்தெனை வரசொல்லும் வரை என்னே
துணியென உடல் தொலையென விட ஏகும் - வரை
துணையிருந் தெனை தொடு மறக்கணும் கண்ணே
அணி அசை அடி தளை யெனும் சுகமெல்லாம் உன்
அசைவுடலிடை எழும் அது இனிப் போதும்

Friday, June 8, 2012

திருமண வாழ்த்து


அழகான மலர்காலை கதிர்காண மலரும்வகை
அன்பினொளி கண்டு மனம் பூக்கும்
பழகாதபோதும் ஒருதுணை நாடி ஈருயிர்கள்
பாசமுடன் வாழ்வில் ஒன்றாகும்
இளகாத கடிதென்ற  இதயமும் இருவிழிகள்
இணையவே மலர்வண்டு ஆகும்
எழும்ஆசை பெரிதாகி இருகைகள் பலமாக
இணைந்தின்ப ஒளிவாழ்வு காணும்

வளமான வாழ்வெண்ணி வதுவையில் ஒருசேரும்
வகையாம் இம்மணநாளில் இன்று
பழமோ நற்சுவையோடு பிரியாத வகைபோலும்
பிறிதின்றி ஒன்றாகி வாழ்வீர்!
வளமான வாழ்வுபெற விளைகின்ற இருபறவை
வெளிவானில் ஒருசேரப் பறந்தே
இளம்வாழ்வில்  எழும்கீத இசைபாடும் மகிழ்வாக
என்றென்றும் இன்பங்கள் காண்க

தழையாகக் கொடியாக தழுவுமொரு மரமாக
துளைதென்றல் நுழையாத இணைவும்
மழைவானில் நீர்சொரிய மண்மீது  நதியோடி
மாகடலில் இணைகின்ற விதமும்
விளைவான ஒருநாளும் ஒருபோதும் குறையாது
வேண்டுவரை இன்பங்கள் பொலிய
வளைவானம் போலகன்ற வாழ்வோடும் உயர்வோடும்
வாழ்ந்திடுக, வாழ்கநீர், வாழ்வீர்

நிலையான வாழ்விலொரு பிடிவாதம் சினம் எனது
நலம் மட்டும் பெரிதென்ற எண்ணம்
தலைகொண்டகனம் வேறுதவறான சந்தேகம்
தவிடு பொடியாக்கி விடும் நெஞ்சம்
குலையாது திடமோடு கோவிலென குடும்பமது
குடிவாழ்வு பெரிதென்று எண்ணி
வலைவீசும் விதிகண்டு வழுகிவிடும் கயல்போல
வரும் இடர்கள் வென்றுநீர் வாழ்வீர்

விலையற்ற பொருளாக விட்டுத்தரும் மனப்பாங்கு
வேண்டுமதைக் கைக்கொண்டு வாழ்க
கலையோடு கொஞ்சுந் தமிழ் கதைகூறும் மழலைகளைக்
களிப்போடு பெற்று நிறைவாக
குலையோடு கொத்தாக கனி தூங்கும் மாஞ்சோலை
கொள்ளும் பல குருவிகளும்போலே
நிலையோடு உறவுகளும் நிதம்கூடி மகிழ்வுபெற
நிறைவான வாழ்த்துகளைத் தந்தோம்

வளமோங்க வடிவோங்க வார்த்தைகளில் அன்போங்க
வாசமுறும் மலர்கொண்ட சோலை
உளமோங்க எழிவண்ண உலவுங்காற் றெனஇன்ப
முடன்காதல் என்றும் குறைவின்றி
அளவற்ற நிறைசெல்வம் அகங்காண மழலைகளும்
அமுதமொழி நிறையன்பு வாழ்வு
சுழல்பூமிதனில் ஓங்க துணையோடு குறைவற்ற
தொகை நீண்ட ஆண்டுகள் வாழ்க

Tuesday, May 29, 2012

தேர் கொண்டு வந்தான் தேவன்


தேரில் ஏறென்றான் தேவன் - ஏதும்
தெரியாத வன்போலும் திரும்பிநான் நின்றேன்
வாரியே பூக்கொண்டு வீசி - நீயும்
வாழ்ந்தது போதும்வா வந்தேறு என்றான்
பாரங்கு என்றனன் வானில் - அங்கு
பார்த்தேன்ஓர் வெள்ளியோ பொன்னாக மின்ன
ஏதது தாரகை என்றேன் - ஆகா
இன்பமாம் மேலுல கிதுவென்று சொன்னான்

நீரூறும் கண்களைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டாயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
வேடிக்கை செய்துமே விளையாடி நின்றான்
நோயுறு தேகமும் கொண்டு - இங்கு
நிற்கவும் ஆகாது நொந்தனே என்றால்
காயமே பொய்யடா என்று - கையும்
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை காணாய்
ஊரடா முற்றிலும் அன்பே - கொண்டு
உள்ளது காணென்று உற்றதைக் கூறும்
போதிலென் னெதிர் நின்ற தேவன் - என்னைப்
பின்னும் நலிந்திடப் பண்ணியே துன்பம்
ஈரமென் றில்லாத உள்ளம் -கொண்டு
இம்சித்த வேதனை எப்படிச் சொல்வேன்

பாயில் கிடஎன்று  தள்ளி  - எனைப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தந்ததை கொண்டிட ஏனிந்த வம்போ
வாயில் சினம்கொண்டு சொன்னேன் அவன்
வாழ்ந்த உன் மேனியில் காதல்கொண்டாயோ
பேயிலும் இழிவான  பிறவி - இன்னும்
பேராசை கொண்டிடப் போனதேன் புத்தி

நாளொன்றில் மானிடா செத்தால் - பிணம்
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - மேனி
தீயில் எறிந்திடச் சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினை தானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதை வானம்நீ வந்தால் - அங்கு
தீயாக மாறியே திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமாய் அறியேன்
கொல்வது என்றுதான் வந்தான் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தென்னென்று கொண்டாய்
இல்லையாம் இன்னொரு நரகம் - காண்
இப்புவி தானுந்தன் சொல்லினில் நகரம்

கொள்வது எல்லாமும் துன்பம் - வானில்
கொட்டும் மழைகாணும் மின்னல்போல் இன்பம்
அள்ளிவீ சும்புயற் காற்று - அது
ஆக்கும் துயர்விடப் பெரிதாமுன் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடு நீவாழும் -இந்த
உற்றுழல் வாழ்வினை இன்பமென்றாயோ

நில் இன்னும் ஓர்சொற்ப காலம் - வாழ
நெஞ்சினில் ஆசையும் கொண்டனன் என்றேன்
நல்லதென் கூற்றினைக் கேளாய் -பின்பு
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
நல்லதோர் ஞாலம் செய்தீந்தேன் - அதை
நாளும் நரகமென் றாக்கிக் களித்தீர்
பொல்லாத புழுவென்று சேற்றில் - வாழும்
புத்தியுடைத்தனை போவென்று விட்டான்

என் வாழ்க்கைப் பாதையில் சில அடிகள்

*********
வானத்தில்மேடை யிட்டு வடிவத்தில் பூவிரித்து
மோனத்தில் ஓம் என்னும் மூலத்து ஓசையிட்டு
ஞானத்தைப் படைத்தவளே நானிங்கு சொல்வதுண்மை
தேனைத் துளிகளிட்டு தீம்பாவைத் தந்திடுவாய்
********************
பிறந்தேன் வளர்ந்தே னொரு பேதைக்கு மகனானேன்
அறந்தேன் எனக்கொண்டு  அழகுற என்தாய் மடியில்
திறந்தே விழிகண்டேன் திருவூராம் பூங்கொடியின்
நிறங்கொள் ஓரூரில் நிமிர்ந்து நடைகொண்டேன்

வளர்ந்தேன் வகையென்ன வளஞ்செழித்த ஊரழகில்
குளம், தேர் கோவில் சிறு குடிசை மலர்க்காடென்று
உளம்தேனுண்ணத் தனி ஊரெல்லாம் சுற்றிடுவேன்
களம்போர் எனக் காட்சி கருமைகொண்டெழ முன்னே

மலரும் மலர்த்தேனும் மயக்குமெழில் வாவியுடன்
பலரும் வழிபட்டே பயனடையும் ஆலயமாம்
குலவுமினி கல்வளைப் பிள்ளையார்கோவிலதை
நிலவுமென் வாழ்நாளில் நெஞ்சம் மறக்காது

ஆனைமுகத் தானை அன்னையவள் துதித்திருக்க
தேனைத் தேடுமொரு சில்வண்டாய் கோவிலதை
நானே சுற்றிடுவேன் நறுந்தேன் உடை பூவும்
வான்தொட்ட வரைவிரியும் வயல்வெளியும் கண்டிருப்பேன்

உச்சிவெயில் மின்ன உள்ளதொரு காட்சியெனும்
பச்சைவயல் பரப்பும் பறந்துசெலும் குருவிகளும்
இச்சை உணர்வெடுத்த ஏகாந்தச் சூழ்நிலையும்
அச்சோ அச்சச்சோ அதுமீண்டும் வாராதோ

கோவில் மணியடிக்க கோபுரத்தே தூங்குமணி
தாவிப் பிடித்தெம்பி தரைவிட்டுத் தொங்கிடவே
மேவி ஊர்முழுதும்  மெல்லப் பரவிடுமாம்
தேவஇசையும் ‘டாண்’  தேனோசை சேர்ந்தெழுமே

பூசை முடிந்தவுடன் போகும் வழிதிரும்ப
ஆசையுடன் நெல்வயலில் ஆடி அயல் திரிந்து
ஓசையெழப் பாடி ஓங்குகதிர் தலைநீவி
நேசப்பறவைகளின் நெஞ்சினித்த கூவல்களால்

காது இனித்திருக்கக் கடும் வெயிலும் திசைமாறி
போதுமெனத் தந்த பொல்லாப்பு நிறுத்துகையில்
ஏதுகவலை யவ்விளம் பிஞ்சுக்  கால்களினால்
ஊதுவிசை காற்றுக் குயர்வரம்பி லோடிடுவோம்

விரிந்தகுளம் வயலில் வீறெழுந்த தாமரைகள்
எரிந்தநிலை தீபமென இயல்பாக மலர்ந்திருக்க
சரிந்தவயற் கதிருள் சட்டென்றோர் தவளையது
இருந்தேஒரு தாவில் எம்பிக் காலூன்றி

துள்ளிநீர்க் குளம்வீழ தோன்றுமலைஅற்புதமாம்
வெள்ளி யலைவிரிய வட்டநிரை யெனமலர்ந்து
தள்ளியது தாமரையைத் தண்குமுதம் அல்லியென
உள்ள முவகையுற ஊர்வசியோ ரம்பையென

ஆடும்நீர்மேடை அழகுமலர் நாட்டியங்கள்
பாடும்சிறு குருவி பண்ணிசைக்கும் ஒருவண்டு
போடும்தவளை இடை புதுத்தாளம் பொன்வயலின்
கூடும் கதிர்நாணிக் கிளுகிளுக்கும் எழில்அழகே


செல்லுகின்ற நாட்களிடை சிலநாள் கதிரறுத்து
இல்லைப் பசுமையென இருக்கின்ற வயல் கண்டு
பொல்லுக் கிழவியுடை பொக்குவாய்ப் பல்லழகாய்
நெற்பயிர்கள் அற்றநிலை நேர்காண நெஞ்சழியும்

கொல்லும் வெயிலிடையும் குடுகுடென நடந்தோடிப்
பொல்லாக் காட்டிடையே போய்மகிழ்வு தேடிடுவோம்
நல்ல தமிழ்கேட்கவென நாவிலினி குளிர் கனியை
சொல்லால் சுடவைத்த சுந்தரனைப் போலேறி

நாவல் மரக்கிளையில் நல்லிணைந்து கீழுறைவோர்
ஆவலெழ வைத்து அருஞ் சுவையும் கண்டிடுவோம்
தாவல் முடிந்தில்லம் தகிப்பில் படுத்திருந்தால்
ஏவல்பேய் பற்றியதாய் என்அம்மை சுற்றிவைப்பாள்

ஈச்சம் காய் பழமாய்ந்து இனிப்பாய் உவர்ப்பென்றும்
கூச்சலிட்டுத் தின்றே குதித்தாடி மகிழ்வதெலாம்
காய்ச்சலெனக் காயுதே கரம்மாறி நிலமயலோன்
ஆட்சியிலே உள்ளதய்யா அன்னியமாய்ப் போய் விடுமோ?

முயலோட முயலின்பின் நானோடி கல்லிடித்து
சுயமாய் விழுந்தெழுந்து  சொரிகின்ற செந்நிறநீர்
பயமின்றி மணல் பற்றிப்  பட்டஇடம் அப்பிவிட்டு
தயங்கி நடை நொண்டி தாவிக்கால் வைத்தேக

குரங்கும் தாவிமரக் கொப்பிடையே தொங்கியெமை
இரங்கும் நிலையாகி இல்லையொரு வாலிவர்க்கு
தரங்கெட்ட இனமோ தடக்கிமண் வீழ்வரென
மரந் தாவும் மன்னவர்கள் மதமெடுத்துக் கூச்சலிட

நடந்தும் திரிந்தோடி நாள்போய் வளர்ந்தவனாய்
விடலை வயதாகி விருப்புடனே கல்விதனை
கடமை உயிர்வாழ்வுக் கானதென்று எண்ணுவதாய்
கடந்த இளவயதில் கற்றவைகள் அற்புதமாம்

இளம்பருவம் ஏடுகளில் ஏற்றறிவு கொள்வதெனில்
களம்நூ லகமென்றே கற்றிடவென் றேகிடுவோம்
அளவையுடன் கணிதமென அவர்கொள்ள என்மனது
நளவெண்பா குறுந்தொகையும் நற்றிணையும் நாடியது

கூட்டலும் கழித்தல்களும் கோணங்களும் பௌதிகமும்
நாட்டின் அரசியலும் நண்பரினம் கற்றிருக்க
பாட்டும் கவிதைகளும் பலநிறைந்த இலக்கியத்தின்
காட்சிக் கனவுகளில் கற்பனையில் நானிருந்தேன்

தமிழே தருவாயா?


தமிழோடு விளையாடித் தரநூறு கவிபாடித்
தவழ்கின்ற பெருவாழ்வு வேண்டும்
இமைமீது விழிகொண்ட உறவாகக் கணமேனும்
உனையென்றும் பிரியாமை வேண்டும்
கமழ்வாச மினிதான கனிகாணுந் தருவாக
கனம்கொண்டு இவன்சோலை யெங்கும்
திகழின்பத் தமிழான தென்றும்நற்பொலிவாகி
தினமொன்று கனிந்தாக வேண்டும்

சுவையான தெனஅன்னை தமிழோடு பயில்கின்ற
சுகமான உணர்வென்றும் வேண்டும்
அவைகூற அவையேறின் அழகென்பதென யாரும்
அதுகண்டு புகழ்கூற வேண்டும்
எவைமீதி இருந்தாலும் எதுமீறி நடந்தாலும்
உனதன்பு அதைமேவ வேண்டும்
இவைபோதும் எனவல்ல இகமீது தமிழ்போதை
எழுந்தின்ப நதிபாய வேண்டும்

குவை தங்கம் கொடிஆட்சி, குடிவாழும் ஊரென்று
எது தந்தும் பரிசாகக் கேட்டும்
அவையொன்று நிகரில்லை அரசாளத் தமிழேடும்
அதிகாரம் அதில் உண்டுபோதும்
குவிகின்ற மலர்மீது கொள்கின்ற துயில்போலும்
கலையன்னை மடிமீது சாயும்
கவினின்பக் கணம்போதும் கருதேனே பிறிதேதும்
காணென்று மனம்கூற வேண்டும்

ரவிவானில் வரும்போதி லெழுவான ஒளியாக
என்றென்றும் பிரகாசம் வேண்டும்
இரவில்வந்த நிலவாலே எழுகின்ற மனபோதை
இதனோடு இழைந்தோட வேண்டும்
சரமாலை யணியாகத் தமிழன்னை புகழேந்தி
தருகின்ற கவியாவும் என்றும்
வரமான தரவேண்டும் வளர்வொன்று தானின்றி
வழுவாத நிலைகொள்ள வேண்டும்

Friday, May 25, 2012

தமிழும் என் கவியும்




கவி என்ற தேரேறித் தமிழென்னும் உலகோடி
களிகாண மனமாகினேன்
செவி கொள்ள இனிதாகச் சிறிதேனும் பதமாக
செந்தமிழ் கவிபாடுவேன்
புவிவாழும் தமிழன்னை பொழுதேனும் மனம்கோணிப்
போகாமல் மொழி போற்றுவேன்
குவி வண்ண மலர்கொண்டு திருஅன்னை அடிபோற்றித்
தினம்தினம் துதி பாடுவேன்

கவிஎன்னும் சுவைவீணை உணர்வென்ற இழைதொட்டுக்
களிகொள்ள இசைமீட்டுவேன்
புவிமீது தமிழன்னை இருபாதம் அடிமீதில்
போயெந்தன் தலை சாத்தினேன்
குவி வானம் பொழிகின்ற மழைபோல இவன்நானும்
குளிர்கொண்ட கவி கொட்டுவேன்
செவிதானும் இனிதென்று செந்தமிழ் அன்னையவள்
சிலிர்த்தின்ப உணர்வேற்றுவேன்

பழம்தேனும்,வெல்லமுடன் பாகும் கலந்து ஒரு
பாலிட்ட மதுரசுவையில்
விழைந்தோர் கவிசெய்து வீரமகள் தேவியவள்
வேண்டுவரை ஊட்டி நிற்பேன்
குழைந்தமுது உண்டவளை கொண்டைமலர்சூட்டி
குமுத மலர்க் கால்களுக்கு
தளை சந்தமணி சிலம்பு தான்கொண்டுஎழில்கூட்டி
சாமரையும் வீசிநிற்பேன்

துள்ளியவள் ஓடிவரச் சுந்தரப் பாட்டினிலே
சொல்லாலே தாளமிட்டுத்
தெள்ளிசை தென்றலென தேகம்வருடியவள்
தாகமதைத் தீர்த்து வைப்பேன்
புள்ளினம் இசைபாடப் பூவண்டு சுதிசேர்க்கப்
பொன்மாலை இளவேனிலில்
அள்ளி ஓராயிரம் அழகான கவிசொல்லி
அழகுத்தமிழ் மகிழ்வாக்குவேன்

Thursday, May 17, 2012

முதிர்ந்தேன்!


படித்தேன் குடித்தேன் பழமாய்  சுவைத்தேன்
பழகும் விதத்தில் பூவாய்தேன்
வடித்தேன் அளித்தேன் வகையில் இன்பம்
வளர்த்தேன் அன்பில் வளைந்திட்டேன்
அடித்தேன் உடைத்தேன் அறமும் உறவும்
எனத்தான் இல்லா இளமைத்தேன்

குடித்தேன் கவலைகொள்ளா தேனோ 
குறும்பில் வாழ்வை குலைத்தேன், ஏன்

எடுத்தேன் தமிழை இனித்தேன் சொரியும்
எனத்தான் எண்ணி அளித்தேன் சொல்
விடுத்தேன் எதிலும் விளைத்தேன் அன்பை

விரித்தேன் நாளும் வழங்கித்தான்
கெடுத்தே கொள்ளா இயல்பென் கவிதை
குறைத்தேன் எனவும் குறைதோன்றா
கொடுப்பேன் கிடப்பேன் குலவும்தமிழில்
கடப்பேன் துயரம் கனியும்தேன்

இடம்தேன் தமிழின் எழில் தேன்காவென்
றுணர்ந்தேன் எதைநான் மலர்வித்தேன்
விடம்தேன் என்று வெளிவைத்தேனா
விருந்தேன் விரும்பா விளைவும் ஏன்
குடம்தேன்கொட்டக் குழவிக் கொடுக்காய்
குடைந்தே னாயின் குறைவேண்டேன்
கடந்தேன் கனலும் கடலும் குளித்தேன்
கவிதை மழையும் காணுந்தேன்


படர்ந்தேன் ஆயின் பந்தல்மீது
பிணைந்தேன் எனவே கொடியாவேன்
அடர்ந்தே மாவின் அழிகுருவிச்சை
ஆகேன் அகந்தை அகம்கொள்ளேன்
நடந்தேன் எனிலும் நல்லோர் பாதை
நடப்பேன் அன்பே நிலைகொண்டேன்
புடந்தான் இட்டோர் பொன்னாவேன் மண்
போகா இருப்பேன் பிறிதாகேன்
************


    Reply     Reply to author      Forward  

நிலவு சுட்டதோ?

நீதந்த நிலவென்ன சுடுகின்றதே - ஓ
 நீலத்து வான்மதியே - என்
நிழலென்ன தரைமீது விழவில்லையே -அது
 நெஞ்சத்தில் ஓர் சுமையே
பூ தந்த மணமென்ன எரிகின்றதே -ஒரு
  பொல்லாத வாசம் கொண்டே -இந்த
பூமியும் வானமும் சுழல்கின்றதே ஆகா
  பொழுதோபார் இருள்கின்றதே

நா தந்த பேச்சென்ன நடுவீட்டிலே ஒரு
  நாகம் போல் ஆடுவதோ
நல்லோரின் கைமீது பட்டிடவோ அதை
  நன்றென்றும் யார்சொன்னதோ
ஏதிந்த பாராமை என் இறைவா இன்னும்
  எத்தனை தான் உள்ளதோ
தீதென்ற எண்ணமோர் தன்மைகொண்டே -இதைத்
  தீர் என்று முன்னிற்குதோ

தீகொண்ட திக்கிலே தென்றல் எழின் அது
  தேகத்தைச் சுட்டிடுமோ
திரைகொண்ட ஆழியைத் தொட்டேகிடின் அது
 தண்மைகொண் டாகிடுமோ
மா தந்த காயும் கனியாகுமோ - என்ன
 மந்திரம் கூறுவதோ
மலரின்ம ணம்வீச யந்திரத்தை கொண்டு
   புதுவாசம் தூவுவதோ

தீவெந்த காட்டிடைத் தென்றல்தனும் ஏனோ
  தீஊத வீசுவதேன்
தேன் தமிழ் பேசிடும் சொற் கனியை கைகள்
  தீண்டாது காய்கொள்வதேன்
ஆவொன்று நின்றிடப் போவதில்லை கன்று
  அம்மா என்றே யழுதால்
போயன்பு கொண்டிடப் பார்ப்பதுண்டோ அல்ல
  பின்னின்று கொள்வதுண்டோ

Wednesday, May 16, 2012

யார் பக்கம் குற்றம்?

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள் - ஏன்
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் வண்ணங்கள்
உள்ளம்மீது இல்லைகுற்றம்
எழுதும்  வார்த்தைகள் அவை
கொள்ளும் உயிரைத் குறையில் என்றால்
குற்றம் யார் கையில்?

காலச் சக்கரம் உருள்கிறது சில
காட்சிகள் மாறுவது - அந்த
நீலத்து வானிடை மேகங்களாய் அவை
நீங்கிட ஒளிதெரிது
கோலத்தைப் பார்த்தேன் தோற்றியது வான்
கதிரொளி காணுமென்று - இந்த
ஞாலத்தின் ஓட்டத்தில் நடப்பது எதுவென
நாளைக்குப் புரியும்விடு

பாலத்தைப் போடுவதாகவும் உறவினுள்
பரவசம் தெரிகிறது - மனம்
ஆலத்தைக் கொண்டவர் ஆக்கினைசெய்வது
அவசிய மற்ற தொன்று
சீலத்தை ஞாலமும் கொண்டிட பின்னொரு
சோதியு மெழுந்துகொள்ளும் - அட
ஏலத்தில் கொள்கையை விட்டவர்பாடினி
எப்படியாகும் விடு

உள்ளத்தை ஆண்டவன் உண்மை விளக்கிடும்
ஓர்கணம் தெரிகிறது-  இன்ப
வெள்ளத்தைப் போலொரு வேகம் புறப்படும்
வேலைகள் நடக்கிறது
வள்ளமும் போலொன்று வாழுயிர் காத்திட
வந்தெமை சுமந்திடுமோ - அதை
தள்ளியும்  கரை வந்து சேர்வதெப்போ மனம்
தவிப்பது தெரிகிறதே

நல்லதை எண்ணிடு நடப்பதெலாமினி
நல்ல தென்றாகிவிடும் - இனி
செல்வது நேர் நீ சென்றிடு பாதைகள்
சொர்க்கமென் றாகிவிடும்
அல்லது போய் விட ஆதவனும் பார்
அடிவான் கிழக்கிலெழும் - இனி
வல்லதென எம் வாழ்வுகிடைத்தொரு
வானம் கையில்வரும்

சின்ன ஆசை


பிறந்த பின்பு இருந்த வாழ்வு பெரிய கனவது - இன்று
மறந்து போன தெனிலும் காண மனது விழையுது
கறந்த பாலைக் காய்ச்சி வெல்லம் கலந்த பின்பது - ஆவின்
பிறந்த மடியில் ஏறு என்கில் போகுமோ அது?

வளர்ந்த வாழ்வில் வகைகள் நூறு வந்து போகுது - மனது
குழந்தை கண்ட உலகம்மாறிக் கொள்ள விரும்புது
இழந்த நாட்கள் திரும்பக் காண இதயம் ஏங்குது - நல்ல
பழம் கனிந்து வீழ்ந்த பின்பு கிளைக்கு ஏங்குது

எழுந்து மீண்டும் பறக்க விரும்பும் இளைத்த பறவையாய் -இன்று
ஒதுங்கி வாழும்போதும் வந்த உள்ளம் தீண்டுது
அழுங்கு கொண்ட பிடியென்றாக அற்றை நாளதின் -எண்ணம்
விழுங்கி யெங்கள் உணர்வில் மூச்சை விரையவைக்குது

செய்த தவறும் திருத்தி வாழ சிந்தை கொள்ளுது ஆயின்
சேர்ந்து போன ஆண்டு வயதை  தின்றுபோனது
நேர்ந்த துன்பம் நினைவில் வந்து போதும் என்குது .தெளிந்த
நீர்க்குளத்தில் எழுதி வைத்த நிகழ்ச்சி நிரலிது
*****************************

தெரியவில்லை புரியவில்லை


தெத்தத் தெத்தத் தெரிதெரி தெரிதெரி
தெரியவேதெரியாது
எத்தெத் திசைதனில் இருளும் விடியும்
எதுவுமே தெரியாது
தத்தத் தருதரு தருதரு தரணியில்
தருவது எவர் பாடு
தலைகால் புரியா ஆடும் உயிர்கள்
தவறிடும் நிலைகூறு

சித்தம் மறுகிச் சிதைவுறும் மனதும்
சேர்வது எதனூடு
சத்தம்குன்றிச் சலனமும் அற்றே
சரிவதின் நிழலூடு
உத்தம நிலையில் உயிரின் கீதம்
உடைபடும் நிலையாது
அத்தம் கொள்ளும் அறிவின் மந்தம்
அனைத்தும் அதனூடு

சுற்றுசூழல் எதுவும் காணச்
சோர்வுறும் நிலையேது
அற்றும் வாழ்வில் அந்தம் என்னில்
அதனின் பொருள் ஈது
முற்றும் போனால் முடிவின் எல்லை
முன்வரும் போலுணர்வு
கற்கள் வைத்த பாதையின் முடிவை
காணும் நிலைப்பாடு

சொற்கள் கூறும் மனதில் வெறுமை
தோன்றுவ தெதனூடு
சற்றும் குறையா விதியும் உடலை
சித்திர வதைசெய்து
நிற்கும் போது கற்பனை என்ன
நினவெழும் ஒருகாடு
விற்றல் வாங்கும் உலகும் ஏனோ
வினைகள் புறப்பாடு

என்ன இன்னும் இருந்தாய் போதும்
எழுநட எனும்போது
பின்னும்வார்த்தை பேசும்பொருளும்
பிதற்றிடும் நிலைப்பாடு
மின்னும் உயிரும் மேலா கீழா
மயங்கிடும் நினைவோடு
இன்னுமின்னும் எகிறும் வார்த்தை
இதைவிடப் பொருளேது

தெள்ளெனும்நீரில் கல்லை எறிந்தால்
தொலையும் பிம்பங்கள்;
கள்ளின் நிறமும் பாலும் ஒன்றாய்
காணும் மாயைகள்
உள்ளம்மீது இல்லைக் குற்றம்
எழுதும்  வார்த்தைகள்
தள்ளும் போது மலையில் உருளத்
தலைகீழ் தெரியும் கொள்


காலச் சக்கரம் உருளும் போது
காட்சிகள் மாறுவதும்
நீலக் கருமை  மேகம் மறைத்து
நிற்கும் நிலைமாறி
கோலம் மாற்றம் கொண்டே விண்ணின்
கோடி ஒளிதெரியும்
ஞால வாழ்வின் முடிவும்காண
நாளை புரிந்துவிடும்!

தமிழின் சுவை


 

எண்ணக் கடலிடை மின்னலடிக்குது
எத்தனை மின்பொறிகள் -அவை
எண்ண மனக்கடல் வந்து விழுகுது
இன்ப மணித் துகள்கள்
கண்ணைப் பறித்திட வீழும்பொறிகளும்
கற்பனை சொல்வளங்கள் - அதை
வண்ணமகள் தமிழன்னை அணிகொள்ள
மின்னிடும்பொன்னொளிகள்

செந்தமிழா மிந்த செம்மொழித் தோட்டத்தில்
எத்தனை வாசமலர் -அவை
எந்தநிறத்தொடும் மஞ்சள் சிவப்பென
எண்ணிச்சுகம் தருங்கள்
சந்தமுடன் கவிசொல்லிப் பழகிட
சிந்தனை கொள்வளங்கள் -அவை
எந்தவிதமென வாயினும் இன்பத்தின்
எல்லை யிலே ஒருகல்

விந்தை குளத்தினில் செந்தமிழ்தாமரை
வீறுகொண்டே சிரிக்கும் - எங்கள்
சிந்தையிலே நல்ல கிண்கிணிநாதமும்
சேரக் கிளுகிளுக்கும்
சந்தமுடன் கவி சிந்திடச் சிந்திட
சின்ன இதழ்விரியும் - இதை
எந்த மனமதும் கண்டுமலர்ந்திட
இன்பத்தமிழ் சொரியும்

இன்பத்தமிழ் அது ஈழநிலத்தினில்
எண்ணத்தில் செய்வலிகள்- தினம்
இன்னும்தமிழிசை கொண்டமனங்களில்
ஏற்றும் பெருங் கிலிகள்
சொன்னதென்ன தமிழ் சொல்வதும் குற்றமோ
செய்தவர் உயிர்கள்- விட
என்ன பிழை தமிழ் சொல்லப்பயங்கொண்டு
இன்னலில் வாழ்ந்து கெட

சினம் விடு!


சுந்தரத் தமிழ்கொடுத்த சீரெடுத்து வானிலே
அந்தரத்தி லாடுதுள்ளம்  ஆனதென்ன வாழ்விலே
சிந்தனைக் குடம் வெடித்து  சீறும் நீரினூடிலே
வந்துமென் கவிக்குழந்தை வாழ்வுகொள்ளக் காணீரோ

சொந்தமோ சிவந்தரத்தம் சூடளிக்கும் யாக்கையில்
எந்திரம் எடுத்த உள்ளம் என்றி ருப்பின் ஆனதோ
மந்திரப் பொடிஉதிர்த்து மாயமென்ன செய்யவோ
இந்தலோக வாழ்விலேது இன்பம் பொய்த்த லாகுமோ

சந்தியிற் சிரிக்கும்வாழ்வில் சிந்தனை பொறித்திடா
விந்தைதூண் நிறுத்தி அன்புவீட்டில் கல்லடுக்குவோம்
சந்தோசக் கதிர்எறிக்கு மின்பச் சேற்றின் பங்கயம்
அந்திவா னெழுந்த சந்திர னல்லியென்ப தாகுவோம்

கர்வமோ டெழுத்து வாளைக் கைசுழற்றி ருத்திரன்
பர்வதச் சிவன்சினந்து  பண்ணுகின்ற நாட்டியம்
தர்மமென் றெழுந்துநாமும் தக்கதோமென் றாடிடா
மர்மவானைச் சுற்றும்பந்தில் மானிடத்தைக் காணுவோம்


*********************

உள்ளத்தில் உயர்ந்தவர்




ஒளியோ விழியோ நிலவோ சுடரோ
.  உதயச் சூரியனோ
நெளியும் அலைகள் நீந்தும்கடலின்
.  நிகரோ நெடுமலையோ
உளியோ பொழிவோ உருவில்சிலைதான்
.  உருவாக்கு மிவரோ
தெளிவோ அழகோ திரையிற் கலையைத்
.  தீட்டும் ஓவியனோ!

மழையோ முகிலோ பொழிவான் புனலாய்
.  பூமிக்கோர் வரமோ
தழையோ கொடியோ பயிரோ மனமும்
.  தளிரின் பசுமையதோ
களையோ களையும் கையோ பயிரின்
.  காவல் தெய்வமதோ
விளைவோ இயல்பாய் வேண்டும் அன்பை
.  வழங்குஞ் சுரபியென்றோ!

எழவோ விழவோ அழவோ தழுவும்
.  அன்னைக் கிணையிவரோ
நிழலோ நினைவோ நெகிழும் நெஞ்சில்
.  நிகழும் கனவிதுவோ
தழலோ அனலோ தருமம் பிழையென்
.  தகிக்கும் சூரியனோ
குழலோ இசையோ குயிலோ  கீதம்
.  கொள்ளப் பெருமையன்றோ

Tuesday, May 15, 2012

மௌனம் , அமைதி, ஞானம்


மௌனம் அதிசுக ராகம் அதுவொரு
மந்திரம் மனதின்சு கந்தம்
மௌனம் உள்மதி ரூபம் இறையின்சன்
மானம் தூயநல் மார்க்கம்
மௌனம் அகமிடை தியானம் இருளது
மாற்றும் இறைமையைக் கூட்டும்
மௌனம் ஆயுத மாகும் நலிவுறு
மனதை தைரிய மேற்றும்


அமைதி அலைகடல் தூக்கம் அகமிடை  
ஆற்றல் தனைதினம் தோற்றும்
அமைதி அநுபவ இன்பம் தனிமையின்
ஆக்கம் புதுசுகம் சேர்க்கும்
அமைதி அழகினைக் கூட்டும் அதிபகை
ஓட்டும் உயர் சுகம் காட்டும்
அமைதி பெருகிட ஆள்மை யுடன்மன
அறியா மையின்முடி வாகும்.


நிசப்தம்  நினைவெழ நீசம் மடிந்திடும்
நீக்கும் கறை சுவை சேர்க்கும்
நிசப்தம் நினைவுடல் போர்க்கும் நிம்மதி
நிகழ்வில் நேர்கொளும் பார்வை
நிசப்தம் ஊற்றிடும் தேனை உலகினில்
நிலவும் இனிமையை காக்கும்
நிசப்தம் காற்றின்சங் கீதம் இசைப்பதும்
நிகரில் பிரபஞ்ச தோற்றம்


ஞானம் பெரிதெனக் காணும் உளமதும்
ஞாலம் மிடை உயர்வாகும்
ஞானம் அறிவிலை யாகும் மனதெழு
ரோகம் போக்குங் கஷாயம்
ஞானம் இதுவரை காணா துயருடை
நீளும் வானெழு மேகம்
யானும் இருந்தனன் போதும் உலகினை
ஆளும் தீயெனைக் காப்பாய் !


*****************

Monday, May 7, 2012

வீணில் பகைத்தேன்- தலைவியின் ஏக்கம்

கண்ணில் பெருங்கனவு தங்கமே தங்கம்
கண்டுமனங் களித்திருந்தேன் தங்கமே தங்கம்
எண்ணி மனத் திடையே தங்கமே தங்கம்
ஏதும்பிழை செய்தேனோடி தங்கமே தங்கம்
முன்ன ரிரிந்தபகை தங்கமே தங்கம்
முற்று மழிந்ததோடி தங்கமே தங்கம்
என்னைப் புரிந்துகொள்ள என்ன உரைத்தும்
ஏனோ தெரியாரடி தங்கமே தங்கம்

மெல்ல முகம் மறைத்த முன்னிருள் எல்லாம்
மேகமென ஓடியதோ தங்கமே தங்கம்
சொல்லி உரைத்தகதை தங்கமே தங்கம்
சொர்க்கமென்று ஆகவில்லை தங்கமே தங்கம்
பொல்லாத பூமியடி புன்னகை செய்தால்
பொய்யி தென்று பேசுதடி தங்கமே தங்கம்
மெல்ல நடப்பதென்ன மேதினி தன்னில்
மர்மா யிருக்குதடி தங்கமே தங்கம்

பொய்யை நினைத்தில்லை பேதையின்மனம்
பூட்டியும் மறைக்கவில்லை போதிலெதையும்
கையை விரித்தபின்பும் தங்கமே தங்கம்
காணுவது பொய்மை என்றார் ஏனடி இன்னும்?
செய்யத் தெரிந்ததில்லை சொல்லடி தங்கம்
சேர்த்து வைத்தேதுமில்லை சிந்தையில் எங்கும்
உய்யநினைத்து இல்லம் ஓங்க விழைந்தேன்
ஒன்றும் நடக்கவில்லை தங்கமே தங்கம்

நானும் அவரிடத்தில் தங்கமே தங்கம்
நாணும் வகை செய்தேனோடி தங்கமே தங்கம்
வானில் இருக்கும் ஒளி வெய்யவன் கண்ணை
வந்தமுகில் மறைத்திடலாம் தங்கமே தங்கம்
மாண்புதனை மாசுசெய்ய மனம் நினைத்தால்
மாண்டு விடநேருமடி தங்கமே தங்கம்
வீணில்சுடர் பகைத்து வெய்யிலொறுத்தால்
வையம்பிழைக்குமோடி தங்கமே தங்கம்

கவிதைக்குப் பொய்யழகு

கலையாம் மலர்கொள் சோலைகளில் - இலை
காற்றில் சலசலக்கும்
கவிதை பூக்கும் மனச்சோலை - அதில்
காட்சி சிலுசிலுக்கும்
வலையில் மீனும் சேர்ந்தாலே - அதன்
வாழ்வோ முடிந்துவிடும்
வாழ்வில் துன்பம் கொண்டாலோ - உளம்
வேதனை இசைபடிக்கும்

நிலையிக் கணமோ நிலவதனும் - ஒளி
நெருப்பாய் சுட்டெரிக்கும்
நீர்கொள் சுனையில் நிற்கும் பூ - அதன்
நிலையும் எழில்போகும்
சிலையைக் காணும் கண்கள் தான் - உளம்
சேர்ந்தே கற்பனையும்
அலையாய் எழும்போ தின்பந்தான் - அது
இருந்தால் அழகாகும்

கற்பனைக் கோட்டை இளவரசி - தமிழ்
கூறும் கவிதைகளாம்
அற்புத மரபாம் அணிகலன்கள் - அணிந்
தழகில் ஜொலித்திருப்பாள்
சொற்சுவை தேனுடன் செங்கரும்பாய் - தமிழ்
சேர்ந்தே பருகிடுவாள்
முற்றிலு மினிமை கொண்டிடுவாள் - தமிழ்
முக்கனிச் சாறுண்பாள்

சுந்தர வானின் வெண்மதியும் - அங்கு
சொட்டும் நிலவொளியாம்
மந்தநல் மாருதம் வீசிடவும் - அங்கு
மலர்கள் சிரித்திருக்கும்
செந்தமிழ் மாலைகள் சரம் தூங்கும் - ஒர்
சிலிர்ப்பை தரும் கானம்
வந்து எம்காதினில் தேன்வார்க்கும் - ஒரு
வசந்தம் மோகமிடும்

உணர்வுகள் தீட்டும் ஓவியனே - ஒரு
ஏழைக் கவிஞன் காண்
கணமே கிளரும் நினைவுகளில் - பல
கற்பனை வளம் சேர்ப்பான்
மணம்கொள் சிறிதோர் மலரொன்று- அவன்
முன்னே தெரிகிறது
வணங்கிக் கைகொள் தூரிகையால் - அவன்
வண்ணம் தீட்டுகிறான்

மலரின் இதழ்கள் செழுமையிலை - அதில்
மதுகொள் வண்டில்லை
அலர்ந்தே தெரியும் இதழ்கள்தாம் - அதில்
ஐந்தில் ஒன்றில்லை
உலரும் வண்ணம் நீர்குழைத்து - அவன்
எழுதும் போதினிலோ
பலதும் கற்பனை வளம்சேர்த்தான்- அதில்
புதிதாய் எழில் செய்தான்

செழித்துப் பெருத்த இதழ் கண்டான் - அதில்
சிந்தத் தேன் கண்டான்
வழியும் பனிநீர் துளியிருக்க - சுழல்
வண்டை மனம்கொண்டான்
நெளித்து வளையும் இதழில் தேன் - அது
நிரம்பித் துளிசிந்த
குளித்தே அழகில் கொள் செழுமை - மனம்
கொள்ளை கொண்டதுகாண்

கண்டோர் காட்சி ஓவியமாய்க் - கலை
காணும் தூரிகையால்
வேண்டுமென்றெ வண்ணங்கள் - பல
விரும்பிச் சேர்கின்றான்
தூண்டும் உணர்வை கொள்வதற்கு- அவன்
செழுமை செழுமையென
மீண்டும்மஞ்சள் பச்சை யெனத் - தொட
மிகையாய் வண்ணங்கள்

அழகுகாட்சி தெரிகிறது - அதில்
ஆகா எனவியந்து
பழகும் மாந்தர் வியந்திடினும் - அவர்
பார்க்கும் மலரெங்கும்
சுழலும் புவியில் உண்டோசொல் - அச்
சுந்தரம் பொய்யென்பேன்
நிழலாய் காணும் மெய்யின்பொய் - அவன்
நினைவின் பொய்யின் மெய்

வளம் தாராயோ (துதி)

வெண்பனி தூறலின் விதமென
நெஞ்சும் விழலின்றி
வீறுநினைவெழு விதமென
நடையும் விளையாயோ
புண்ணொடுசீழும் புரையுடை
நீரும் புறங்கூறும்
புன்மை பயம்கொள் பிணியுறு
வாழ்வும் வேண்டாமே

கண்ணில் விழிப்புடன் கனலுறு
விடியற் கதிரொளியின்
காணும் வெளிச்சமென் றன்புடை
வளமும் தாராயோ
உண்மை கனிந்தொரு இயல்பொடு
உள்ளம் உயர்மேவ
ஓர்மை கொடுத்துயிர் உலகிடை
வாழச் செய்யாயோ

துள்ளும் துதித்திடத் துன்பமனம்
விடத் தொலைவாகும்
தொல்லை யகன்றிடத் தொகையென
மகிழ்வும் தருவாயோ
கிள்ளி முறுக்கியே கேளழு இன்பக்
காண் சுகமும்
கொள்ளும் மனக்கிடை கொடிதெனும்
நோயைப்போக்காயோ

உள்ளி மனத்தெடு உயர்வுடை
வாழ்வும் ஒளிபொங்கும்
உத்தம மானதென் றெக்கணம்
போற்றிடும் இயல்பாக்கி
தெள்ளெனும் ஓடைதிகழ் புன
லென்னத் தன்மையுறும்
தென்பொடு நல்லுள முடையொரு
விளைவைத் தாராயோ

தகவுறு நெஞ்சும் தணிவுறு
சினமும் தாழ்மையுடன்
அக மொருஇன்பம் அணிகொள
வரமும் அருள்வாயே
புக மனதிடையே புரிவுட
னெதையும் பொறுத்தாள
முகமதை மூடும் மெதுவெனும்
இருளும் மாற்றிவிடு

மிகமன உறுதி மிதமுடன்
திறமை மகிழ்ந்தாடும்
சுகமெனும் உணர்வும் சுடுவெயி
லெனவே தீமைதனை
அகலென விலகும் அதிசிறந்
துணரும் ஆற்றலதும்
தகமையும் தந்து தரையினில்
வாழத் தா வரமே!

Tuesday, April 24, 2012

எனக்கு நானே ராஜா!

(இயற்கை காகிதப்பூவை பார்த்து கேட்கிறது)
கலை வண்ண தாளின் பூவே
. கதிர் காணும் வானம்பார்த்துக்
. கற்பனை இன்பங் கொண்டாயோ?
அலைந்தோடும் வண்டும்தேனை
. அருந்தாமல் போகும்வாழ்வு
. அதிலென்ன இன்பம் காண்பாய்சொல்?
குலையென்றும் கொத்தாய் பூக்கள்
. குவிந்தாடும் போதே தொட்டு
. குளிர் கொண்ட காற்றும் ஓடுதுகாண்
நிலை கொண்டதென்னே நீயோ
. நிறந்தானே வாசமில்லை
. நிமிர்ந்தாடும் இன்பம் ஏதுசொல்?

(காகிதப்பூ)
மகிழ்ந்தாடும் பூக்கள் வாழ்வு
. மணந்தாலும் வண்டின்தொல்லை
. மனங்கூசத் துன்பம் ஆகிவிடும்
நிகழ்வான திங்கே இல்லை
. நெருங்காது ஊதும் வண்டு
. நிதம் ஏய்க்கும் வேலை இல்லை காண்
அகல்வானின் வெம்மை எந்தன்
. முகம்மீது கொள்ளும் இன்பம்
. அதுபோதும் என்றும் என்வாழ்வில்!
இகம்மீதில் காணும் இன்பம்
. ஏகாந்தம் ஒன்றே உண்மை
. இதுபோதும் என்னை விட்டுவிடு

(இயற்கை)
படர்ந்தாடும் கொடியின் பூவும்
. பிறந்தாகும் பயனைக்கோவில்
. புகுந்தோடி வாழ்வில் கொண்டதுபார்
நடந்தாடும் மங்கை கூந்தல்
. இணைந்தாடி நன்மைசெய்து
. நாள்தோறும் இன்பம் பெற்றதுகாண்
அடர்தோங்கும் பூவின் தோட்டம்
. அழகென்னே பல்சேர்வண்ணம்
. இணைந்தங்கு இன்பம் கொள்ளுவதாம்
இடம்மாறி உள்ளோர்பூவே
. இவையாவும் இல்லாவாழ்வும்
. எதைகொண்டு நன்மை சேர்க்குதுசொல்

(காகிதப்பூ)
தொட்டாலுங் குத்தும் முள்ளும்
. தோதற்ற மணமும் சிந்தை
. தூங்கிடச் செய்யும் வாசமதும்
கட்டெழில் மங்கை கூந்தல்
. கறுப்பதைத் தூய்மை செய்தும்
. காண்பதில் மாயை கொண்டிடவும்
எட்டாத இறைவன் கோவில்
. ஏகினும் தாயின் அன்பை
. இழந்தேகும் வாழ்வும் வேண்டிலேன்
மொட்டாக முகிழ்ந்தாலும்பின்
. முடிவென்ப தொருநாள் ஆகி
. மண்மீதுவீழல் இல்லை காண்!

Saturday, April 21, 2012

உயர்வு வேண்டும்

இரண்டாவது மூன்றாவது அடிகள்
1.----------------------------------------------
2. தனன தானனன தனன தானனன
3. தனன தானனன தனன தானனன
4. ------------------------------------------------------------


அன்பு மனம் வேண்டும் சக்தி - இந்த
அகிலம் வாழுயிர்கள் கருணையோடு தினம்
பகிரும் வார்த்தைசுகம் தருமென் றானதொரு
அன்பு மனம் வேண்டும் சக்தி

இன்பம் பெறவேண்டும் சக்தி - இந்த
இகமெல்லா முனது விழிகொள் பார்வைதனில்
முகமெல்லா மலர இதயமான பெரும்
இன்பம் பெறவேண்டும்

உண்மை மொழி வேண்டும் சக்தி - நல்
உயர்வு காணும் மன நினைவு கூடி எது
பயமி லாதபடி துணிவென் றாகிச் சொலும்
உண்மை மொழி வேண்டும் சக்தி

மென்மை உளம்வேண்டும் சக்தி - பலர்
மிருகமாகிப் பிற உயிர்கள் வேதனையை
பெருகுமா யியல்பு தரும் குரோதமின்றி
மென்மை உளம்வேண்டும் சக்தி

பரிவு இறைமை தா சக்தி - இப்
புரள்விநோத வெளி சுழலுங் கோள்கள்பல
உரசிடாம லிடை பெறும்நி தானமெனும்
உரிமை இறைமை தா சக்தி

உள்ளம் உயர்வுபெற சக்தி - இந்த
உலகமான மறுதிசையி லோடிடினும்
கலகமேது மின்றி உயர்வு காணும்வகை
கொள்ளும் நிலைமை தா சக்தி

அறமும் நீதியுடன் துணிவு - பெரும்,
அளவிலா துயிர்கள் மனித வாழ்வில் வரும்
பிளவினாலே உடல் பிணமென் றாக்கும்செயல்
நிறைவு பெற வேண்டும் தாயே!
**********************

Saturday, April 14, 2012

வண்ணத்தமிழ் பெண்ணொருத்தி


வெண்ணிலவு ஒளியெறிக்கும் வேளையொரு மாலையிலே
வீணையொலி கீதமெழப் பார்த்தேன்
கண்ணெதிரில் கால்சலங்கை கலகலத்த ஓசையெழக்
கன்னியவள் நடனமிடக் கண்டேன்
பெண்ணவளோ பேசரிய பொன்னெழில் பூம்பாவையவள்
பேரெனவோ கேட்க மனங்கொண்டேன்
அண்மையிலே சென்றவளைக் காண அதோ அவளிலையோர்
அழகிய மான் துள்ளி ஓடக் கண்டேன்

பொன்னென மான்துள்ளுமெழில் கண்கவர்கொள் மோகமிடப்
பின்நடந்து செல்ல மனம்கொண்டேன்
அன்னநடை போல்நடந்து அங்குதுள்ளி இங்குதுள்ளி
அது நடந்தபாதை கண்டு சென்றேன்
முன்னொரு புல்மேடை வெளி புள்ளிவைத்தபொன்னெழில்மான்
மெல்ல அதை தொட்டிட வென் றேக
மின்னியது நீல ஒளி கண்ணிரண்டும் கூசஅதில்
மான் மறையப் பூவிருக்கக் கண்டேன்

வண்ணமலர் நீலமெனும் வட்டஇதழ் கொள்ளுமெழில்
விந்தை தனைக் கொள்ள ஆசை கொண்டு
திண்ணமுடன் அருகணைந்து  கையெடுத்தேன் என்னவிது
தளதளக்கும் நீரலைகள் கண்டேன்
மண்மறைய அலையெழவும் பொய்கையெனும் தோற்றமுற
மெல்லெனமுன் விரியுமெழில் காட்சி
தண்ணொளியில் மென்மலர்கள் ஓன்று பல ஆயிரமாம்
தாரகையாய் வானிலெழக் கண்டேன்

வானிடையே பொன்னிழகு வார்த்ததெனப்  புன்சிரிப்பாய்
வந்து செலும் வெண்முகில்கள் மீது
தானிவளும் ஓடிவந்து தங்க நிலா மீதிருந்து
தமிழ்மகனே, கவிதை சொல்லு என்றாள்
தேனினித்த கனியிடையே தின்னும்சுவை நீயெடுத்து
தந்திடு நீ தமிழ்குழைத்து என்றாள்
மானெனவும் மலரெனவும் மங்கை தமிழானவள் வெண்
மதியிடையே நிழலென வென்றானாள்

நானிருந்து எழுதுகிறேன் நல்ல தமிழ் கோத்தெடுத்து
நூலில் மலர்மாலை யென்று சொல்லை
மீனெழுந்த வில்லெடுத்த வேங்கை கொடி மன்னர்களும்
மேவி வளர்த்தார் மூவண் தமிழை
நானெழுதி என்னசெய்ய நல்லதமிழ் செய்வர்முன்னே
நாவுழறி பாடுகின்றேன் தாயே
கூனெழுந்து குழிவிழுந்து கோலெடுக்கும் வயதினிலே
குறைஇருப்பின் குற்றம் மெனைக் காப்பாய்

புயல் அழித்தபின்!

( மன்னவன் )
புயலடித்த தேசம் இப்பூக்கள் வீழ்ந்துகாணும் - ஆ..
  கலங்கடித்த காயம் ஏன் காணுதிந்தநாடும்
மயிலெடுத்த பாதம் பொன்மலர் துடித்ததாயும் - ஓர்
    மழையடித்து ஓயும் அதில் மண் இழுத்து ஓடும்
ஒயிலெடுத்த சிலையும் தான் உடைய வென்றுவீழும் அது
   உயிரெடுத்தகனவும் பார் உண்மையற்றதாகும்
கையிலெடுத்த குழலில் ஏன் காணவில்லைஓசை - இனி
   எது எடுப்பதென்று நான் ஏங்குகிறேன் கூறாய்

( பாடகன் தோழன்)

தண்ணிலவு எழுந்ததுகாண் நிர்மலவானம் - இனி
 தரணியெங்கும் பொங்குமின்ப இன்னிசைகானம்
வெண்மலரைத் தூவி மகிழ்வெய்திடவேண்டும் இங்கு
  விளையாடிப் பூவழைந்து வேண்டிட இன்பம்
எண்ணமுதல் புயல்திரும்பி கடலிடை போகும் -இனி
  இளம்மனதாய் குதித்திட எம்தேசமும்மீளும்
திண்ணமுடன் கற்பனைகள தீந்தமிழ்கூறும் - அந்த
   திறமையினில் அமுதகவி தேர்ந்திடவேண்டும்

மன்னவனும் மனம்மயங்க புன்னகை செய்யும் சில
 மந்திரங்கள் கேட்குது நல் மாலைகள் தோளும்
பன்நெடுகக் காலடியில் போடுக பூவும் - அப்
  பனிமலரின் மென்மைபாதம்  கண்டிடவேண்டும்
உன்னதமாய் வானுறக்கம் கண்டது வேந்தே- இனி
  உள்ளதெல்லாம் இனிமை கொண்ட கற்கண்டுதேனே
மென்னரும்பு மலர்நிறைந்து தோன்றுது காட்சி -அல்ல
    மேக மிடை தாரகைகள் மின்னிடு மாட்சி

குறிஞ்சிமகள் கொய்தமலர்


இது ஒரு வித்தியாசமானது!
இங்கே உள்ளபாடலில் ஒருபெண் சமபந்தப்பட்டிருப்பதாக தோன்றுகிறதா?
இல்லையே!
ஒரு ஆடவன் மட்டும்தான் முழுக் கவிதையிலுமே உண்டு (முதலடி விலக்கு)
எப்படி? இரண்டு சிறு தட்டச்சு தவறுகள் ( வேண்டுமென்றே விட்ட பிழைகளைத் தவிர-!
( னி -நி ஆகவும் நீ - னீயாகவும்) மிகுதி பிரித்து வாசிப்பதில் உண்டு
விளக்கம் கீழே உண்டு.


         
 குறிஞ்சிமகள் கொய்தமலர் (பிழை)


மிஞ்சுமலை கூந்தல்எழில் கொண்டவள் அன்னநடையில்
கொஞ்சுமுகில் சென்று உறை குறிஞ்சி நிலத்தாள் வான்
பஞ்சுமுகில் கீழ்நிலத்தில் பன்மலர்கள்கொய்ய வெண்ணி
அஞ்சிநடந் தேகையிலே வந்தொருவன் மையெடுத்த

ஒளிவிழியும் பட்டுவிட உருவழியும் எனும்கொடுமை
யெழுகுணங் கொள்ளாதவனும் எப்படியோ கண்டுவிட
ஒழிவுமறை வற்றுவிட்ட உயர்மலர்கள் வனத்திடையே
அழகுமலர் கூட்டமிடை இதுவுமொரு மலரெனவே

கட்டழகுப் பூவை, எழில்கொண்டவளை பூங்கொடியை
தொட்டெடுத்த லின்றி திரும்பேன் எனத் துணிந்து
விட்டுமினிச் செல்லேன்ஆ வேண்டும் நீ என்றரற்றி
கிட்டே நெருங்கி ஆ கெட்டதே இக்கணம் மனமே

எட்டி யிருந்தவளைக் கொடியிடையில் தொட்டுவிட
விட்டகணம் பட்டதுவோ தொட்டதுவோ நானறியேன்
கெட்டு நிலைதான் தவறக் கொடிமலராய் துவண்டுவிழ
தொட்டெடுத்து மேனிசப்த மற்றவகை தூக்கிவிட்டு

நெட்டுயர்ந்த பூங்கொடியோ நிலகுலைந்துமவன் குலையா
எட்டித் தருவதிலே இணைத்து விட மலரிதழ் மேல்
தொட்டகையும் விலகவென சத்தமிட்டு திடுமெனவே
பட்டவிரலால் நொந்தோ பாதியிலே எழுந்தே நீ

விட்டுப்பிரிந்தோட   விலகியதோ மீண்டும்கை
எட்டுமோ இனியென்று எண்ணியிடை மனம்மாறி
தொட்டெடுக்க மீண்டும் துவண்டுவிழும் போஎன்றே
விட்டேன் பிழைத்தாய் எனச் சொல்லி வழிநடந்தான்

        




 விளக்கம்:

  குறிஞ்சிநில மன்னன் கொய்தமலர் (சரி)


1. /கொண்டவள் அன்னநடையில்/ - கொண்டவளன்ன நடையில்
கூந்தல் கொண்ட பெண்போல அழகாக வானில் நடந்தமுகில் என்று கொள்ளலாமா

2. /குறிஞ்சி நிலத்தாள் வான்/
குறிஞ்சி நிலத்தாள்வான் .- ஆளுபவன் (குறிஞ்சி நில மன்னன் என்று
கொள்ளலாமா?)

3. /வந்தொருவன் மையெடுத்த/ - வந்தொரு வன்மை யெடுத்த -
4. /குணம் கொள்ளாதவனும்/ -  குணம்கொள் ஆதவனும்
5. /எழில்கொண்டவளை பூங்கொடியை/ - எழில்கொண்ட வளை(ந்த)பூங்கொடியை
6. /எட்டி யிருந்தவளை கொடியிடையில் தொட்டுவிட/-
மீண்டும் அதேதான்  -பூ ஒன்றைப் பறிப்பதற்காக கொடியை வளைக்கின்றான்

தொட்டெடுத்து மேனி சப்த மற்றவகை -
இங்கேதான் தட்டச்சு தவறு னி - நி ஆகவேண்டும்
7. (தொட்டெடுத்துமே  நிசப்த மற்றவகை)

8. எட்டித் ’தரு’வதிலே - எட்டி மரத்தின்மேல் கொடியைமீண்டும் இணைத்து
பாதியிலே எழுந்தே நீ - இங்கேயும் நீ - னீ யாக வேண்டும்
(மதுவுண்ட பாதியிலே எழுந் தேனீ)

9. இங்கே மன்னன் அஞ்சிநடந்தான் -இருக்கமுடியாது ஆனால் இருக்கலாம்
ஒளிவிழியும் பட்டுவிட உருவழியும்  (மலர்கள்)


10. அவ்வளவுதான்  மீண்டும் ஒருமுறை.....பாருங்கள்
மன்னனும் மலரும்தான் -பெண்ணிங்கு இல்லை

பாலைவனம் சோலை யாகுமா?

ஆண்டவரே  எமை மீட்கவென - பல
ஆண்டுகள் முன் பிறந்தீர்
வேண்டிநின்றோர் தம் பாவங்களை - உங்கள்
இரத்ததினால் துடைத்தீர்
மாண்டு அழும் இந்த ஏழைகளை - நீர்
மறுபடி காக்கவென
மீண்டும் பிறந்திந்தப் பூமியிலே எமை
மீட்டிட வாரீரோ

ஆண்டுபல பெரும் மேடுபள்ளம் - என
அலைந்தே நிலையழிந்தோம்
வேண்டுமென நல்வாழ்வையெண்ணி - விடி
வெள்ளியின் திசைநடந்தோம்
மீண்டுமொரு நல்வாழ்வு இதோ - எனும்
வேளையிற் பலமிழந்தோம்
நீண்டு செல்லும் இத்துன்பங்களை - நீர்
நிறுத்திட வாரீரோ

தேடுகிறோம் பசும்புல்வெளிகள் - எம்
தேவையை நீர் உணர்வீர்
வாடுகிறோம் வலிதானிழந்தோம்   எம்
வாசலில் பேயினங்கள்
நாடிழந்தோம் நம் இனமிழந்தோம் - நாம்
இருப்பது இருட்டறையில்
தேடுகிறோம் ஒளிவாழ்வுபெற - அருள்
தேவனே மீட்பீரோ

எத்தனை சிலுவைகள் சுமந்துவிட்டோம் - எம்
பாவங்கள் தீரவில்லை
எத்தனை கடல்களும் கடந்துவந்தோம் - எம்
தாகங்கள் தீரவில்லை
எத்தனை மலைகளும் ஏறிவந்தோம் - எம்
பாதங்கள் நோவெழுந்தே
எத்துணை வலிதனை பட்டுவிட்டோம் - எமைக்
காத்திட  வாரீரோ

பாலகனே உமை வேண்டுகிறோம் - எம்
பாவங்கள் நீக்கிவிடும்
காலமெலாம் நாம் கண்ட துயர் - உங்கள்
கருணையினால் செழிக்கும்,
மேலலுகின் அருள்தேவமைந்தா - நாம்
மீண்டும் பிறப்பவராய்
ஞாலமதில் நல் வாழ்வுபெற - எமை
ஆ..சீர்வதித் தருளும்

சிலுவையி னின்று மறுபடியும் - நீர்
ஜீவனம் பெற்றிருந்தீர்
வலுவிழந்தோம் இனி உயிர்த்துஎழ - நல்
வார்த்தையைக் கூறிவிடும்
மேலுகில் அந்த மூவுலகில்   -ஒளி
ஞானமுடன் திகழ்வீர்
பாலைவனம் போல் எங்கள் நிலம் - பசுஞ்
சோலை யென்றாக்கிடுவீர்

Wednesday, April 11, 2012

நானா? கவிதையா? யார் சொன்னது?

       


மலையும் கதிரும் மதியும் மரமும்
மாபெருங் கோபுரமும்
அலையுங் கடலும் அதன்மேல் முகிலும்
அருவி ,சுனையாவும்
நிலையில் பெரிதாம் உலகம் என்னும்
நிலையற் றுருள்பந்து
அலையும் அண்டம் செய்தால் அவளே
அனைத்தும் பெரிதாவாள்

கலையும் கவிதைச் சுகமும் பொருளும்
காணும் கற்பனையும்
அலையும் மனதில் அகமும் நினைவும்
ஆக்கும் அவளேதான்
தலையும் உடலும் தந்தாள் சக்தி
தமிழை தானீந்து
இலையென் றோனிவ் வறிவிற் கிளையோன்
இவனைச் சொல்லென்றாள்

கவிதை எதுவும் எனதே யல்ல
கருணை விழிகொண்டாள்
புவியைக் கொண்டாள் புனலைச் செய்தாள்
பூகம்பம்செய்வாள்
அவிழும் பூவும் அனலும் காற்றும்
அழகும் செய்பவளே
குவியும் வார்த்தைக் கோலம் இட்டாள்
கேள்விப் பதிலாவள்

நானும் பொய்யே நாளும் பொய்யே
நாடும் நானிலமும்
வானும் முகிலும் வண்ணங் கொண்டே
விடியும் அடிவானும்
தானும் சிவந்தே எழுமோர்கதிரும்
தண்ணொளி நிலவோடு
ஊனும் உயிரும் பொய்யே இதிலே
இவனாம், என்செய்வேன்?


தாயே சக்தி தமிழைத் தந்தாய்
தானே பதிலாவாய்
வாயிற் குரலும் வார்த்தைப் பொருளும்
வரையும் ஓவியமும்
கோயிற் சிலையும் குலவும் மழலை
குழந்தை மனம்யாவும்
நீயே தந்தாய் அன்னை இங்கே
நீயே பதிலாவாய்

Sunday, April 8, 2012

வாழ்வோடு....!


மானோடும் மயிலாடும் மரத்தோடு பூ ஆடும்
தானோடும் பூங்காற்று தண்ணீரில் அலையோடும்
வானொடும் முகிலோடும் வழிபார்த்து நதியோடும்
ஏனோடும் புவிதானும் இரவோடும் பகலோடும்

தேனோடும் பூவோடும் தினங்காணும் ஒளியோடும்
தானோடி நாளோடும் தகித்தவெயில் மேற்கோடும்
வானோடி மலையோடி வரம்போடும் வயலோடி
இனியோடல் போதுமென இலங்குகதிர் கடலாடும்

பணமோடிப் பெரிதாகிக் குணமோடிப் பொலியாமல்
மனமோடிச் சிதைகின்ற மகிழ்வோடிப் போம்வாழ்வில்
கனவோடும் காண்வாழ்வு கண்முன்னே ஓடவென
வினைகூட்டிச் செயலாக்க விளையாமல் ஓடுவதோ

சினமோடிச் சிந்தைகொள் கனமோடிக் களிகூட
மனமோடி மகிழ்வெய்த ஒருகோடி ஓடாமல்
வினைகூடிச் செய்விதியை விட்டோடச்செய்தேநீ   
உனைகூடும் நிம்மதியை ஓடிபோய் ஏற்காயோ?

இரவோடும் இருளோடும் படகோடும் கடலோடும்
கரையோடி மீளவென கரம்ஓடம் வலித்தோட்டும்
திரையோடும் திக்கதென தெரியாதே இருள்மூடும்
கரையோடு சுழன்றுதிசை காட்டுமொளி பெரிதாகும்

எதுகூடிச் செய்குவதோ அதுகூடிச் செயலற்றா
மதுகூடிப் பெருகுதென மனங்கூடி நிற்பவரை
இதுகோடிபெறுமெனவே மொழிகூட்டிச் செவியோதி
அதுபோலும் சுழல்விளக்கம் ஆகிவழி காட்டுவதால்

பனிமூடும் புகைமூடும் படர்காற்று அதை ஊதும்
கனிமூடும் இலையாடும் காற்றான ததைஊதும்
தனிமேகம் மதிமூட அதைமீண்டும் காற்றூதும்
மனமோகம் தனைஊத மகிழ்வுநிலா ஒளிராதோ!

.........................

போருக்கு வந்த புயல்

   
வெட்டியடிமின்னல் தட்டுமிடி சுற்றி
 வீழும் மழைத்துளிகள் -உயர்
வட்டமுகில் விண்ணைத் தொட்டுங் கருமுகம்
   விந்தை மகிழ்ச்சி இல்லை
எட்டுத் திக்கும்நிறை முற்றும் பெருமழை
  கொட்டிக் குளம்நிரப்ப - புயல்
பட்டிதொட்டிஎங்கும் பட்டப் பகல்வந்து
    பாடு  படுத்துதப்பா

மேகம்கறுத்தொரு கோபமுடன் ஒரு
  மூடர்படை நடத்தி -பெரு
மோகமெடுத் திந்த பூமியுடன் போரை
  மூள விளைக்குதப்பா
வேகமெடுத்து நல் கூரைகள் பிய்த்திங்கு
 வீசி யெறியு தப்பா - எமை
நோக எதிர்த்துடல் தள்ளிப்பலங்கண்டு
  நேரே பகைக்குதப்பா

கொட்டுது பேய்மழை கூச்சலிட்டுக் குடை
  கொண்டவர் கைபறித்து -  அதை
எட்ட எறியுது ஈர மழை பற்றி
   எத்தியும் ஓடுதப்பா
பட்டு மரங்களில் கொப்புடைத்தே யதை
   பாதையில் போடுதப்பா - பெரு
நட்டம் விளைத்தொரு குட்டிச்சுவரென
   நாட்டினை ஆக்குதப்பா

கட்டுடைத்து வெள்ளம் கூட்டிவந்து வீடு
   கொண்ட பொருள் சிதைத்து - கதிர்
வெட்டி யெடுத்திட விட்டநெல்லுவயல்
  வேண்டுமென்றே அழித்து
மட்டமென எமை தட்டிச் சிரித்திட
 மன்னித்து விட்டிடவோ - ஒரு
சட்டமிட்டு இதன் செய்கைதனை எவர்
  சற்றுக் குறைத்திடுவார் -

தொட்டு இழுக்குது கெட்டபுயல் சேரத்
 திட்டுது பேய்முழக்கம் - அதில்
வெட்டும் மின்னல் பயங்கொள்ள வைத்து மன
  வீரம் தனையழித்து
கொட்டுமழை கொண்டு கூதலிட்டு உடல்
  கூனிக் குறுக வைத்து - அட
நெட்ட நெடுவழிப் பாதையிலே எனை
  நிற்க விழுத்துதப்பா

கர்ஜனையோ கவிமேற் பிழையோ இது
காலத்தின் கோலமதோ - என்ன
அர்ச்சனையோ அட ஆவேசமோ எந்தன்
  ஆவி பறித்திடவோ
ஊர்ச்சனமோ எங்கோ உள்ளேஒதுங்கிட
  உள்ளத் துறுதியுடன் - நானும்
நேர்ச்செல்லென இங்கு நின்றதனாலெனை
    நேரப்பழி கொள்ளுதோ

இடி, மின்னல் , மழை!

தடதட வான் இடியெழுஞ் சத்தம்
.   தலையினில் விழுதென அச்சம்
கிடகிட வென முழவுகள் தட்டும்
.  கேளொலி நடுங்கிட வைக்கும்
படபட மழை கூரையில் தட்டும்
.  பழகிய இசைதனைக் கொட்டும்
மடமட மரம் முறிகிற சத்தம்
.   மரம்விழக் குருவிகள் கத்தும்

கடகட வென விருகரம் கொட்டும்
.  கதவுடை சாளரம் தட்டும்
விடுஎனப் புகுவளி தரு முத்தம்
.  வெறுப்புடை பதி தொடுங் கூச்சம்
கொடுமையின் பரிசெனத் தரை தட்டும்
.  குவலயம் புயலிடை சிக்கும்
கடும்பயம் உளம்தனை முழு தள்ளும்
.     கதியுடன் இருதயம் துள்ளும்

முடையுடை குடி மகனழத் திட்டும்
.  முதலுடை யவனிடி மின்னல்
தடையிடப் பெருகிடும் மழை வெள்ளம்
.   தமிழ்நிலம் கொளுமர சொக்கும்
விடைகொடு வாவென விண் கேட்கும்
.   விளை புயல்ஊ எனக் கத்தும்
படையுடை பகை அரசனின் யுத்தம்
.    பவனியில் பலியிடும் சத்தம்,


தருவது பெரும் பிரளயம் போலும்
.  தருமம்கொள் பழிதனும் சூழும்
வருவது எதுவெனில் இலைஅச்சம்
.  வான்புவி தனுமிலை மிச்சம்
பெருகுது புவியினில் புகுவெள்ளம்
.  பிரி நிலம் காலிடை எனினும்
கருகலில் விடிவெழ உயிர் சத்தம்
..  காணுமோ விடப் பெரிதென்னும்.
*****************

Friday, April 6, 2012

தாயின் மடியில் தவழும் பெண்ணே!

   

வெண்மதி உலவும் வானெழிலோ - ஒரு
வீணையின் இன்னிசை தானோ
தண்பொழி லாடுந் தாமரையோ - நீ
தரும்மொழி இனிதாம் தேனோ
பெண்ணெனப் பாரினில் வந்தவளே - நீ
பிறை வளர் முழுமதி யாமோ
விண்வெளி வானிடை இருந்தாளும் - அவள்
வீரசக்தி யவள்கூறோ?

பண்ணிசைபோல் நீயழுதாலும் - அதில்
படுவது மனமது துயரே !
கண்களில் நீர்துளி எழுந்தாலும் - உளம்
காணுது இன்னலும் கனியே
நுண்மதி மீதினில் இருந்தாளும் - என்
நெஞ்சமதின் உயிர் நீயே
புண்ணென உள்ளமும் நோகுதடி - விழி
பொழிவது நீரெனில் மானே !

கண்மணி கறுத்தே இருந்தாலும் - அது
காண்பது ஒளியின் பிம்பம்
மண்கறுத் தே சேறானாலும் - அதில்
மலர்வது எழில்சேர் கமலம்
விண்நில விற்குறை தேய்ந்தாலும் - அது
வீசிடும் ஒளியைச்  சிதறும்
பெண்ணவளே நீ கண்ணுறங்கு - ஊர்
பேசிடும் உன்புகழ் நாளும்

வெண்பருத் தி முகம் அழுதாலே - அதில்
விளைவது செந்நிற வானம்
கண்விழித்தே யரு கிருந்தாலும் - உளம்
காப்பதிலே சுகங் காணும்
செண்பகப் பூவென மணங்காணும் -  உன்
சிரிப்பினில் கவலைகள் ஓடும்
தண்ணிலவே நீதரை வந்தாய் - என்
துயர்களுந் தொலைவென ஆகும்

எண்கழித்தே பின் வகுத்தாலும் - எம்
இருவரின் உயிர்களும் ஒன்றே
மண்செழித்தே வளர் பயிர்போலும் - தினம்
மளமள என வளர் கண்ணே
கண்வழிந்தே நீர் சொரிந்தாலும் - அது
களிப்பினின் எனும் நிலையொன்றே
வண்ணமயில் எனும் வடிவழகே - தனி
வசந்தமென் றாகட்டும் வாழ்வே

தண்ணெழில் சோலையுள் நடந்தாலும் -அது
தருஞ்சுகம் உனைவிடப் பெரிதோ
பெண்ணவள் நாணிடுங் குணந்தானும் - பெறும்
பேரெழில் இனி வருமன்றோ
வெண்மணல் ஆழியின் கரைமீது - தினம்
வீழ்ந்திடும் அலைகளைப் போன்று
எண்ணம் மகிழ்ந்திடு என்மகளே - உனை
ஒருநாள் போற்றிடும் உலகு!

Tuesday, April 3, 2012

தினம் சக்தி வேண்டி


சுத்த சக்தி வித்து முன்றன்
சித்தமுள் விதைத்திடில்
சித்தி காணும் நீயெழுந்து
செல்லுமெந்த பாதையும்
இத்தரை தனில் எடுத்துன்
ஈர்கரங்கள் செய்திடும்
எத்துணை பெரும் வினைக்கும்
ஏதுபங்க மில்லையாம்

சத்தியத்தின் தேவதைக்குச்
சற்றும் மாறே இன்றிடில்
நித்தியம் உனக்கு நீதி
நிச்ச யித்த தாகிடும்
வைத்துள் அன்பு வார்த்தை கூறு
வாழ்வி லேற்றம் கண்டிட
வித்தை யாம்செ யல்திறன்கள்
வெற்றி வாகை சூடுமே

அண்டசரா  சரங்கள்கட்டி
ஆளு மந்தச் சக்தியை
மண்ட லத்தின் ரூப மற்ற
மாசிலா வெண் ஜோதியை
கொண்டிருத்தி நின்னகத்தே
கொள்ள இன்பம் ஒன்றதே
கண்டிருக்கும் வாழ்வுஎன்றும்
காலகால மாகவே

சுற்றி யோடும் எத்திசைக்கும்
செல்லு மிந்த பூமியைப்
பற்றி ஓர்விசைக்குள் வைத்துப்
பார்ப்ப திந்தச் சக்தியாம்
வெற்றி யாகும் உள்ளிரத்தம்
வீறு கொண்டு சுற்றிட
உற்றதான சக்திவேண்டி
உள்மனத்தில் எண்ணிடில்

நித்த மும்நல் சக்தி யேற்றி
நாளும் மின்கலத் தினை
வைத்தி யங்கச் செய்வ தாக
வாழு மிந்த தேகமும்
புத்தொளி கிழக் கெழுந்த
போது நாளில் ஓர்தரம்
சுத்த சக்தி அன்னைதா நின்
சக்தி யென்று கேட்டிடு

முன்னை யுன்றன் அன்னை பெற்ற
அன்னையுந் தன் னன்னையின்
அன்னை யிற்கு முன்னிருக்கும்
அன்னை அன்னை யர்க்கொரு
தன்நிகர்த்த லேதுமற்ற
தாயும் சக்தி தந்திடேல்
என்னதான் நடக்கும் வையம்
ஏதுன் கண்கள் காணுமோ?

Monday, April 2, 2012

பொன்னுலகம்


கண்டதும் விண்டதும் கண்டவர் கொண்டதும்
ஒன்றும் புரியவில்லை - இந்த
அண்டமும் பேரிடி மண்டலம் கண்டிடும்
ஆழ இருண்ட நிலை
கொண்டது நஞ்சதும் துண்டது இரண்டெனக்
கொன்றவன் எங்கள் பகை - இதில்
சண்டையும் நன்மையை தந்திடுமென்றிட
சாய்ந்து விழுந்த நிலை

தண்டமும் தந்தனர் கண்டமோ சாத்திரம்
தப்ப வழி சொல்லலை - உள
நொண்டியர் எம்மினம் முற்று மழிப்பதே
நாட்டில் வகுத்த கொள்கை
வண்டதும் ஓடியும் செண்டில் மதுவினை
கண்டதும் வந்தமரும் -அது
உண்டெனநல் வளம் பங்கிடவந்தன
ஓடிப் பன் நாடுகளும்

பெண்டிரும் பிள்ளையும் இரண்டு திசையினில்
சென்றவர் மீளவில்லை - இதைத்
தண்டனை தந்திடும் சட்டம் கண்கள் கொண்டும்
தாமதைக் காண்பதில்லை
தண்டமும் குற்றமும் தந்திடும் நாடுகள்
தம்மை நினைப்பதில்லை   -  அவை                      
கண்டதும், வந்ததும் எங்கள் நிலைகொண்டு
கண்ணை விழிப்பதில்லை

பண்டைதினம் முதல் கொண்டஎம்மண்ணிலே
கண்டவன் வந்திருக்க -  அட
நண்டென நம்மையே நாமே இழுத்திட
நாடு அழிந்து விட
குண்டரும் காடையர் கொன்றிடக் கைகளும்
கட்டியும் சுட்டொழிக்க அட
இந்த உலகமும் கொண்டாடுதாம் ஆகா,
இன்ப உலகிதென்று .

(மனித உரிமைகள் தின கொண்டாட்டம் நடைப்பெற்ற நாளில் எழுதியது)

Thursday, March 29, 2012

அதிஷ்டமில்லாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
.  நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேர்இல் செடியை வெட்டி விதைநிலத்தில் ஊன்றிவைத்து
.  விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
.  உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
.  பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
.  நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
.  உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?
தேரில் தெய்வவலம் தெருவில்எங்கும் போன தெந்தன்
.  திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று வாழுதென நொந்துமனம்
.  ஏது என்னை யும்எதிர்த்துச் செய்தவன்?

தாவும்அலைகடலில் தனி படகில்செல்ல மழை
.  தூற ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென வீழதிசை
.  அறிதலின்றி நேர்படகு விட்டவன்.
போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி நறும்
.  பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
.  ஏக்கமுடன்  நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்,
 . வாலறுந்து போன பட்ட மானவன்
கூர்இல் கத்தியெனக் கொள்கையில்லாப் புத்தியதும்
 . கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்
பேரில் பாவியெனப், பெண்ணறியாக் காதல்மனம்,
 .  பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரில் வாழ்வில் நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
 .  பார்வைவிழி மூடியிருள் செல்கிறேன்

Wednesday, March 28, 2012

தமிழே துயர் நீக்கும்!

கலையும் கனவின் கற்பனை யாவும்
கவலைதந்தே போகும்
அலையும் மனதில் ஆசைகள் எழவே
தொலையும்நிம்மதி தானும்
மலையும் எதிரே நிற்பதுபோலும்
மனதுள் துயரம் சூழும்
கலையும் தமிழும் இசையும்கூடின்
கணமே துன்பம் போகும்

இலையும் தளிரும் பூவும் பூக்கும்
இளமை கொண்டே தமிழும்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே நிதமும் காணும்
அலையும்கடலும் அதுபோல் ஆழ
மறியாத் தமிழின் பெருமை
தொலையும் வண்ணம்இன்றிப் பேசத்
தமிழை முழுதாய் கொள்வோம்

குலையும் நடுங்கும் கொடுமைசெய்வோர்
கொத்தும் பாம்பும்கூட
அலையும் காற்றி லெழும் இன்னிசையாம்
அதிலே மயக்கம் கொள்ளும்
வலையும் மீனைக் கொள்ளும் அதுபோல்
வண்ணத் தமிழும் எம்மில்
நிலையும் மாற்றும் நெஞ்சை கவரும்
நினைவை அன்பால் வெல்லும்

தலையும் மேவி வெள்ளம்பாயும்
நிலையும் வந்தாலென்ன
அலையும் கதிரும் இரவில்தோன்றி
ஒளியைத் தந்தாலென்ன
சிலையும் உயிரைப் பெற்றே வீதி
சென்றாலும் நற்தமிழோ
கலையும் இன்பம் தமிழின் இனிமை
காணும் என்றும் மாறா

இலையென் வாழ்வில் தமிழேயின்றி
இன்னோர் மொழி; எவ் வூறு
நிலை யென்றாலும் தமிழே யன்றி
நில்லா துயிரும் கூடு
விலை யென்றில்லா வாழ்வில் துயரம்
விலகும் தமிழைப் பாடு
தொலை வென்றாலும் சுற்றும் மனதோ
தமிழ் சொல் எந்தன் நாடு

Monday, March 26, 2012

ஏணிப் படிகள்

வெற்றியின் படிகளில் கற்களும் குறையுது
வேண்டும் வேண்டும் தோழா
வற்றிய சுனைமீன் வாழ்ந்திடத் துடிக்குது
வானம் பொய்க்க லாமா
பற்றிலும் பரிவிலும் பக்குவம் நிறையுது
பாசம் விட்டுப் போமா
சுற்றிலும் இருள் மறைந் தோடுது ஓடுது
சோதி தோன்றும் தோழா

கற்றவை பாடங்கள் கலைப்பது கோவில்கள்
காணும் தென்னர் தோழா
உற்றவை தவறெனில் உணர்வது பயனது
உள்ளம் மாறு வாரா
அற்றது இனிதென ஆக்கிட வந்தவர்
ஆன தழிக்க லாமா
குற்றமும் செய்தவர் குரலது ஓங்கிடின்
கொண்ட பிழைகள் போமா

பெற்றது வாழ்வினைப் பிறரது கையினில்
பட்டு அழியா வாமோ
அற்புத வாழ்வினை ஆண்டவன் செய்தது
யாருக் குரிமை கொல்ல
முற்றும் அழியவென முழுது மெனதுவென
மோகம் கொள்ளு வானேன்?
புற்றி லரவமென பச்சைவிஷம் பரவப்
பார்க்கத் தீண்டுவாரோ

மற்றவர் தகைமையும் சற்றும் குறைவதில்லை
மனிதன் என்ப தாலே
சுற்றும் வாழ்விலறம் கொண்டு பூமியிடை
செய்த பாவம் ஒழிய
சற்றும் பகையுடைமை யின்றி மனம்மகிழ
சார்ந்த  வீடு உனது
பெற்றுவாழ்ந்திடென விட்டுநிலைதளரும்
பண்பு கொள்ளுவாரோ??

மழைநின்ற அதிகாலைநேரம்!



தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில்
தரும்மழை ஓய்ந்துவிட
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல்
தீர்ந்தொரு அமைதிபெற
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச்
சிவந்திடும் வான்வெளிக்க
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை
விடியலில் வெளிநடந்தேன்

கலகல வென ஒலி எழுமதி காலையில்
கதிரவன் வரும்திசையில்
பளபள எனும்ஒளி பரவிட இருளவன்
பயமெழத் தலை மறைந்தான்
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக்
கூடிய தூவானம்
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில்
சிணு சிணுத்திடக் காணும்

சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச்
சடுதியில் நீர் பெருகி
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக்
கிளர்வுடன் அதுவிரைய
மளமள எனவளர் மரங்களும் நீரிடை
மலர்களும் சருகுதிர்த்தே
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும்
வியனுறு கலை வியந்தேன்

வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை
வடிவுடன் தாமரைகள்
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித்
தளர்வுற இதழ் விரியும்
பளபள எனவெயில் பகலென வருமுதல்
பறவைகள் துயில் கலையும்
படபட என அவை பரப்பிய சிறகுடன்
பறந்திடும் வான் வெளியும்

கடகட வெனஉருள் காளைகள் வண்டியில்
கவினுறு சந்தமெழும்
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும்
அழகினை அவைபேணும்
மடமட எனமது வருந்திய வண்டினம்
மலர்களில் மயங்கிவிடும்
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை
கொண்டிட அழதுகொழும்

எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில்
எழும்விழும் பின்னுயரும்
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென
அடுத்ததை செய உணர்த்தும்
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர்
குலவிடும் இனிதென்றலும்
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக்
கொண்டிடச் செய்தகலும்

Saturday, March 24, 2012

நான் என்னும் ஒருவன்!

புரியாத பாடம் அறியாத மொழியில்
தினம்தினம் படிப்பவன் நான்
தெரியாத திசையில் தேரினைஒட்டித்
திக்கற்றுச் செல்பவன் நான்
கரியான இரவில் காகத்தை தேடி
கண்மூடிச்செல்பவன் நான்
பரிமீது ஏறி பரலோகம் தேடும்
பாவத்தின் காதலன் நான்

விரியாத வானம் விசையற்ற பூமி
விருப்போடு வாழ்பவன் நான்
எரியாத வெய்யோன் இறங்காதமேகம்
இதனூடே வாழ்பவன் தான்
பெரிதான ஞானம் பிறக்காத புத்தி
பெருமோட்சம் பெறஆசை காண்
கரியாகும் மேனி காத்திடத் தீயில்
கடுந்தவம் செய்பவன் யான்

சிரிக்காத கண்கள் சினந்தோடும் சொற்கள்
சிலைபோலும் இதயமும்தான்
சரிந்தோடும் நதியாய் வழிமாறியோடி
விதியெண்ணி அழுபவன் நான்
விரிந்தோடும் பாம்பை வளர்த்திடஎண் ணி
வளைபுற்றில் கரம் வைப்பேன் காண்
பிரிந்தோடும் பாதை இரண்டாகப் போனால்
பிழைவழி செல்பவன் நான்

முறிகின்ற முருங்கை மரம்மீது ஊஞ்சல்
மகிழ்வோடு கட்டுவேன் காண்
அரிகின்ற போது நுனிக்கிளை நின்று
அடிக்கிளை வெட்டுவேன் காண்
திரிகின்ற தென்றல் புயலாகும்போது
தெருவிலே எதிர் நடப் பேன்
புரிவதோ எல்லாம் பிழைஎன்கிறார்கள்,
பெரும்பிழை இவர்மொழிதான்

Friday, March 23, 2012

முதல்வன்


(இந்தப் படத்துக்கு கவிதை எழுத கேட்கப்பட்ட கவியரங்கிற்கு
எழுதப்பட்டது.)


முதல்வன்

நீதிதேவன் கூற்று:

இளமலர்க ளெங்கும்நிறைந் திலங்குமெழில் சோலை
இன்னிசையும் தென்றலதும் இன்பந்தரும் வாழ்வை
பழமினிதும் சுவைமதுவும பசியதனைப் போக்க
பால்நிலவும் பனிகுளிரும் படர்ந்தினிமை சேர்க்க
எழும்உதய ஒளிஅழகும்  உச்சிவெயில் நிழலும்
என இனிமை வாழ்வளித்தாள் இயற்கை எனுமன்னை
அழமனமும் இழிவுடனே அஞ்சும்வகை செய்து
அழகுலகை அழித்தவனே இனிநிறுத்து போதும்!


மலைகடலும் வயல்கள்கொளும் மரகத மாவுலகை
மாலைவெயில் மஞ்சளுடன் மனம்கவரச்  செய்து
சிலையழகு மங்கையரும் செல்வருடன் தம்மைச்
சேர்ந்தவரும் கூடிவிளை யாடுமெழில் இல்லம்
கலைநிறைந்த மனமகிழ்வும கொண்டஒரு வாழ்வை
காணெனவே நல்லியற்கை கட்டமைத்த போதும்
கொலைபுரியுங் குற்றங்களை  கொடுமைகளைத் தூண்டி
குலைநடுங்க வைத்தவனுன் குணத்தை இனி மாற்று !



அந்தநேரத்தில்...
(வேறு  )                                  

மேக முடைந்து விழுந்தது வோஒரு
மின்னல் அடித்திடவே
தேக மதிற்கொடுங் கோரமெடுத் தொரு
தீயபெரும் உருவம்
சாக வரமிவன் தந்திடுவா னெனச்
சொல்லு முடல் முறுகி
ஆகக் கொடுமுருக் கொண்டொரு வன்திடு
மென்று முன்னே குதித்தான்

தூய மிளிர்வுடன் ஆடை அணிந்தவன்
நீதியின் காவலனை
பாயுமொ ளிக்கதிர் பட்டுஒ ளிர்ந்திடப்
பக்கமிருந் தவனை
நீயும்எ னக்கொரு தூசு கணக்கென
நெஞ்சினில் எண்ணிவிடு
நேயம் விடுத்திடு வாஉன்தீரமும்
நேரினில் காட்டிவிடு

எத்தனை தூய்மை அழித்தவனாம் இவன்
என்னுடன் நீசமமோ
கத்தி யழித்திட வெட்டிப்புதையெனக்
கட்டளையிட்டவன் காண்
சத்தியம் நேர்மையும் விட்டவர்பக்கமே
சார்ந்திருப்பேன் அறிவாய்
இத்தரை மீதினில் நீதிய ழிந்திட
என்செயல் காரணமே!

பித்தெனும் பிஞ்சுகள் பேசரும் பெண்குலம்
பிள்ளை முதியவர்கள்
அத்தனை பேரையு மள்ளி நெருப்பிடை
அன்று எரிய வைத்தேன்
பொத்தெனப் போட்டே எரித்ததும், பாமரர்
வெட்டும் குழி பதுங்க
முத்தென வெண்விழி கொட்டவர் மூச்சினை
மூடி மண்போட்டழித்தேன்

கத்தும் குரலெழும் போது இனித்திடும்
காண்பதும் ஆனந்தமே
குத்து மொலிக்கொரு கூவியழும்குரல்
கோடிஎன் இன்பங்களே
சித்த மிழந்தனை என்னை எதிர்த்திடும்
செய்கையை விட்டுவிடு
புத்திரனே உந்தன் பொன்னுடல் காத்திடப்
போ இதில் தோற்றுவிடு

  ---வேறு----

(நீதியின் தேவன்: உலகைப் படைத்த சக்தியைப் போற்றிக் கூறுதல்)
கண்களைத் தந்தவள் காணெனில் நல்லதைக்
காணுதல் முறைமை யன்றோ
பெண்ணிலே காதலாம் மென்னுணர் வாக்கினாள்
பிரியமாய் வாழவன்றோ
எண்ணெயுள் எரிகின்ற ஒளிவைத்தும் திரியுடன்
ஒன்றிடத் தீபம் செய்தாள்
எண்ணமதில் தூய்மை செய்தனள் ஆணும்பெண்

ஒன்றாகி வாழவன்றோ!

கண்களோ காணுயிர் கொல்லென்று சினங்கொண்டு
கசந்திடும் நெஞ்சமாகி
பெண்மையைச் சிதைத்தவர் பிறன்மனை கொள்ளவும்
பிழைபடும் மனிதமாக
கண்ணியம் அற்றவர் காடுறை மாக்களாய்
காதகர் பேய்களாக்கி
மண்ணிலே மாந்தரை மாற்றினாய் கொடுமையே
மறுபடி எச்சரித்தேன்

வெண்ணிலா நீலவான் தந்தவள் நிலமதில்
விளைந்திடப் பசும்பயிர்கள்
வண்ணமோ
நீலமாய் வைத்தனள்  ஆழியை
வடிவொடு பூமி செய்து
கண்ணிய வாழ்வுறக் கல்வியும் அறிந்திடக்

கற்றிடும் ஆற்றல் தந்தாள்
திண்ணிய கொள்கைகள் தினந்தின மழித்துநீ
தீமைகள் செய்யவைத்தாய்

நீலமும் பச்சையாய் நிறமிட்ட புவிதன்னை
நீஇரத்த மோடவைத்து
ஓலமும் கதறலாய் ஊரெல்லாம் அழுதிட
உலகதைச் சீரழித்தாய்
காலமாய் பெண்மையை அழித்ததைப் பிறர்விழி
காணவும் செய்துநின்றாய்
ஞாலமே நல்லதை விட்டு நடந்திட
நாளும்பகை வளர்த்தாய்                     


(வேறு---)
கண்கள் சினத்திடக் கண்டனவோ அவன்
காட்டிய வெஞ்சினமோ
புண்ணென வேதனை கொண்டுளம் மீதினில்
பொங்கிய கோபமதோ
வண்ணம் சிவந்திட உள்ளவனாம் கொடும்
வஞ்சகன் கைகளுடன்
எண்ணியதில் வென்று இவ்வுலகைக் கொள்ள
எட்டித்தன் கைகொடுத்தான்

வெற்றி கொள்ளப் பலப் போட்டிவைத்தார் அதில்
வெல்லுமவர் பொறுத்து
சுற்றி சுழன்றிடும் பூமியதில் பலர்
சந்தோச  வாழ் வினுக்காய்
குற்றமிழைத்திடா மாந்தர்களும் உயிர்
கொன்று குவித்தவரும்
சற்று பொறுத்திடக் காத்திருந்தார் மனம்
சஞ்சலம்கொண்டிருக்க

நீதிக்குக் காவலன் முன்னிருந்தான் மனம்
நேர்மையைக் கொண்டிருந்தான்
பாதிக்கு மேலாய் இழந்தவர்கள் நீதி
பார்த்துக் துடித்திருந்தார்
சாதிக்கவே சித்தம் கொண்டிருந்தும் அது
சாத்திய மாகிடுமோ
ஊதிப் பெருத்திட்ட பேய்களுக்குப் பலம்
ஓங்கிப் பெருத்திடுமோ

வையகம்நின்று சுழல்கிறது வெயில்
வாரி அடிக்கிறது
மெய்யகம் நின்று துடித்திட ஓர்குலம்
மாய்ந்து கிடக்கின்றது
பொய்யில் பிறந்தவன் செய்ததெல்லாம்
புவி சொல்லித் தெரிகிறது
பையவெனும் ஒருநீதிவென்றே அந்தப்
பாமரர் வாழுவரோ?

நினைவும் வாழ்வும்

மலர்கள்மேனி அனலின்மூச்சு மருகச்செய்யுதோ - இன்ப
மாலைநேர முலவும்வேளை மனதில் துன்பமோ?
உலரும் வேளை கருமைமேகம் உதிரும் தூறலோ - நன்கு
உறங்கும்வேளை இடியினோசை அதிர வானமோ?
புலரும் வேளை கதிரும்கூதல் போக வைக்குமோ -அன்றிப்
பரவும் சூடு வலியென்றாகப் பாடு துன்பமோ ?
பலரும் வந்து  பாடிஆடிப் பழகும் போதிலே -நிற்கும்
பளிங்குமேடை உருளும்பாறை பனி யென்றாகுமோ?

வசந்தம் வீசு மாலைநேரம்  வந்த புயலிதோ - அன்பு
விளையுங் காலை வேகமழையில் விளையுந் துன்பமோ?
அசதியாகத்  துயிலும்கொள்ள ஆந்தைஅலறுமோ - கட்டில்
அசைந்து பேய்கள் உறையும் காட்டில் இருந்தபோலுமோ?
திசையும் திக்கும் தெரிந்திடாத திக்கில் பயணமோ - கால்கள்
தேர்ந்திடாத ஒற்றைப்பாதை  துளைக்குங் கற்களோ?
அசைந்திடாத காற்றும் மூச்சின் ஆழம் காணுதோ - உள்ளே
இருந்துஆடும் உயிர்துடித்து என்ன வாகுதோ?

இனியராகம் மீட்டுங் கைகள் ஏந்தும்வீணையோ - கைகள்
இசையும் மீட்ட எழுந்த ராகம் எதுமுகாரியோ?
பனிதிரண்டு இலையிலோடி துளிவிழுந்ததோ - கண்கள்
பலமிழந்து அழுதுநாளும் வலியிழந்த்தோ?
புனிதகோவில் மணியுமாடிப் பரவுமோசையோ - ஓசை
படரவானில் இடியென்றாகிப் புவி அதிர்ந்ததோ
கனியின்மீது தேனைஊற்றிக் கடித்தினிக்குமோ - நாவில்
கசந்து வேம்பின் சுவையென்றாகிக் காணும் கோலமோ

தனிமையாக முழுநிலாவும் தண்மை ஓடைநீர்- இன்பம்
தருமுலாவில் அலறும்ஓசை இதயம் உறையுமோ
வனிதைகாணக் காதல்கொண்டு வந்தணைக் கையில் - காணல்
கனவு என்று மனைவிதொட்டுத் துயில் எழுப்பவோ
குனிந்து கோவிற் தெய்வம்வேண்டக் கருணைதாருமோ - அன்றி
கொண்டபாரம் வீழும்வண்ணம் குடைசரிக்குமோ
மனிதவாழ்வில் ஒன்று  மாறி வேறென்றாகுமோ - மஞ்சம்
மலர்கள் தூவித் துயிலஎண்ண மலருள் முட்களோ?

Thursday, March 22, 2012

வாழ்வும் துயரும்

இன்ன லினித்திட வேண்டுமெம் வாழ்வினில்
ஏற்ற மெடுத்திட நாளும்
மென்னுள்ள மீதினில்  தோன்றும் வலிகளை
மெல்ல மறந்திட வேண்டும்
தன்மை திடம்நெஞ்சில் வேண்டும் துயர்களைத்
தாங்கும் உரம்கொள்ள வேண்டும்
புன்னகை கொண்டிட வேண்டும் புயல்தனும்
போகும்வழி நிறைந்தாலும்

செந்நெல் வயலிடை ஊற்றும் மழைவெள்ளம்
சுற்றி வரம்பினுள் நிற்கும்
அந்நிலை விட்டுயர் வாகில்ஆ  டுங்கதிர்
அத்த னையும்கெட்டுப்  போகும்
தன்னள வைமீறித் தோன்றும் துயரினில்
தாங்கிடா துள்ளமும் சோரும்
பொன்னென் மனதுபுண் ணாகும் துன்பமது
போகும்வரை மௌனமாகும்

துன்ப நிலைதனை மாற்றும்  வழி கண்டு
தொட்டதெல்லாம் நலமாக
புன்மைகள் மேல்விழப் பூவாய் எண்ணிமனம்
பொல்லாப்பு நீக்கிடவேணும்
நன்னறிவோ டுயர் மாற்றம் பெறும்வழி
நாடியடைந்திட வேண்டும்
இன்னலும் இன்பமும் வாழ்வில் நிதம்நிதம்
எத்தனை மாறுதல்கொள்ளும்

விண்ணில் கதிர்வர வைத்த விதியினை
விட்டு விலகுவதில்லை
தண்ணிலவோ தடு மாறும் தினம்வர
தாமதம் ஓர்நிலை யில்லை
மண்ணில் மனங்களும் கொண்ட விதியினில்
மாற்றங்கள் ஏன்திட மில்லை
விண்ணொளி சக்தியே வைத்து விளையாடு
விந்தை நாமுன்கையில் பொம்மை

இயற்கையின் மௌனம்


நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப்   பிறர் காணா  ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும்  பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை  வான் தெய்வம் கேட்காதோ?

வேண்டும் சக்தி தேவி!

 

அழகான ஓடை அதிலோடும்நீரும்’
அரும்பான மலர் போலும் வாழ்வும்
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும்
இதை மிஞ்சும் விதமான அறிவும்
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள்
விதமாக துயர்போக மகிழ்வும்
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும்
படர்கின்ற மனம் வேண்டும் தாயே!

கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும்
கொத்தும் வல்லூறாகக் குணமும்
மதிவானில் குறையும் மழைதூற துளியும்
மணல்வீழும் நிலை தாழவேண்டாம்
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும்
கரை ஏறக் குடிகாணும் அழிவும்
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும்

நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம்
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும்
வருந்தாத உள்ளங்கள் வேண்டும்
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம்
பழமென்று இனிதான உறவும்
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம்
புன்னகை புன்னகை வேண்டும்

குயிலோசை கூவும் குரலின்பந் தானும்
கனிவோடு காதோரம் செல்லும்
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும்
விளைவான எதிரோசை வேண்டாம்
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம்
படும்தூறல் மழைகண்ட தோகை
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும்
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும்

ஒளி வரும் இனியென்ன !

பொடிபடத் துயர்தனை உடைபட விடுபுறப்
படுபகை யினிமறந்தே
துடியிள மனமதில் தொகையென வரமகிழ்
வுடனிரு துணிவெழவே
கடிதென வுளமனக் கடுகயமை கள்தெளி
வுறவெடு உளமகிழ்வே
மடியிடை கிடதமி ழன்னைமலர் முகமதை
மலர்வுறச் செயநிதமே

படியினைப் பலகடந் தனமினி யெனஒளி
பகல்வரத் துயருறவோ
முடிதனை உடையமன் னவனெனப் பெருமையில்
மலர்ந்திட எது தடையோ
இடிமின்னல் பொழிமழை யுடனிருள் விலகிய
தினிச்சுக மெனமறந்தே
படிகவி தைகள்பல முறபல முறையவை
பருகிட மதுஎனவே

தடிதனைக் கரமதில் எடுகுரு வினைக்கொடுந்
தவறெனக் கருதுவமோ
படிதனைப் பலகடந் திடஅடி தனையுளம்
பதமுற வெனஅறிவோம்
கொடிதென நினவுறக் கருதுவ தெவருமில்
குளமிடை கமலமென
வடிவினை யெடுமலர் வரும் கிழக் கெனும்திசை’
விடிவுறக் கதிரொளியே!

Sunday, March 4, 2012

இம்மையும் மறுமையும் ( சக்தி தா!)

இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)

ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா

வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா

மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா

நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்

தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்

மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ

ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!