Thursday, March 29, 2012

அதிஷ்டமில்லாதவன்

நீரில் எழுதிவைத்தேன் நித்திரையில் பூப்பறித்தேன்
.  நெஞ்சிலெழும் கற்பனையை போற்றினேன்
வேர்இல் செடியை வெட்டி விதைநிலத்தில் ஊன்றிவைத்து
.  விளையும் என்றுகாத்து நிதம் ஏங்கினேன்
ஊரும்வானிடையே ஓடிவண்ண நிலவெறிக்க
.  உலரவென்று துணிதுவைத்து விரித்தவன்
பேரில் பெரியவனாய் புகழெடுக்க வேண்டுமென்று
.  பேரை மாற்றி மாற்றிப் பார்த்து தோற்றவன்

நாரில்பூ இணைத்தே நல்லதொரு மாலை கொண்டேன்
.  நாரிருக்க பூஉதிர்ந்து போனதேன்?
ஊரில் மேகம் மழை ஊற்றுகின்றபோது எந்தன்
.  உச்சிமுகில் மட்டும் பொய்த்துப் போனதேன்?
தேரில் தெய்வவலம் தெருவில்எங்கும் போன தெந்தன்
.  திக்கில் மட்டும் இருள்படர்ந்து காண்பதேன்?
யாரில் உண்மையின்று வாழுதென நொந்துமனம்
.  ஏது என்னை யும்எதிர்த்துச் செய்தவன்?

தாவும்அலைகடலில் தனி படகில்செல்ல மழை
.  தூற ஓட்டைபோட்டு ஓடவிட்டவன்
ஆறில் நீர்நடந்து அருவியென வீழதிசை
.  அறிதலின்றி நேர்படகு விட்டவன்.
போரில் வெல்லவொரு தந்திரமென் றெண்ணி நறும்
.  பூவை அம்பில் வைத்து வீசித் தோற்றவன்
ஏரில் வயலுழுது எள்ளு விதைத் தறுவடைக்கு
.  ஏக்கமுடன்  நெற்கதிர்க்காய் காத்தவன்

வாரிக் குதித்துவெள்ளம் வயல் வரம்பை மீறியதாய்,
 . வாலறுந்து போன பட்ட மானவன்
கூர்இல் கத்தியெனக் கொள்கையில்லாப் புத்தியதும்
 . கொண்டு இந்தப் பூமியிலே வாழ்பவன்
பேரில் பாவியெனப், பெண்ணறியாக் காதல்மனம்,
 .  பொன்னிலவு பொய்த்த வானமாகினேன்
பாரில் வாழ்வில் நடுப் பாதையிலே முள்ளிருக்கப்
 .  பார்வைவிழி மூடியிருள் செல்கிறேன்

Wednesday, March 28, 2012

தமிழே துயர் நீக்கும்!

கலையும் கனவின் கற்பனை யாவும்
கவலைதந்தே போகும்
அலையும் மனதில் ஆசைகள் எழவே
தொலையும்நிம்மதி தானும்
மலையும் எதிரே நிற்பதுபோலும்
மனதுள் துயரம் சூழும்
கலையும் தமிழும் இசையும்கூடின்
கணமே துன்பம் போகும்

இலையும் தளிரும் பூவும் பூக்கும்
இளமை கொண்டே தமிழும்
குலையும் கொள்ளும் கனியின் இனிமை
கொண்டே நிதமும் காணும்
அலையும்கடலும் அதுபோல் ஆழ
மறியாத் தமிழின் பெருமை
தொலையும் வண்ணம்இன்றிப் பேசத்
தமிழை முழுதாய் கொள்வோம்

குலையும் நடுங்கும் கொடுமைசெய்வோர்
கொத்தும் பாம்பும்கூட
அலையும் காற்றி லெழும் இன்னிசையாம்
அதிலே மயக்கம் கொள்ளும்
வலையும் மீனைக் கொள்ளும் அதுபோல்
வண்ணத் தமிழும் எம்மில்
நிலையும் மாற்றும் நெஞ்சை கவரும்
நினைவை அன்பால் வெல்லும்

தலையும் மேவி வெள்ளம்பாயும்
நிலையும் வந்தாலென்ன
அலையும் கதிரும் இரவில்தோன்றி
ஒளியைத் தந்தாலென்ன
சிலையும் உயிரைப் பெற்றே வீதி
சென்றாலும் நற்தமிழோ
கலையும் இன்பம் தமிழின் இனிமை
காணும் என்றும் மாறா

இலையென் வாழ்வில் தமிழேயின்றி
இன்னோர் மொழி; எவ் வூறு
நிலை யென்றாலும் தமிழே யன்றி
நில்லா துயிரும் கூடு
விலை யென்றில்லா வாழ்வில் துயரம்
விலகும் தமிழைப் பாடு
தொலை வென்றாலும் சுற்றும் மனதோ
தமிழ் சொல் எந்தன் நாடு

Monday, March 26, 2012

ஏணிப் படிகள்

வெற்றியின் படிகளில் கற்களும் குறையுது
வேண்டும் வேண்டும் தோழா
வற்றிய சுனைமீன் வாழ்ந்திடத் துடிக்குது
வானம் பொய்க்க லாமா
பற்றிலும் பரிவிலும் பக்குவம் நிறையுது
பாசம் விட்டுப் போமா
சுற்றிலும் இருள் மறைந் தோடுது ஓடுது
சோதி தோன்றும் தோழா

கற்றவை பாடங்கள் கலைப்பது கோவில்கள்
காணும் தென்னர் தோழா
உற்றவை தவறெனில் உணர்வது பயனது
உள்ளம் மாறு வாரா
அற்றது இனிதென ஆக்கிட வந்தவர்
ஆன தழிக்க லாமா
குற்றமும் செய்தவர் குரலது ஓங்கிடின்
கொண்ட பிழைகள் போமா

பெற்றது வாழ்வினைப் பிறரது கையினில்
பட்டு அழியா வாமோ
அற்புத வாழ்வினை ஆண்டவன் செய்தது
யாருக் குரிமை கொல்ல
முற்றும் அழியவென முழுது மெனதுவென
மோகம் கொள்ளு வானேன்?
புற்றி லரவமென பச்சைவிஷம் பரவப்
பார்க்கத் தீண்டுவாரோ

மற்றவர் தகைமையும் சற்றும் குறைவதில்லை
மனிதன் என்ப தாலே
சுற்றும் வாழ்விலறம் கொண்டு பூமியிடை
செய்த பாவம் ஒழிய
சற்றும் பகையுடைமை யின்றி மனம்மகிழ
சார்ந்த  வீடு உனது
பெற்றுவாழ்ந்திடென விட்டுநிலைதளரும்
பண்பு கொள்ளுவாரோ??

மழைநின்ற அதிகாலைநேரம்!



தடதட எனஇடி தொலைவெழக் கருமுகில்
தரும்மழை ஓய்ந்துவிட
திடுதிடு மெனமனம் திகிலுறப் பெரும்புயல்
தீர்ந்தொரு அமைதிபெற
சிடுசிடு என மனம் சினந்தவள் முகமெனச்
சிவந்திடும் வான்வெளிக்க
வெடவெட எனக்குளிர் வீசிடும் காற்றிடை
விடியலில் வெளிநடந்தேன்

கலகல வென ஒலி எழுமதி காலையில்
கதிரவன் வரும்திசையில்
பளபள எனும்ஒளி பரவிட இருளவன்
பயமெழத் தலை மறைந்தான்
கொளகொள எனநீர் கொட்டிய மழைவிடக்
கூடிய தூவானம்
சிலபல துளிகளைச் சிதறிடத் தூறலில்
சிணு சிணுத்திடக் காணும்

சலசல எனும்குளி ரோடையில் மழைவிழச்
சடுதியில் நீர் பெருகி
கிளுகிளு எனநகை புரிபவள் போல்மனக்
கிளர்வுடன் அதுவிரைய
மளமள எனவளர் மரங்களும் நீரிடை
மலர்களும் சருகுதிர்த்தே
விழவிழ விரிந்திடும் இயற்கையின் அலையெனும்
வியனுறு கலை வியந்தேன்

வகைவகை யெனப்பல மலர்விரி சுனையிடை
வடிவுடன் தாமரைகள்
தகதக எனஒளிர் கதிரவன் தனையெண்ணித்
தளர்வுற இதழ் விரியும்
பளபள எனவெயில் பகலென வருமுதல்
பறவைகள் துயில் கலையும்
படபட என அவை பரப்பிய சிறகுடன்
பறந்திடும் வான் வெளியும்

கடகட வெனஉருள் காளைகள் வண்டியில்
கவினுறு சந்தமெழும்
அடியடியென அவன் அதட்டியும் நடைதரும்
அழகினை அவைபேணும்
மடமட எனமது வருந்திய வண்டினம்
மலர்களில் மயங்கிவிடும்
கொடுகொடு வெனச்சிறு குழந்தைகள் அன்பினை
கொண்டிட அழதுகொழும்

எழஎழ விழுந்திடும் சிலந்தியும் வலைதனில்
எழும்விழும் பின்னுயரும்
அழஅழ ஆவதுஎதுவுமே இலையென
அடுத்ததை செய உணர்த்தும்
குளுகுளு எனப் பொழில் குளிர்வினை யெடுமலர்
குலவிடும் இனிதென்றலும்
குறுகுறு எனமனம் கொளும்சுக உணர்வினைக்
கொண்டிடச் செய்தகலும்

Saturday, March 24, 2012

நான் என்னும் ஒருவன்!

புரியாத பாடம் அறியாத மொழியில்
தினம்தினம் படிப்பவன் நான்
தெரியாத திசையில் தேரினைஒட்டித்
திக்கற்றுச் செல்பவன் நான்
கரியான இரவில் காகத்தை தேடி
கண்மூடிச்செல்பவன் நான்
பரிமீது ஏறி பரலோகம் தேடும்
பாவத்தின் காதலன் நான்

விரியாத வானம் விசையற்ற பூமி
விருப்போடு வாழ்பவன் நான்
எரியாத வெய்யோன் இறங்காதமேகம்
இதனூடே வாழ்பவன் தான்
பெரிதான ஞானம் பிறக்காத புத்தி
பெருமோட்சம் பெறஆசை காண்
கரியாகும் மேனி காத்திடத் தீயில்
கடுந்தவம் செய்பவன் யான்

சிரிக்காத கண்கள் சினந்தோடும் சொற்கள்
சிலைபோலும் இதயமும்தான்
சரிந்தோடும் நதியாய் வழிமாறியோடி
விதியெண்ணி அழுபவன் நான்
விரிந்தோடும் பாம்பை வளர்த்திடஎண் ணி
வளைபுற்றில் கரம் வைப்பேன் காண்
பிரிந்தோடும் பாதை இரண்டாகப் போனால்
பிழைவழி செல்பவன் நான்

முறிகின்ற முருங்கை மரம்மீது ஊஞ்சல்
மகிழ்வோடு கட்டுவேன் காண்
அரிகின்ற போது நுனிக்கிளை நின்று
அடிக்கிளை வெட்டுவேன் காண்
திரிகின்ற தென்றல் புயலாகும்போது
தெருவிலே எதிர் நடப் பேன்
புரிவதோ எல்லாம் பிழைஎன்கிறார்கள்,
பெரும்பிழை இவர்மொழிதான்

Friday, March 23, 2012

முதல்வன்


(இந்தப் படத்துக்கு கவிதை எழுத கேட்கப்பட்ட கவியரங்கிற்கு
எழுதப்பட்டது.)


முதல்வன்

நீதிதேவன் கூற்று:

இளமலர்க ளெங்கும்நிறைந் திலங்குமெழில் சோலை
இன்னிசையும் தென்றலதும் இன்பந்தரும் வாழ்வை
பழமினிதும் சுவைமதுவும பசியதனைப் போக்க
பால்நிலவும் பனிகுளிரும் படர்ந்தினிமை சேர்க்க
எழும்உதய ஒளிஅழகும்  உச்சிவெயில் நிழலும்
என இனிமை வாழ்வளித்தாள் இயற்கை எனுமன்னை
அழமனமும் இழிவுடனே அஞ்சும்வகை செய்து
அழகுலகை அழித்தவனே இனிநிறுத்து போதும்!


மலைகடலும் வயல்கள்கொளும் மரகத மாவுலகை
மாலைவெயில் மஞ்சளுடன் மனம்கவரச்  செய்து
சிலையழகு மங்கையரும் செல்வருடன் தம்மைச்
சேர்ந்தவரும் கூடிவிளை யாடுமெழில் இல்லம்
கலைநிறைந்த மனமகிழ்வும கொண்டஒரு வாழ்வை
காணெனவே நல்லியற்கை கட்டமைத்த போதும்
கொலைபுரியுங் குற்றங்களை  கொடுமைகளைத் தூண்டி
குலைநடுங்க வைத்தவனுன் குணத்தை இனி மாற்று !



அந்தநேரத்தில்...
(வேறு  )                                  

மேக முடைந்து விழுந்தது வோஒரு
மின்னல் அடித்திடவே
தேக மதிற்கொடுங் கோரமெடுத் தொரு
தீயபெரும் உருவம்
சாக வரமிவன் தந்திடுவா னெனச்
சொல்லு முடல் முறுகி
ஆகக் கொடுமுருக் கொண்டொரு வன்திடு
மென்று முன்னே குதித்தான்

தூய மிளிர்வுடன் ஆடை அணிந்தவன்
நீதியின் காவலனை
பாயுமொ ளிக்கதிர் பட்டுஒ ளிர்ந்திடப்
பக்கமிருந் தவனை
நீயும்எ னக்கொரு தூசு கணக்கென
நெஞ்சினில் எண்ணிவிடு
நேயம் விடுத்திடு வாஉன்தீரமும்
நேரினில் காட்டிவிடு

எத்தனை தூய்மை அழித்தவனாம் இவன்
என்னுடன் நீசமமோ
கத்தி யழித்திட வெட்டிப்புதையெனக்
கட்டளையிட்டவன் காண்
சத்தியம் நேர்மையும் விட்டவர்பக்கமே
சார்ந்திருப்பேன் அறிவாய்
இத்தரை மீதினில் நீதிய ழிந்திட
என்செயல் காரணமே!

பித்தெனும் பிஞ்சுகள் பேசரும் பெண்குலம்
பிள்ளை முதியவர்கள்
அத்தனை பேரையு மள்ளி நெருப்பிடை
அன்று எரிய வைத்தேன்
பொத்தெனப் போட்டே எரித்ததும், பாமரர்
வெட்டும் குழி பதுங்க
முத்தென வெண்விழி கொட்டவர் மூச்சினை
மூடி மண்போட்டழித்தேன்

கத்தும் குரலெழும் போது இனித்திடும்
காண்பதும் ஆனந்தமே
குத்து மொலிக்கொரு கூவியழும்குரல்
கோடிஎன் இன்பங்களே
சித்த மிழந்தனை என்னை எதிர்த்திடும்
செய்கையை விட்டுவிடு
புத்திரனே உந்தன் பொன்னுடல் காத்திடப்
போ இதில் தோற்றுவிடு

  ---வேறு----

(நீதியின் தேவன்: உலகைப் படைத்த சக்தியைப் போற்றிக் கூறுதல்)
கண்களைத் தந்தவள் காணெனில் நல்லதைக்
காணுதல் முறைமை யன்றோ
பெண்ணிலே காதலாம் மென்னுணர் வாக்கினாள்
பிரியமாய் வாழவன்றோ
எண்ணெயுள் எரிகின்ற ஒளிவைத்தும் திரியுடன்
ஒன்றிடத் தீபம் செய்தாள்
எண்ணமதில் தூய்மை செய்தனள் ஆணும்பெண்

ஒன்றாகி வாழவன்றோ!

கண்களோ காணுயிர் கொல்லென்று சினங்கொண்டு
கசந்திடும் நெஞ்சமாகி
பெண்மையைச் சிதைத்தவர் பிறன்மனை கொள்ளவும்
பிழைபடும் மனிதமாக
கண்ணியம் அற்றவர் காடுறை மாக்களாய்
காதகர் பேய்களாக்கி
மண்ணிலே மாந்தரை மாற்றினாய் கொடுமையே
மறுபடி எச்சரித்தேன்

வெண்ணிலா நீலவான் தந்தவள் நிலமதில்
விளைந்திடப் பசும்பயிர்கள்
வண்ணமோ
நீலமாய் வைத்தனள்  ஆழியை
வடிவொடு பூமி செய்து
கண்ணிய வாழ்வுறக் கல்வியும் அறிந்திடக்

கற்றிடும் ஆற்றல் தந்தாள்
திண்ணிய கொள்கைகள் தினந்தின மழித்துநீ
தீமைகள் செய்யவைத்தாய்

நீலமும் பச்சையாய் நிறமிட்ட புவிதன்னை
நீஇரத்த மோடவைத்து
ஓலமும் கதறலாய் ஊரெல்லாம் அழுதிட
உலகதைச் சீரழித்தாய்
காலமாய் பெண்மையை அழித்ததைப் பிறர்விழி
காணவும் செய்துநின்றாய்
ஞாலமே நல்லதை விட்டு நடந்திட
நாளும்பகை வளர்த்தாய்                     


(வேறு---)
கண்கள் சினத்திடக் கண்டனவோ அவன்
காட்டிய வெஞ்சினமோ
புண்ணென வேதனை கொண்டுளம் மீதினில்
பொங்கிய கோபமதோ
வண்ணம் சிவந்திட உள்ளவனாம் கொடும்
வஞ்சகன் கைகளுடன்
எண்ணியதில் வென்று இவ்வுலகைக் கொள்ள
எட்டித்தன் கைகொடுத்தான்

வெற்றி கொள்ளப் பலப் போட்டிவைத்தார் அதில்
வெல்லுமவர் பொறுத்து
சுற்றி சுழன்றிடும் பூமியதில் பலர்
சந்தோச  வாழ் வினுக்காய்
குற்றமிழைத்திடா மாந்தர்களும் உயிர்
கொன்று குவித்தவரும்
சற்று பொறுத்திடக் காத்திருந்தார் மனம்
சஞ்சலம்கொண்டிருக்க

நீதிக்குக் காவலன் முன்னிருந்தான் மனம்
நேர்மையைக் கொண்டிருந்தான்
பாதிக்கு மேலாய் இழந்தவர்கள் நீதி
பார்த்துக் துடித்திருந்தார்
சாதிக்கவே சித்தம் கொண்டிருந்தும் அது
சாத்திய மாகிடுமோ
ஊதிப் பெருத்திட்ட பேய்களுக்குப் பலம்
ஓங்கிப் பெருத்திடுமோ

வையகம்நின்று சுழல்கிறது வெயில்
வாரி அடிக்கிறது
மெய்யகம் நின்று துடித்திட ஓர்குலம்
மாய்ந்து கிடக்கின்றது
பொய்யில் பிறந்தவன் செய்ததெல்லாம்
புவி சொல்லித் தெரிகிறது
பையவெனும் ஒருநீதிவென்றே அந்தப்
பாமரர் வாழுவரோ?

நினைவும் வாழ்வும்

மலர்கள்மேனி அனலின்மூச்சு மருகச்செய்யுதோ - இன்ப
மாலைநேர முலவும்வேளை மனதில் துன்பமோ?
உலரும் வேளை கருமைமேகம் உதிரும் தூறலோ - நன்கு
உறங்கும்வேளை இடியினோசை அதிர வானமோ?
புலரும் வேளை கதிரும்கூதல் போக வைக்குமோ -அன்றிப்
பரவும் சூடு வலியென்றாகப் பாடு துன்பமோ ?
பலரும் வந்து  பாடிஆடிப் பழகும் போதிலே -நிற்கும்
பளிங்குமேடை உருளும்பாறை பனி யென்றாகுமோ?

வசந்தம் வீசு மாலைநேரம்  வந்த புயலிதோ - அன்பு
விளையுங் காலை வேகமழையில் விளையுந் துன்பமோ?
அசதியாகத்  துயிலும்கொள்ள ஆந்தைஅலறுமோ - கட்டில்
அசைந்து பேய்கள் உறையும் காட்டில் இருந்தபோலுமோ?
திசையும் திக்கும் தெரிந்திடாத திக்கில் பயணமோ - கால்கள்
தேர்ந்திடாத ஒற்றைப்பாதை  துளைக்குங் கற்களோ?
அசைந்திடாத காற்றும் மூச்சின் ஆழம் காணுதோ - உள்ளே
இருந்துஆடும் உயிர்துடித்து என்ன வாகுதோ?

இனியராகம் மீட்டுங் கைகள் ஏந்தும்வீணையோ - கைகள்
இசையும் மீட்ட எழுந்த ராகம் எதுமுகாரியோ?
பனிதிரண்டு இலையிலோடி துளிவிழுந்ததோ - கண்கள்
பலமிழந்து அழுதுநாளும் வலியிழந்த்தோ?
புனிதகோவில் மணியுமாடிப் பரவுமோசையோ - ஓசை
படரவானில் இடியென்றாகிப் புவி அதிர்ந்ததோ
கனியின்மீது தேனைஊற்றிக் கடித்தினிக்குமோ - நாவில்
கசந்து வேம்பின் சுவையென்றாகிக் காணும் கோலமோ

தனிமையாக முழுநிலாவும் தண்மை ஓடைநீர்- இன்பம்
தருமுலாவில் அலறும்ஓசை இதயம் உறையுமோ
வனிதைகாணக் காதல்கொண்டு வந்தணைக் கையில் - காணல்
கனவு என்று மனைவிதொட்டுத் துயில் எழுப்பவோ
குனிந்து கோவிற் தெய்வம்வேண்டக் கருணைதாருமோ - அன்றி
கொண்டபாரம் வீழும்வண்ணம் குடைசரிக்குமோ
மனிதவாழ்வில் ஒன்று  மாறி வேறென்றாகுமோ - மஞ்சம்
மலர்கள் தூவித் துயிலஎண்ண மலருள் முட்களோ?

Thursday, March 22, 2012

வாழ்வும் துயரும்

இன்ன லினித்திட வேண்டுமெம் வாழ்வினில்
ஏற்ற மெடுத்திட நாளும்
மென்னுள்ள மீதினில்  தோன்றும் வலிகளை
மெல்ல மறந்திட வேண்டும்
தன்மை திடம்நெஞ்சில் வேண்டும் துயர்களைத்
தாங்கும் உரம்கொள்ள வேண்டும்
புன்னகை கொண்டிட வேண்டும் புயல்தனும்
போகும்வழி நிறைந்தாலும்

செந்நெல் வயலிடை ஊற்றும் மழைவெள்ளம்
சுற்றி வரம்பினுள் நிற்கும்
அந்நிலை விட்டுயர் வாகில்ஆ  டுங்கதிர்
அத்த னையும்கெட்டுப்  போகும்
தன்னள வைமீறித் தோன்றும் துயரினில்
தாங்கிடா துள்ளமும் சோரும்
பொன்னென் மனதுபுண் ணாகும் துன்பமது
போகும்வரை மௌனமாகும்

துன்ப நிலைதனை மாற்றும்  வழி கண்டு
தொட்டதெல்லாம் நலமாக
புன்மைகள் மேல்விழப் பூவாய் எண்ணிமனம்
பொல்லாப்பு நீக்கிடவேணும்
நன்னறிவோ டுயர் மாற்றம் பெறும்வழி
நாடியடைந்திட வேண்டும்
இன்னலும் இன்பமும் வாழ்வில் நிதம்நிதம்
எத்தனை மாறுதல்கொள்ளும்

விண்ணில் கதிர்வர வைத்த விதியினை
விட்டு விலகுவதில்லை
தண்ணிலவோ தடு மாறும் தினம்வர
தாமதம் ஓர்நிலை யில்லை
மண்ணில் மனங்களும் கொண்ட விதியினில்
மாற்றங்கள் ஏன்திட மில்லை
விண்ணொளி சக்தியே வைத்து விளையாடு
விந்தை நாமுன்கையில் பொம்மை

இயற்கையின் மௌனம்


நீர்சாட்சி நிலம்சாட்சி நீலவிண் முகில்சாட்சி
ஊரெல்லை மரம்சாட்சி உறங்காத மதிசாட்சி
ஏர் சாட்சி எருதோடு எரிநதாறும் தீசாட்சி
தேர் சாட்சி திருக்கோவில் தொங்குமா மணிசாட்சி

கார் மேகம் பொழிமழையும் கடுமிடியும் புயல் சாட்சி
சேர்ந்தாடுங் கிளைமீது சிறுகுருவி அணில் சாட்சி
நேர் வளர்ந்த பனைசாட்சி நிமிர் தென்னை மரம் சாட்சி
கூர் முள்கொள் நெருஞ்சியுடம் கொதிவான வெயில்சாட்சி

வார்த்தைகளில் சொல்லிவிட வழியற்ற பரிதாபம்
பேரவல மொன்றிழைத்துப்   பிறர் காணா  ஏமாற்றி
யார் எவரும் இல்லையென நாற்பதெனு மாயிரங்கள்
ஊரோடு உயிர் கொழுத்தி உன்மத்த மாடியவன்

பார்த்திருக்க அன்னையவள் பாலகனைப் பிள்ளைதனின்
சீர்செம்மைத் தமிழ் மாந்தர் சிரசெல்லாம் கொய்தவனை
ஒர் சாட்சியில்லாது ஒழித்துவிடக் குழிதோண்டி
வாரிமண் மூடி உடல் வாழ்வழித்துச் சிரிப்போனை

நீதிதனும் கேட்கவில்லை நேர்மைமனம் துடிக்கவில்லை
ஆதி முதல் உலகாளும் அன்னையவள் இயற்கைதனும்
பாதிதனும் பார்த்தவையில் பட்ட பழி துன்பமதை
நீதி தெய்வசபையேறி நேரில் உண்மை கூறவில்லை

பொய்கை மலர் கண்டதனை போயுண்மை கூறாதோ
தெய்யெனவே துள்ளுமலை தெரியுமுண்மை சொல்லாதோ
பெய்மழையில் தூறல்தனும்  பிணமான காட்சிதனை
மெய் நீதிவழி சென்று மேலுலகில் கூறாதோ

கையிழந்து காலிழந்து கண்ணிழந்து நெஞ்சிழந்து
மெய்யிழந்து மேனியுடன் மிச்ச உயிர் விட்டுவிட
உய்யும் வழிஅற்றோரை ஓடிவந்து காவாதோ
பொய்யுரைத்த நீசர்களைப் பிழையுணர வைக்காதோ

எல்லையெது மற்றபெரும் இயற்கையோ, மங்கையரை
பொல்லாத கொடுமை செய்யும் பிணியோரைக் கேட்காதோ ?
தொல்லைதனும் தினம்செய்து துணிவோடு பொய்பேசும்
வல்லவரென் றானவரை  வான் தெய்வம் கேட்காதோ?

வேண்டும் சக்தி தேவி!

 

அழகான ஓடை அதிலோடும்நீரும்’
அரும்பான மலர் போலும் வாழ்வும்
எழவானில் வெயிலும் ஒளிர்கின்ற கதிரும்
இதை மிஞ்சும் விதமான அறிவும்
விழ வாடும்பூக்கள் விரிகிற முகைகள்
விதமாக துயர்போக மகிழ்வும்
பழமோடு தேனும் பருகும்நற் சுவையும்
படர்கின்ற மனம் வேண்டும் தாயே!

கொதிகின்ற நீரும் குளிர் கூடும்பனியும்
கொத்தும் வல்லூறாகக் குணமும்
மதிவானில் குறையும் மழைதூற துளியும்
மணல்வீழும் நிலை தாழவேண்டாம்
கதியோடு புயலும் கடல் கொண்ட சினமும்
கரை ஏறக் குடிகாணும் அழிவும்
விதியாக வேண்டாம் வினைதீர்க்கும் தேவி
வியக்கும் நற்பெரு வாழ்வுவேண்டும்

நகை சிந்தும் போது நான்கொள்ளும் இன்பம்
நல்லோர்க்கு இன்னல்கள் ஆகா
வகையன்பு கொள்ளும் வாழ்வொன்று வேண்டும்
வருந்தாத உள்ளங்கள் வேண்டும்
பகையொன்று வேண்டாம் பரிதாபம்வேண்டாம்
பழமென்று இனிதான உறவும்
புகைகொண்டுதீயும் பொழுதொன்று வேண்டாம்
புன்னகை புன்னகை வேண்டும்

குயிலோசை கூவும் குரலின்பந் தானும்
கனிவோடு காதோரம் செல்லும்
வெயில் வீழும் மலையில் வீச்சோடு அதிரும்
விளைவான எதிரோசை வேண்டாம்
பயிலும் நற்கலைகள் பாம்பாக வேண்டாம்
படும்தூறல் மழைகண்ட தோகை
ஒயிலாக ஆடும் ஒய்யாரம் போதும்
உளம்மீது மகிழ்வொன்றே வேண்டும்

ஒளி வரும் இனியென்ன !

பொடிபடத் துயர்தனை உடைபட விடுபுறப்
படுபகை யினிமறந்தே
துடியிள மனமதில் தொகையென வரமகிழ்
வுடனிரு துணிவெழவே
கடிதென வுளமனக் கடுகயமை கள்தெளி
வுறவெடு உளமகிழ்வே
மடியிடை கிடதமி ழன்னைமலர் முகமதை
மலர்வுறச் செயநிதமே

படியினைப் பலகடந் தனமினி யெனஒளி
பகல்வரத் துயருறவோ
முடிதனை உடையமன் னவனெனப் பெருமையில்
மலர்ந்திட எது தடையோ
இடிமின்னல் பொழிமழை யுடனிருள் விலகிய
தினிச்சுக மெனமறந்தே
படிகவி தைகள்பல முறபல முறையவை
பருகிட மதுஎனவே

தடிதனைக் கரமதில் எடுகுரு வினைக்கொடுந்
தவறெனக் கருதுவமோ
படிதனைப் பலகடந் திடஅடி தனையுளம்
பதமுற வெனஅறிவோம்
கொடிதென நினவுறக் கருதுவ தெவருமில்
குளமிடை கமலமென
வடிவினை யெடுமலர் வரும் கிழக் கெனும்திசை’
விடிவுறக் கதிரொளியே!

Sunday, March 4, 2012

இம்மையும் மறுமையும் ( சக்தி தா!)

இம்மையும் மறுமையும்
( சக்தி தா!)

ஒளிதா விழிதா உலகில் இளமை
உணர்வும் உயர்வும் தா
களிதா மொழிதா கனிவாய் திகழும்
கருணை மனமும் தா
எளிதாய் உணரும் விதமும் அழகும்
இனிதாம் வளமும் தா
தெளிவா மனமும் தெரிந்தே எதையும்
தொடுமோர் செயலைத் தா

வெளிதா வளிதா விளையும் எதுவும்
விரும்பும் வகையில் தா
துளிதான் எனிலும் துயரே இலதாய்
துலங்கும் வழியைத் தா
பழியாய் எதுவும் படரா தினமும்
பகலின் வெளுமை தா
சுழியாய் அலையும் இடரும் தொடரா
சுவையாம் வாழ்வைத் தா

மொழிதா செழுமை தமிழால் கவிசெய்
திறனும் உரமுந் தா
மிளிர்வாய் வருமின் னலையாய் தினமும்
மனதில் கருவுந் தா
பொழிவாய் மழையாய் புதிதாய் பொருளும்
பொருளில் நயமுந் தா
தெளிவாய் மனமும் திகழும் வகையில்
தேவி அருளைத் தா

நெளியா நடையும் நிமிர்வாய் உருவும்
நினதன் பினதால் செய்
அழியா திடமும் அறிவும் செயலும்
அருகா பெருகச் செய்
தொழிலோ நிதமும் பெருமைசொலவும்
தொழவும் உனையே செய்
எழிலே வரமாய் எதிலும் நிறைவாய்
இலங்கும் வகையாய் செய்

தழலே ஒளியின் பெரிதே யிதுபோல்
தினமும் நினைவில் நில்
விழலாய் அழியும் சிறுவாழ் வினிலே
வெறுமை விலகச் செய்
உழலே உயிரின் உடலின் இயல்பாய்
உருகித் துவளும் மெய்
குழலாய் கருகிக் குறுகிக் கோணிக்
குழியுட் புதையும் பொய்

மழையாய் இடியாய் மலராய் மணமாய்
மலையும் மதியென் றே
நிழலாய் வெயிலாய் நினைவாய் செயலாய்
நிலைத்தாய் நீயன் றோ
குழலாய் இசையாய் குழந்தை வடிவாய்
குலவும் தாயா கி
அழவும் சிரிப்பா மதிலும் கலந்தே
அணைத்தும் வெறுத்தாய் நீ

ஒளிவா னிடையே உயர்வாய் சகலம்
உருவாக் கும்சக் தீ
அழிவால் இதுவாழ் வணையும் வேளை
அருள்வா யொருமுக் தி
விழியால் அசையும் வெளிவா னிடையே
விண்மீ னாகச் செய்
கழிவாம் இதுவாழ் வினிமேல் வேண்டாம்
ஒளியென் றுனதாய் வை!

Wednesday, February 29, 2012

இன்னுமா கடவுளே?

எத்தனைதான் இன்னும்வேண்டும் இறைவா- நீ
எடுத்தவரை போதும் என்ப தில்லையா
மொத்தமும்தான் கொள்ள வேண்டுமென்பதா - இவர்
முடியும்வரை கொள்வதென்ற சித்தமா
ரத்தமெல்லாம் கொட்டிகொட்டி ஆண்டவா - நாம்
ராப்பகலா அழுதுமின்னு மென்னடா
செத்த பாம்பை அடிப்பது போல் இன்னுமா - நாம்
சாகுமொரு இனம் அழிக்க எண்ணமா

வெற்றுடலம் தந்ததுவும் உன்செயல்- அதில்
வித்தெனவே தந்தஉயிர் உன்பொருள்
சுற்றிவரும் உலகிலெலாம் வாழ்பவர் - சுகம்
சொட்டுகின்ற இன்பவாழ்வு கொள்கையில்
சற்று மெமை ஈவிரக்க மின்றியே - இறை
சங்கரனே கொல்ல ஆடும்தாண்டவம்
சுற்றிப்பேய்கள் நின்று தோலைப் பிய்த்துமே - எமை
சித்திரவதை செய்வது போலாகுதே

என்னபாவம் செய்து விட்டோம் வாழ்விலே நாமும்
ஏது இந்த மண்ணில் கொண்டகுற்றமோ!
சின்னவராய் செந்தமிழைப் பேசியே - நாமும்
செய்யும்பிழை ஏது தினம் சாகிறோம்
மன்னவனாம் எங்கள் உயிர் காத்தவர் - தூய
மனமதிலே உத்தமராய் வாழ்ந்தவர்
உன்னதமாய் கொண்ட அவர் இலட்சியம் ஏன்
உதிரமதில் கரைய வைத்தாய் தெய்வமே!

நல்லவர்கள் என்பதுஇவ் வுலகிலே - ஏதும்
நனமையற்ற பிறவிஎன்னும் கொள்கையோ?
சொல்வதெலாம் சத்தியமென் றாகிடில் - இவர்
சுத்தமாக வாழும் தரம் இல்லையோ
 கல்மனது கொண்டு வெட்டிக் கொல்பவர் - தமைக்
காத்திடவே உன்மனது சொல்லுதோ
வல்லவனே நீயிருப்ப துண்மையோ - நம்
வாழ்வு என்ப தென்னபேயின் கையிலோ

மொத்தமாகக் தமிழினத்தைச் சுட்டுமே - பெரும்
மூர்க்கனாக பகையளிக்க நம்மையும்
கத்தியழும்குரல் இசைக்கு திருநடம் கொண்டு
காலெடுத்து ஆடுவது மேனடா
பித்தனென்று உன்னைச் சொன்னபோதிலும் - அன்று
பிள்ளை புத்திகாதில் சொன்ன போதிலும்
அத்தனாக அன்னை பாதி கொண்டதும் - உன்
புத்தி பாதியாகிப் போன ஏதுவோ?

கண்ணிரண்டும் கொண்டு எம்மைபாராய்யா - உன்
கனலெறித்தகண்ணை மூடு தேவையா
பெண்ணைப் பிள்ளை தாய் தனித்து சிறையிலே- போட்டு
பேசரும் வல்வினைமுடித்து கொல்கிறார்
எண்ணி மனங்கொண்டு அருள் தந்திடு - நீயும்
எம்மினத்தைக் காத்து உயிர் தந்திடு
வண்ணமெழும் வாழ்வுதனை வாழவும் - எம்
வளமிழந்த மண் செழிக்க வைத்திடு !

காதல் தேசமே!

வானில் குழைத்தநற் சந்தணத்தில் - இட்ட
  வட்டவடிவிலோர் குங்குமமாய்
வேனில் இளவெயில் சுட்டெரித்த - பின்னர்
 வீழ்ந்து சிவக்கின்ற மாலையிலே
தேனில்இழைந்த நற்பூ தழுவி - வந்த
  தென்றலே தேசம் நீ காணுவையோ?
ஆ..நில் அளவற்ற காதல்கொண்டேன் - அந்த
 ஆசையை ஊரெங்கும் சொல்லிவிடு

மேனி கருத்து மயங்குகிறேன் - எந்தன்
  மெய்யும்  துடித்திடக் காணுகிறேன்
ஏனிந்தக் கோல மெடுத்துவிட்டே - னிந்த
 ஏழை மனம்வாழ ஏது செய்வேன்
சா..நீயெனச் சொல்லிச் சத்துருக்கள் - எந்தன்
  தாயென் மொழிதனைக் கொல்லுகிறார்
ஆ.இனி என்னதான் காதலென்று - என
   தன்புடைத் தம்பியர் கேலிசெய்தார்

பூநெய்யின் மேலுற்ற வண்டெனவே - உயிர்
   போலும் மிகுந்தொரு பாசமுற்றேன்
வானில் பறக்கும்  பறவையென - எமை
   வந்து தழுவிடும் காற்றுனைப்போல்
தேன்நிலவோடும் சுதந்திரத்தை - எங்கள்
   தெள்ளு தமிழ் தேசம் கொள்ளவெனப்
போயின்னல் தீரப் புது உலகம் - செய்யப்
   பூமியின் மேல் வெகு காதலுற்றேன்

மானின் விடுதலை மக்கள் பெற - மயி
 லாடும் களிப்பினை நித்தம்கொள்ள
தாய்நீ தமிழே உன்செல்லமகன் - தமிழ்
  தாய்நில மீட்பினில் காதல்கொண்டேன்
நானிலத்தில் இந்தக் காதல்வென்று - அதில்
 நானும்  பிழைதிடக் கூடிடுமோ
வாநீ தோழா, தமித்தேச மண்ணை - எங்கள்
  வாழ்வு செழித்திடச் செய்குவையோ?!

மாநிக ரற்றநம் மண்ணினையே - மீட்டு
  மாளும்தமிழ் பெற்ற பிள்ளைகளை
ஏனின் னும்விட்டு இருந்தனையோ - தம்பி 
 எல்லாம் அழியமுன் காவல் கொள்ளு
தாநீ எமதீழ மண்ணையென - ஒரு
  தர்ம நிலைகொண்டு கேட்டிடுவோம்
போநீ யேதுமிலை என்றுசொன்னால் - பஞ்ச
  பாண்டவராய் நீதி பார்த்திடுவோம்.

Saturday, February 25, 2012

தொடரும் பயணங்கள்!!


(அன்று)

கடிதொரு பெருநடைஒளிதரு முடிவினை
காணாவென் றேநடந்தோம்
முடிவொரு சுகமென முனைவதில் ஒளிதரும்
மேன்மைதனை நினைந்தோம்
குடிமகன் தமிழ்நில குலமீழம் அழிவுற
கூடிநம் பகை எதிர்த்தோம்
முடிவினில் விடுதலை வருமென நினைந்துயர்
மேடுகள் மலை கடந்தோம்

சுடுநிலம் அடிதனில் சுடவலி சுகமென
சொல்லியே துயர் மறந்தோம்
படுவது பழியென பலதடை அருகெழ
பாதையில் நேர்நடந்தோம்
கொடுவிட அரவமும் இடிமழை புயலொடும்
குளிர் நதியிடை நடந்தோம்
குடுகுடு என விரைந் தெமதீழக் குறியினை
கண்டொளி பெறவிழைந்தோம்

வருவது ஒருபகை என எதிர் நிலைத்திட
வானொடு புவி சேர்ந்தே
ஒருபெரும் பிரளய மெனஎமை எதிர்கொள
ஏங்கி நினை வழிந்தோம்
தருமமும் இழிவுற தலைமுறை அழிந்திட
தமிழ்நில மழிவுறவும்
பொருமிய மனமுடன் புதையுறு குழிகளில்
பூக்களை விதை விதைத்தோம்

(இன்று):’

விதியது பிழைவிட விளைவது தவறென
வீறுட னெழுவதுடன்
கதியென நினைந்திட நடுநிலை தவறியோர்
காரணம் கூறெனவும்
சதியினை செயுமெவர் தனியறை சிறையிட
தகுமொரு பதில்வேண்டி
புதிதொரு வழியின்று நடப்பினும் முடிவினில்
பெறுவது விடுதலை காண்!

Friday, February 24, 2012

நானிருக்கும் மட்டும் !

நானிருக்கும் மட்டுந்தானே ஆட்டம் - நானொதுங்க
நாணமின்றிப் பேயணைக்கும் தேகம்
ஊனுயிர்த்த நாள்வரைக்கும் ஒட்டம் - ஊன்படுக்க
ஓடிவந்து நாயிழுத்துப் போகும்
பேனிருக்கும் சூடுதேகம் காணும் - மட்டுமின்றிப்
போய்க் குளிர்ந்தாக விட்டுஓடும்
ஏனிருக்கும் போது உள்ளநாட்டம் - இன்னல்செய்ய
இன்னொருத்தர் மேனிதன்னைத் தேடும்

சொல்லிருக்கும் மட்டும்தானே வாழ்வும் - சொல்லிழக்கச்
சுற்றிநிற்கும் கொல்விலங்கும் பாயும்
இல்லையொன்று கையிலென்றுகாணும் - போதுவந்து
ஏதும் எம்மைசீண்டும் பூனைதானும்
கல்லதென்று எண்ணுமுள்ளம் யாவும் - நல்லவரைக்
கட்டி வைத்த வேலிபோடும் வாழ்வும்
இல்லை யென்று ஆகிப்போகும் நேரம் - ஆகுமட்டும்
ஏங்கமுற்று ஏழை நெஞ்சம் வாடும்

உள்ள மெண்ணும் மட்டும்தானே இன்பம் - உள்ளதின்றி
ஒட்டித் தேகம்வீழ எங்கும்சூன்யம்
அள்ளும் இன்பரேகை கொண்டதாகம் - அந்தமாகி
அத்தனைக்கும் சூழ்இருட்டென் றாகும்
வெள்ளிக்காசும் அள்ளிக்கொண்டு போகும் - தன்மையேது
வீணலைந்து வாழ்வழிந்த நாளும்
கொள்ளி கொண்டு ஊர் எரித்துப் போடும் - கண்டதென்ன
கோடிகொண்டும் இல்லையென்றுஆகும்

செய்யஏது மில்லை வந்துநாளும் வன்மைதானும்
சீரழிக்க ஏழைமீது பாயும்
பொய் யெழுந்தஆசை உள்ளம் கொள்ளும் - பேய்களாகிப்
பிய்த்தெறிந்து சாந்தியென்று தூங்கும்
கையெழுந்து காக்க வென்று முந்தும் - மெய்விழுந்து
கட்டைமீது நாம்படுக்கத் தீயும்
பையெழுந்து பற்றியுண்டு தீய்க்கும் - பாசம்கொள்ளப்
பக்கம் யாருமின்றி, வெந்துபோகும்

வல்லதேசம் செய்வதெல்லாம் நீதி - ஆகுமன்றி
வாழ்த்தும் பொய்க்குப் பொன்முடிச்சுப் பாதி
மெல்ல யாரும் பேசினாலும் போகும்- மேடையேற்றி
மென்கழுத்தைச் சுற்றிக் கோடுபோடும்
அல்லதல்ல ஆளும்போது யாரும் - அன்புகொண்டு
ஆனதோ ரினித்தவாழ்வும் சாகும்
வெல்லவென்று என்னசெய்த போதும் -சொல்!விதிக்கு
விட்டுஓடித் தப்பலாமோ கேட்கும்

சில்லுடைந்த தேரென்றாகித் தேகம் - பாதைவிட்டுச்
சீரழிந்து போக ஊரும் கூடும்
நல்லதெண்ணி நாலுவார்த்தை கூறும் -அல்லதென்னில்
நாஒறுத்து வாயுமிழ்ந்து ஏசும்
எல்லையின்றி வான்விரிந்த அண்டம் - எண்ணமான
தெட்டும் தூரம் விட்டழிந்து போகும்
வல்லஎண்ணம் கொண்டுவாளை வீசும் _ வாழ்வுதானும்
வானம் காணு மட்டும் தானே நீசம்!

Thursday, February 9, 2012

விழிகாள் பொறுமின்!

நிறுத்திடு கால்கள், நீயும் நெருஞ்சிமுள் நிறைந்தபாதை
நேரிலேஉள்ளதாயின்
உறுத்திடும் இன்னல் யாவும் உனக்கல்ல கொள்வதெல்லாம்
உயிருக்கே ஆகுமென்ப
கறுத்திடும் பாதையென்றால்; கண்களின் தவறுமல்ல
காரிருள் தந்தவர்யார்
பொறுத்திடு நெஞ்சே நீயும் புவியின்சூழ் கருமை யாவும்
பொழுதது விடியப்போகும்

சரித்திரம் என்ன சொல்லும் சாட்சியம் என்னசொல்லும்
சற்றுநீ நின்று யோசி!
கருத்திலே சிந்தைகொண்டு கால்களே மெல்லப் பாதை
கருதி நீநடந்து செல்லு 
உருத்தெரி யாதஉள்ளம் ஒருதரம் இங்குகாட்டும்
மறுகணம் அங்குஎன்னும்
வருத்திடும் பாதைகண்டு வழிநட இருளென்றாயின்
 வருமொளி கண்டுசெல்லு!

கருத்தரி காலம் தொட்டு கால்களும் நெஞ்சும்  கண்ணும்
காதலர் ஆயின்பேதம்
இருப்பது உண்மையன்றோ இகமதில் இதுவும் வாழ்வின்
இடைஞ்சலென் றாகுமிங்கே
தெருத்தெரு வீதியெங்கும் திகழ்ந்திடும் குழிகளெல்லாம்
தெரிவதும் இல்லை மீண்டும்
இருள்செல்லத்  தீபம்கீழை ஏறிடும் வான்கறுப்பும்
ஏகிடப் பாதைதோன்றும்

கண்களே  பொறுமின் காலம் கனிந்திடும் கதிரின்உதயம்
கடுதியில் நேர்வதல்ல
விண்களை கூடும்வேளை வீரிடும் புள்ளினங்கள்
வியனுறும் வண்ணம் வானில்
தண்ணொளி தோன்றப்பூக்கும் தாமரை தலைவன்காணத்
தலையணை கசந்து மாந்தர்
மண்ணிலே காலை ஊன்ற மளமள என்றுஓசை
மானிட வாழ்வுஓங்க

மென்னொலி  கீதமூடே மலர்களும் பாதைவீழ
மன்னவன் போலநீயும்
மின்னலை ஒத்தவாறு மிளிர்வுடன் வேகமிட்டு
மேதினி எங்கும் செல்வாய்
தன்னிலை கொண்டுநீயும் தவித்திடல் நிறுத்துவாயித்
தளர்வது வேண்டேலிந்த
பொன்மொழி கேளாயென்றால் பேதையாய், நெஞ்சின்மாயை
புன்மொழி கேண்மின் தீதே?

Monday, February 6, 2012

சிரிப்பதும் அழுவதும் ஏன்??


நீலமுகிலோடும் வானிலெழுந்திடும்
நித்திய சூரியனே - நினைப்
போலும் ஒளியுடன் வாழும்மனிதரும்
பாரிலிருக் கையிலே
கால விதியிதோ மாலைமதி கெட்டு
காணும் பிறை யொளியாய்-பலர்
கோல மழிந் துயிர் கொள்ளும் துயருடன்
கூடியிருப்ப தென்ன?

மாலை மலர்ந்திடும் பூக்களும் உண்டதை
மேவி இருள் பரவும் - அதி
காலை மலர்களின் வாழ்வு ஒளிர்ந்திடும்
காணும் இரண்டுவிதம்
சாலை யோரம்மரம் கீழும் வாழ்ந்துவரும்
சந்ததி யொன்றிருக்கும் - பக்கம்
மேலு யரும்மாடி மெல்லிய பஞ்சணை
மீது துயில் சிலர்க்கும்

கானமிடும் நல்ல வானில் குருவிகள்
ஊர்வலம் செய்யழகும் அங்கு
கூனல் நிமிர்முகில் கூட்டங்கள் பஞ்சென
கோலமிடும் எழிலும்
தேனொளி மின்னிட வானிடை ஆயிரம்
தீபங்கள் வைத்தவளோ - மன
மானது ரம்மிய மாகக் களித்திட
மஞ்சள் நிலவு வைத்தாள்

ஆனதி வைசெய்த தேவியும் ஏனங்கு
அத்தனை கோபங்கொண்டு - பல
மான இடியுடன் பூமிஅதிர்ந்திட
மின்னலை கொண்டுவைத்தாள்
வானம் அழுவது போல மழையுடன்
வாரிப் புயலடித்து - பெரி
தான முரண்படும் பேய்மழை ஊதலும்
ஏனோ நிகழவிட்டாள்

பூவழுதால் இதழ்தேன்வழியும் அதைப்
பூவுலகே யறியும் - அலை
மேவுகடல் மீது மீனழுதால் அலை
யோடு கலந்துவிடும்
தாவும் முயல் என்றும் தாவியோடவேண்டும்
தப்பிப் பிழைப்பதற்கும் - விதி
யாவும் குறையின்றி சாதுவெனப் பிறந்
தாலும் துயர் இருக்கும்

பூவும் உதிர்ந்திடப் பொல்லாப் புயல்வந்து
பற்றிடத் தேவையில்லை - மலர்க்
காவும் மலைதொட்டு வீசும்தென்றல் தொட
வீழும் விதிமுடியும்
நோவும் அழுதிட நூறுதுன்பங்களும்
நெஞ்சில் குடியிருக்கும் -இதை
யாவும் அறிந்திடில் தோன்றும் எண்ணங்களில்
உண்மை நிலைதிகழும்

Sunday, February 5, 2012

பிடி சாபம்

கத்திய ஓலமும் கதறியகுரலும்
கண்வழிநீர் பெரு ஆறெனவே
முட்டிவழிந்திடச் செத்திடுவோமெனச்
சித்தம் கலங்கிச் சிதறியதும்
கொத்து கொத்தாய் பல குண்டுக ளாயிரம்
கொண்டுவந்தே பகை கொட்டியதும்
பட்டுவெடித்ததும் பாய்ந்துசிதைத்ததும்
பால்குடி பிஞ்சினர் மார்புதனை

வெட்டிக்கிழித்தவர் இரத்தம் அழிந்திடச்
செத்தவும் அதைப் பெத்தவளோ
தொட்டு எடுக்கவும் நேரமின்றித் திசை
விட்டுத் தலை தெறித்தோடியதும்
பட்டதும் ஓடி விழுந்ததும் சிறு
கையொடு கால்கள் இழந்ததுவும்
கொட்டி முழக்கிய போர்ப்பறையும்
சிறு பெண்டிர் கெடுத்தவர் தூக்கினிலே

கட்டியவிதமும் ஆடைகளின்றி
செத்தவர்தம்மை சீரழித்து
பெட்டியிலிட்டு சந்தி சிரித்து
பேயென ஆட்டம் ஆடியதும்
வெட்டியகுழியும் பதுங்கியமனிதர்
தப்பமுதல் அவர் தலையினிலே
கொட்டிய மணலும் நின்றவர் கண்கள்
கொட்டவிழிக்கப் புதைத்ததுவும்

எத்தனை கோரம் இட்டபகைவரின்
இழிசெயல் எண்ணித் துடிமனதில்
ரத்தம்கசிந் துயிர் நட்டநடுங்கியே
முற்றிலும்வேதனை பெருகுதடா
சொந்தம் இழந்துசு தந்திரம் விட்டுச்
சுற்றி முள்வேலியைக் கட்டிவைத்து
மந்தை விலங்கு கள்போலொருமானிட
வாழ்வு நமக்கொரு கேடோடா

விரிந்த குழல்முடி குடலெடுத்தேபின்
கோதி முடிப்பேன் என்றலறி
வரிந்திடு சபதத் திரௌ பதிகள்பலர்
வாழ்வுமுடிந்து போனாலும்
அருமலர்ப்பாதச் சிலம்பினை உடைத்து
மதுரையைக் கொழுத்திய கண்ணகிபோல்
பெரிதொரு சாபம் இட்டஇன் மறமகள்
பிணமென ஆகி புதைந்தாலும்

விட்ட கண்ணீருக்கு விலை கொடுப்பாரெமை
குத்திஅழித்திட்ட கொடியவர்கள்
இட்டவர் சபதமும் சாபங்களும் எழுந்
தெதிரிதலைகொள இடி விழுத்தும்
பட்ட நம்துன்ப மெனும் இருள் ஓடிட
பகலெழுந்தே ஒரு விடிவுவரும்
விட்ட இடத்தில் தொடர்ந் திடுவோம்
இது வேறுவழி அகிம்சை வழி

சக்தியே, காத்திடுவாய்

             
தெள்ளெனும் நீரினில் கல்லைஎறிபவர்
தேங்கிக் கிடக்கையிலே எந்தன்
உள்ளமது கொல்ல வெள்ளங் கரைபுரண்
டென்னை இழுக்குதம்மா
கள்ளமதுஇல்லை கால்கள் நடந்திட
காணும்பெரு விசையாய் - அலை
துள்ளித் துள்ளி திரை வெள்ளம் கடலெனத்
தள்ளி விழுத்துதம்மா

சொல்லின் பெரிதெனப் பன்னெரும் துன்பங்கள்
சுற்றிக் கிடக்குதம்மா- இந்த
வல்லமனதினை வாழ்வின் இழிமைகள்
வந்ததே யசைக்கு தம்மா
கொல்லு மனங்களின் கோடரி வீச்சுக்கள்
கொட்டு மிரத்தமின்றி - உள்ள
பல்லு முடைபட வீழ்த்தியதாய் எனைப்
பக்கமுருட்டுதம்மா

நில்லுஎன எந்தன் நெஞ்சைநிறுத்தியும்
நல்லதை கொள்ளுகிறேன் -அவை
கல்லில் கட்டிக் கடல் தள்ளிடினும் வந்து
காத்திடுங் கைகளம்மா
வெல்ல முடியுமா வேதனைஎன்றிட
வீசும்கயிறாய்  அன்பு- எனை
அல்லல் குளத்தினுள் ஆழ்ந்து விடமுன்னர்
ஆருயிர் காக்குதம்மா

அன்புதனை மனம் என்றும் மதித்திடும்
ஆனவழி சரிதான்- உண்டு
என்பதைக் காட்டிடில் எந்த இதயமும்
அந்த இறைவடிவாம்
தன்னிலை தானுணர்வென்பது சற்றுப்பின்
தாமதமே, பெரிதாய்- அதில்
முன்னுரிமை கொண்டு மோக இருள் வந்து
முற்றும் கறுத்துவிடும்

இணையக் கடலில் நீந்தி

        

அவள்;
காடுமாலை சுத்திவந்த காத்துப்பட்டுதோ -இல்லை
கண்டபேய்கள் மோகினி உன் கைபிடித்ததோ
நேத்துவந்த மூத்தமாமி கண்ணுபட்டுதோ -நீயும்
ராத்திரிக்கு நாலு தும்மல் போட்டதேனையா

அவன்:
காத்துமில்ல கருப்புமில்ல கண்ணு செல்லமே -ஒரு
கற்பனையும் தேவையில்லை கவலைகொள்ளாதே
நேத்துவலை வீசி நானும் இணையசாகரம் -மூழ்கி
நின்றதாலே தும்மல்   நாலு போட்டேன் கேளடி

அவள்;
ஆத்து மீனு சந்தையிலே அள்ளக் குவியுது -நீயும்
அலைஞ்சு வலை போட்டதாலே என்ன ஆச்சுது
நேத்து நீரில் நின்றதாலே நெத்தி சுடுகுது -கொஞ்ச
நேரம் சொல்லு கேக்க வேணும் நெஞ்சுதுடிக்குது

கூத்தடிச்சுக் குளிரில்நின்னு தேகம் கெட்டுது -நீயும்
கொண்டதூக்கம் ராத்திரிக்கு பாதிபோச்சுது
மாத்தி மாத்தி கணனி போட்டு காலம்போகுது -இந்த
மாமன் செய்யும் சேட்டைகாணக் கவலையாகுது

அவன்:
ஊத்து நீரு தண்ணி என்று உளறி வைக்காதே=-நானும்
ஓடிநீரில் நீந்தவில்லை உலக வலையிதோ
பாத்துநில்லு இண்டநெற்று போட்டுகாட்டுறேன் அடி
பாவி மீனுக் காகவில்லை பாட்டு எழுதுறேன்

பாட்டு நாலு எழுதி நெற்றில் போட்டு வைத்தேண்டி -இதோ
பாரு உந்தன் துன்பம்போகும் விட்டுத் தள்ளடி
நெட்டில் எந்தன் பாட்டு பாரு போட்டிருக்கடி -அது
நீயும் வந்து காண உந்தன் நெஞ்சில் மகிழ்வடி

வாழ்த்துஎன்று சொல்லி என்னை வானம் தூக்கியே -பல
வண்ண மாலை போட்டதாக தேவைதைகளே
பூத்த வெள்ளி தாரகைகள் கூட்டமுன்னிலே -என்னைப்
போகவிட்டு இன்பமிட்டார் பொறுக்குதில்லையே

(துள்ளி ஆடுகிறார்)

அவள்:(மனதுள்)
பாவி இந்தமனுசன் புத்தி பேதலிச்சுதோ ஒரு
பைத்தியமோ குழந்தையாகக் கூத்தடிக்குதே
ஆவி ஏதும் பட்டு நிலைமைஆகிப்போச்சுதோ நாளை
ஆனைமுகன் கோவில் போயி நூலுகட்டணும்

Saturday, February 4, 2012

பெண்ணெனும் சிலை சிற்பிகள் நாம்


கருவில் உருவைக்கொண்டே - அன்னை
கையில் தவழ்ந்து வந்தோம்
உருகும் அன்பைக் கண்டோம் - அவளின்
உள்ளத் துறைந் திட்டோம்
பருகும் உணவைத் தந்தவளோ - எமைப்
பாசங் கொண் டருகில்
கருணை வடிவாய் நின்றணைத்தாள் - இரு
கண்கள் எனக்காத்தாள்

அம்மா எனுமோர் தெய்வமகள் - அவள்
ஆண்டவன் மறுவடிவம்
நம்மை ஆக்கவும் உலகினிலே  - பின்
நலமாய் காத்திடவும்
வெம்மை கொண்டயல் தீமைவரின் - அதை
வெயிலா யெரித்திடவும்
அம்மை அருளால் முத்தொழிலும் - அவள்
அகிலம் கொள்ள வந்தாள்

பெண்ணாய் முதிர்வில் தாயாவாள் - அவள்
பெருமை கொண்டிடுவாள்
மண்ணில் தாயென ஆகும்வரை - அவள்
மங்கை சிறுவயதாள்
எண்ணிப்பார் எவள் சின்னவளும் - வளர்ந்
தொருநாள் தாயாவாள்
கண்ணை இமையாய் காத்திடுவோம் - எதிர்
காலத் தாய் இவளாம்!

விண்ணில் சுழலும் புவிவாழ்வில் - அவள்
வேட்கைப் பலியிடவும்
பெண்மை இழிமை செய்வதுவும்- அவள்
புனிதம் அழிப்பதுவும்
எண்ணித் தலைமுறை காத்திடுவோம் - அவ்
விம்சைசெயல் நிறுத்த
கண்ணீர் சிந்தாக் காத்திடவும் - இக்
கணமே திடம் கொள்வோம்

எம்மைப் படைத்த போதினிலும் அவள்
உணர்வில் மலராவாள்
வெம்மைச் சூரியன் ஆனவளோஎம்
முன்னே நிலவானாள்
பொம்மை கற்சிலை செய்துவிட - நாம்
பிடிக்கும்உளி வடிவம்
அம்மை இவளது வாழ்வுருவை நாம்
ஆக்கும் சிற்பிகளாம்

மண்ணைப் பிடித்திட வரும்பானை - போல்
மனங் கொள் உருவெடுப்பாள்
திண்ணம் கைகளில் உளிகொண்டே செயல்
தேர்ந்தே கலைவடித்தால்
எண்ணத் திருப்பது உருவாகும்திரு
மகளாய்..! எழிற்சிலையாய்!
வண்ண திருமகள் வாழ்வில் நாம் - பல
வளங்கள் உருவமைப்போம்

Thursday, February 2, 2012

சிரித்திடு மகளே

நீலப் பெருவானில் நிற்கும் வெண்தாரகை
.  நின்று சிரித்ததுவோ - நறுஞ்
சோலை நிறைமலர் சுந்தர மென்னிதழ்
.  சொல்லும் சிரிப்பிதுவோ
 ஓலையிடை தென்னங்கீற்றி லொளிந்துநின்
      றோடும் மதி சிரிப்போ .விழி
போலும் கயல்துள்ளும் பொன்னெழில் நீரலை
.  போடும் நகைஒலியோ

வாழை மரங்களில் வந்துநீளும் குலை
.  வைத்த முன் பூவரிசை  -அதன்
ஏழைச் சிரிப்பினைக் கண்டனயோ - கனி
.    இன்சுவைப் புன்னகைத்தோ
கீழை வயல் மேடு கோபுரவீதியில்
       கூடி நின்றாடும் மந்தி வந்து
வீழபொலிந்த கனிஉண்டு ஆனந்தம்
      வேளை என்றாடியதோ


பச்சை வயல்வெளி  முற்றும் நிறைகதிர்
.   பட்ட இளம் தென்றலில் - கதிர்
சச்சச் சரஎனச் சுற்றிவளைந் தயல்
.   சாய்ந்து சிரித்தனவோ - இடை
மிச்ச இரும் பனல் செம்மைகொள்ளப் பெரும்
.   பட்டறை பையன் அதை -ஊதி
அச்சென ஆக்க அடிக்க தணல் தெறித்
.    தங்கும் சிரித்ததுவோ


கானகத்தே நின்று ஆடும் மரங்களும்
.  காணும் பசும் இலைகள் - நெடு
வானமதின் விழும்நீர் துளியில் பட்டு
      வாட்டம் கலைந்தபடி
தானுமாடிக் கிளை தொங்கிடும் பூக்களும்
 .   தாங்கிச் சிரிசிரித்து  எழில்
ஆனதிந்தப் பெரும் பூமரச் சோலையும்
.         ஆனந்தக்கூத்திடுதோ


அத்தனை கொண்ட  சிரிப்பு மியற்கையின்
.    அன்புடை வாழ்த்துக்களோ - இவை
முத்து மாலையிடை கோர்த்த மணிகளென்
.    ரத்தின ஆரங்களோ
புத்தம் புதிதென பூமியில்வந்தஎன்
     பத்தரைப் பொன்மகளே -நீயும்
கத்தி அழுங்குரல் விட்டுச்சிரித்திடு
    அற்புத பூமியிதே


Wednesday, February 1, 2012

இன்பம் எங்கே?


செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை உள்ளம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமிடும், பால்நிலவுங் கதிரோன்

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்ன
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின்  இன்பம்

*************************************



இதன் விளக்கம்:
 இன்பம் எங்கே?

செங்கனிகள் தூங்குமிளஞ் சோலைதனில் தொங்கி
அங்குமிங்கென் றாடுங்கவி ஆற்றலுடை உள்ளம்
திங்கள்எழிற் பொன்வதனச் சேர்மறைகள் மொய்த்த
பங்கமுறும் வண்ணமிடும், பால்நிலவுங் கதிரோன்

இந்தக் கவிக்கான  சிறு குறிப்புகள்>
சிவந்த கனிகள் தூங்கும் சோலை மரங்களில் (ஊஞ்சல்போல்)
அங்குமிங்கும் ஆடும்  குரங்குகள்  (கவி) போன்றும் ஆற்றலுடைய மன எண்ணமானது
(மனம் ஒரு குரங்கு) நிலவின்  முகத்தில் காணும் மறைகள் (கறுப்பு நிறம்)
போன்று
பங்கமுள்ள அல்லது களங்கமான நிலைகொண்டது. அதாவது  நிலவும் சூரியனும் அவை

செங்கனலும் வெண்குளிரு மொன்றுபடச்சேரும்
தங்கமெனும் பொற்கணத்துத் தகதகப்பில் மின்னி
அங்கொருவள் ஒசையிட்டு ஆனந்தமாய் பாடும்
சங்கொலித்துத் தோற்றமதி சற்று நாணிப் போமோ

முறையே சூடும் குளிருக்கும்  உதாரணமானவை  ஒன்றுசேரும் நேரம் காணும்
தகதகப்புபோன்றுமின்னிக் கொள்வது  எமது மனமாகும்.(( இங்கு சூரியனும்
சந்திரனுமொன்று சேர்ந்தால் சூரிய கிரகணமாகும் (பொற்கணத்து)))

 அந்தநேரத்தில் தக தகக்கும் ஒளி கிடையாது. எனவே எதிர்மறையாக மனம் இருள்
கொண்டது என்பதை இகழ்ச்சியாக அப்படி புகழ்ந்தேன்.

அங்கொரு “வள்” ஓசையிடுவது நாய் . நாய் ஆனந்தமாக  குரைத்து ஊளையிடும்போது
சங்கொலிபோன்று  தோற்றுமென்னதால் (தவறென்றால்
மன்னிக்கவும்) )அப்படிப்பட்டஓசைக்கு மதி (சூரியனை மறைக்கும் நிலவானது)
பயந்து விலகி ஓடியா போகும்?  (இல்லை. )
நிலவைப் பார்த்து நாய் குரைத்தது என்பார்கள் பிரயோசனமில்லை

அதுபோல் மனதை  திருத்த முடியுமா என கொள்க

தங்குமதன் நெய்பிரியத் தாகமுற்ற தீபத்
தொங்குதிரி கொள்ளொளியின் தோற்றநிலை கொண்டே
வெந் தணலும் உண்ண,வரும் வீழ்புனலில் பட்ட
சந்தணத்தின் நிறமெடுத்த சாந்தரூப உள்ளம்

1. விளக்கில் தங்கியிருக்கும் நெய் எரிந்து முடிய திரியில் எண்ணெய்க்கான
தாகமுற்ற நிலைபோலவும் (அச்சமயம் எரிந்துகருகும் இருள்  கவ்வும்)
2. வெந்தணலில் எரிகின்ற ( தீ உண்ணும்) சந்தணக் கட்டையானது வரும்
வீழ்புனல் (மழை) பட்ட வுடன்  கரியாகிப்போகும் , அதுபோன்றும்---
கருமையானது உள்ளம். (சாந்த  ரூப உள்ளம் -- மீண்டும் இகழ்வுக்காய்
புகழ்ந்தேன்)

செங்குருதி குறுகுறுக்கச் சீறுமலை போலும்
பங்கயத்தின் இலைபடிந்த பொய்கையில் நீர்துள்ளி
அங்குமிங்கு ஆடுவதாய் அன்பு கொண்டவாழ்வை
தங்கமெனும் மனமெடுத்தல் தரணியிலே புதிதோ

உடலில் இளரத்தம் உள்ளபோது குறுகுறுப்பை துடிப்பை ஏற்படுத்தும் மனமானது
கடலலைபோல் சீறியெழுந்தாலும்.

உண்மையில் தாமரையின் இலை பொய்கையில் படிந்து கிடந்து ஒன்றாக வாழ்ந்தும்,
பொய்கையின் நீர் துள்ளி ஏறினால் இலை  தள்ளி விழுத்திவிடும். அது போன்று
அன்பு கொண்ட (அன்பற்ற)  உள்ளங்கள் வாழும் இந்த உலகானது ஒன்றும்
அதிசயமில்லை

சிந்தனைக்குள் சினமெழுந்து செந்துளிர்கள்போலும்
வெந்தபுண்ணில் வீழ்நயமாய் வேந்தனுடை வாளும்
தந்தசுகம் என்னருமை, தன்னில் மனம்பாடும்
விந்தைகொள விழிநிறைத்த வியனுலகின்  இன்பம்!

அப்படிப்பட்ட உள்ளங்கள் கோபமுற்றபோது தீபோலும்  நிறங்கொண்டு சிவந்து
முளைக்கும் தளிர்களாகவும்  ஏற்கனவே காணும் புண்ணில் அரசன் கைகொண்ட வாள்
பதம்பார்க்கும் போது (வெட்டும்போது) ஏற்படும் வேதனையைஉண்டாக்குவதாலும் -
(இகழ்வுக்காக ’தந்த சுகம் என்னருமை’ என்றேன்) இந்த உலகம் எவ்வளவு இன்பமாக
உள்ளது!  (பெரும் நரகம் என்று பொருள் கொள்க)

சக்தி ! சக்தி!! சக்தி!!!


திருநட மிடுமென் னறிவெனுங் கருவில்
உருவமின் றிருப்பவளே
இருளெனு மாயை இதுவரை கண்டேன்
தருமொளி பெரிதுனதே
வருமிடர்கொண்டே பகையுற யிரும்பில்
துருவென உருவழிந்தேன்
பெருமளவாக இருமன துழலும்
செருகினி லெனையிழந்தேன்

ஒருமையில் மனமும் உள்ளொளி தானும்
தருசுடர் எனவருவாய்
எருதினில் ஏறும்  தருமனும் உயிரை
வெருகிடப் பெற முதலாய்
மருவியென் அறிவை தருவதில் குறையை
ஒருபொழு தினிகுறையாய்
சருகெனக் கருக முதலலுரு மாற்று
தருவினில் கனியெனதாய்

உருவினி லன்பும் பெருமையு மறிவும்
வருமுன திருமனதால்
தெருவினில் வீழும் சொரி பனியாக
உருகிட முதலறிவாய்
மருகிடு மனதில் மாற்றமுந் தந்து
மெருகினை யுடைமனதாய்
அருகினில் வருவாய் ஒருதென தாயாய்
இரு எனை வழிநடத்தாய்

அருவியு மாழி இருதிசை செல்லும்
ஒருங்கிடு மதிலிணையும்
பருவமும் கொள்ளக் கருமுகில் மின்னும்
பெருமழை புவியணுகும்
முருகெனும் தமிழும் அரும்பொரு ளிசைய
தரும்வித மெனைதெரிவாய்!
இருமனக் குருவாய் கருமமும் நிறைவாய்
பெருகிட அருள்புரிவாய்!

நானும் ஒருவன்

மகா வல்ல அறிஞர் குழுவுக்குள் இடம்கிடைத்தபோது...

அழகான சபையொன்று கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர் போலும் இதயங்கள் கண்டேன்
குழலோசை குயில்பாடுங் கீதம் - இளங்
குளிர்மாலைக் காற்றோ டெழுந்தோடக் கண்டேன்

கிளிபோற் குரல்கொண்டு நானும் - அங்கு
கீக்கி என்றே கத்திப் பாட்டிசைத்தாலும்
களிகொண்டு பெருநெஞ்சம் வாழ்த்தும் - யான்
கதைகூறிக் கவியென்று வதைசெய்தபோதும்

சரிபாதி நிகர்தானும் இல்லை -நான்
சரிகம பதநி அறிந்தவன் இல்லை
வரைமீறி கவிசெய்யு மென்னை - அங்கு
வாஎன்று வழிதந்த இவர்கொண்ட மேன்மை

வளைந் தோடுநதி பாதை கொள்ளும் - எங்கும்
வளையாத நதிமோதித் துளியாகி வீழும்
களைநீங்கப் பயிரோடி ஓங்கும் - எம்
கலைகொண்ட உளம்தானும் மகிழ்வொன்றே காணும்

சினங்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
செந்தமிழ் பொன்மதி வானிலே தோன்றும்
மனங்களில் நாமெறிந்தாடும் - நல்ல
மலர்கொண்ட கணைநெஞ்சில் மணம் தந்துபோகும்

மகிழ்வாக மனமின்று துள்ளி - ஒரு
மாற்றான அனுபவம் கொள்ளுதேயள்ளி
புகழோடு வழிகாட்டல் சொல்லி - என்னைப்
புடம்போடச் செய்தவர்க் கொருகோடிநன்றி

காற்றோடு மலர்கொண்ட வாசம் - நற்
கனியோடு சுவை கொண்ட காதலும் நீரின்
ஊற்றோடு குளிர் கொண்ட நேசம் - இவை
உளதானவரை நானும்ஓய்வெனக் கொள்ளேன்

ஆர்ப்பரித் தெழுமாழி அலைகள் - ஆக
ஆயிரம் உணர்வுகள் அகம்மீது உண்டு
நீர்த்துளி வீழுதல் போலே - என்
நெஞ்சத்தின் எண்ணங்கள் நிச்சயம்வீழும்


பிரியாத வரமொன்று வேண்டும் (புதிது)



மலர்மீ திருந்து மணம்வேறு சென்று
பிரிந்தாலும் தமிழான எந்தன்
உளமீ திருந்து உயிரான சந்தம்
பிரியாத வரமொன்று வேண்டும்

அலையோடுதழுவி குளிரான தென்றல்
அசைந்தோடிப் பிரிகின்ற போதும்
கலைமீது கொண்ட எனதாசை என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

இருள் மேகங்கூடி இரவானதாகி
இடியோடு மழைவீழ்ந்த போதும்
அருளோடு தீபம் அணையாது என்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

கடுநோயில் வீழ்ந்து கனவாகி வாழ்வும்
கடையென்று விதிசொல்லும் போதும்
தொடுவானும் மண்ணும் தெரிகின்றதாக
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

சுனைநீரும் என்றும் செழிவானபூவும்
சுழன்றோடும் மீனோடு வாழ்ந்தும்
வலைபோட மீனின் வாழ்வின்றிப் பூவாய்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

மலர்கின்ற காலை புதிதான வாழ்வை
மனதுள்ளே  நினைவென்று காணும்
வரமீந்து என்னை இதயங்கள் போற்றும்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தொலை வானிலுள்ள நிலவான தோர்நாள்
வரவானில் மறந்திட்ட போதும்
கலைவானில் கீதம் காற்றோடு  சேரப்
பிரியாத வரம் ஒன்று வேண்டும்

தலைமீது மின்னல் இடிபோலத் துன்பம்
தனிவந்து  வீழ்கின்ற போதும்
உருவாகு மன்பை எதுவந்தும் தீண்டாப்
பிரியாதவரம் ஒன்றுவேண்டும்

மலையான தொன்று வழிமீது நின்று
புகும்பாதை தடைசெய்யும் போதும்
உருவாகும் அன்பு அதைமீறி வெல்லும்
பிரியாதவரம் ஒன்று வேண்டும்

அவனா இவன்?



கள்ளும் உண்ணக் கண்கள் செம்மை காணும்வண்டாகி
உள்ளும் புறமும் உயிரின் பூக்கள் உதரம்தனைநோக்கி
வெள்ளம்போலே புரண்டு வீழ்ந்து விடியும் பொழுதினிலே
தெள்ளத்தெளியும் வண்டின் நிலையில் திரும்பிப் பார்க்கின்றான்

வெள்ளைமேகம் விடியற்காலை வீசும்தென்றலிடை
தள்ளி தூரக் காணும் பொய்கை தண்ணீர் அலைமோத
அள்ளிக் கல்லைப் போட்டே அழகு ஆகா எனஉள்ளம்
துள்ளித் திரிந்த திசையின் பக்கம் திரும்பிப் பார்க்கின்றான்

நள்ளிரவானால் கனவுக்காட்டில்  நடனமாடும் மனம்
தள்ளிச்சென்றே பூக்கள் என்றே தீயில் தள்ளியதோ
அள்ளிப் பருகும் மதுவும் அழகுப் பூவின்வடி வெல்லாம்
வெள்ளி பூவாய் கண்ணை மின்னும் விடியப் பொய்த்திடுமோ

(இன்று....)

அழகுப்பூக்கள் ஆடும்காற்றில் அதனை ரசிக்கின்றான்
இதழைத்தொட்டு ம்..ம் வேண்டாம் இயல்பைக் கைவிட்டான்
குழலில் சூடப் பூக்கள் கொய்யக் கொடுமை என்கின்றான்
தழலில் காய்ச்சும் பாலில் தோன்றும் ஆடை ரசிக்கின்றான்

அள்ளிப் பூசும் நெற்றிப் பட்டைஅழகாய் மேகங்கள்
புள்ளித் திலகம் போலும் காணப் புரவி, கதிரோட்டி
வெள்ளைத் தேரில் வெய்யோன் வந்தால் விடியுமதுபோலே
உள்ளத் திடையே ஒளியும் காண உதயம் பெறுகின்றான்.

கற்பனைக் கோட்டை

செந்தமிழ்க் கல்லெடுத் தற்புதமண்டபம்
சிந்தையில் கட்டிவைத்தேன் - அதில்
சுந்தர மென்னிழை சந்தங்கள் கொண்டெழில்
சித்திரம் கீறிவைத்தேன்
வந்திருந் தின்பமும் கொண்டிட மற்றவர்
வண்ணஒளி அமைத்தேன் - அதில்
எந்தன் மனதெழும் கற்பனைத் தீபங்கள்
எங்கும் எரிய வைத்தேன்

நந்தவனத்திற்சு கந்தமலர் கொய்து
நற்கவிநூல் இழைத்தேன் - நல்ல
சந்தணமும் நறும் பன்னீர் தெளித்தங்கு
சுந்தர வாசமிட்டேன்
செந்தூர வண்ணச்செ றிவெடுக்க அதில்
சிந்தனை தூபமிட்டேன் - ஒரு
தந்திரமுமல்ல தங்கமெனும் தமிழ்
தந்துஅழகு செய்தேன்

மந்தமுறமன தின்பம்பெற அவர்
மன்னவன் போல்மகிழ = இல்லை
மந்திரங்கள்,எது கையொடு மோனையும்
இட்டு அழகு செய்தேன்
சொந்த எழில்வண்ணக் கந்தருவ எழில்
செந்தமிழ் மாந்தருக்கு -அவர்
வந்திடும் வேளை நீராடிக் களித்திடப்
வட்டக் குளமமைத்தேன்

இந்தஎழில் இல்லம்கொஞ்சம் இருண்டதும்
இன்னொளி போய்விடலாம் - எனப்
பந்தங்களும் ஒளி தந்திடவே எங்கும்
பார்த்து எரியவிட்டேன்
அந்தியிலே  குளிர்பொய்கையில் நீந்திட
ஆடைஅணிகளுடன் - அகில்
சந்தணமும் உடன் செந்தணலும் வைத்தே
சற்று அமைதிகண்டேன்

வெந்திடும்போல் பசி உண்டுஎன்றால் அவர்
வேண்டிட முன்தரவே - மரப்
பொந்தினிலே நல்ல தேனடை கொண்டதில்
தேன்வடித்தும் எடுத்தேன்
பந்தியுடன் உண வுண்டு களித்திடப்
பாலொடு  பண்டங்களும் இன்னும்
முந்திரியும் கூட முக்கனிகள் சேர
முன்னே எடுத்து வைத்தேன்

இத்தனையும் செய்து எத்தனை மனங்கள்
எண்ணிடக்  காத்திருந்தேன் - நல்ல
புத்தம்புது வரவெண்ணி துயிலின்றி
பக்கமும் பார்த்து நின்றேன்
சத்தியமும் மன தைரியமும் கொண்டு
முற்றும் விழித்திருந்தேன் -ஆயின்
புத்தொளி வான்சுடர் தோன்றிடக்காலை
பொழுதென்று கண்டறிந்தேன்

செந்தமிழில் கரம் தந்து அன்புகொண்டு
சிந்தையி லொன்றுபட - நல்ல
பைந்தமிழே இனிதென்று படித்தொரு
பாமலர்ப் பூச்சொரிய
நந்தவனம் எனும் விந்தைதமிழினில்
நற்கவி மாலைகட்ட - எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்

காத்திரு காற்றில் வருவேன்

தேனிற் குழைத்த தீங்கனியாய்
தேவி எந்தன் அருகிருந்தாய்
வானிற் குழைத்த ஓவியமாய்
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்

பச்சைப்பசுமைப் புல்வெளியும்
பனிநீர் தூங்கும் அதனிதழும்
இச்சையுடன் நீ பக்கமதில்
இருந்ததை எழுந்து கூறாதோ

கொத்துமலர்களின் தோட்டமென
கோடிநிலவுகள் கூட்டமென
நித்தம் அருகினில் நீ இருந்தாய்
நினைவுகள் மீண்டும் வாராதோ

வெற்றாய் விரியும் விண்ணில் நீ
விட்டுச் சென்றது எங்கே சொல்
உற்றே நோக்கும் உன்விழிகள்
உயரச் சென்றது உண்மையெனில்

பஞ்சு போன்றோர் வெண்மேகம்
பரந்தநீலப் பிரபஞ்சம்
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்
எங்கும்நீயே நீயேதான்

சுட்டுத் தீய்க்கும் சூரியனும்
சுடர்போல் நினது விழிதன்னை
சுட்டி காட்டி எரிகிறதே
சோர்ந்தே தவிக்கு மென்மனதை

கட்டிக் காக்கமுடியவில்லை
காற்றும் தீண்டிச் செல்லுகையில்
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்
பனிநீர்விழவும் உன் தேகம்

தொட்டுக் காணு மின்பமென
தோன்றச் சிந்தை வாடுகிறேன்
வட்டச் சந்திரன் உன்வதனம்
வடிவம் காட்டி எனைக்கொல்லும்

சிட்டுக் குருவி ஜோடிகளும்
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்
வெட்டிக் கொல்லும் வகையாக
வேதனை யாகிக் கொல்லுதம்மா

நின்னை பிரிந்து நானொருவன்
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ
கண்ணை விழித்துக் காண்பவளே
காற்றில் வருவேன் காத்திரடி

சிரிப்பொலி

வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டுமலர் கண்டு சிலிர்க்கும
போனவனைக் காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்

நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிடக் கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவனாகத் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடுங்  காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போராட எண்ண விதி சிரித்திடும் நாளும்

தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

Sunday, January 29, 2012

துயிலும் இல்லங்கள்


தோள்தந்து துணிவோடு தேசமதைக் காத்த
   தீரர்களின் கல்லறைகள் தொலைந்த இடம்காணீர்
நீள்மரங்கள் நிரைநின்று நிலைகுலைந்து ஆடும்
   நிழல்கண்ட குருவியதி லிருந்துமெல விசும்பும்
வாழ்வென்று பூத்தமலர் வாடியிதழ் சோரும்
   வான்நடந்த முகிலிரங்கி சோகமழை தூறும்
பாழ்என்று மண்ணை யள்ளிப் படர்காற்றும் கண்ணில்
   பட்டுவிட வீசியபின் சாபமிட்டு ஓடும்

வேகஇடி மின்னலென வேகம்கொண்டவீரர்
  விதைத்த இடம் அழித்தவனை எண்ணிமனந்தன்னில்
ஏகமென இயற்கையதும் கொன்றவரை மீண்டும்
  கொல்லுமொரு வேதனையை கூடிநின்று பேசும்
தேகமதைப் பெற்றவரும் சேர்ந்து பிறந்தன்பு
   சோதரரும் பிள்ளைகளும் சொல்லியழ நாச
மாகயவர் உழுதநிலம் விதை முளைக்க வென்றோ
  மக்கள் தினம் அழுதநீரில் வேர்முளைக்கு மென்றோ?

தீரமெனும் செடிவளர்ந்து தினம் பூக்கும் வாசம்
  திறனெடுத்து உருவமைக்கும் தீந்தமிழின்தேசம்
கோரமுகக் கயவரவர் குலைநடுங்கி ஓட
  குடிமக்கள் துணிவெடுத்து குலம்காத்து வாழ
ஈரமழை யன்புபொழிந் தின்பவெள்ள மோட
   ஈழநிலம் இறைமையுடன் எமதென்றே ஆக
யார்தமிழர் பிளவில்லாது ஒன்றுஎன ஆகும்
 உறுதி தனைப் பெற்றோமா, எங்கள் வாழ்வு காக்க?


பன்னிரண்டாம் ஆண்டு- 2012

பன்னிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லை வேலா - எம்
கண்ணிரண்டும் நீர்வழிந்தும் காக்கவில்லை சீலா!
முன்னிருந்த ஆண்டும் எந்த மூச்சுமில்லை  போக -  இப் 
பன்னிரண்டு பூத்த தெங்கள் பாவம் நீக்கிப் போமோ?

மண்புரண்டு ஓலமிட்டு  மானம்விட்டு வீதி - பல
எண்கடந்து கூடி நின்று ஏக்கமுற்று வேண்டி
விண் ணெழுந்த கூச்சலிட்டும் வீணென்றாக மேனி -தான்
துண்டிரண்டு ஆக்கவிட்ட  துயர்நிறைந்த ஆண்டு!

கண் நிறைந்த வாணமின்னல் கண்டுபூமி துள்ளும் - நல்
வெண் நுரைத்த பானமுண்டு வேடிக்கையும் செய்யும்
மண்ணிழந்து மாந்தர் வீடு மக்கள் யாவும் ஈந்தும் - எமை
விண் பறந்து ஆவியென்று விட்டு கண்டு மகிழும்

பன்னிரண்டென் றாண்டுதன்னும் பார்வை தந்து எங்கள்  இருள்
கண்ணிரண்டில் கொண்ட வாழ்வு காக்கவேண்டும் வேல
மண்ணிருந்த ஆட்சி, மன்னன், மக்கள் மானவாழ்வு -  இனும்
பொன்திரண்ட பூமிதந்து  போகவேண்டும் வேலா!

Friday, January 27, 2012

வாழத் துடிக்கும் மனம்!

ஆழக் கடல்மகளும் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிட்டாள்
நீளக் கருவானில் நீந்துமதி வெகுண்டோடி
நிழல்மேகம்கண்டுபுகுந்தாள்
வேழப் பிளிறலென விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட்டோடும் வழியே
வாழவென் றாவலெழ வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையின் ஓரமொருத்தி

காளையும் வலிந்துவெஞ் சமரென்னும் விதிகொண்டு
காணது தொலைந்து போக
வேளைமுடிந்ததிவன் விட்டனன் இம்மையென
வெம்பிஊர் அழுதபோதும்
நாளையோர் நாள் வருவ னென்று வழிபார்த்திவளும்
நம்பியொரு வாழ்வு வேண்டி
வாழை யடிவாழையென வம்சம் பெருக்கிவிட
வாழ்வெண்ணித் காத்திருந்தாள்

வீழத் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ பெருகி ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையிடை
அடங்காது திசையும் மாறி
வாழவென் றிட்ட மனை வாரியிழுத் தழித்ததும்
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்தோடும் பாதையிலே தேடுமிவள்
பசுஞ் சோலை காணுவாளோ

மேலைச் சிவந்தவெளி மேகங்க ளூடுஒளி
மேவுகதிர் மறைந்துபோக
சோலைத் தருவுலுக்கி சுற்றுமொரு சூறையதில்
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலையில் மணல்பற்றி பலங்கொண்ட காற்றூதி
பாவியவள் கண்கள்நோக
காலத்  தடம்புரள கவிழ் என்றுவீழ்த்து சதி
கண்டுமிவள் ஏங்கிநின்றாள்

மூளப் பெருத்தவலி முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி  னடையாளம் கெட
நாளம் பெருநாடி நடுங்கிமனம் பதைத்தேங்க
நஞ்சுண்ட கன்றுபோலே
வாழைப் பெருந்தோட்டம் வேழம் அழித்துவிட
வீழ்ந்த பல பச்சைமரம் போல்
ஈழமும்  காணவதி லோர்வாழ்வு தேடியெதிர்
காலமென் றேங்குகின்றாள்

நாதமென் சங்கூதி நங்கையிவள் மானிடமே
நீதிஉயிர் வாழ்வதெனுமோ
வாதம்பி றக்குமோ வாழவோர்  சம உரிமை
வையத்தி லுள்ளதென்றே
பேத உணர் வோடுபகை பேசுமிஞ் ஞாலமும்
பேதையிவள் பாவமென்று
மீதமுள கல்நெஞ்சில் மெல்ல நீர்கசியுமோ
மீண்டுமிவள் வாழவிடுமோ

Thursday, January 26, 2012

துயர் கொண்ட சிறுமி


நீல விழிகளும் நீர்விழி யாகிட
நேர்ந்தது ஏதடியோ - சிறு
கோல முகமின்று கொள்ளுஞ் சிரிப்பினைக்
கொள்ளை கொண்டாரெவரோ
மேலை வானவெளி மேகம் வந்தேயுனை
மெல்ல மறைத்ததுவோ - இது
கால மென்ன உந்தன் கண்கள் பொழிந்திடக்
கார்த்திகை மார்கழியோ

தாளமிடு முந்தன் தாமரைப் பாதங்கள்
தாமத மாவதென்ன - ஒளி
சூழமலர்விழி சொட்டும் மகிழ்வெனும
சோதிகுறைந் ததென்ன
நாளும் பொழுதுமுன் நாவில்நடமிடும்
நல்லமுத மழலை - இன்று
பேழையில் மூடிய பொன்னகைபோல் எழில்
பொத்திக் கிடப்பதென்ன

பூமரக் கூடலில் போகு முணர்வினில்
புன்னகைக்கும் இனிமை - எழிற்
தாமரைப் பூவிரி தண்ணலை நீரிடை
துள்ளும்கயற் செழுமை
மாமரச் சோலையில் தூங்குங் கனியுண்ணும்
மாங்கிளி பேச்சினிமை இவை
நீமறந் தேநெளிந் தாடுமுட லின்று
நிற்பது வும்புதுமை!

கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரத்தின் அழகும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கும் குளிர்மைதனும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே

தேடி உலகினிற் தீமை களைக்கண்டு
தேர்ந்திடு நல்லறிவு - அங்கு
ஓடி வருந்தென்றல் உன்னரு கிற்புய
லாகும் நிமிர்ந்து நில்லு
கூடிவ ரும்பல கூட்டமுட னன்பு
கொண்டிடு சேர்ந்து செல்லு - அதில்
மூடி மறைந்தொரு மூடன் தீமைசெய
முன்வரக் கூடுமெண்ணு

நூறு மலர்களில் யாவுமொரு வண்ணம்
நேர்ந்த தில்லை மனதில் - துயர்
ஆறு, உலகையுன் அன்புமொழி கொண்டு
ஆளமுடியும் நில்லு
தேறு எதுவுன்னை வாட்டுது எண்ணங்கள்
தேனெனமாற்றிவிடு - மணம்
நாறும் மலர்தொட்டு நாளும்வீசு தென்றல்
நானெனத் துள்ளிஎழு

பேறு யிதுபெரி தானது பூமியில்
பெண்ணென நீபிறந்து - பல
மாறுதல் செய்திடும் மாபெரும் சக்தியின்
மற்றொரு தோற்றமிது
வேறு திசைகளில் ஓடும் மனங்களில்
வேற்றுமை பண்புணர்ந்து  - புத்தி
கூறு நல்லோர் உணர் வோடுவாழ்வி
லின்பம் தேடு உலகைவெல்லு!

Wednesday, January 25, 2012

காலைக் காட்சி


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவது)

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்

தமிழின் சுவை!

தமிழ்சொல்ல உளமெந்தன் மகிழ்வாகுதே!
தமிழ்காண விழியெங்கும் ஒளிகூடுதே !
தமிழ் கேட்டு மனம்நின்று கூத்தாடுதே !
தமிழுக்கு எது ஈடு இவையாகுமோ?

(வேறு)

செந்தமிழின் சுகம் தென்றலதோ சுவை
செங்கரும்பின் அடியோ?
பைந்தமிழும் பனிகொள் குளிரோ பசும்
புல் வெளியின் அழகோ?
அந்தரவான் எழும் சந்திரனோ அதன்
சுந்தரத் தேனொளியோ ?
அந்தமிலாப் பெருஅண்டமதில் தமிழ்
எந்தளவு பெரிதோ?

வெந்திடவும் அனல் தொட்டதிலே மின்னும்
பொன்னின் மிளிர்விதுவோ ?
வந்தமழை தந்த வானிடையே வில்லின்
வண்ண வடிவங்களோ?
நங்கையவள் நட மென்பதெலாம் தமிழ்
நல்கு முயிர்த்துடிப்போ?
பொங்கிடுமோ அலை போலிதுவோ தமிழ்
பேச உணர்வெழுமோ !

சங்கிதுவோ ஒலிதந்திடுமே அதன்
சாரும் வெண்மை இயல்போ?
பங்கயமோ பனி தங்கியதோ அதன்
பட்டிதழ் மென்னியல்போ?
தெங்கினிடை இளங்காய் நடுவே கொண்ட
தித்திக்கும் நீரிதுவோ?
வெங்கதிரோன் உச்சிவேளை சுட நின்ற
வேங்கை மரநிழலோ?

கங்கையவள் முடிகொண்டவனோ அன்பு
கொண்டு வளர்த்ததமிழ்
செங்கனலின் விழி கண்டும் பிழைசொன்ன
சங்கப் புலவன் தமிழ்
இங்கு மனமதில் என்று மினித்திடும்
இன்ப முடைத்த தமிழ்
மங்குவதோ? அது கொள்ளும் துயர்எனில்
எங்கள் கரம் கொடுப்போம்

எங்கு மிணை யில்லை செந்தமிழே என
சங்கே முழங்கிவிடு
பொங்கிவரும் பகைஎந்த விதமெனக்
கண்டதைக் காத்துவிடு
மங்கை குலமவர் மானமெனத் தமிழ்
கொண்ட துயர் துடைத்து
செங்குலமே இந்த தங்கத்தமிழ் தன்னை
எங்கும் வளர்த்துவிடு!

Sunday, January 8, 2012

தமிழே இனிதாம் !



தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?

மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

கவியின்பம்



கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்

என் அன்னை, என்தேசம், என்கனவு

என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்

வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்

 மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க

நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்

” பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதெ”ன்றேன்

நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
”வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் தீதுதனை
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவர்கள்!

”எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்

பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்

என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்

கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .

எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன

பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து

பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்

அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து

குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா

ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்

கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்

நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு

இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு

துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு

மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்

****

இன்பக் கனவுகள்

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் -  நற்
  கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை -  எனப்
  படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே -  அதில்
     தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே -  இந்த  
    உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து -  அதில்
  வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று -  ஏன்
   புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும்  = அதில்
  புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
  பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய்  - உன்
  மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
  காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
  இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது -  அது
  தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி -  இப்
  பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
  தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
 நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்-  அவன்
  பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
  புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
  சுகம்யாவும் வெறுமையென் றாகும்
 மலர்மேனி தொட்டிட்ட இன்பம் -  நல்ல
  மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
  பனிமேடை கனல்கொண்ட தாகும்

Saturday, January 7, 2012

பார் அதி சின்னக் குழந்தை

(2009வது ஆண்டி ல் எழுதிய கவிதை)

சின்னஞ் சிறுமலரே - செல்லமே
   செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
   ஓடி வழிவதுஏன்
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
  கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
   உன்நிலை என்னசொல்வேன் 

ஓடி வருகையிலே - பின்னால்
    ஆமி துரத்துகிறான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
    அடித்துக் கொல்லுகிறான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
    வானிற் பறந்துவந்து
ஆயிரம் நூறெனவே - குண்டு,
    அள்ளியே போடுகின்றான்

உச்சிதனில் வீழும் - குண்டில்
   உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடியுதடி - ஊரே
   சுட்டகா டாகுதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
   நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
  செத்ததுடன் புதைத்தார்

கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
   கட்டி யணைத்து அன்பை
தந்தவள் மேனியினைக் - கொன்று
    தணலில் வீசிவிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
  பெண்ணே உன்தந்தையுடல்
சன்னம் துளைக்கச் செய்து - வீதி
   சாலையிலே எறிந்தார்


அள்ளி அணைத்திடவே - சொந்தம்
   யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
   மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
   உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
   கூடம் எதுவுமில்லை

என்ன கொடுமைஇது - என்று
   ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
   ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - வாழ்வில்
    ஆயிரம் கொண்டவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
    வாழ்வு மழிந்ததடி

பிள்ளைக் கனியமுததே - உன்போல்
  பேசும்பொற் சித்திரங்கள்
முள்ளி வாய்க் காலினிலே - பூத்து
   மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
   அன்பு சிறுவர்களும்
கொள்ளி வைத்தேமுடித்தார் - கோரம்
    எல்லை கடந்ததடி

இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
   என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
  மோசமிழைத்து விட்டாய்
ஈழத்தமிழ் வயிற்றில் - ஏனோ
   ஊன்றிக் கருவெடுத்தாய்
எங்கள் மண்ணில்மலர்ந்தாய் இதற்கு
  மன்னிப்பே இல்லையடி

சொல்லும் மழைலைஎல்லாம் - மறந்து
   சித்திரமே அழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
    மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்மிதியா - நடந்து
    சோர்ந்த நல்சித்திரமே
நல்லவர் தூங்கவில்லை - மீண்டும்
    நாடு எண்ணி எழுந்தார்

தூர ஒளி யெழுந்து- உன்னை
  தேடிவரும் அமுதே
வீரமெடுத்து அறம் மீண்டும்
  மெல்ல  வரும் முன்னே
யாரும் இல்லைஉனக்கு என்ற
 அச்சம் இனி வேண்டாம்
பாரில் பரந்ததமிழ் அமைக்கும்
 கொள்கை சிறக்குமடி

Friday, January 6, 2012

ஒற்றுமை ???


திரையும் திரையெழு கடலும் கடலிடை
தினமும் எழுகதி ரொளியும்,
தரையும் தரைதொடு அலையும் அலைபுனல்
தரவிண் பொழிமழை முகிலும்
இரையும் அதனுடை ஒலியும் இடியொடு
முழங்கு விரிசுழல் புயலும்
விரையும் பெருகிடப் புகும்நீர் இயற்கையின்
விளைவே எனில் உயிர்கொல்லும்

மரபும் மரபுடை மொழியும் மொழிசொலும்
மனிதர் அவருடை மனமும்
கரவும் கயமைகொள் உறவும் உயிரினைக்
கருதா இறைமைகொள் ளரசும்
பரவும் பெரிதெனும் உலகும் உலகிடை
பலதோர் குடிகளும் அவர்தம்
தரமும் தயவுடை இயல்பும் தாழ்ந்திடுந்
தருணம் வர உயிர்கொல்லும்

உதிரம் பெருகிடு நிலையும் நிலைதனை
உருவாக் கிடுமொரு சிலரும்
அதிரும் சடபட வெடியும் வெடியுற
அவலம் தொடரழு குரலும்
உதிரும் பலதர உடலும் அழிவுற
உலகம் விழிகொள்ளும் மௌனம்
எதிலும் அவர்தனி நலமும் நலம்பெற
விழையும் செயல் உயிர்கொல்லும்

மயிரும் இழந்திட உயிரும் விடுமான்
மனதை யுடைமா தமிழன்
பயிரும் பயிரிட விளையும் அதனுடை
பயனால் தனதெழில் மனையும்
உயிரும் பரிவுடை குணமும் பலமுறு
உடலு மதுகொளும் திடமும்
வயிரம் எனும்வெகு திறனும் மதியுற
வாழ்ந்திட ஏதுயிர் கொல்லும்?

வண்டிக்காரனின் பாட்டு

கிராமத்தில் ஒரு மாட்டுவண்டிப் பயணம்


கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா

கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா

வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா

ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா

பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா

உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா

கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா

வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா

மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா

பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள

ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா

கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ

நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்

Tuesday, January 3, 2012

உறுதிகொள் மனமே !

துள்ளுங் கயல்போல் துடித்தேநெஞ்சந்
தோல்வியில் வீழ்ந்தாலும் - அதை
அள்ளி அணைத்திடக் கைகளிருந்திடின்
ஆனந்த மாமன்றோ!
வெள்ளி முளைத்திடும் வேளை கயிற்றொடு
வாசலில்வந்தாலும் - விதி
தள்ளி நிறுத்திடத் தர்மம் இணைந்திடில்
தருமே சுகமன்றோ!

பல்லி ’இசுக்’கெனப் போகும் வழிக்கொரு
பாதகஞ் சொன்னாலும் - அது
இல்லையெனத் துணி வோடு நடந்திடு
உலகம் உனதன்றோ
சொல்லி வழித்தடை போட மனத்திடை
சோர்வே எழுந்தாலும் - நீ
அல்லி குளத்திடை போல மலர்ந்திடு
அதுவே வாழ்வன்றோ

சொல்லி எடுத்திடும் எண்கள் பிழைத்தொரு
துன்பம் நேர்ந்தாலும் - அவன்
வல்லஎழுத்திறை வைத்தகணக்கோடு
வாழ்வில் முன்னேறு!
இல்லைஎனத் தெரு வீதியில் நின்றிடும்
ஏழ்மைகிடைத்தாலும் - நீ
எல்லை வரை திடங் கொண்டு முயன்றிடு
ஏற்றம் உடைத்தாகும்

தள்ளி யிருந்தொருஆறு நடந்திடத்
தாகம் கொண்டே நீ - அது
துள்ளி நெருங்கிடும் என்று பொறுத்திடல்
இல்லா நடைகொள்ளு
கள்ளி முளைத்திடும் காடு வனம்எனக்
காலம் இருண்டாலும் - வழி
முள்ளு மிதித்து நீ வீறுநடைகொளு
முடிவில் வரும் விடிவு!

மயக்கும் மாலை வேளை!










 தோழி:
மாமரச் சோலையிலே - மடி
  மீது தலைய ணைந்து
மாமகள் நீயிருந்தாய் - மனந்
  தானும் மகிழ்வு கொண்டாய்
தாமரைப் பூவிரிய - புனல்
  தாவிக் கயல் குதிக்க
தேமதுரச் சுவையிற் - கனி
  தின்று களித்தனை காண்

சாமரை வீசிநிற்க - இன்பஞ்
  சார்ந்த மலர் முகத்தில்
சோகமிழையக் கண்டேன் - நின்
  சுந்தரமென் னுடலும்
பூமரம் போல் புயலில் - பட்டுப்
  போய் விழுமா மதுபோல்
நீமனம் மாறியதேன் - உந்தன்
  நிம்மதி போனதெங்கே?

பொன்முடி வேந்தன் வர - அவர்
  புன்னகை செய்வதெல்லாம்
நின்மனம் பேதலித்தோ - அவை
  நீசமென உரைத்தாய்
என்னடி நின்நினைவு - அன்பு
  எத்தனைஆழமென
என்மனம் தானறியும் - ஆயின்
  ஏனிந்த கோபமெலாம்

புன்னை மரத்தடியில் - எழில்
  பூக்கள் உதிர்ந்து நிற்க
பன்னெடும்வேளை அவர் - பெரும்
  பாசமுரைத்து நின்றாய்
பின்னர் அவரருகில் - நீயும்
  பேசிட ஏகும்கணம்
புன்மை மனமெடுத்தே - பல
   பொல்லா துரைத்த தென்ன?

தலைவி:
(வேறு)
என்ன நினைத்தென துள்ளம் வருந்திடும்
ஏதும் புரியவில்லை - இரு
கன்னம் வழிந்திடும் கண்களின் நீர்வரும்
காரணம் தோன்றவில்லை
இன்னும் மனதினில் சின்னவள் நானெனச்
சொல்லத் தெரியவில்லை - ஏனோ
இன்னலை கண்டதென் றின்பமிழந்திடும்
என்நிலை மாறவில்லை

பென்னம் பெரிதொரு சோலை எழில்த் தரு
பேசரும் பொன்நிழலாம் - அதில்
சின்னக் குருவிகள் சேர்ந்துமகிழ்வது
சொல்லப் பெருங் கதையாம்
மின்னி இரவினில் விண்ணொளி மீன்களை
மேனியணிந்த பெண்ணாய் - அந்தப்
பொன்னொளி வான்மதி பூத்தமரத்திடை
புள்ளியிற் கோலமிட

நீலக்கரு விண்ணில் நீந்துவெண் மேகமும்
நேசமிழை தென்றலும் - பல
கோலமிடு மிசைகூடும் கருவிகள்
கொண்டவை போல்நிதமும்
காலம் பொழுதுயர் காற்றெழும் புள்ளினம்
கூடி இசை படிக்க - பெரும்
சீலமுடன் சுவை சேர்ந்திடவே அதன்
சூழல்தனை வியந்தேன்

சோலை மலர்மணம் சொல்லித் திரிந்திடும்
சுந்தரமென் வளியும் - நல்ல
பாலை பழித்திடும் பஞ்சு வண்ணமுகில்
பக்கமணை மதியும்
ஓலை படித்தும் அறியேனடி எந்தனுள்ளம்
உவகைகொள்ள - இன்பம்
நூலை விடமிக நுண்ணியதாய் மனம்
நேரக் களித்திருந்தேன்

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

காடு நடந்திடும் வேழம் மென முகில்
கன்னியென ஒருத்தி - அத
னூடு சிறுபிள்ளை ஓடிவரப் பெரும்
ஓங்கியெழும் அருவி
போடுஎன உயிர்போக்கும் அரக்கரும்
பூதங்கள் போற்பலவும் - விழி
மூடும்பொழுதிலும் ஊடுவர மனம்
முற்று மிழந்து விட்டேன்

கண்ட கனவு விழித் தெழுந்தேன் என்ன
காரணம் ஏதறியேன் - அதில்
கொண்டதென்ன உளங் கூறிய தென்னொரு
கோலம் புரிவதிலேன்
மண்டபமும் மலர் மாமரமும் நிழல்
தந்திட நானிருந்தேன் - அங்கு
கண்டது மோர்கன வென்ன உரைத்திடக்
காலையில் நான் மறந்தேன்

கற்பனையில் எனக்காணவைத்த தென்ன
காதலின் வேதனையோ - எனை
சிற்பமெனச் சிலையென்று நினைத்தவர்
சென்றதன் காரணமோ ?
அற்புதவேந்தன் அருகிருந்தால் இது
ஆகிடுமோஅதுவே - இந்த
சொற்புயல் தந்தெனைச் சீண்டி மகிழ்வதின்
செய்கை புரியேனடி!


தோழி

சீரும்செறிவாய் சிந்தைகொள்
சேருமன்பு பொலிவானால்
போருமூடே உண்டாகும்
புண்ணாய் மனதும் நோவாகும்
தேரும் மனதில் நல்லன்பும்
தெளிவைத் தாரும் கணமாக
நீரும் வற்றும் விழிமீது
நெஞ்சின் கருணை ஒளிகூடும்

யாரு மற்றேன் நானென்று
யாதும் எண்ணல் வேண்டாமென்
சேரும் அன்புச் செல்வமடி
சிற்றூர்தேசத் திளவரசி
பாருன் அன்பைப் புரிவாருன்
பக்கங் காணும் துயர்தானும்
நீரும்வற்றும் வெய்யோன்முன்
நேர்நிற் கும்பனி யாய்வற்றும்

தலைவி:
நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ

தெய்வத்தில் பட்டிடப்பூ எறிந்தால் வரம்
தெய்வஞ் சினந்து மறுப்பதுண்டோ
எய்அம்பி னோடுவில் லேந்திய வேடனும்
மெய்யன்பினால் வென்ற ஈசனல்லோ
தெய்யெனப் பாடிக் குதித்திடினு மவர்
தேருங்கலை தனும் பார்வையிலே
நெய்விட்ட தீபமென் றேஒளிர்ந்தால் அதை
நீர்விட்டு பார்ப்பது நேசமென்றோ?

அந்தவேளை தலைவன் திடீரென தோன்றுகிறான்.

தலைவன்:
கண்களில்நீருடன் பொன்முகம் ஆனதென்
காண்பதென்ன மனம்வேதனையோ
வெண்பனி போய்விடும் இன்பமென்காலையில்
வந்ததுயாது இளம்புயலோ
தண்ணொளி வீசிடும்சூரியனின்கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ

பூக்கும் மலர்களைக் காண்புது நெல்வயல்
புன்னகைக்கும் கதிர் புள்ளினம்காண்
தீக்குள் எரிந்திடும் வீறினைப்பார் எங்கள்
தேகம் படைத்தவர் கோவிலைக்காண்
மாக்கள் மனிதன்மரம் செடிகாண் இந்த
மாபெரும் மண்ணும் மதிவெயில் காண்
ஆக்கும் கடவுளின் நோக்கமும்பார் இனி
அன்புகொண்டே என்றும் வாழ்வினைக் காண்!

.

Monday, January 2, 2012

தவறுகள் வருத்தும் கணந்தன்னில்


தெரியவில்லை அழகுமுல்லை தேன்மலர்த் தோற்றம்- நேர்
விரியவில்லை உரியவாறு விழிகளின் மாற்றம்
திரிவதில்லை இளைய தென்றல் இருப்பினும் வாசம்- கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெவரிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றானஉண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியநல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்போதுமனதை கொள்ளை கொண்டிடத்தோன்றும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் - ஆயின்
எறிவதற்கு முடிவதில்லை எழுத்துக்கள் காணும்
அரியதென்று அதனில் தோன்றும் அன்பினைத்தானும் - கூறும்
பரிவுகொண்ட வரிகள் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் - என்ற
வரியும் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய துன்பம் போலுமந்த பாசங்கள் கூடும் -  வானில்
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிட நானும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் - ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிற போது - அதை
விரியும்கைகள் எறிதல்போலும் விளைந்திட நாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்

Saturday, December 31, 2011

நிறைவேறாத காதல்

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

சிறப்பொடு வாழ்வோம்

தெரிவதும் புரிவதும் உலகோ - இல்லை
தெளிவிலை எனச்சுழல் கொளுதோ
அரியதும் அழகதும் உலகோ - இல்லை
அதனிடை பெருமிருள் வருதோ
சரியதும் பிழையதும் எதுவோ - அது
சரிநிகர் வாழ்வினில் உளதோ
எரிமலை கொளும்பெரும் பிளவோ அது
எதில்மன மிடைதனும் எழுதோ

பிறப்பதும் வாழ்வெனும் பொழுதில் - பல
பிழைகளும் பிறப்பது எதனால்?
இறப்பது எனவர முன்னே - பல
இருப்பவை அழிப்பதும் எதனால்?
சிறப்பென வாழ்ந்திட எண்ணும் - மனம்
சிரிப்பினில் இகழ்வதும் எதனால்?
நிறப்பது சிவப்பென உணர்வே - பயன்
நிரப்பிட வெறுப்பெனும் முடிவே!

தரித்திட மணிமுடி வேண்டாம் - ஒரு
தரமற்ற பெயர்தனும் வேண்டாம்
உரித்தது இவர்மனம் பொன்னோ - இலை
உருப்படி யிலைக்களி மண்ணோ
சரித்திரம் படைப்பது மிவனோ - அல்ல
சரிதிறன் உருவழித் திடவோ
விரியுல கதிலிவை வேண்டாம் - ஒரு
யியல்புறு நடுநிலை போதும்

கறந்திடும் பால்ஒரு போதும் - மடி
கொளத்திரும் பிடுசெய லில்லை
உறங்கிடும் மனம்ஒரு போதும் - ஒளி
உதயமும் கொளுமென இல்லை
மறந்தொரு தவறதும் செய்யா - உன்
மனதினில் கவனமும் கொள்ளு
இறந்திடும் நிகழ்எதிர் காலம் -இவை
இனித்திட உயர்வழி செல்லு

பறந்திடும் சிறிதொரு பறவை -அது
பார்த்திடு முலகதைப் போலே
துறவெனக் காண்மன துள்ளே - நீ
தொலைவினில் பறந்திடல் போலே
நிறமொடு வாழ்ந்திடு ஆனால் - நின்
நினைவது வெளுத்திடு மேலாய்
அறந்தனில் அக்கறை கொள்ளு - இதை
அறிந்திந்த உலகினை வெல்லு !

Friday, December 30, 2011

வேண்டாம் உலக வாழ்வு!

சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்
சிவந்ததோர் மாலைவிண்ணின்
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக
அடங்காத திமிரெடுத்த
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்
மகிழ்வான குருவியாக
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக
எம்மையும் படைக்காத தேன்?

நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,
நில்லாமற் தடம்புரண்டு
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்
ஆழியென் றாக்கலின்றி
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே
தூரமென் றின்பங்கொண்டு
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்
கோலமும் ஏன் படைத்தாய்?

குலையான கனியாக கூடிடும்கொத்தான
குறுவாழ்வு மலர்கள்போலும்
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக
தன்மானங் கூனலிட்டு
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு
இழையவும் தளதளத்து
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்
பிறவியுந் தந்ததேனோ?

கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்
கீழ்மையில் சிந்தைவாட
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்
வானத்தின் திசைகாட்டிட
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்
நேரிலே உடலூதியும்
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்
வெற்றுடல் தந்ததேனோ?

மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்
மாதேவி சக்திதாயே !
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான
பிறவியாம் மனிதமென்றே
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை
வேண்டா மிவ்வுலக வாழ்வு!