Wednesday, February 1, 2012

அவனா இவன்?



கள்ளும் உண்ணக் கண்கள் செம்மை காணும்வண்டாகி
உள்ளும் புறமும் உயிரின் பூக்கள் உதரம்தனைநோக்கி
வெள்ளம்போலே புரண்டு வீழ்ந்து விடியும் பொழுதினிலே
தெள்ளத்தெளியும் வண்டின் நிலையில் திரும்பிப் பார்க்கின்றான்

வெள்ளைமேகம் விடியற்காலை வீசும்தென்றலிடை
தள்ளி தூரக் காணும் பொய்கை தண்ணீர் அலைமோத
அள்ளிக் கல்லைப் போட்டே அழகு ஆகா எனஉள்ளம்
துள்ளித் திரிந்த திசையின் பக்கம் திரும்பிப் பார்க்கின்றான்

நள்ளிரவானால் கனவுக்காட்டில்  நடனமாடும் மனம்
தள்ளிச்சென்றே பூக்கள் என்றே தீயில் தள்ளியதோ
அள்ளிப் பருகும் மதுவும் அழகுப் பூவின்வடி வெல்லாம்
வெள்ளி பூவாய் கண்ணை மின்னும் விடியப் பொய்த்திடுமோ

(இன்று....)

அழகுப்பூக்கள் ஆடும்காற்றில் அதனை ரசிக்கின்றான்
இதழைத்தொட்டு ம்..ம் வேண்டாம் இயல்பைக் கைவிட்டான்
குழலில் சூடப் பூக்கள் கொய்யக் கொடுமை என்கின்றான்
தழலில் காய்ச்சும் பாலில் தோன்றும் ஆடை ரசிக்கின்றான்

அள்ளிப் பூசும் நெற்றிப் பட்டைஅழகாய் மேகங்கள்
புள்ளித் திலகம் போலும் காணப் புரவி, கதிரோட்டி
வெள்ளைத் தேரில் வெய்யோன் வந்தால் விடியுமதுபோலே
உள்ளத் திடையே ஒளியும் காண உதயம் பெறுகின்றான்.

கற்பனைக் கோட்டை

செந்தமிழ்க் கல்லெடுத் தற்புதமண்டபம்
சிந்தையில் கட்டிவைத்தேன் - அதில்
சுந்தர மென்னிழை சந்தங்கள் கொண்டெழில்
சித்திரம் கீறிவைத்தேன்
வந்திருந் தின்பமும் கொண்டிட மற்றவர்
வண்ணஒளி அமைத்தேன் - அதில்
எந்தன் மனதெழும் கற்பனைத் தீபங்கள்
எங்கும் எரிய வைத்தேன்

நந்தவனத்திற்சு கந்தமலர் கொய்து
நற்கவிநூல் இழைத்தேன் - நல்ல
சந்தணமும் நறும் பன்னீர் தெளித்தங்கு
சுந்தர வாசமிட்டேன்
செந்தூர வண்ணச்செ றிவெடுக்க அதில்
சிந்தனை தூபமிட்டேன் - ஒரு
தந்திரமுமல்ல தங்கமெனும் தமிழ்
தந்துஅழகு செய்தேன்

மந்தமுறமன தின்பம்பெற அவர்
மன்னவன் போல்மகிழ = இல்லை
மந்திரங்கள்,எது கையொடு மோனையும்
இட்டு அழகு செய்தேன்
சொந்த எழில்வண்ணக் கந்தருவ எழில்
செந்தமிழ் மாந்தருக்கு -அவர்
வந்திடும் வேளை நீராடிக் களித்திடப்
வட்டக் குளமமைத்தேன்

இந்தஎழில் இல்லம்கொஞ்சம் இருண்டதும்
இன்னொளி போய்விடலாம் - எனப்
பந்தங்களும் ஒளி தந்திடவே எங்கும்
பார்த்து எரியவிட்டேன்
அந்தியிலே  குளிர்பொய்கையில் நீந்திட
ஆடைஅணிகளுடன் - அகில்
சந்தணமும் உடன் செந்தணலும் வைத்தே
சற்று அமைதிகண்டேன்

வெந்திடும்போல் பசி உண்டுஎன்றால் அவர்
வேண்டிட முன்தரவே - மரப்
பொந்தினிலே நல்ல தேனடை கொண்டதில்
தேன்வடித்தும் எடுத்தேன்
பந்தியுடன் உண வுண்டு களித்திடப்
பாலொடு  பண்டங்களும் இன்னும்
முந்திரியும் கூட முக்கனிகள் சேர
முன்னே எடுத்து வைத்தேன்

இத்தனையும் செய்து எத்தனை மனங்கள்
எண்ணிடக்  காத்திருந்தேன் - நல்ல
புத்தம்புது வரவெண்ணி துயிலின்றி
பக்கமும் பார்த்து நின்றேன்
சத்தியமும் மன தைரியமும் கொண்டு
முற்றும் விழித்திருந்தேன் -ஆயின்
புத்தொளி வான்சுடர் தோன்றிடக்காலை
பொழுதென்று கண்டறிந்தேன்

செந்தமிழில் கரம் தந்து அன்புகொண்டு
சிந்தையி லொன்றுபட - நல்ல
பைந்தமிழே இனிதென்று படித்தொரு
பாமலர்ப் பூச்சொரிய
நந்தவனம் எனும் விந்தைதமிழினில்
நற்கவி மாலைகட்ட - எந்தன்
சிந்தையில் கட்டிய மண்டபவாசலை
முன்கதவின்றி வைத்தேன்

காத்திரு காற்றில் வருவேன்

தேனிற் குழைத்த தீங்கனியாய்
தேவி எந்தன் அருகிருந்தாய்
வானிற் குழைத்த ஓவியமாய்
வாழ்வை மறந்து ஏன்சென்றாய்

பச்சைப்பசுமைப் புல்வெளியும்
பனிநீர் தூங்கும் அதனிதழும்
இச்சையுடன் நீ பக்கமதில்
இருந்ததை எழுந்து கூறாதோ

கொத்துமலர்களின் தோட்டமென
கோடிநிலவுகள் கூட்டமென
நித்தம் அருகினில் நீ இருந்தாய்
நினைவுகள் மீண்டும் வாராதோ

வெற்றாய் விரியும் விண்ணில் நீ
விட்டுச் சென்றது எங்கே சொல்
உற்றே நோக்கும் உன்விழிகள்
உயரச் சென்றது உண்மையெனில்

பஞ்சு போன்றோர் வெண்மேகம்
பரந்தநீலப் பிரபஞ்சம்
விஞ்சும் எழில்வான் விரிதிசைகள்
எங்கும்நீயே நீயேதான்

சுட்டுத் தீய்க்கும் சூரியனும்
சுடர்போல் நினது விழிதன்னை
சுட்டி காட்டி எரிகிறதே
சோர்ந்தே தவிக்கு மென்மனதை

கட்டிக் காக்கமுடியவில்லை
காற்றும் தீண்டிச் செல்லுகையில்
பட்டுத் தழுவு முன்கர்ங்கள்
பனிநீர்விழவும் உன் தேகம்

தொட்டுக் காணு மின்பமென
தோன்றச் சிந்தை வாடுகிறேன்
வட்டச் சந்திரன் உன்வதனம்
வடிவம் காட்டி எனைக்கொல்லும்

சிட்டுக் குருவி ஜோடிகளும்
சேர்ந்தே கிளையில் கொஞ்சுவதும்
வெட்டிக் கொல்லும் வகையாக
வேதனை யாகிக் கொல்லுதம்மா

நின்னை பிரிந்து நானொருவன்
நித்திலம் வாழுதல் நேர்ந்திடுமோ
கண்ணை விழித்துக் காண்பவளே
காற்றில் வருவேன் காத்திரடி

சிரிப்பொலி

வானக் கதிர்சிரிக்கும் வண்ணமலர் புன்னகைக்கும்
வட்ட நிலா மேகமிடை வந்துசிரிக்கும்
சேனைக் கதிர்சிரிக்கும் சிற்றோடை சிலுசிலுக்கும்
சேர்ந்துவளர்: செங்கரும்பும் சாய்ந்து சிரிக்கும்
கானப் பறவைகளும் காற்றொலியில் சலசலக்கும்
காட்டினிலே வண்டுமலர் கண்டு சிலிர்க்கும
போனவனைக் காட்டினிலே போட்டெரித்து மீண்டவனும்
போதைகொண்டு ’நான்’என்றாடப் பூமிசிரிக்கும்

நீரோடும் நதி குதித்து நெளிந்து மெலச் சிரிசிரித்து
நளினமிடக் கரைஅலைகள் நர்த்தனமாடும்
பேரோடு பூமியிலே பேரரிய வீரமிட்டோன்
பெண்சுகத்தில் ஈனமிடப் பூமி சிரிக்கும்
ஊரோடிப் போகையிலே ஒருவனாகத் தனித்திருக்க
உண்மைவழி நின்றிடினும் சிரித்திடுங்  காலம்
யாரோடிச் சென்றிடினும் வாழ்வோடி முந்த அதைப்
போராட எண்ண விதி சிரித்திடும் நாளும்

தானோடிச் சுழல்வதுடன் தறிகெடவே ஓடும்புவி
தன்னுடைமை சொத்து என்று தத்துவம்பேசி
வீணாகத் தலைஎடுப்போன் விதிமுறைமை கண்டுநலம்
வாழென்று கூறிப் பேய்கள் போடும் எக்காளம்
தானமிடக் கண்டுலோபி தலைதிரும்பிச் சிரித்திடுவான்
தாவணிப்பெண் இருவர்கூடின் சிரித்திடக் கேட்கும்
தனை யுணர்ந்த ஞானிவாழ்வின் விதியறிந்து நகைபுரிய
தவழுகின்ற மழலையிலே தெய்வம் சிரிக்கும்

Sunday, January 29, 2012

துயிலும் இல்லங்கள்


தோள்தந்து துணிவோடு தேசமதைக் காத்த
   தீரர்களின் கல்லறைகள் தொலைந்த இடம்காணீர்
நீள்மரங்கள் நிரைநின்று நிலைகுலைந்து ஆடும்
   நிழல்கண்ட குருவியதி லிருந்துமெல விசும்பும்
வாழ்வென்று பூத்தமலர் வாடியிதழ் சோரும்
   வான்நடந்த முகிலிரங்கி சோகமழை தூறும்
பாழ்என்று மண்ணை யள்ளிப் படர்காற்றும் கண்ணில்
   பட்டுவிட வீசியபின் சாபமிட்டு ஓடும்

வேகஇடி மின்னலென வேகம்கொண்டவீரர்
  விதைத்த இடம் அழித்தவனை எண்ணிமனந்தன்னில்
ஏகமென இயற்கையதும் கொன்றவரை மீண்டும்
  கொல்லுமொரு வேதனையை கூடிநின்று பேசும்
தேகமதைப் பெற்றவரும் சேர்ந்து பிறந்தன்பு
   சோதரரும் பிள்ளைகளும் சொல்லியழ நாச
மாகயவர் உழுதநிலம் விதை முளைக்க வென்றோ
  மக்கள் தினம் அழுதநீரில் வேர்முளைக்கு மென்றோ?

தீரமெனும் செடிவளர்ந்து தினம் பூக்கும் வாசம்
  திறனெடுத்து உருவமைக்கும் தீந்தமிழின்தேசம்
கோரமுகக் கயவரவர் குலைநடுங்கி ஓட
  குடிமக்கள் துணிவெடுத்து குலம்காத்து வாழ
ஈரமழை யன்புபொழிந் தின்பவெள்ள மோட
   ஈழநிலம் இறைமையுடன் எமதென்றே ஆக
யார்தமிழர் பிளவில்லாது ஒன்றுஎன ஆகும்
 உறுதி தனைப் பெற்றோமா, எங்கள் வாழ்வு காக்க?


பன்னிரண்டாம் ஆண்டு- 2012

பன்னிரண்டு கண்ணிருந்தும் பார்க்கவில்லை வேலா - எம்
கண்ணிரண்டும் நீர்வழிந்தும் காக்கவில்லை சீலா!
முன்னிருந்த ஆண்டும் எந்த மூச்சுமில்லை  போக -  இப் 
பன்னிரண்டு பூத்த தெங்கள் பாவம் நீக்கிப் போமோ?

மண்புரண்டு ஓலமிட்டு  மானம்விட்டு வீதி - பல
எண்கடந்து கூடி நின்று ஏக்கமுற்று வேண்டி
விண் ணெழுந்த கூச்சலிட்டும் வீணென்றாக மேனி -தான்
துண்டிரண்டு ஆக்கவிட்ட  துயர்நிறைந்த ஆண்டு!

கண் நிறைந்த வாணமின்னல் கண்டுபூமி துள்ளும் - நல்
வெண் நுரைத்த பானமுண்டு வேடிக்கையும் செய்யும்
மண்ணிழந்து மாந்தர் வீடு மக்கள் யாவும் ஈந்தும் - எமை
விண் பறந்து ஆவியென்று விட்டு கண்டு மகிழும்

பன்னிரண்டென் றாண்டுதன்னும் பார்வை தந்து எங்கள்  இருள்
கண்ணிரண்டில் கொண்ட வாழ்வு காக்கவேண்டும் வேல
மண்ணிருந்த ஆட்சி, மன்னன், மக்கள் மானவாழ்வு -  இனும்
பொன்திரண்ட பூமிதந்து  போகவேண்டும் வேலா!

Friday, January 27, 2012

வாழத் துடிக்கும் மனம்!

ஆழக் கடல்மகளும் ஆவென்று துள்ளியெழுந்
தார்ப்பரித் தோலமிட்டாள்
நீளக் கருவானில் நீந்துமதி வெகுண்டோடி
நிழல்மேகம்கண்டுபுகுந்தாள்
வேழப் பிளிறலென விண்ணூதிச் சுழல்காற்று
வேகமிட்டோடும் வழியே
வாழவென் றாவலெழ வழிதேடி யலைகிறாள்
வாழ்க்கையின் ஓரமொருத்தி

காளையும் வலிந்துவெஞ் சமரென்னும் விதிகொண்டு
காணது தொலைந்து போக
வேளைமுடிந்ததிவன் விட்டனன் இம்மையென
வெம்பிஊர் அழுதபோதும்
நாளையோர் நாள் வருவ னென்று வழிபார்த்திவளும்
நம்பியொரு வாழ்வு வேண்டி
வாழை யடிவாழையென வம்சம் பெருக்கிவிட
வாழ்வெண்ணித் காத்திருந்தாள்

வீழத் பெருகுமழை வீறுகொண் டிறைத்திட்ட
வெள்ளமோ பெருகி ஓடி
ஆழநீர் நிலைநோக்கி அதுசெல்லும் பாதையிடை
அடங்காது திசையும் மாறி
வாழவென் றிட்ட மனை வாரியிழுத் தழித்ததும்
வயல்மேடு காணிதோட்டம்
பாழாய் சிதைத்தோடும் பாதையிலே தேடுமிவள்
பசுஞ் சோலை காணுவாளோ

மேலைச் சிவந்தவெளி மேகங்க ளூடுஒளி
மேவுகதிர் மறைந்துபோக
சோலைத் தருவுலுக்கி சுற்றுமொரு சூறையதில்
சிதைந்துகிளை ஒடிந்துவீழ
பாலையில் மணல்பற்றி பலங்கொண்ட காற்றூதி
பாவியவள் கண்கள்நோக
காலத்  தடம்புரள கவிழ் என்றுவீழ்த்து சதி
கண்டுமிவள் ஏங்கிநின்றாள்

மூளப் பெருத்தவலி முன்மூச்சு வாங்கயிவள்
முகத்தி  னடையாளம் கெட
நாளம் பெருநாடி நடுங்கிமனம் பதைத்தேங்க
நஞ்சுண்ட கன்றுபோலே
வாழைப் பெருந்தோட்டம் வேழம் அழித்துவிட
வீழ்ந்த பல பச்சைமரம் போல்
ஈழமும்  காணவதி லோர்வாழ்வு தேடியெதிர்
காலமென் றேங்குகின்றாள்

நாதமென் சங்கூதி நங்கையிவள் மானிடமே
நீதிஉயிர் வாழ்வதெனுமோ
வாதம்பி றக்குமோ வாழவோர்  சம உரிமை
வையத்தி லுள்ளதென்றே
பேத உணர் வோடுபகை பேசுமிஞ் ஞாலமும்
பேதையிவள் பாவமென்று
மீதமுள கல்நெஞ்சில் மெல்ல நீர்கசியுமோ
மீண்டுமிவள் வாழவிடுமோ

Thursday, January 26, 2012

துயர் கொண்ட சிறுமி


நீல விழிகளும் நீர்விழி யாகிட
நேர்ந்தது ஏதடியோ - சிறு
கோல முகமின்று கொள்ளுஞ் சிரிப்பினைக்
கொள்ளை கொண்டாரெவரோ
மேலை வானவெளி மேகம் வந்தேயுனை
மெல்ல மறைத்ததுவோ - இது
கால மென்ன உந்தன் கண்கள் பொழிந்திடக்
கார்த்திகை மார்கழியோ

தாளமிடு முந்தன் தாமரைப் பாதங்கள்
தாமத மாவதென்ன - ஒளி
சூழமலர்விழி சொட்டும் மகிழ்வெனும
சோதிகுறைந் ததென்ன
நாளும் பொழுதுமுன் நாவில்நடமிடும்
நல்லமுத மழலை - இன்று
பேழையில் மூடிய பொன்னகைபோல் எழில்
பொத்திக் கிடப்பதென்ன

பூமரக் கூடலில் போகு முணர்வினில்
புன்னகைக்கும் இனிமை - எழிற்
தாமரைப் பூவிரி தண்ணலை நீரிடை
துள்ளும்கயற் செழுமை
மாமரச் சோலையில் தூங்குங் கனியுண்ணும்
மாங்கிளி பேச்சினிமை இவை
நீமறந் தேநெளிந் தாடுமுட லின்று
நிற்பது வும்புதுமை!

கூவுங் குயிலதும் கொத்துங் கிளியதும்
கோபுரத்தின் அழகும் - துள்ளித்
தாவும் புள்ளிமானுந் தண்மைதருஞ் சுனை
தங்கும் குளிர்மைதனும்
ஆவும் இளங்கன்றின் அன்புமனமுங் கொண்
டாக்கிய தேனொளியே - மரம்
தூவும்மலர்களைத் தென்றல் கரம்கொண்டு
துள்ளிநீ ஓடிடவே

தேடி உலகினிற் தீமை களைக்கண்டு
தேர்ந்திடு நல்லறிவு - அங்கு
ஓடி வருந்தென்றல் உன்னரு கிற்புய
லாகும் நிமிர்ந்து நில்லு
கூடிவ ரும்பல கூட்டமுட னன்பு
கொண்டிடு சேர்ந்து செல்லு - அதில்
மூடி மறைந்தொரு மூடன் தீமைசெய
முன்வரக் கூடுமெண்ணு

நூறு மலர்களில் யாவுமொரு வண்ணம்
நேர்ந்த தில்லை மனதில் - துயர்
ஆறு, உலகையுன் அன்புமொழி கொண்டு
ஆளமுடியும் நில்லு
தேறு எதுவுன்னை வாட்டுது எண்ணங்கள்
தேனெனமாற்றிவிடு - மணம்
நாறும் மலர்தொட்டு நாளும்வீசு தென்றல்
நானெனத் துள்ளிஎழு

பேறு யிதுபெரி தானது பூமியில்
பெண்ணென நீபிறந்து - பல
மாறுதல் செய்திடும் மாபெரும் சக்தியின்
மற்றொரு தோற்றமிது
வேறு திசைகளில் ஓடும் மனங்களில்
வேற்றுமை பண்புணர்ந்து  - புத்தி
கூறு நல்லோர் உணர் வோடுவாழ்வி
லின்பம் தேடு உலகைவெல்லு!

Wednesday, January 25, 2012

காலைக் காட்சி


காலையிளந் தென்றல் கங்குல் புலர்வினுள்
கள்மலர் வாசம் கவர்ந்த பின்னும்
சோலையுள்ளே புகுந்தோடி பூவைமீளத்
தொட்ட பின் தூரம் விரைந்து செல்ல
வேளையது இருள்கண்டு விழி கொஞ்சம்
வேண்டு துயிலென்று கெஞ்சிநிற்க
தோளில் கலப்பை கொண் டேகுவோர் காளைகள்
தூ..நட என்று விரட்டிச்செல்ல

காரிருள்சூழ் புவிமூடிக் கிடந்திடக்
காணரும் பேரெழில் போய்மறைய
பேரொளி கீழடி வானில் சினங்கொண்டு
பித்து பிடித்திருள் ஓட்டவர
ஊரெழுந் தோடிப் பயிர்வளர்க்கும் ஒரு
உத்தம வாழ்வின் இனிமைகளைப்
பாருழுதே வயல் பண்படுத்தும் ஒரு
பாமரன் பாடி உழுதுகொண்டான்

(அவன் பாடுவது)

திங்களொளி பட்டுத் தீய்வதுண்டோ -அவர்
தேகம்புண்ணாகித் தவிப்பதுண்டோ
தங்கமதைத் தணலென்பதுவோ - அதை
தள்ளி வைத்துச் சுடும் என்பதுவோ
பங்கய நீரிடை காணுமுக பிம்பம்
பாவிகள் வெட்டத் துண்டா வதுண்டோ
தெங்கினடிநின்று தென்றல் சுகம்தர
தின்னும்பாலும் கள்ளென் றாகிடுமோ

முல்லை மலர்தனை முள்ளென்பரோ - அதை
மண்ணிலெறிவதும் மாண்புடைத்தோ
இல்லை ஈதே வானில் ஒடும்முகில் பெருந்
தீயை மழையெனக் கொட்டிடுமோ
கல்லில் காணுவது கற்பனையாம் அதில்
காணும் மனங்களில் கொள்ளுருவம்
எல்லைவகுத்துண்மை எண்ணிவிடில் பின்பு
உள்ளம் மகிழ்ந்திட இன்பமன்றோ

ஆணும்பெண்ணோ இவர் வாழ்வினிலே -நிறை
வாகமிச்சம் முதியோர் பருவம்
காணும் கனவுகள் போன இளமையின்
கண்ட சுவைகளை நெஞ்சில்கொளும்
வானரமாய் கிளைமீதும் மரம் தனில்
தாவியதும் குயில் பாடியதாய்
ஆன வகையொரு இன்பம் அதைநினைந்
ஆடுவதும் மன ஆனந்தமே

காலைப் பறவைகள் கோல இசையிட்டு
காற்றிலெழுந்து பறந்திடவும்
ஓலைஊடே வந்து ஒங்கியசூரியன்
உள்ளே புகுந்த தகதகிப்பும்
சேலையணிமாதர் சுந்தர ஆடவர்
வேலைசெய்து ஆடிப் பாடுவதும்
சோலை மலர்கள் நிறைந்ததெனும் இளங்
கால எண்ணம் இன்பம் ஆகிறதே!
......................
வெண்மலர்பூத்திட வீணைஒலிஎழ
வெய்யவன் உச்சியில் ஏறிவர
தண்ணலை ஓடும் குளத்திடையே நடுத்
தாமரை மீது தவளைதுள்ள
கண்ணுடையாள் சிறு கோவிலிலே எரி
கற்பூரவாசனை காற்றிலெழ
மண்ணுழுதோன மனைகஞ்சியுடன் வர
மாமகிழ்வாகி நடையெடுத்தான்

தமிழின் சுவை!

தமிழ்சொல்ல உளமெந்தன் மகிழ்வாகுதே!
தமிழ்காண விழியெங்கும் ஒளிகூடுதே !
தமிழ் கேட்டு மனம்நின்று கூத்தாடுதே !
தமிழுக்கு எது ஈடு இவையாகுமோ?

(வேறு)

செந்தமிழின் சுகம் தென்றலதோ சுவை
செங்கரும்பின் அடியோ?
பைந்தமிழும் பனிகொள் குளிரோ பசும்
புல் வெளியின் அழகோ?
அந்தரவான் எழும் சந்திரனோ அதன்
சுந்தரத் தேனொளியோ ?
அந்தமிலாப் பெருஅண்டமதில் தமிழ்
எந்தளவு பெரிதோ?

வெந்திடவும் அனல் தொட்டதிலே மின்னும்
பொன்னின் மிளிர்விதுவோ ?
வந்தமழை தந்த வானிடையே வில்லின்
வண்ண வடிவங்களோ?
நங்கையவள் நட மென்பதெலாம் தமிழ்
நல்கு முயிர்த்துடிப்போ?
பொங்கிடுமோ அலை போலிதுவோ தமிழ்
பேச உணர்வெழுமோ !

சங்கிதுவோ ஒலிதந்திடுமே அதன்
சாரும் வெண்மை இயல்போ?
பங்கயமோ பனி தங்கியதோ அதன்
பட்டிதழ் மென்னியல்போ?
தெங்கினிடை இளங்காய் நடுவே கொண்ட
தித்திக்கும் நீரிதுவோ?
வெங்கதிரோன் உச்சிவேளை சுட நின்ற
வேங்கை மரநிழலோ?

கங்கையவள் முடிகொண்டவனோ அன்பு
கொண்டு வளர்த்ததமிழ்
செங்கனலின் விழி கண்டும் பிழைசொன்ன
சங்கப் புலவன் தமிழ்
இங்கு மனமதில் என்று மினித்திடும்
இன்ப முடைத்த தமிழ்
மங்குவதோ? அது கொள்ளும் துயர்எனில்
எங்கள் கரம் கொடுப்போம்

எங்கு மிணை யில்லை செந்தமிழே என
சங்கே முழங்கிவிடு
பொங்கிவரும் பகைஎந்த விதமெனக்
கண்டதைக் காத்துவிடு
மங்கை குலமவர் மானமெனத் தமிழ்
கொண்ட துயர் துடைத்து
செங்குலமே இந்த தங்கத்தமிழ் தன்னை
எங்கும் வளர்த்துவிடு!

Sunday, January 8, 2012

தமிழே இனிதாம் !



தமிழே இனிதாம் தமிழேஅழகாம்
தமிழே பெருநிதியாம்
தமிழே யுன்னைப் பாடப் பாடத்
தருமே மிக மகிழ்வாம்
தமிழே இதமாம் தமிழே சுகமாம்
தமிழே பல நினைவாம்
தமிழின் தாகம் பருகத் தண்மை
தருமே மனமுழுதாம்

அலையே கடலில்புரளும் அதுபோல்
அகிலம் முழுவதிலும்
கலையே கொண்டு தமிழே புரள்வாய்
கவிதை ஊற்றாவாய்
சிலையே அசையாநிற்கும் நிலைஏன்,
சிந்தைகொள் தமிழின்
நிலையே நினதில் பெரிதும் அழகால்
நினவை இழந்தாயோ?

மலையே நீயும் உயர்விற் பெரிதாய்
மனதில் கர்வமுறாய்
இலையே தமிழுக் கிணைநீ என்றே
இன்று மலைத்தாயோ
தொலைவும் காணாத் தொன்மைத் தமிழின்
தோற்றம் காணுகையில்
அலையும் வானச் சுடரும் நிலவும்
அதன்பின் அணியாமோ?

பொங்கும்தமிழோ புதுமை நதியின்
புனலாய் குதிபோட
தங்கும் எண்ணம் சற்று மின்றித்
தளளவென் றோடும்
எங்கும் தண்மை இன்பம் பரவ
இசையென் றொலிகூட்டும்
சங்கம்வளரின் பத்தெள் தமிழே
சரிநிகர் எதுவுண்டோ?

வெங்கண் கொண்டே வினைகள் செய்வோர்
விளைதுன் பந்தானும்
மங்கும் வகையில் மலையின்அருவி
மடிபோற் தமிழ்பொங்கும்
கங்குல்வானிற் கதிரோன் போலக்
கண்முன் ஒளிவெள்ளம்
எங்கும் பொங்கப் பிரவா கிக்கும்
இனிமைத் தமிழ் என்பேன்

கவியின்பம்



கவிஎன்ப தினிதாம் கவியெங்க ளுயிராம்
கவி எமது வாழ்வுக்குப் பொருளாம்
கவிஎங்க ளுணவாம் கவியெங்கள் கனவாம்
கவியோ நம்உணர்வுகாண் விழியாம்
கவிஎங்கள் சிறகாம் கவிஎங்க ளிறையாம்
கவிஎங்கள் குறைவற்ற நிதியாம்
கவிஎங்கள் மதுவாம் கவியின்ப மழையாம்
கவிஎங்கள் தமிழன்னை எழிலாம்!

கவிஎங்கள் கலையாம் கவிஎங்கள் துதியாம்
கவியின்பம் பொலிகின்ற நதியாம்
கவிஎங்கள் தேராம் கலையென்னும் உலகின்
கவினின்ப சுவையூறும் அமுதாம்
கவிமென்மை மலராம் கவிவீசுங் காற்றாம்
கவிஎங்கள் உயிர்கொண்ட மூச்சாம்
கவி எங்கள் துகிலாம் கவிசொல்லும்வகையில்
கவிந்திடும் சுகம்கூறின் பெரிதாம்

அவிழ்கின்ற மலரும் அதுதரும் மணமும்
அகிலத்தில் இருள் மாலைவேளை
கவிந்திடும் இன்பம் காண்பது போல்நற்
கவி தரும்சுகம் மிகப் பெரிதாம்
செவிகாணும் இன்பம் தேனெனச் சொல்லின்
குவிவான வில்லதன் வண்ணம்
தவிக்கின்ற சுனையின் தாமரை இதயம்
தாங்கியே பலஇன்பம் காணும்

என் அன்னை, என்தேசம், என்கனவு

என்னோர் எழில்! நிலவோ ஏறிவான் வீதியிலே
மின்னும் தனதொளியை மேதினியி லூற்றுங்கால்
தன்னந் தனிநடந்து தங்கநில வொளிகுளித்து
முன்னே என்பாதையில் மேற்குவழி நடந்தேன்

வெண்மை நிலவொளியின் வீச்சினில் முன்னிருந்த
கண்முன் னெழில்தோற்றம் கைவரைந்த ஓவியமாய்
எண்ணக் கனவுகளில் எழுகின்ற மாயமெனும்
வண்ணம் கலந்திருக்க வழியில் அவள்கண்டேன்

 மண்ணோடு தூசுபட மைவிழிகள் கோபமுற
விண்ணோ டெறித்தநிலா வீசுமொளி மின்னலிலே
பெண்ணின் திடமிழந்து பேசற்கரியவளாய்
திண்மை யிழந்து,வரும் தென்றல் உடல்சரிக்க

நின்றாள் துயர்பெருத்த நீள்விழிகள் நீர்சொரிய
தென்றல் தொடுந்தேகம் தீயெனவே வேகிவிட
கன்னம் எழில்சிதையக் கண்ணீரும் காய்ந்திருக்க
என்னோர் துயரடைந்தாள் ஏதறியேன் என்றதனால்

” பெண்ணே பெருந்தகையே பெயரேது நானறியேன்
கண்ணீர் வழிவதுமென் காரணமும் தானறியேன்
மண்ணில்பெருவாழ்வு மாதுகொண்ட தாய்வதன
வண்ணம் தெரியுதம்மா வந்ததிங்கு ஏதெ”ன்றேன்

நெஞ்சம் அழுதுகொள நிர்க்கதியாய் ஏந்திழையோ
கொஞ்சம் எனதுகுரல் கொடுத்த மனத்துணிவில்
”வஞ்சம் இழைத்தாரே வாழ்விலோர் தீதுதனை
நஞ்சின் நெஞ்சத்திரு நாட்டின் கொடியவர்கள்!

”எந்தன் பெயரீழம் இன்பமுடன் தேன்தமிழைச்
சொந்தம் கொண்டே நிலத்தை சுற்றிவர மைந்தரவர்
வந்தோர் பகையறுத்து வாழ்வுதர வீரமுடன்
செந்தேன் தமிழ்வளர்த்து சீருடனே ஆண்டிருந்தேன்

பூவிரியப் புள்ளினங்கள் பொன்வானில் நீந்திவர
தாவிவிழுந் தோடும்நதி தமிழ்வாழ்த்தி இசைபாட
வாவிதனில் நீரோடி வட்டஅலைப் பூமலர
பூமிதனில் ஈழமெனும் பொன்நாட்டுக் கன்னையிவள்

என்னோர் அழகுடனே ஏற்றமுடன் நானிருக்க
வன்மை கொண்டேயுலகு வாழ்வை அழித்ததையோ
இன்னும் உயிர்களைந்து இதுபோதா ஊரழித்து
பொன்போலும் பூமிதனை பேய்வாழச் செய்தார்கள்

கொஞ்சங் குரல்நடுங்க கோதையுடல் தான்துடித்து
பஞ்சாம் முகில்நடுவே பாயுமிடி மின்னல்பட
நஞ்சின் கொடுமைகொண்ட நாகமொன்று தீண்டியதாய்
நெஞ்சம் துடிதுடித்து நினைவழிய மேலுரைத்தாள்

அந்தோ படுந்துயரம் அத்தனையும் என்சொல்வேன்
நிந்தை புரிந்தவரோ நெஞ்சழவே கேடுசெய்தார்
இந்தோர் நிலையடைய இன்னலிட்ட எத்தர்தனை
வந்தே விரட்டிவிடு வாய்மை நிலைநாட்டிவிடு      .

எங்கே உலகநீதி எங்கே உரிமையென்று,
செங்கோல் பிடித்தவர்கள் செய்வதென்ன கேட்டுவிடு
பொங்கும் தமிழ்க்குரலை பேச்சை நெரித்தழித்து
சங்கை எடுத்தூதி சாவைஎமக் கீந்ததென்ன

பொன்னால் மணிமுடியும் பெற்றதோர் வாழ்வும்
தன்நேர் நிகரற்ற தமிழ்வாழும் தேசமென
மின்னேர் விளைபுயலின் வேகமெடு மைந்தர்களும்
முன்னே துணையிருக்க முத்தமிழின்மூச்செடுத்து

பன்நூற் கலைவளங்கள்; பண்ணிசைகள் நற்றமிழாம்
முன்னோர் செய்காவியங்கள் மூத்தோர் பழங்கலைகள்
என்னை மகிழ்வுசெய்ய எத்தனையோர் இன்பமுடன்
மன்னர் மணிமுடிகொள் மாவீர ஆட்சிகண்டோம்

அணிகொள் அழகோடு அறத்தின் வழிநடந்தோம்
பிணிகொள் அரசுசில போரென்று நீதிகொன்றார்
பணியா உளஉரமும் பாதையிலே நேர்நடையும்
துணிவோ டுயர்மறமும் துள்ளிவரும் போர்முடித்து

குனியா துணர்வுபொங்க கொள்கைவழி நீதியுடன்
தனியாய்அரசுகண்ட தாயின்நிலை இன்றறிவாய்
இனியேன் மௌனமடா இன்னலிடும் பாதகரை
தனியோர் இனமழிக்க தட்டிப்பதில் கேட்டிடடா

ஈழமகள் கண்களிலே எழுந்தோடும் நீராறு
ஆழமன துன்பமதை ஆற்றாமை தான்விளக்க
வீழுமீர் பூங்கரங்கள் வீரமகள் கால்கள்தனும்
பாழும் பகைபிணைத்து பாடுபெருந் துன்பமிட்டார்

கேழாயென் சின்னவனே கீழாம்நிலை யடைந்தோம்
நாளுமவர் திட்டமிட்டே நாட்டின் குடிகொன்றார்
மாளுமிந்த மக்களுயிர் மகனேநீ காத்திடடா
வாழுமிக் காலமதில் வாசல்வரை தள்ளிவைத்தார்

நாளைஎமை வீதியிலே நாட்டோரம் ஆழ்கடலில்
சூழைதனில் தள்ளியெமை சுற்றிவரத் தீயிடுவார்
மாளமுழு தாயெரித்து மண்ணதனை கொண்டிடுவார்
வாழவென நீஎழுந்து வையகத்தை கேட்டுவிடு

இல்லையெனில் நீயறிவாய் எமதழகுத் தமிழ்த்தேசம்
வல்லோர் அரசுகளின் வாயிலுண வாகிவிடும்
மெல்லத் தமிழழியும் மேதினியில் என்பதனை
பொல்லாப் பெரும்புழுகாய் பூமியிலே ஆக்கிவிடு

துள்ளியெழு உன்னுயிரும் துடிக்கத் துணிவுடனே
தெள்ளுதமிழ் வெல்லுமொரு திக்கைக் கருத்திலெடு
கள்ளினிமை பூமென்மை காற்றின் சுகம்யாவும்
உள்ளதமிழ் வாழஇனி உன்கடமை ஆற்றிவிடு

மங்கும் மதியொளியில் மங்கையவள் சொல்லிவிட
எங்கோ இருந்தெழுந்த  இடியோடு புயலெனவே
பொங்கும் பெருஞ்சுழலோ பூவையவள் முன்னுருள
தங்கஒளி தானுருக்க தலைமறைந்து போயினளாம்

****

இன்பக் கனவுகள்

கனியோடு சுவைசேர்ந்த இன்பம் -  நற்
  கலையோடு எழில்காணும் வண்ணம்
பனியோடு குளிர்சேரும் தன்மை -  எனப்
  படைத்தானே இறைவன், ஏனென்னை
தனியாக மனம் ஒன்று வைத்தே -  அதில்
     தாங்காத சுமை ஏற்றிவிட்டு
இனிஓடி விளையாடு என்றே -  இந்த  
    உலகத்தின் எனை வாழ விட்டான்

வரியாகப் பலகோடு வைத்து -  அதில்
  வளைவாகக் கீறல்கள் போட்டு
புரியாத கோலங்கள் என்று -  ஏன்
   புனைந்தானோ மனிதமும் அன்று
புரியாத வாழ்வென்று தந்தும்  = அதில்
  புதிதாகத் துன்பங்கள் என்றும்
பெரிதாக இல்லாத இன்பம் - அப்
  பிறை சூடும் இறைதந்த சொந்தம்

மனிதா நீ ஏனிங்கு வந்தாய்  - உன்
  மனமென்னும் விதி கொண்டபோக்கில்
கனியாகும் வாழ்வென்று நின்று = அக்
  காலத்தின் அடிபட்டு வீழ்வாய்
இனிதான காட்சிகள் என்றும் - உன்
  இருவிழி கண்டதோ ரின்பம்
தனியாகி நிழல் போகும்போது -  அது
  தண்ணீரில் முகம் காணல் போலும்

பலகோடி வருடங்கள் ஆகி -  இப்
  பறந்தோடும் பந்தெனும் பூமி
தலைசுற்றித் தள்ளாடும் போது - எம்
  தவறோ இத்தரை கண்டவாழ்வு
நலம்விட்டு கிலிகொள்ளும் வாழ்வில் - ஓர்
 நடைபாதை முடிவாகக் காடு
பலம்கொண்ட வரை மட்டும் ஓட்டம்-  அவன்
  பறித்திட நின்றிடும் ஆட்டம்

புலனோடு எழுகின்ற ஆசை - வெறும்
  புவிமீது மனம் கொண்ட வேட்கை
சிலநேரம் மகிழ்வென்று ஆடி - கண்ட
  சுகம்யாவும் வெறுமையென் றாகும்
 மலர்மேனி தொட்டிட்ட இன்பம் -  நல்ல
  மதுவென்று கண்டதோ ருள்ளம்
பலமோடு சுகம் கண்ட பாசம் - இவை
  பனிமேடை கனல்கொண்ட தாகும்

Saturday, January 7, 2012

பார் அதி சின்னக் குழந்தை

(2009வது ஆண்டி ல் எழுதிய கவிதை)

சின்னஞ் சிறுமலரே - செல்லமே
   செந்தமிழ் சித்திரமே
உந்தன் விழிகளிலே - கண்ணீர்
   ஓடி வழிவதுஏன்
கன்னம் குழிவிழவே - மலர்ந்து
  கண்களினால் சிரிப்பாய்
உள்ளம் மலர்ந்திடுவேன் -- இன்று
   உன்நிலை என்னசொல்வேன் 

ஓடி வருகையிலே - பின்னால்
    ஆமி துரத்துகிறான்
ஒளித்து நிற்கையிலே - செல்லால்
    அடித்துக் கொல்லுகிறான்
ஆடித்திரிதல் கண்டால் - அவனே
    வானிற் பறந்துவந்து
ஆயிரம் நூறெனவே - குண்டு,
    அள்ளியே போடுகின்றான்

உச்சிதனில் வீழும் - குண்டில்
   உயிர்கள் ஆயிரமாய்
செத்து மடியுதடி - ஊரே
   சுட்டகா டாகுதடி
நச்சிர சாயனங்கள் - எறிந்தே
   நம்ம குலம் எரித்தார்
கச்சிதமாய் புழுகி - மெய்யை
  செத்ததுடன் புதைத்தார்

கன்னத்தில் முத்தமிட்டே - உன்னை
   கட்டி யணைத்து அன்பை
தந்தவள் மேனியினைக் - கொன்று
    தணலில் வீசிவிட்டார்
பொன்னென கண்சிவந்தால் - துடிக்கும்
  பெண்ணே உன்தந்தையுடல்
சன்னம் துளைக்கச் செய்து - வீதி
   சாலையிலே எறிந்தார்


அள்ளி அணைத்திடவே - சொந்தம்
   யாருமே இல்லையடி
ஆறுதல் கூறிடவோ - அத்தை
   மாமனோ இல்லையடி
பள்ளிப் படிப்புமில்லை - பசித்தால்
   உண்ண உணவுமில்லை
கொள்ளத் துயிலொருபாய் - திண்ணை
   கூடம் எதுவுமில்லை

என்ன கொடுமைஇது - என்று
   ஏங்கி அழுதிடவும்
ஏதும் அறியாமல் - நின்றாய்
   ஏதிலியாய் தெருவில்
வண்ண வண்ணக் கனவு - வாழ்வில்
    ஆயிரம் கொண்டவளே
வண்ண மழிந்ததன்றி - உந்தன்
    வாழ்வு மழிந்ததடி

பிள்ளைக் கனியமுததே - உன்போல்
  பேசும்பொற் சித்திரங்கள்
முள்ளி வாய்க் காலினிலே - பூத்து
   மண்ணில் உதிர்ந்ததடி
அள்ளி அணைத்தவரும் - பெற்ற
   அன்பு சிறுவர்களும்
கொள்ளி வைத்தேமுடித்தார் - கோரம்
    எல்லை கடந்ததடி

இத்தனை துன்பம்கொள்ள - உலகில்
   என்ன தவறு செய்தாய்
முத்தமிழ் பேசலன்றி - என்ன
  மோசமிழைத்து விட்டாய்
ஈழத்தமிழ் வயிற்றில் - ஏனோ
   ஊன்றிக் கருவெடுத்தாய்
எங்கள் மண்ணில்மலர்ந்தாய் இதற்கு
  மன்னிப்பே இல்லையடி

சொல்லும் மழைலைஎல்லாம் - மறந்து
   சித்திரமே அழுதாய்
முல்லைச் சிரிப்பிதழ்கள் - கேவி
    மௌனத்திலே கிடந்தாய்
துள்ளிப் பிணம்மிதியா - நடந்து
    சோர்ந்த நல்சித்திரமே
நல்லவர் தூங்கவில்லை - மீண்டும்
    நாடு எண்ணி எழுந்தார்

தூர ஒளி யெழுந்து- உன்னை
  தேடிவரும் அமுதே
வீரமெடுத்து அறம் மீண்டும்
  மெல்ல  வரும் முன்னே
யாரும் இல்லைஉனக்கு என்ற
 அச்சம் இனி வேண்டாம்
பாரில் பரந்ததமிழ் அமைக்கும்
 கொள்கை சிறக்குமடி

Friday, January 6, 2012

ஒற்றுமை ???


திரையும் திரையெழு கடலும் கடலிடை
தினமும் எழுகதி ரொளியும்,
தரையும் தரைதொடு அலையும் அலைபுனல்
தரவிண் பொழிமழை முகிலும்
இரையும் அதனுடை ஒலியும் இடியொடு
முழங்கு விரிசுழல் புயலும்
விரையும் பெருகிடப் புகும்நீர் இயற்கையின்
விளைவே எனில் உயிர்கொல்லும்

மரபும் மரபுடை மொழியும் மொழிசொலும்
மனிதர் அவருடை மனமும்
கரவும் கயமைகொள் உறவும் உயிரினைக்
கருதா இறைமைகொள் ளரசும்
பரவும் பெரிதெனும் உலகும் உலகிடை
பலதோர் குடிகளும் அவர்தம்
தரமும் தயவுடை இயல்பும் தாழ்ந்திடுந்
தருணம் வர உயிர்கொல்லும்

உதிரம் பெருகிடு நிலையும் நிலைதனை
உருவாக் கிடுமொரு சிலரும்
அதிரும் சடபட வெடியும் வெடியுற
அவலம் தொடரழு குரலும்
உதிரும் பலதர உடலும் அழிவுற
உலகம் விழிகொள்ளும் மௌனம்
எதிலும் அவர்தனி நலமும் நலம்பெற
விழையும் செயல் உயிர்கொல்லும்

மயிரும் இழந்திட உயிரும் விடுமான்
மனதை யுடைமா தமிழன்
பயிரும் பயிரிட விளையும் அதனுடை
பயனால் தனதெழில் மனையும்
உயிரும் பரிவுடை குணமும் பலமுறு
உடலு மதுகொளும் திடமும்
வயிரம் எனும்வெகு திறனும் மதியுற
வாழ்ந்திட ஏதுயிர் கொல்லும்?

வண்டிக்காரனின் பாட்டு

கிராமத்தில் ஒரு மாட்டுவண்டிப் பயணம்


கேளடா தம்பிநீ கேளடா -நீயும்
கேட்டிடப் பாட்டொன்று பாடவா
ஆளடா பூமியில் வாழடா ஒரு
ஆன வழிவரு மாமோடா
************
கேளு தம்பிநீயும் கேளடா

கீழத்திசையிலே சூரியன் வந்தது
கோவில்தெருவிலே ஊர்வலம்போனது
ஆழக்கடலிடை கப்பலும்போகுது
ஆனந்தமாகவே பிற்பொழு தோடுது
கேளு தம்பிநீயும் கேளடா

வாழைமரத்திலே தேன்கனிவந்தது
வானம் பொழிந்திடப் பூமி நனைந்தது
காளை வயலினைச் சுற்றி உழுகுது
காற்றில் ஒருபட்டம் மேலே பறக்குது
கேளு தம்பிநீயும் கேளடா

ஏழை வயிற்றிலே என்றும் பசிக்குது
ஏய்ப்பவர் கூட்டமோ ஏறி மிதிக்குது
நாளை விடிந்திடும் வாழ்வெனக் கூறுது
நம்பி இருந்திடக் கண்களும் போகுது!
கேளு தம்பிநீயும் கேளடா

பாழும் பணம் ஒருபக்கமா யோடுது
பட்டினிதான்ஏழை சொத்தென ஆகுது
வாழும்விதி நல்ல உள்ளங்கள்கொல்லுது
வாட்டி வதைத்திடப் பொய்மையும் வெல்லுது
கேளு தம்பிநீயும் கேளடா

உண்மை உரைப்பவர் உள்ளே கிடக்கிறார்
ஓயாது பொய்யிட்டோர் உத்தமராகிறார்
திண்மையற்ற மனம் தேசம்நிறையுது
தேடியும் நீதியைக் காணத் தவறுது
--கேளு தம்பிநீயும் கேளடா

கள்ளர் கரங்களில் சாவிஇருக்குது
கண்ட கதவெல்லாம் அஞ்சித் திறக்குது
உள்ள நகைபணம் ஓடிமறையுது
உண்மை அறிந்தவர் ஊமையென்றாகுது
கேளு தம்பிநீயும் கேளடா

வெள்ளம் கூடவந்து வீட்டைப் பிரிக்குது
வேண்டா மென்று சொல்ல வேதனைகூடுது
பள்ளம் குழியெங்கும் சேறு நிரம்புது
பக்கம்நடந்திடப் பாடாய் விழுத்துது
கேளு தம்பிநீயும் கேளடா

மன்னரும் மக்களை மாக்கள் என்றுள்ளியோ
மாந்தர் குடியிடை வேட்டை நடத்துறார்
நன்னரும் பொற்குவை நாட்டில் எடுக்கிறார்
நாடுஅழிய நமக்கென்ன என்கிறார்
கேளு தம்பிநீயும் கேளடா

பன்னீரும் வெண்ணுடை பாலும் பழம் வெல்லப்
பாகும் கலந்திடு பஞ்சாமிர்தம்வேண்டாம்
பன்னெடு நாளென அன்னைமண் மடியில்
பாதிவிழிமூடி ஆறித்துயில்கொள்ள

ஆவிகள் போக்கிட ஆணை கொடுப்பவர்
அன்புவழி தன்னின் அர்த்தம்புரிவரோ
பாவிகள் தேவைக்கு ஆடுபலிகொள்ளும்
பாவம் நிறுத்திடப் பண்பு திரும்புமோ
கேளு தம்பிநீயும் கேளடா

கூவிஅழுதிடுங் கூக்குரல் போய்விடக்
கும்பிடும் தெய்வங்கள் கொண்ட இதயமும்
தாவிடுமந்தியை தள்ளிவெளிவிட்டு
தங்கமெனும் மனம் தாரணிகாணுமோ

நாமும் வளர்ந்திட நாடுவளர்த்திடும்
நல்லறிவு கொண்டோர் கையினில் கோல்கொடு
யாவும் தமதென எண்ணும் அரசனின்
வாளுமுறங்கட்டும் வாழ்வு பிழைக்கட்டும்

Tuesday, January 3, 2012

உறுதிகொள் மனமே !

துள்ளுங் கயல்போல் துடித்தேநெஞ்சந்
தோல்வியில் வீழ்ந்தாலும் - அதை
அள்ளி அணைத்திடக் கைகளிருந்திடின்
ஆனந்த மாமன்றோ!
வெள்ளி முளைத்திடும் வேளை கயிற்றொடு
வாசலில்வந்தாலும் - விதி
தள்ளி நிறுத்திடத் தர்மம் இணைந்திடில்
தருமே சுகமன்றோ!

பல்லி ’இசுக்’கெனப் போகும் வழிக்கொரு
பாதகஞ் சொன்னாலும் - அது
இல்லையெனத் துணி வோடு நடந்திடு
உலகம் உனதன்றோ
சொல்லி வழித்தடை போட மனத்திடை
சோர்வே எழுந்தாலும் - நீ
அல்லி குளத்திடை போல மலர்ந்திடு
அதுவே வாழ்வன்றோ

சொல்லி எடுத்திடும் எண்கள் பிழைத்தொரு
துன்பம் நேர்ந்தாலும் - அவன்
வல்லஎழுத்திறை வைத்தகணக்கோடு
வாழ்வில் முன்னேறு!
இல்லைஎனத் தெரு வீதியில் நின்றிடும்
ஏழ்மைகிடைத்தாலும் - நீ
எல்லை வரை திடங் கொண்டு முயன்றிடு
ஏற்றம் உடைத்தாகும்

தள்ளி யிருந்தொருஆறு நடந்திடத்
தாகம் கொண்டே நீ - அது
துள்ளி நெருங்கிடும் என்று பொறுத்திடல்
இல்லா நடைகொள்ளு
கள்ளி முளைத்திடும் காடு வனம்எனக்
காலம் இருண்டாலும் - வழி
முள்ளு மிதித்து நீ வீறுநடைகொளு
முடிவில் வரும் விடிவு!

மயக்கும் மாலை வேளை!










 தோழி:
மாமரச் சோலையிலே - மடி
  மீது தலைய ணைந்து
மாமகள் நீயிருந்தாய் - மனந்
  தானும் மகிழ்வு கொண்டாய்
தாமரைப் பூவிரிய - புனல்
  தாவிக் கயல் குதிக்க
தேமதுரச் சுவையிற் - கனி
  தின்று களித்தனை காண்

சாமரை வீசிநிற்க - இன்பஞ்
  சார்ந்த மலர் முகத்தில்
சோகமிழையக் கண்டேன் - நின்
  சுந்தரமென் னுடலும்
பூமரம் போல் புயலில் - பட்டுப்
  போய் விழுமா மதுபோல்
நீமனம் மாறியதேன் - உந்தன்
  நிம்மதி போனதெங்கே?

பொன்முடி வேந்தன் வர - அவர்
  புன்னகை செய்வதெல்லாம்
நின்மனம் பேதலித்தோ - அவை
  நீசமென உரைத்தாய்
என்னடி நின்நினைவு - அன்பு
  எத்தனைஆழமென
என்மனம் தானறியும் - ஆயின்
  ஏனிந்த கோபமெலாம்

புன்னை மரத்தடியில் - எழில்
  பூக்கள் உதிர்ந்து நிற்க
பன்னெடும்வேளை அவர் - பெரும்
  பாசமுரைத்து நின்றாய்
பின்னர் அவரருகில் - நீயும்
  பேசிட ஏகும்கணம்
புன்மை மனமெடுத்தே - பல
   பொல்லா துரைத்த தென்ன?

தலைவி:
(வேறு)
என்ன நினைத்தென துள்ளம் வருந்திடும்
ஏதும் புரியவில்லை - இரு
கன்னம் வழிந்திடும் கண்களின் நீர்வரும்
காரணம் தோன்றவில்லை
இன்னும் மனதினில் சின்னவள் நானெனச்
சொல்லத் தெரியவில்லை - ஏனோ
இன்னலை கண்டதென் றின்பமிழந்திடும்
என்நிலை மாறவில்லை

பென்னம் பெரிதொரு சோலை எழில்த் தரு
பேசரும் பொன்நிழலாம் - அதில்
சின்னக் குருவிகள் சேர்ந்துமகிழ்வது
சொல்லப் பெருங் கதையாம்
மின்னி இரவினில் விண்ணொளி மீன்களை
மேனியணிந்த பெண்ணாய் - அந்தப்
பொன்னொளி வான்மதி பூத்தமரத்திடை
புள்ளியிற் கோலமிட

நீலக்கரு விண்ணில் நீந்துவெண் மேகமும்
நேசமிழை தென்றலும் - பல
கோலமிடு மிசைகூடும் கருவிகள்
கொண்டவை போல்நிதமும்
காலம் பொழுதுயர் காற்றெழும் புள்ளினம்
கூடி இசை படிக்க - பெரும்
சீலமுடன் சுவை சேர்ந்திடவே அதன்
சூழல்தனை வியந்தேன்

சோலை மலர்மணம் சொல்லித் திரிந்திடும்
சுந்தரமென் வளியும் - நல்ல
பாலை பழித்திடும் பஞ்சு வண்ணமுகில்
பக்கமணை மதியும்
ஓலை படித்தும் அறியேனடி எந்தனுள்ளம்
உவகைகொள்ள - இன்பம்
நூலை விடமிக நுண்ணியதாய் மனம்
நேரக் களித்திருந்தேன்

ஓடித் திரிந்திடும் மேகங்களில் பல
உற்ற உருவமது - கணம்
ஆடியெனைக் கொல்லும் ஆவியெனப் பகை
ஆவது போலுணர்ந்தேன்
தேடி திரிந்தென்னைத் தீண்டுவதாய் ஒரு
தீங்கெனும் எண்ணமிட - மனம்
வாடிக் கணந்தன்னில் வாழ்வு முடிவதாய்
வார்த்தை தவறிவிட்டேன்

காடு நடந்திடும் வேழம் மென முகில்
கன்னியென ஒருத்தி - அத
னூடு சிறுபிள்ளை ஓடிவரப் பெரும்
ஓங்கியெழும் அருவி
போடுஎன உயிர்போக்கும் அரக்கரும்
பூதங்கள் போற்பலவும் - விழி
மூடும்பொழுதிலும் ஊடுவர மனம்
முற்று மிழந்து விட்டேன்

கண்ட கனவு விழித் தெழுந்தேன் என்ன
காரணம் ஏதறியேன் - அதில்
கொண்டதென்ன உளங் கூறிய தென்னொரு
கோலம் புரிவதிலேன்
மண்டபமும் மலர் மாமரமும் நிழல்
தந்திட நானிருந்தேன் - அங்கு
கண்டது மோர்கன வென்ன உரைத்திடக்
காலையில் நான் மறந்தேன்

கற்பனையில் எனக்காணவைத்த தென்ன
காதலின் வேதனையோ - எனை
சிற்பமெனச் சிலையென்று நினைத்தவர்
சென்றதன் காரணமோ ?
அற்புதவேந்தன் அருகிருந்தால் இது
ஆகிடுமோஅதுவே - இந்த
சொற்புயல் தந்தெனைச் சீண்டி மகிழ்வதின்
செய்கை புரியேனடி!


தோழி

சீரும்செறிவாய் சிந்தைகொள்
சேருமன்பு பொலிவானால்
போருமூடே உண்டாகும்
புண்ணாய் மனதும் நோவாகும்
தேரும் மனதில் நல்லன்பும்
தெளிவைத் தாரும் கணமாக
நீரும் வற்றும் விழிமீது
நெஞ்சின் கருணை ஒளிகூடும்

யாரு மற்றேன் நானென்று
யாதும் எண்ணல் வேண்டாமென்
சேரும் அன்புச் செல்வமடி
சிற்றூர்தேசத் திளவரசி
பாருன் அன்பைப் புரிவாருன்
பக்கங் காணும் துயர்தானும்
நீரும்வற்றும் வெய்யோன்முன்
நேர்நிற் கும்பனி யாய்வற்றும்

தலைவி:
நீர்வற்றிப் போகலாம் நீள்வான் வெயில்பட்டு
நெஞ்சத்தின் ஈரமும் வற்றுவதோ
காயொன்று வீசுவர் கல்லும்பட்டுக் கனி
யாகிடமுன் நிலம் வீழுவதோ
வாய்விட்டுப்பேசிட வண்ணம் கலைந்துமே
வாழ்வெட்டா தூரம் இருப்பதுவோ
போய் எட்டிதொட்டிட பொன்னொளி வானமும்
பொய்த்துவிடும் இதுஅப்படியோ

சேய் விட்டுப் போஎன்று சொல்லுவளோ தாயும்
சேராது எட்டி யிருப்பதுண்டோ
பூமொட்டு தன்னை பறிப்பதுண்டோ அது
பூத்திடும் வண்ணம்சி றப்பல்லவோ
மைதொட்டுபூசிடும் கண்களை மூடுமி
மைவிட்டு மூடா திருந்திடுமோ
பொய்சொட்டும் பேசாதோர் நீதியின்முன்ஏதும்
போய்மதி கெட்டுப் புழுகுவரோ

தெய்வத்தில் பட்டிடப்பூ எறிந்தால் வரம்
தெய்வஞ் சினந்து மறுப்பதுண்டோ
எய்அம்பி னோடுவில் லேந்திய வேடனும்
மெய்யன்பினால் வென்ற ஈசனல்லோ
தெய்யெனப் பாடிக் குதித்திடினு மவர்
தேருங்கலை தனும் பார்வையிலே
நெய்விட்ட தீபமென் றேஒளிர்ந்தால் அதை
நீர்விட்டு பார்ப்பது நேசமென்றோ?

அந்தவேளை தலைவன் திடீரென தோன்றுகிறான்.

தலைவன்:
கண்களில்நீருடன் பொன்முகம் ஆனதென்
காண்பதென்ன மனம்வேதனையோ
வெண்பனி போய்விடும் இன்பமென்காலையில்
வந்ததுயாது இளம்புயலோ
தண்ணொளி வீசிடும்சூரியனின்கதிர்
தானும் மலர்முகம் சுட்டதுண்டோ
விண்நிறை மாயஇருள்கலைந்தால் பின்னர்
வேறெது காலை புதிதல்லவோ

பூக்கும் மலர்களைக் காண்புது நெல்வயல்
புன்னகைக்கும் கதிர் புள்ளினம்காண்
தீக்குள் எரிந்திடும் வீறினைப்பார் எங்கள்
தேகம் படைத்தவர் கோவிலைக்காண்
மாக்கள் மனிதன்மரம் செடிகாண் இந்த
மாபெரும் மண்ணும் மதிவெயில் காண்
ஆக்கும் கடவுளின் நோக்கமும்பார் இனி
அன்புகொண்டே என்றும் வாழ்வினைக் காண்!

.

Monday, January 2, 2012

தவறுகள் வருத்தும் கணந்தன்னில்


தெரியவில்லை அழகுமுல்லை தேன்மலர்த் தோற்றம்- நேர்
விரியவில்லை உரியவாறு விழிகளின் மாற்றம்
திரிவதில்லை இளைய தென்றல் இருப்பினும் வாசம்- கொண்டு
உரியமுல்லை மணமிதுவென் றெவரிடம் கூறும்

உரியதுள்ள எதுவென்றானஉண்மைகள்தானும் - நல்ல
திரியுமுள்ள எரியும்வல்ல தீபமென்றாகும்
பெரியதுள்ள குன்றில்வைக்க இருளதுபோகும் அந்த
எரியவைத்த தீபமென்று எம்முகம் காட்டும்

பெரியசொல்லை வரிகளுள்ள கவிதையில் தானும் - நல்ல
பிரியமுள்ள வகையில் சொல்லும் கவிதைகள் யாவும்
உரியநல்ல சுவரில் தீட்டும் ஓவியம் போலும் - கண்ணில்
தெரியும்போதுமனதை கொள்ளை கொண்டிடத்தோன்றும்

சொரிவதில்லை மதுவுமில்லை காகிதப் பூவும் - ஆயின்
எறிவதற்கு முடிவதில்லை எழுத்துக்கள் காணும்
அரியதென்று அதனில் தோன்றும் அன்பினைத்தானும் - கூறும்
பரிவுகொண்ட வரிகள் வாசப் பூவெனக்காணும்

கரியுமில்லை களங்கமில்லை காண்மதிமீதில் - என்ற
வரியும் சொல்லி வைத்தபின்னும் வான்மதி தேயும்
பெரிய துன்பம் போலுமந்த பாசங்கள் கூடும் -  வானில்
திரிவதென்ன தனிமைகொண்டு உருகிட நானும்

சரிவதெல்லை சரியதில்லை என்கிறபோதும் - ஒரு
சரிவினெல்லை காணல்என்றும் சரியில்லை ஆகும்
எரியும்கல்லை எறிவதில்லை என்கிற போது - அதை
விரியும்கைகள் எறிதல்போலும் விளைந்திட நாணும்

விரியவில்லை சரியவில்லை வெண்ணொளி வானம் - அங்கு
தெரியுமெல்லை முடிவுமல்ல ஒன்றெனக்காணும்
புரியுமந்த உறவும் என்றும் பொய்யென ஆகும் - தூரம்
தெரியும் பாதை செல்லச்செல்லப் பிரிந்திடக் காணும்

நரியுமில்லைக் காகமில்லை நம்மதுவாழ்வும் - கொண்ட
குறியும் வீழத் தவறுசெய்யின் குற்றமும் கொள்ளும்
சரியுமில்லை தவறுமில்லை இடையினில்வாழும் வெறும்
கருவியில்லை காணுமுள்ளம், கரும்பினில் சாறும்

பிழிவதில்லை பெருமைகொண்டு உள்ளவர்யாவும் - அவர்
விழியினுள்ளே கருமைகொண்ட கண்மணிதானும்
பழியும்சொல்லி விடுவதில்லை பாலென விழியும் காணும்
தெளிவுகொள்ள உதவும் வில்லை கருமை யென்றாலும்

கரியுமல்லை கனியுமில்லை காலமென்றாகும் -நல்ல
கருப்புமில்லை இனிப்புமில்லை கண்டிடும் வாழ்வும்
பெரியதல்ல பிழைகள் என்றும் வாழ்வதில் நேரும் பின்னர்
தெரிய உள்ளம் வருந்துமாயின் திருந்திய தாகும்

Saturday, December 31, 2011

நிறைவேறாத காதல்

நீரைஉடைத்து நெருப்பைக் கிழித்தவள்
நெஞ்சிலுறைய நின்றேன் - பெரும்
வேரைஉடைத்து விழுத்தி மரமேறி
வெண்முகில் தாவிவந்தேன்
தாரையெனக் கொட்டும் வான்மழைத் தூறலைத்
தள்ளி நெளிந்து சென்றேன் - சிறு
தேரைஉருட்டிநற் தென்றல்வழி ஓடி
தேன்நிலாவில் தேடினேன்

கூரையி லேறிவான் கொட்டிய தாரகைக்
கூட்டத்தைக் கைபொறுக்கி - அதை
ஆரமெனக்கட்டி ஆனந்தக் கூத்திட்டு
அன்பில் அளிக்கவென்றே
ஈரமுகில் தொட்டு மோதவிட்டு அது
மின்னிய வெண்ணொளியில் - அங்கே
தூரம்கி டக்கின்ற கோள்களும் சுற்றிட
துள்ளிக் கடந்து சென்றேன்

மாலையில் வீசிடும் தென்றலின் பூமணம்
மெல்லப் பிரித்தெடுத்தேன் - அவள்
காலையில் வந்திடக் காயும் வெய்யோன் மீது
கையள்ளி நீர்தெளித்தேன்
மூலை, நிழல் இவைமீது நிறங்கொள்ள
முற்றும் வெள்ளையடித்தேன் -ஆயின்
சேலை அணிந்தவள் செல்லும்வழிகண்டாள்
சேரமுடிய வில்லை

தென்னை மரமேறிப் பாக்கும் கமுகினில்
தேங்காய் பறித்துவந்தேன் அந்தப்
பின்னை வளவுக் கிணறுதனைச் சற்று
பக்கம் இழுத்துவைத்தேன்
சொன்னசொல் மீண்டும் பறித்தெடுத்து குரல்
சொல்லை விழுங்கிநின்றேன் - அட
எண்ணில் நாலுதன்னை இரண் டிரண்டாக்கிடா
ஒன்றிட ஒட்டிவைத்தேன்

ஆனவகையினில் ஆகாதவேலைகள்
அத்தனையும் புரிந்தேன் - ஆயின்
ஏனோ அவள் மனம் எண்ணுவதேனென
ஏதும் புரிவ தல்லேன்
தேனோ மானோஇளந் தென்றலதோ எனத்
தேடியலைந்து சென்றேன் - ஆயின
வீணோ அவள்விழி ஓர்கணமும் என்னை
வேடிக்கை காணாநின்றேன்

கண்ணில் கனலெழில் கார் குழல் மாரியும்
கன்னம் பழமெனவும் அவள்
வண்ண நிலாமுகம் வீசும் காற்று மொழி
வேதனை பார்வைதரும்
எண்ணம் கனவிலும் ஏய்த்திடும் நெஞ்சமும்
ஏனோ மனதிற் கொண்டாள் - இள
வண்ணம் எடுப்பென வாய்த்தவளாம் இவள்
வந்து அணைப்ப தெப்போ?

சிறப்பொடு வாழ்வோம்

தெரிவதும் புரிவதும் உலகோ - இல்லை
தெளிவிலை எனச்சுழல் கொளுதோ
அரியதும் அழகதும் உலகோ - இல்லை
அதனிடை பெருமிருள் வருதோ
சரியதும் பிழையதும் எதுவோ - அது
சரிநிகர் வாழ்வினில் உளதோ
எரிமலை கொளும்பெரும் பிளவோ அது
எதில்மன மிடைதனும் எழுதோ

பிறப்பதும் வாழ்வெனும் பொழுதில் - பல
பிழைகளும் பிறப்பது எதனால்?
இறப்பது எனவர முன்னே - பல
இருப்பவை அழிப்பதும் எதனால்?
சிறப்பென வாழ்ந்திட எண்ணும் - மனம்
சிரிப்பினில் இகழ்வதும் எதனால்?
நிறப்பது சிவப்பென உணர்வே - பயன்
நிரப்பிட வெறுப்பெனும் முடிவே!

தரித்திட மணிமுடி வேண்டாம் - ஒரு
தரமற்ற பெயர்தனும் வேண்டாம்
உரித்தது இவர்மனம் பொன்னோ - இலை
உருப்படி யிலைக்களி மண்ணோ
சரித்திரம் படைப்பது மிவனோ - அல்ல
சரிதிறன் உருவழித் திடவோ
விரியுல கதிலிவை வேண்டாம் - ஒரு
யியல்புறு நடுநிலை போதும்

கறந்திடும் பால்ஒரு போதும் - மடி
கொளத்திரும் பிடுசெய லில்லை
உறங்கிடும் மனம்ஒரு போதும் - ஒளி
உதயமும் கொளுமென இல்லை
மறந்தொரு தவறதும் செய்யா - உன்
மனதினில் கவனமும் கொள்ளு
இறந்திடும் நிகழ்எதிர் காலம் -இவை
இனித்திட உயர்வழி செல்லு

பறந்திடும் சிறிதொரு பறவை -அது
பார்த்திடு முலகதைப் போலே
துறவெனக் காண்மன துள்ளே - நீ
தொலைவினில் பறந்திடல் போலே
நிறமொடு வாழ்ந்திடு ஆனால் - நின்
நினைவது வெளுத்திடு மேலாய்
அறந்தனில் அக்கறை கொள்ளு - இதை
அறிந்திந்த உலகினை வெல்லு !

Friday, December 30, 2011

வேண்டாம் உலக வாழ்வு!

சிலையாகக் கல்லாகச் செங்கதிர் ஒளியாகச்
சிவந்ததோர் மாலைவிண்ணின்
அலையும்வெண் முகிலாக அதனூடு மதியாக
அடங்காத திமிரெடுத்த
மலையாகக் குயிலாக மரம்மீது துணைகூடும்
மகிழ்வான குருவியாக
இலைபூவைத் தழுமோர் இளந்தென்றற் காற்றாக
எம்மையும் படைக்காத தேன்?

நிலையாக ஒர்நேரில் நிற்கின்ற மரமாக,
நில்லாமற் தடம்புரண்டு
அலைந்தோடும் காட்டாற்று அருவியாய் அதுசேரும்
ஆழியென் றாக்கலின்றி
தொலையாத துயரோடு தோன்றிடும் பிணியாலே
தூரமென் றின்பங்கொண்டு
கொலைபாதகர் கையின் கொடும்வாளில் உயிர்போகும்
கோலமும் ஏன் படைத்தாய்?

குலையான கனியாக கூடிடும்கொத்தான
குறுவாழ்வு மலர்கள்போலும்
தலைசாய வீழ்ந்துமண் தழுவுநெற் கதிராக
தன்மானங் கூனலிட்டு
இலையென்ற துன்பங்கள் எதிர்வந்து மனதோடு
இழையவும் தளதளத்து
புலையுண்டு மதிகெட்டு பிறழ்கின்ற வாழ்வாகப்
பிறவியுந் தந்ததேனோ?

கிளை தூங்கு சிறுமந்தி யெனஓடி வீழ்ந்துமோர்
கீழ்மையில் சிந்தைவாட
வளைகின்ற முதுமையோ வாவென்று கூறிமேல்
வானத்தின் திசைகாட்டிட
நுளைகின்ற காற்றாலே நுண்துளைக் குழலூதும்
நேரிலே உடலூதியும்
விளைகின்ற உயிர்க்காற்று விதிகொள்ள வீழுமிவ்
வெற்றுடல் தந்ததேனோ?

மழைகொண்ட வான்மீதில் மறுகோடி உறையுமென்
மாதேவி சக்திதாயே !
பிழைகொண்ட வாழ்வீது பேர்மட்டு முயர்வான
பிறவியாம் மனிதமென்றே
துளைகொண்ட மேனியுந் துடிக்கின்ற வேளைகள்
துஞ்சிடுந் நெஞ்சம் வைத்து
விளைகின்ற மேனியில் விஷம் வைத்து மீந்தனை
வேண்டா மிவ்வுலக வாழ்வு!

Saturday, November 26, 2011

கல்லறையில் பூத்தது மலர்

வளையும் விதமேஅறியா துணிவாய் வீர்ம்கொண்டு
விதைகள் என்றே புவியில் போனாய் வீரர் அண்ணா
மழலைசிறுவர் நாமோ இறைவன் மறதிக் கிரையாய்
முதுகில் பாவச் சுமையை ஏற்றி மண்ணில் வந்தோம்
விளையும்பயிரும் மழையில்நின்றால் வளரும் உயரும்
வசந்தம் வீசும் வயலில் கதிரும் வளைந்தேஆடும்
முளையில் பயிரைபோலே நின்றோம் மேகக் கூட்டம்
முழுதும் குண்டைச் சிதறிக்கொட்ட வாழ்வைக் கண்டோம்

அழவே இல்லை அண்ணா நாங்கள் அழவேயில்லை
அழுதால் கண்ணீர ஊற்றும் விழியுள் எதுவும் இல்லை
தொழவே இல்லை இறைவன் நாமம் சொலவேயில்லை
தொழுதால் கருணை தருமோர் தெய்வம் அதுவும் இல்லை
விழவே இல்லை என்றும் நாங்கள் விழவேயில்லை
வெறுமை வெளியில் கிடந்தோம் விழவோர் இடமும் இல்லை
எழவேஇல்லை இடரைக்கண்டும் எழவேயில்லை
எழுந்தால் விடியும் ஆனால் துணையாய் எவரும் இல்லை

செழுமை மலர்கள் பூக்கும் சிரிக்கும் சிறப்பேகொள்ளும்
சிவக்கும் அடிவான் கதிரைக் கண்டு சிந்தும் எழிலும்
அழுகை ஒன்றே எங்கள் இதயத் தகமே கொள்ளும்
அழலில் இதயம் எரியும் அங்கே இருளே கவ்வும்
மெழுகும் தீயில் எரியும் உருகி முடிவில் அழியும்
மெதுவாய் பரவும் மௌனம் போலெம் மனதும் உடலும்
வழுகித் தென்றல் வானில் முகிலை உரசித் தள்ளும்
வாழ்வில் துன்பம் எம்மைத் தள்ளி உயிரைக் கொல்லும்

உலகில் கண்ணை மூடிகொண்டு உறங்கும் அண்ணா!
உன்னை நெஞ்சில் எண்ணப் பொங்கும் உணர்வுமேனோ?
நிலமும் மீட்க நின்றீர் நெஞ்சில் கனலைக் கொண்டு
நிமிரும் உடலில் புதிதோர் இனிதாம் உணர்வைக் கொண்டு
மலரின் வாசம், மதியின் குளுமை, மயக்கும் தென்றல்,
மன்னன் புகழும், மலையின் திடமும் மற்றும் எதுவோ
பலதும் உணரும் தன்மை உண்டாம் சுதந்திரத்தின்
பக்கம்நிற்போர் கென்றும் வாழ்வில் பயமே இலையாம்

எதுதான் பார்க்கும் ஆசைகொண்டேன் எடுத்துச்சொல்லும்
எதுவோ பாதை ஏறிச்செல்வேன் இடையில் ஏதும்
புதுமை உண்டோ பொன்னாய் வீசும் ஒளியும்தெரியும்
போயே இருளும் விடுமென்றார்கள் பொய்யோ சொல்லாய்
இதுதான் மண்ணின் சுதந்திரம் என்றினிதாய்வீசும்
எழிலா எங்கள் உரிமை என்னும் மலர்கள் வாசம்
பொதுவாய் காணும் வாழ்வில் புகுமோர் வழியைச் சொல்லும்
எதுவுமின்றி மெழுகாய் நாமும் அழியும் முன்னே

வீரம் வேண்டிடுவோம்

வானிருந்து பூமழைதான் தூவாதோ - மைந்தர்
வாழுமுள்ள மெங்குமொளி மின்னாதோ
மேனியெங்கும் புத்துணர்வு பொங்காதோ - கண்கள்
மின்னி யொரு வெஞ்சபதம் கொள்ளாதோ
தேனின்நிலா வான்நடந்து வந்ததென - மைந்தர்
தோன்றி எம்மில் ஒளி கொடுக்க மாட்டாரோ?
தானிருந்த மண்ணை நெஞ்சும் எண்ணாதோ - மனத்
தாகம் கொள் சுதந்திரத்தை தேடாதோ

பூங்கதவு தாள் திறந்து கொள்ளாதோ - ஒரு
பூகம்பமே தோன்றி நிலம் பிரியாதோ
தாங்கும் உரத்தோள் வலித்த மைந்தர்களும் - அவர்
தாளுடைத்து தடபடென்று வாராரோ
வேங்கையொன்று சீறி யங்கு பாயாதோ - தமிழ்
விம்மியழும் வேதனையும் தீராதோ
நீங்குதடா துன்பமென்று பாடோமோ?- உயர்
நீதிகாண ராஜநடை போடாரோ?

மானிருந்து துள்ளுவதாய் மருள்விழிகள் - கொண்ட
மாதர்களும் வீறுநடை கொள்ளாரோ?
தேனிருந்த பூக்கள்தீயும் கொட்டியதாய் - இத்
தேசம் கண்ட வீரம் மீண்டும் கொள்வாரோ?
ஏனிருந்த சேனைபடை முற்றழிய - மனம்
ஏங்கியழ இன்னல் வந்து வீழ்ந்ததுவோ?
கூனியெங்கள் குலம்விழுந்து போனதென்ன - எம்
கொள்கை சொல்லும் நாவழிந்த ஏதுவென்ன?

கோனிழந்து குடியிழந்து காணுகிறோம் - கொடும்
கோடையிடி மின்னல் பட்டுச் சாகுகிறோம்
நானிலமும் நீதிசாக விட்டதுமேன் - அதை
நாடு யாவும் சேர்ந்துமூடி வைத்ததுமேன்?
தானைபடைத் தலைவன் நெஞ்சிற் கொண்டதுமாம் - அத்
தாகம் தன்னை நாம் மறந்து போவதுவோ
ஏனய்யா இச்சோக மெங்க ளோடு இன்னும் - நாமும்
ஏங்கி ஏங்கிச் சாதல் இனி நிற்பதெப்போ ?

தூய வீரம் துணிவுதனை எங்கு விட்டோம் - இல்லை
சொந்தபுத்தி மானம் நேர்மை தவறவிட்டோம்
காயமின்னும் மாறவில்லை நோவெடுத்தோம் - இன்று
கத்திகொண்டு புண்ணில் கீறிக்கத்துகிறோம்
சாயம்தன்னும் தான்வெளுத்து போகமுன்பு - நாம்
சரித்திரத்தின் புருசர்களைச் சற்று எண்ணி
பாயும் வேங்கை யாக வில்லை பாதிதனும் - அதில்
பாதியிலும் பாதிதனும் பாய்ந்திடடா!

பச்சை வளம் பொங்கிய நல்லூர்க ளெல்லாம் - நற்
பனிபடர்ந்த புல்வளர்ந்த பூமியெல்லாம்
மிச்சமின்றித் தன்னுடமைத் தேசமென - அவன்
மெல்லமெல்ல உள்நுழைந்து கொள்ளுகிறான்
அச்சமின்றி நாமிருப்ப தாகுவதோ - ஓர்
அடிமையென்று காலமெலாம் வாழுவதோ
துச்சமென்று உயிர்விடுத்த தோழர்கள்பார் - சிறு
தூயமலர் சாத்தி வீரம் வேண்டிடுவோம்.

Thursday, November 24, 2011

தமிழர் மறம்

கடுமற முடனும் திடமெடு மனமும்
கல்லெனும் தோளுரமும்
விடுஎன அதிரும் விளைவொடு திமிறும்
வீங்கிய திடமார்பும்
கொடுமை கண்டுழற குமுறிடும் மனமும்
கூழென தீ பாயும்
சுடுஎரி மலையின் சொரிகனல் சினமும்
சூழ்வலி மைந்தர்களே!

கொடுமை செய்படையும் கூடியபோரும்
கொன்றுநம் மினமழிய்
எடுகரமீதில் இதையெனக் கொண்டு
இயல்பொடு தலைநிமிர
நெடுமுள தாகத் தமிழினில் மோகம்
நிறைதலை வரும் இவரை
தடு எனவிழியில் ஒருஇமைஅசைய
தடபுட லென மைந்தர்

கிடுகிடு எனவே களமிடை புகவும்
பொடிபடும் பகைவர்களே
நடுவினில் பகையின் வளைபெருவியூகம்
நொறுங்கிட உடைமறவர்
தொடு விரிவானின் சுடர்தரும் ஒளியும்
அதைவிடப் பெரிதெனவும்
எடுமறவீரன் எம்துடை தலைவன்
இயம்பிட வினைமுடிப்பர்

வடுவிலதமது வஞ்சியர் மேனி
வளமொடு உயிர் காப்போன்
கெடுஎனக் குதறும கீழ்மகன் சிங்கம்
தொடும்விலை உயிரெனவே
சடுகுடு ஆட்டம் புலியுடன் ஆடும்
எனமகிழ் வொடுஆடும்
கொடுமையை நீக்க குழுமியமைந்தர்
கொண்டபுகழ் கடலே

குடிபல கொல்லும் கொடியவ னரசும்
கொலையிடும் விலங்கினமும்
அடிதடிப் படையென் றொருதிரு நாமம்
இடுஎன ஈந்தணியாய்
பிடிஎவன் தமிழன் பிரிஅவ னுயிரை
பிணமெனப் புதையெனவே
கொடிதிவர் உலகை கூட்டியே எம்மை
கொன்றது இழிசெயலால்

படைவர மைந்தர் களமிடைபுகவும்
கிடுகிடு எனவெடியும்
குடைசரிந் துடையும் அரசுடை
வளவும் குழுமிய எதிரிகளும்
தொடையது நடுங்கி தொகையென வீழும்
துணைப்படை வகைஎண்ணி
உடை விழ ஓடும் பகைவரென்றாகும்
நிகழ்வினைச் சொலவழகே

Sunday, November 20, 2011

செயல்பட ஒன்று சேர்வோம்

வேலைப் பிடித்தவர் சாமிமுருகனை
வேண்டும்வரை தொழுவோம் - அவர்
காலைப்பிடித்திரு கண்களில் ஒற்றியே
காத்திட வா எழுவோம்
ஓலை பிடித்துநற் கூறும் தமிழ்மக்கள்
ஊரைப் பிடிப்பவனை - அவர்
வேலை விடுத்திட வீடு நடந்திட
வேண்டிய தாற்றிடுவோம்

கூலி கொடுத்திடக் கூடிநின் றாடித் தன்
கொள்கை பிழைத்தவரை - இனி
வேலி அமைத்தவர் வேறுபுறந்தன்னில்
வீற்றிரு என்றிடுவோம்
தோலில் சுரத்தினில் சத்துமில்லா தவர்
சுற்றி யிருக்கவைத்து - அவர்
போலி கணக்கதும் போடும்விடைகளும்
பொய்யெனக் காட்டிடுவோம்

வாடி இருப்பது நாமுமல்ல எங்கள்
வாழ்வுமல்ல எழுவோம் - இனிக்
கோடிஎனப்பல கூடிக்குரல்தந்து
கோவிலமைத் திடுவோம்
நாடித் தமிழன்னை நாற்புறம் காத்ததில்
நாட்டை வளர்த்திடுவோம் - அவர்
தேடித் திரிந்துநல் லுள்ளமெடுத்திடின்
தீங்கில்லை சேர்த்திடுவோம்

வீதிதனில் நின்று வேடிக்கை பார்த்திடும்
வேலையினி விடுவோம் - அவன்
கோதி உயிர்தன்னை கொன்று உடல்வெட்டக்
கூடிஎழுந் திடுவோம்
பாதிமனத்துடன் பையப்பைய நடை
போட்டு நகர்ந்திடிலோ - எங்கள்
நீதி நிலைத்திடும் நிம்மதி காத்திடும்
நேரம்தனை இழப்போம்

கோடிஎனக் காசு கொட்டிக் கொடுத்தாலும்
கொல்லும் உயிர்திரும்பா - அதை
தேடிநடந்தொரு ஏழு லகம் போயும்
எங்கும் பெறமுடியா
வாடி நிற்கும் பெண்ணே வாழ்வுமுழுவதும்
ஊதும்புகை அடுப்பின் - அயல்
கூடிக்கிடந்தது போதும்இனித் தமிழ்
கொள்கை தனைச் விளக்கு

சாடிப் பகைவரின் தந்திரம் சொல்லிடு
சாத்திரம் தானுரைத்து - இனி
ஓடிபிழைப்பது ஓர்வழி என்றவர்
ஊரை விட்டு அனுப்பு
பேடி இனத்தவர் பித்தரும் பொய்மையின்
பேரரும் காவலர்கள் - அவர்
தேடித்திரிவது தெற்கில் இருக்குது
திக்கினைக் காட்டிவிடு

Saturday, November 12, 2011

பூவும் வாழ்வும்

தேன்விழுந்த இலையொன்று தித்திப்பைக்கண்டது
தேடியப் பூவைக் கண்டு
வான் பார்த்தகண்களும் வடிவோடு கர்வமும்
வைத்தாயே அன்புமலரே
ஏன் கொண்டுவாசமும் இனிக்கின்ற தேனையும்
இதழ்மீது சுமந்து நின்றாய்
தான்கொண்ட செய்கையால் தாவுமவ் வண்டோடு
தரைவீழும் வாழ்வுகொண்டாய்

நானிங்கு நிற்பதோ நாள்வாரம் மாதமாம்
நலங்கொண்டு வாழும்போது
தேனிங்கு கொண்டதால் தென்றலுந் திறங்கூற
திகழ்கின்ற மேனியழகால்
தானிங்கு நாளொன்றில் தன்மையைஇழந்தாடி
தவித்துநீ வீழ்தலேனோ
வீணிங்கு வாழ்வினை விதிகையில் தந்ததேன்
விடு உந்தன் முறைமை என்றாள்

”ஒர்நாளென் றாயினும் ஒங்கு புகழென்பது
ஒருகோடி இன்பமாகும்
வேர்போலும் மறைந்திங்கே வெளிகாணா வாழ்வது
வியப்பென்று நகைத்துநின்றாள்
பேர்கொண்டு திசையெங்கும் பிறர்பேச வாழ்வது
பெரிதான போதையாகும்
ஊர்கொண்ட கோவிலில் உள்ளதோர் இறையடி
தோள் சேர்த்தல் நாமேயென்றாள்

இலையாக இருந்தென்ன, இல்லையென வாழ்வது
எவருக்கு வாழ்வுவேண்டும்
கலைகூறு நற்கவி கவிஞரும் போற்றுவர்
காணின்ப மலர்களாகும்
விலைகூறி விற்பவர் இலைதன்னைக் கொள்வரோ
இவர் வேண்டல் பூவையாகும்
இருந்தென்ன வேர்போலும் இருள்கண்டு வாழுதல்
எவருக்கு இன்னும்வேண்டும்”

”ஆனாலும் அழகிகேள், அருந்திடத் தேனையும்
எழில் கொஞ்சு மிதழும் வைத்தாய்
போனாலும் திசையெங்கும் புகழ்மாலை சூடுவாய்
பெயர்தந்து எமையேற்றினாய்
தேனாலும் வாசமும் தேகமென் பாங்கிலும்
திகழ்ந்தாலும் ஒன்று தெரிவாய்
நானாலு இலைகளும் நல்வேருமில்லையேல்
நீவாழ என்ன செய்வாய்

ஆதார மென்றுநம் அகம்மீது பொறுமையென்
றணிகொண்டு வாழுகின்றோம்
நீதாங்கும் தேனையும் நிமிர்ந்ததோர் வாழ்வுக்கு
நீர்கொண்டு ஊட்டுகின்றோம்
வேர்தாங்க வில்லையேல் விழிக்காண அழகினை
விரிகின்ற மலர் கொள்ளுமோ?
தீதாங்கு மாதவன் ஒளிவாங்கி உயிர்காத்தல்
தேவைநம் கடமையன்றோ?”

Wednesday, November 9, 2011

அன்பும் வாழ்வும்

வெள்ளை மலர்கள் வீசுந்தென்றல் விடியுங் காலைகளும்
உள்ளம் எங்கும் உண்மையன்பும்  உலகின்கண் செய்தாள்
தெள்ளத் தெளியும் நீரோடைநற் தேனாம் கனிமரங்கள்
அள்ளித் தூவும் மலர்கள் காட்டின் அமைதி அவள் செய்தாள்

துள்ளித் திரியும் மானின்ஓசை, தூங்கும் இலைதொட்டே
தள்ளும் தென்றற் காற்றின் சத்தம் தந்தே எழில் செய்தாள்
வெள்ளிக் கொலுசாய், விரையும் நதியில் விளையும் சிறுஓசை
கொள்ளை யின்பம் யார்தான் செய்தார் கோலத்திருமகளே

பள்ளித் திண்ணை குருவும் பாடம் பயிலப் பலநூல்கள்
கொள்ளத் திறனும் அறிவும் கொண்ட குணமும் குறுமுகமும்
துள்ளித்திரியும் இளமை இன்பம் தேடும் இரு விழிகள்
வெள்ளிச் சுடரும் விண்ணும்வெளியில் வியக்கும்வகை செய்தாள்

சுற்றுமுலகும் சூழும் அண்டம் சூரிய மண்டலமும்
கற்றும் அறியாக் கற்பனைக் கெட்டாக் காலச் சக்கரமும்
மற்றும் மனமும் மனதில்விரியும், மாபெரும்கற்பனையும்
சற்றும் அறியோம் சக்திஎன்றோர் சக்திதான் செய்தாள்

குற்றம், கொல்லுங் குணமும்,  குருவி, கொள்ளப் பருந்தினையும்
வற்றும் குளமாய் வாழ்வும் வற்ற, வாடும் மீன்களென
முற்றும்பாசம் அற்றோ ரும் மவர்மௌனப் பெருமூச்சும்
அற்றோர் ஏங்கும் அவலங்களென்  றகிலம்கொள வைத்தாள்

 விற்றும் வாங்கும் பொருளேயல்ல விளையும் பெருஅன்பு
கற்றுப்பெறுதல், கடனோ அல்லக் கருணை எனும் வெள்ளம்
தொற்றும் நோயாய்ப் பரவி எங்கும் தோற்றம் கொள்வதில்லை
பற்றும் பாசம் படைப்பில் அவளே பார்த்துத் தரவேண்டும்



அன்பே இல்லா உள்ளம் தன்னை அவளே செய்தாளோ
தென்றல் சீறிப் புயலாய் மாறச் சித்தம் கொண்டாளோ
நன்பெய் மழையும் நல்லோர் பயிரும் நாட்டில் வளர்வித்தாள்
வன்மைகொtண்டோர் விலங்கைச் செய்து வாழ்வும் அழித்தாளேன்

மலையும் மழையும்

மதிநின்று விளையாடும் மலைமீதுதொடுமேகம்
மழை கொண்டு நீர்தூவுமாம்
புதிதென்ற மலைவாழை இலைதள்ள அழகான
பசுஞ்சோலை கதிர் கொள்ளுமாம்
முதிதான வளர்நீள மரம்மீது குயில்பாட
மலர்க்கூட்டம் இதழ் பூக்குமாம்
குதித்தோடிக் கிளைதூங்கி கருமந்தி மரந்தாவ
குளிர்நீரும் பூத் தூவுமாம்

அழியாத கலையோடு பெருங்கோவில் அமைந்தொன்று
அழகோடு உயர்ந்தோங்கவே
வழிமீது நடுவானில் வரும்மேகம் இடைநின்று
விடு என்று அதை மோதுமாம்
விழி காணா குளிர்காற்று வெண் பஞ்சு உடல்நீவ
வளைந்தோடி முகில் ஓடவே
எழிலான இவைநூறில் எது தானும் அழகென்று
இவன்சொல்ல இறைதேவியே

மழைவந்து நிலம்மீது உறவாடும் மணல்சேர
மண்வாசம் எழும், கண்டுமே
நுழைந்தோடு பூங்காற்று அதை யள்ளி மணம்வீசி
நனைபூவை மறந்தோடுமே
வளைந்தாடும் கொடிபூத்த வகையான மலர்த்தேனில்
விழும் தூறல் கலந்தோடவே
அழைந்தின்ப மதுஉண்ணும் இளந்தும்பி சுவையின்றி
அருந்தாம லெழுந்தோடுமே

குழல்மீது மலர்கொண்ட குறும்பார்வை தனிலன்பு
கொள்நங்கை தனை ஆடவன்
சுழல்அம்பு விழிகண்டு சிந்தும்புன் னகைபோலும்
சுடர்தானும் புவிமாதினை
மழை நின்ற பெருவானில் கருமேகமிடையாலே
மறைந்தங்கு ஒளிசிந்தவும்
மழைபோகச் சிறு தூறல் தனில்ஏழு நிறமோடி
இதுவாழ்வு உமதென்குமே

பிழையான குரு, பாடம் பயிலாத சிறுபாலன்
படுகின்ற துயராகவே
பழக்காத ஒருமாடு நடுவீதி தடுமாறிப்
பிரம்பாலே வெருண்டோடுமே
முழவோடு சிறுநாத மிசைபாடிஒருகூட்டம்
மெதுவாக நடைகொள்வதும்
அழகோடி எமதான மலைகூடும் சிறுஊரில்
அருங்காட்சி தினம் தோறுமே

Friday, November 4, 2011

உன்னை நீயறிவாய் !

பொன்நகை யன்றிப் புன்னகை கொள்வாய்
போகும் பாதையிலே
பன்நகை கண்டும் பதறா துந்தன்
பாதை நீ தெளிவாய்
சின்னகை கொண்டு செல்லப்பிள்ளை
சீண்டும் போதினிலே
என்னது செய்வாய் அதுபோலின்பம்
ஏற்றே சிரித் திடுவாய்

காடும் நாடும் ஒன்றே யறிவாய்
காட்டின் விலங்கினமும்
கூடும் எண்ணம் கொள்ளும் மனிதர்
கூட்டம் காண்பாயே
தேடும் அன்பும் தீமைகொள்ளாத்
தெய்வம்போல் மனிதம்
ஊடும் உள்ளார் உண்மையறிவாய்
உன்னைக் காப்பாயே

பொய்யும் கண்பாய் பொய்மை கொண்டே
புரளும் உலகறிவாய்
எய்யும் அம்பாய் இன்னல் செய்யும்
எதையும் எதிர் கொள்வாய்
மெய்யில் தீரம்கொண்டே என்றும்
மனதில் துணிவாகி
செய்யும் செயலில் சிந்தைவைத்து
சிதறா நிறைவு செய்வாய்

மாறும் உலகில் மாற்றம் என்பது
மாறாவிதி காணாய்
மாறும்போதில் மற்றோர் உயிரை
மதிக்கும் விதி கொள்வாய்
ஊறும் ஒருவர்க் கில்லா மாற்றம்
உலகில் சரியென்றே
யாரும் சிரித்தால் நீயும் சேர்ந்து
சிரிப்பாய் சினம் விடுவாய்

மூடும் முகிலும் கூடும் இருளும்
மௌனச் சதிவலைகள்
போடும் இடியும் புயலும்சேரும்
புனலும் இழுவெள்ளம்
பாடும் பசியும் பிணியும்பலதும்
பார்த்தும் பதறாமல்
வாடும் உள்ளம் இன்றி நல்லோர்
வழியைக் கண்டிடுவாய்

விண்ணில் காணும்நட்சத்திரங்கள்
எண்ணிக் கைபோலும்
மண்ணில் காணும் விந்தைமனிதர்
மனமும் பலதாகும்
எண்ணிப்பார்த்தால் இவரின் சொல்லோ
இதழில் புன்னகையாய்
கண்ணைச் சிமிட்டும் கருமைஎண்ணம்
காணும் உளமிருக்கும்

இன்னோர் உயிரை இகழல்செய்யா
இயற்கையென மதிப்பாய்
தன்னோர் எண்ணம் தனதோர்முறைமை
தவறில்லைக் கொள்வாய்
நன்நேர் வாழ்வை கொள்வாய் நாளும்
நலனே எண்ணிடுவாய்
மின்னேர் ஒளியாய் மிளிர்வாய் உலகில்
மேன்மை கண்டிடுவாய்

Monday, October 31, 2011

சிலந்தியும் நாமும்

பாட்டெதற்குப் பாடியே பரமனவர் பட்டதனை
பாவிநான் மறக்கலாகுமோ -இன்னும்
போட்டுடைத்து ஆடிப்பெரும் பூமியில் புயலடிக்க
பூமலர்கள் தூவலாகுமோ
ஏ(ட்)டெதற்கு என்றெழுதி இதயம் கனத்துவிட
இன்னமும்  எழுதல் என்னவோ -நாளும்
நீட்டியொரு பாய்விரித்தும் நிமிர்ந்து படுத்துமனம்
நிம்மதியைக் காணலாகுமோ

நாடெதற்கு நல்லவர்கள் அற்றவர் அரசுகொள்ள
நானெதற்கு என்னலாவதேன் - உந்தன்
வீடெதற்கு என்றவனோ வெட்டியும் விறகெரிக்க
விட்டுமோடிச் செல்லலாகுமோ
ஆடவரக் காலுடைத்து அழகென்று சொல்பவரை
ஆளும் திறன் என்னலாகுமோ -இன்னும்
வேடமிட்டு சூழ்ந்துவந்து வேதனை விளைப்பவனை
வேடிக்கையென் றெண்ணலாகுமோ

தோலுரித்து வெய்யிலில் துடிக்க விரிப்பவனைத்
தோழனென்று கொள்ளலாகுமோ -அவர்
நாலுபேரைத் தூக்கவிட்டு நடுவில் படுக்கவைக்க
நாமும்சரி என்னலாவதோ
வாலிருக்க தீயைவைத்து வந்திருந்த தூதனையும்
வேடிக்கை புரிந்தவரல்லோ -அன்று
காலிருக்க ஒடியவன் கனத்த அனல்எரித்துக்
கண்டநிலம் தீயுதாமின்றோ

வேலிருக்க என்னபயம் வென்றுவிடு என்றவனும்
வீதியிலே நிற்கலாகுமோ - ஒரு
கோலிருக்கு ஆளுங்குடை கொண்டிருக்கு என்றவுடன்
கோவிலும் பறிக்கலாவதோ
ஆலிருக்கு தோரரசும் அங்கிருக்கு என்றவுடன்
அந்த இடம் சொந்தாமாகுமோ -இங்கு
வேலிருக்கு வேம்புடனே விளைந்த நிலமிருக்க
வீற்றிருக்க வந்தாராம் ஏனோ

கூழிருக்கு சோறுகஞ்சி குடித்துப் படுத்தமண்ணை
கூலிபெற்று விற்கலாகுமோ - கொண்ட
தோளிருக்கு உள்ளம் இன்னும் துடித்து உணர்விருக்க
தூங்கவென்று செல்லலாவதோ
ஆளிருத்தி வாழ்வழித்து அவலமிடப் பொறுக்க
ஆக இன்னும் ஏழையாவதோ - இன்னும்
நாளிருக்கு நமக்கில்லை நாமிருப்ப தூரமென
நாஒறுக்க ஊமையாவதோ

ஏழிருக்கு ஏழரையில் ஏறியேசனியிருக்க
எல்லாம்விதி என்று சொல்வதோ -அட
ஊழிருக்கு செய்தவினை உற்றழியகாலமிது
ஒன்றும்பயன் இல்லையென்பதோ
நூலுடன் சிலந்திவலை நாலுதரம் வீழ்ந்தெழுந்து
நெய்தகதை நீபடித்தையோ -அது
போலிருக்கு பூமிதனில் புன்மைதரும்வாழ்வு நீயும்
போயெழுந்து வாழ்வு கொள்வையோ

மனம்( மாறாத சோகம்)

நீராழி மீதிலே அலைகள் ஆடும்
. நினைவோடு போனவை நின்றுகாணும்
பேரோடு சொந்தங்கள் பின்னால் வரும்
. புகழோடு வரவுகள் புதிதுசேரும்
தேரோடத் தெய்வமும் தீந்தமிழ்சொல்
. தமிழோடு மனம்சேர்ந்து ஆடவைத்தே
நீரோட விழிமீது வழியுஞ் செய்தாய்
. நெஞ்சிலே தீயாக நினைவு வைத்தாய்

மானாடும் மயிலாடும் மதுவில்நின்று
. மலர்மீது வண்டாடும் மகிழ்வில்என்றும்
வானோடும் கதிரேறும் வண்ண நிலவு
. வந்தோடும் பூங்காற்று வசந்தமென்று
தானோடும் மனமீதில் எண்ணமென்று
. தனியாக அதுவோடிச் செய்யுகோலம்
நானோடி சொல்வதோ யாருக்கென்று
. நடுநீரில் மீன் நின்று அழுவதென்று

பூவிரியும் புதிதாகப் பிறந்த வேளை
. புள்ளினமும் ஆர்ப்பரித் தெழுந்த காலை
தீவிரியும் கதிரோடு தினகரன்தான்
. தேய்நிலவை தள்ளியத் திசையுங் கொள்ள
காவிரியின் அலையாகக் கலகலத்து
. காற்றுமிளங் காலையில் இதயம் மீது
நீவியொரு இன்பமதை ஊட்டுமாமோ
. நீர்விழியில் கொண்டதனைக் கூட்டுமாமோ

பசும்வெளியில் புல்லாக பச்சை வண்ணம்
. பழந்தூங்கு சோலைகளும் பாரில்வைத்தான்
விசும்பியழ மனமொன்றை உள்ளேவைத்து
. விதியோடு உறவுவென்று கூட்டி வைத்தான்
பிசுசிசுத் துழலென்று செய்தான் காலம்
. பிழைத்துவிடப் பொல்லாப்புப் புரிந்துநின்றான்
நசுங்கமனம் பூவாக மனதைச் செய்து
. நடமாடும் நிழலாக நலிவை வைத்தான்

எழிலோடு பிறக்கின்ற இரவின் முடிவு
. எழுந்தாடும் அலைகொண்ட கடலின் உயர்வு
வழிமீது சொரிகின்ற மலர்கள் மென்மை
. வானேறிக் காண்கின்ற சொர்க்கம் யாவும்
பொழிகின்ற மழைகொண்ட சாரல்தூவும்
. புனல்தூறக் குளிர்கொண்ட வாழ்வுமேனோ
குழிமீது எனைவீழ்த்திக் கோபுரத்தின்
. கொண்டே என்கனவாக வைத்தாய் ஏனோ?

தமிழே, தருவாய் நல்வரம்

கனவொன்று கண்டேன்
. -களிகொண்டு நடமாடும் இளமங்கை
. -கனிவோடு எனைநாடி வந்தாள்
மனம்நொந்து நின்றேன்
. -மதியோடு உறவாடும் முகம்மீதில்
. -மலர்கொண்ட நகையோடு நின்றாள்
வினவென்று சொன்னேன்
. விழிமீது கனிவாக விளைகின்ற
. விதமாக எனைக்கண்டு சொன்னாள்
’பனிபோலும் விழிகள்
. படராதநிலைகொண்டு பண்’பாடு’
. பதில்கூறு பயமேது’ என்றாள்

தமிழன்னை என்றாள்
. தனையெண்ணி சுவையான தமிழ்கொஞ்சும்
. தரமான கவிகூறு என்றாள்
அமிழ்தோடு வந்தே
. அதை வீசி இதுவென்ன அதைமேவி
. இனிதான மொழிபாடு என்றாள்
குமிழ்போல்நல் லெழிலாள்
. கரைமீது அலையோடி உருண்டாலும்
. அதுமீண்டும் கடலோடும் என்றாள்
தமிழ்பாடி நின்றாய்
. இனிவாடிக் கருகாமல் தரும்வாழ்வு
. தலைமீது முடிசூடும் என்றாள்

மலர்கொய்து கொண்டேன்
. மகிழ்வோடுஅவைதூவி மாறாத
. மனதோடு எனைவாழ்த்து என்றேன்
புலர்வானில் தோன்றும்
. புதிதான கதிர்வீசும் பொழுதாக
. புவிமீதில் புனைகவிகள் என்றாள்
தளராது நின்றேன்
. தமிழோநற் கவிதானும் நதிபோலுந்
. தனில்பொங்கி நிறைகாணும் என்றாள்
உளம்மீது பலமும்
. வளந்தந்து விழிமீது ஒளிதானும்
. விளைவித்து வெளியோ டிணைந்தாள்

Wednesday, October 5, 2011

கலைமகள், அலைமகள், மலைமகள்

கலைமகள்:
பாலுமினி பாகும் பருப்புடனே தேனீந்து
காலம் முழுதுமுனைக் கைதொழுதோம் - சீலமுடன்
சங்கத் தமிழ்வீரம் சாற்றும் மறத்தமிழைச்
சிங்கம் சிதைக்கவிட்ட தேன்

வெள்ளைக் கொடிபிடித்து வெள்ளை மனமெடுத்து
வெள்ளம் எனும்மக்கள் வாழ்வதனை - அள்ளி
கோரக் கொலைசெய்வோர் கேடு நிறுத்தவர
வாரி உடல்சிதைத்த தேன்

அலைமகள்:
சீரும் சிறப்புமெனச் செல்வந்தர் வாழ்வுதனை
ஊரும் உலகமெலாம் உண்டாக்கிச் - சேருமெம்
பொன்பறித்துக் கொண்ட புனர்வாழ்வு தானழித்து
வன்மைதனை செய்ததுவும் ஏன்

வேருடன் வெட்டி விதியாம் இனம்கொல்ல
யாருக்கும் பணியாத ஞாயிறோன் - நேருமொளிச்
செந்தமிழன் சீர்குலையச் சூழ்ந்து பொதுநிதியம்
தந்திரமாய் நீயழித்த தேன்

மலைமகள்:
தேருங் கலை,கல்வி திறைபொன்னும் பின்வைத்துப்
பேரும் புகழ்வீரம் பெரிதென்றோம் - சேருமனம்
உன்னை முதல்வைத்தே உள்ளம் தொழுதவரை
அன்னைநீ மாளவிட்ட தேன்

கல்விபணம் காப்பதெனில் காணும் சுதந்திரமே
இல்லையொரு வேற்றுவழி என்றெண்ணி - வல்லவராய்
வாழ்வின் விடுதலைக்கு வாளெடுத்த நல்லவரை
வீழ்ந்திடவென் றாக்கியது மேன்

..........வேறு.........

கலைமகள்:

வெண்டாமரை மலரில் வீற்றிருப்பாய் - கலை
வேண்டுமவர் எல்லோர்க்கும் வரமளிப்பாய்
வண்டாடும் பொய்கைமலர் வாழ்பவளே - அன்று
வாளெடுக்கும் வீரத்தைமுன் தொழுதோம்
கண்டோம் இப்பூவுலகில் காசிருந்தால் - காண்
கலைமகளும் மலைமகளும் அருள்புரிய
குண்டோடு நஞ்செறிந்து கொல்லவுமோர் -எக்
கோழைமனம் கொள்பவனும் வெல்வதென்ன

ஏடுதனைக் கற்றிடவும் தேவையில்லை - கத்தி
எடுத்தவனோ செவ்விழநீர் சீவும்தலைக்
கேடுதனைக் கொண்டிடினும் பொய்சொலவும் - கீழ்
குணங்களெலாம் உள்ளவனும் மன்னனென
நாடுதனை ஆளுவதேன், பொன்னிருந்தால் - இந்
நானிலமும் புகழெழுந்து நலன்காக்கும்
பாடு என ஆக்கியதேன் பங்கயத்தில் - கரம்
பாடுமிசை வீணைதனைக் கொண்டவளே?

..............வேறு.........

அலைமகள்:

செந்தாமரை யுறைந்து செல்வமெனக் கைவிரித்து
சிந்திடவே கொட்டுமெழில்
பந்தாம் இப்பூமியில்வாழ் பலர்வாழ்வும் செழிக்கவென
பகட்டான வாழ்வீந்தாய்
எந்நாளும் இருகரமும் கூப்பியுனை இரந்தவர்கள்
ஏழைகளின் கலண்டர்களில்
உன்தாமரைக் கரங்கள் சொரிவதுஎன் உள்வீட்டில்
ஒருபொன்னும் விழுவதில்லை

வந்தேமுன் வீழுமென வண்ணக் கனவெழவே
வாசல்தனைப் பார்த்திருந்து
நொந்தோ மிருந்தும்நீ நெறிதவறிச் சிங்களவன்
நிதிக்கிடங்கை நிரப்பலன்றி
செந்தேன் தமிழரெமைச் சிறிதேனும் காணாமல்
சிரம்திருப்பும் சிறுமைதனைச்
செந்தூரவண்ணச் சிலையே செய்ததென்ன? ஈழத்தைச்
சிதைத்ததுமேன் அலைமகளே?




மலைமகள்:

கொட்டும் இடியெனத் தட்டிதிறனொடு
எத்தனை வென்றவை போர்க்களங்கள்
விட்டுப் பகைவனை தொட்டுக் களமதில்
முட்டித் தடதட எனவீழ
கட்டுக் கலைந்திட காலும் பின்பட
உச்சித்தலை தெறித்தோடிவிட
கட்டிக் காத்தவர் இற்றைக் குழியினில்
கண்ணும் மூடவைத் தெதனாலே

பற்றுக் கொண்டதில் போரின் விதிமுறை
பற்றித் திறனொடு பாரினிலே
ஒற்றைப் படையதும் உலகில் எங்கணும்
இல்லயென வகைபோரடி
மற்றும் உயிர்களை மாளச்செய்வதை
விட்டுக் கடமையைக் கொண்டோராம்
இற்றைக் கெம்மிடை இனமே கொல்பவன்
இச்சை கொன்றிட என்செய்தாய்?

சத்தியம் வெல்லும்!

பட்டமரம் அழுகிறது அட்டமியின் ஒளிநிலவு
...விட்டமழைத் தூறலடி தங்கமே தங்கம் - இது
..... விதிஎழுதும் ஒருகவிதை தங்கமே தங்கம்
கட்டைவிரல் எழுகிறது தொட்டெடுக்க விழைகிறது
...ஒற்றைவிரல் பற்றிடுமோ தங்கமே தங்கம் - நல்
.....ஓசைஒரு கையசைவில் உள்ளதோ தங்கம்
திட்டுமணல் மேடைதனில் சின்னவிதை காய்கிறது
...கொட்டி வெயில் எறிக்கையிலே தங்கமே தங்கம் - அதில்
..... குருத்தெழுமோ வெடித்துமுகை கொள்ளுமோ தங்கம்
தட்டிநிலம் நடைபழகும் தளர்வுகொண்ட காலிரண்டும்
... முட்டியெழும் அலைகடலில் தங்கமே தங்கம் - அவை
.....மூழ்கிடாது மேல்நடந்து செல்லுமோ தங்கம்


நட்டநடு வீதியிலே நாலுபேர்கள் முன்னிலையில்
...சத்தியமும் பட்டபாடு தங்கமே தங்கம் - அது
.....நித்தியமோ நின்றிடுமோ தங்கமே தங்கம்
தொட்டவரும் வெட்டவரும் தீயவரால் துன்பமதைப்
...பட்டவரும் கொண்டவலி கொஞ்சமோ தங்கம் - அப்
..... பட்டுமலர் கொட்டி ரத்தம் பார்த்தையோ தங்கம்
எட்டவரும் கட்டைதனை ஏறிஉயிர் காக்கவென
... முட்டவழிந்தோடும் ஆற்றில் தங்கமே தங்கம் - நீர்
..... மூழ்கமுதல் எண்ணியவன் தங்கமே தங்கம்
கிட்டவரக் கட்டையல்ல கொத்தும் பெரும் அரவமெனில்
...எப்படிநீ தப்பிடுவாய் தங்கமே தங்கம் - இந்த
......ஏழைவாழ்வு மப்படியே தங்கமே தங்கம்

சுட்டுநிலா எரிவதில்லை தோன்றும் வெயில் கறுப்புமில்லை
... குட்டிடவும் குனிந்தொருவன் நிற்பதேயில்லை -அந்தக்
..... குணமறிந்து நீயும் எழு தங்கமே தங்கம்
முட்டையிலே குதிரைவரும், முந்திரியில் பொன்விளையும்
...குட்டியானை பறந்துபோகும் என்றவர் தங்கம் - இப்போ
..... கூரையிலே கோழிகொள்ளப் படுவதோ துன்பம்
கட்டிச்சிறை யிடநினைந்து கையிலொரு விலங்கு கொண்டு
... எத்தனைதான் ஓடினாலும்தங்கமே தங்கம் - பொய்
..... இட்டுக் கட்டும்வித்தை கற்றோன் ஏய்க்கிறான் தங்கம்
தட்டிவாசல் கூட்டிவைத்து தண்ணிதெளித் தூபமிடு
... முத்துஒளித் தீபமொன்று ஏறுமாம் தங்கம் - இனி
..... முன்னெழுந்து விடியல் வரும் தங்கமே தங்கம்

விட்டதெல்லாம் போகஇனி விரைந்துஒன்றுகூடிவிடு
... விதிஎழுந்து போகையிலே தங்கமே தங்கம் - ஈழ
.....வான்விடிந்து ஒளி பிறக்கும் தங்கமே தங்கம்
தொட்டதெலாம் துலங்குமடி தூரநாடுகடந்தமைத்த
...சட்டப்படி ஈழத்தமிழ் அரசுமே தங்கம் - அது
..... எட்டியுயர் வான் வளரச்செய்குவோம் தங்கம்
கெட்டபகை கைபிடித்து கீழிருட்டு சிறையிருத்தி
...மற்றவர்கள் கேள்வி கேட்கத் தங்கமே தங்கம் - நாம்
.... மண்ணைத் தொட்டு வணங்கிடலாம் தங்கமே தங்கம்
பொட்டுமின்றிப் பூவுமின்றிப் போவதெங்கே நில்லுகொஞ்சம்
...சத்தியமே வெல்லுமடி தங்கமே தங்கம் - நீ
..... சத்தியமாய் கண்டிடுவாய் எம்தமிழீழம்

சக்களத்தி தொல்லை!

வெண்ணிலவு தேனிறைக்க
வேளை நடுச்சாமத்திலே
கண்ணிரண்டும் தான்கலக்க
காதல்செய்யும் மன்னவரே
எண்ணியிவள் உன்னவளாய்
இங்குமனம் வெந்திருக்க
கண்ணியமும் தாழ்ந்தவளைக்
கண்டுமகிழ் வெய்திடலேன்?

பன்னிரண்டு மணிவரையும்
பக்கமவள் தானிருந்து
சின்னவிரல் கொண்டழைந்து
சேருமின்பம் காணுகிறீர்
என்னைமனம் நோகவிட்டு
என்னருமைச் சக்களத்தி
தன்னில் மோகம்கொண்டதென்ன
தனியிருந்து வாடுகிறேன்

திங்களடி உன் வதனம்
தித்திக்கும் கன்னமிது
பொங்குதடி என்இதயம்
பொன்னென் றன்றுரைத்தீர்
மங்கிமதி கெட்டுழன்று
மன்னவரே இன்றவளின்
அங்கமெலாம் மின்சாரம்
ஆஹா..கா.. என்கின்றீர்

பேசுவது நானென்றால்
போதுமடி மூடென்று
ஏசிமனம் நோகவைத்தீர்
இன்றவளோ எத்தனைதான்
மாசுபட பொய்யுரைக்க
மையலிடும் கதைபடிக்க
கூசும்மனம் ஏதுமின்றி
கோடிமகிழ்வெய்துகிறீர்

என்னபுதிர் கேட்டாலும்,
எடுத்துரைக்க வல்லவளாம்
சொன்னவேலை கச்சிதமாய்
சுறுசுறுப்பாய் ஆற்றிடுவாள்
என்னழகுச் சித்திரமாய்
எழுதுகிறாள் என்றரற்றி
மென்னழகுப் பொருள்ஈந்து
மிகமகிழ்வு கொள்ளுகிறீர்

கல்லெனவே மனதுடையாள்
கண்டதெலாம் சொல்லிடுவாள்
பொல்லாத மாயமிட்டு
பொழுதெல்லாம் அருகிருத்தி
அல்லதொரு சுகமளிப்பாள்
அடுத்தவரின் சேதிசொல்வாள்
உள்ளதொரு ஊர்ப்புதினம்
ஓயாது எடுத் துரைப்பாள்

மின்னும் இதழ் கொண்டுமையே
மோகமுறச் செய்ததென்ன?
இன்னிசைகள் பாடிஉனை
ஏக்கமுறச் வைத்ததுஏன்?
சொன்னகதை எத்தனையோ
சுகமளிக்கும் வித்தையதோ
என்னவகை ஆயிருந்தும்
இதயமற்ற வன்மையலாள்

அன்னமென ஆக்கியுமை
அறுசுவையில் விருந்தளிக்க
சின்னவளால் முடிகிறதோ
செய்வதென்ன நானல்லவோ
சின்னவளைத் தொட்டெவரும்
சில்மிஷங்கள் செய்வரென
கன்னங் கருத்துவிடக்
கட்டிஒரு மந்திரமும்

இட்டுவைத்தும் நீர்வீட்டில்
இல்லாத சமயமெவர்
தொட்டாலும் முகம்மலர்ந்து
சொன்னதெலாம் செய்கின்றாள்
விட்டதொட்ட கதையெல்லாம்
விவரித்துக் கூறுவதை
மட்டும் உமக் குரைத்து விடில்
மனம் வாடிப் போய்விடுவீர்

(சக்களத்தி = கணினி)

காலைப்பொழுதின் சுகம்


தெளிந்தது மனமும் துலங்கிடுவானும்
தென்றல்தொடுஞ் சுனையும்
கழிந்தது இரவும் கரைந்தவை இருளும்
கனவுகளெழும் துயிலும்
நெளிந்ததுஆறும் நிமிர்ந்தன மரமும்
நின்றதும் நிரையெனவும்
அழிந்தது பனி, புல்அணைத்திடும் இரவின்
அதிசுகம் கசந்திடவே

வழிந்தது மதுவும் வாசனை மலர்கள்
விரிந்திடும் இதழ்பரவும்
பொழிந்ததும் தூறல் போயின முகில்கள்
புரண்டிடும் மலையிடையும்
கொழித்திடும் பெண்கள் கூந்தலில் மலர்கள்
குவிந்தன, விழிமலரும்
பழித்தன காதல் பாங்குடை தோளில்
பலமெடு ஆடவரும்

செழித்திடவாழ்வு சிரித்தன இதயம்
சிவந்திடும் காலையிலே
குளித்தனஇன்பம் கொண்டன ஊரின்
குடிகளில் மாந்தர்களே
புளித்திடு மாவின் பிஞ்செனும் சிறுவர்
பேசிடும் வழிநடையும்
விளித்திட அறிவும் விதையிட வளரும்
வீறொடு பள்ளியிற்கே

பழுத்திடும் கனிகள் ருசித்திடும் குருவி
பாய்ந்திடு அணில்களுடன்
கழுத்திடு மணியும் கலகலஒலியில்
கடுநடை ஏறுகளும்
இழுத்திடும் வண்டி இரைந்திடுமூச்சு
ஏய்எனும் குரலொலியும்
எழுந்திடுங் காலை இசையுடன் தாளம்
இவைதரும் சுகமல்லவோ 

எழில்தரும் வாழ்வில் எழுபவைஎல்லாம்
இயற்கையின் ஒலிநாதம்
களிகொள்ளமனதில் கவிதைகள் தோன்றும்
கனிவுடன் உருவாகும்
வெளிதனில் நின்றால் விளைந்திடு தென்றல்
வருடிய சுகம்காணும்
ஒழிந்தது துயரும் உயர்ந்திட மனமும்,
என உளம் புதிதாகும்

குழிந்திடும் கண்ணும் குறைந்திடும் பார்வை
கூனிடும் முதுமையரும்
அழுந்திடு பிணியும் உழன்றிடவலியும்
அதனுடன் சிலராகும்                         
வழுந்திய குரலும் மழலையின்மனமும்
மாதரின்அரவணைப்பும்
மழுந்திய மனமும் மயங்கிய அறிவும்
மாற்றமும் ஒருவாழ்வே

Wednesday, September 28, 2011

பிரிந்தவர் மீண்டும் சேரும்போது1

இந்தமனம் செந்தணலில் வெந்ததுமில்லை துயர்
தந்தஎதைக் கண்டுவிழி சிந்தவுமில்லை
வந்தஒரு துன்பம்பெரி தென்பதுமில்லை -அதைத்
தந்தவிதி வந்துநிலை கொண்டதுமில்லை
சிந்தையிலே அன்புஒளி தந்ததினாலே உடன்
விந்தைமனம் முந்திமகிழ் வெய்திடவாழ்வே
சந்தணமும் வாசமதைத் கொண்டதுபோலே ஒரு
நந்தவன மாய்மலர்ந்தேன் சிந்தையினாலே

மந்தமென வந்துமுகில் நின்றதனாலே இருள்
தந்தநிலை வந்திடுமோ என்பதனாலே
பொந்தில்எரி பந்தமதை வைத்ததினாலே தீ
வெந்ததென காடெரிந்து கொண்டதுமாமோ
கந்தகமும் செந்தணலைக் கண்டதுபோலே மனம்
முந்திஎழ வண்ணவெடி சிந்தியவாறே
சுந்தரமாய் சந்திரவான் கண்டதினாலே அது
தந்ததென்ன சந்தமிடும் செந்தமிழ் பாவே

எந்தநிலை வந்துந்துயர் எந்தனின்மேலே ஒரு
குந்தகமும்செய்வதில்லை இந்தொருநாளே
மந்திரமோ தந்திரமோ சென்றது தானே இனித்
தந்தனனே பாடிடுவோம் மங்கலந்தானே
கந்தனவன் கைபிடித்த சுந்தரவேலே அது
வந்துவிழும் துன்பதை, வென்றிடும்தானே ஒரு
மந்திரமும் தந்தைசெவி சொன்னவனாமே அச்
செந்தமிழின் காவலனை வந்தனம்செய்வேன்

எந்தநினை வின்றிஇனி சொந்தமென்றாகி- சுக
பந்தமெனப் பாசமுடன் அன்புகொண்டாலே
உந்தி மனம் முந்திநிலை ஒன்றுபட்டாலே - துயர்
வந்தவழி சென்றுவிடும் நன்றதுதானே
சிந்தைகொளும் தொந்தரவும் செந்தமிழாலே - ஒரு
பந்து சுவர் பட்டதென சென்றிடுமாமே
எந்தநிலை கொண்டிடினும் சுந்தரவீணை - மன
மென்னுமிசை தந்தியினை மீட்டிடுவோமே

இரண்டு பாதைகள்!

அழகான பூஞ்சோலை கண்டேன் - அங்கு
அசைந்தாடும் மலர்கண்டு இதயம் மகிழ்ந்தேன்
குழல்ஊதும் இனிதான கீதம் - இளங்
குளிர்மாலை காற்றினில் தரும்கோடி இன்பம்

குளமொன்று அலையோடக் கண்டேன்- அதில்
குமுதமொன் றிதழ்விரித் தெழில்கொள்ளக் கண்டேன்
இளமையென் கனவுகள் தோன்றி- அங்கு
இதுபோல சுகமெங்கும் இல்லென்று சொல்ல

மனம்மீது எண்ணங்கள் ஓடும் - அது
மறுபாதி உலகமொன் றுண்டென்றுகூறும்
கனங் கொண்ட காடென்றும் தோன்றும் - அதில்
கத்தும் விலங்கோடு முட்பாதை காணும்

இதுவோஅன் றதுவோநாம் அறியோம் - வாழ்வை
எதுவோ அளித்திட பெற்றதாய்க் கொண்டோம்
மதுவோடு மலர்கொள்ள ஒருவர் - இன்னும்
அதுவின்றி முள்ளோடு வலிகொள்ள ஒருவர்

இதுவாழ்வில் இரண்டாக உண்டு - என்
இதயத்தில் சிந்தனை எழுந்தோட நின்றேன்
எதுவென்ற வாழ்வான போதும் - அலை
எதிரேறி நீந்திடில் கவனம் நீ கொள்ளு

வளைந்தோடும் நதிபாதை போகும் - என்றும்
வளையாத நதிமோதித் துளியாகிச் சிதையும்
களைநீங்கப் பயிரோடி வளரும் - எம்
கவலை களைந்தாலே உளம்உரம் காணும்

சினம்கொண்ட வெயிலோடி வீழும் - மீண்டும்
சிங்காரவானிலே வெண்மதி தோன்றும்
குணம் கொண்ட வாழ்வதும் வாரும் - அது
கொண்டிடும் மட்டும் பொறுமையும் வேண்டும்

மனம் மென்மை யென்றிடக் காணும் - அதில்
மற்றவர் செய்கைகள் முள்ளெனக் குத்தும்
இனம்கண்டு தொலைதூரம் நிற்கும் - ஓர்
எளிதான முறைகாண மகிழ்வேதான் மிஞ்சும்

முடிசூடா மன்னன் !

என்ன தவம் செய்தோம் சக்தி -ஆகா
இத்தனை அன்புடன் உள்ளம்படைத்தாய்
மின்னலின்றி ஒளிவெள்ளம் ஒரு
மேகமின்றிக் கொட்டும் தூறலும்கண்டேன்
பொன்னை நிகர்த்தன அல்ல - மனம்
பூவெனும் தன்மைக்கு ஈடென்றுமல்ல
பென்னம் பெரி ததைவிட - இந்தப்
பூமியி லேயிதை வெல்வ தொன்றல்ல

மன்னவன், பொன்முடியில்லை - இவர்
மாசறு வேந்தன், ஓர்மந்திரி யில்லை
பன்னரும் கொத்தளம் கூடம் - பெரும்
பண்டகசாலை படைகளுமில்லை
இன்னிசைக் கூத்தனர் இல்லை - மன்னர்
இச்சைகொள் அந்தபுரங்களும் இல்லை
பொன்குவை கொள் திறைசேரி - அதில்
பூட்டி வைக்கும் முத்துரத்தின மில்லை

கன்னியர் கூடிநின்றாடும் - குளிர்
காற்றெழும் சோலையும் நந்தவனங்கள்
தன்னகம் கொண்டவரில்லை - ஆயின்
தந்த கவிதைக்கு ஒர்குறைவில்லை
நன்னிளம் தென்றலும் வீசும் - அதில்
நாடிமனம் கொள்ள பொன்நிழல்போலும்,
இன்பமெழும் விளையாடும் - அதில்
உள்ளபொருள் மனமேற் றொளிகாணும்

பென்னம்பெரு வலு உள்ளோன் - கவி
பேசரும் நாவலர் தம்மிலோர் முன்னோன்
உண்மையென்னும் முடிசூடி - இவர்
உள்ளங்கள் ஆண்டிடும் உன்னத ஆட்சி
எண்ணம் அரண்மனை யாகும் - அதில்
எததனை சாளரம் அற்புதமாடம்
பண்ணொடு கீதம் இசைக்கும் -அதில்
பற்பல ராகமெழுந்து மயக்கும்

ஆளும் பலமன தேசம் - அதில்
ஆற்றல் தனும் கொட்டி கொள்குவையாகும்
நாளும் புகழுடன் வாழும் - அசைந்
தாடி நடந்திடும் வாழ்வென்னும் தேரும்
வாழும் பல்நூறெனும் ஆண்டு - அதில்
வண்ணமலரென இன்பங்கள் கொண்டு
நாளும் வரும் சுடர்வானில் - அதன்
நல்லொளிபோல் நலம்கொண்டிட வாழி!

நரகத்தில் உழலுவதோ?

தேரேறு என்கிறான் தேவன் - நானுந்
தெரியாத வன்போலத் திரும்பியே நின்றேன்
பூவாரி எறிகிறான் என்னைப் - பார்த்துப்
புன்னகை பூத்துமே கைகொண்டு காட்டி
போயேறு என்கிறான் வானில் - அங்கு
பூத்ததோர் வெள்ளியை புதிதாகக் காட்டி
ஏதேது என்றதைக் கேட்க - ஆகா
இனியுந்தன் வாழ்வங்கு இன்பமேயென்றான்

நீரூறு விழிகளைக் கொண்டு - நானும்
நெஞ்சினில் அன்பினைக் காட்டயோ என்றால்
வேரறுத் தென்னையும் வீழ்த்தி - அவன்
விளையாடி வேடிக்கை செய்தும் சிரித்தான்
நோயுறு தேகமும் நொந்து - இங்கு
நிற்கவும் முடியாது போனதே என்றால்
காயமே பொய்யாடா என்று - கை
காட்டியவ் வானிடை ஏறுநீ என்றான்

பாரடா தோள் மீதுபாரம் - என்னில்
பாசமாய் உள்ளவர் எத்தனை என்றால்
பாயிலே கிடஎன்று என்னைத் - தள்ளிப்
பாடாய் படுத்தியே பொல்லாப்புச் செய்தான்
தாயிலும் நல்லவ னன்றோ - நீயும்
தரணியில் வாழ்வோர்க்கு எதிரியோ, என்றேன்
பேயிலும் இழிவென்ற பிறவி இந்த
பிணமோ இக்குருதியில் பேராசை கொண்டாய்

நாளிலே மணம்கொண்டு வீசும் - அது
நாற்றமும் வீசிட நாய் கொண்டுபோகும்
தோளிலே நாலுபேர் தூக்கி - உடல்
தீயிலே போட்டிட சாம்பலென்றாகும்
ஊழியோ உன்வினைதானோ - உன்
உள்ளமேன் ஏங்குது மோகத்தில் நீயோ
கேளிதைநீ மேகம் வந்தால் - அங்கு
தீயாக மாறிநீ திகழலாம் என்றான்

சொல்வதைக் கேட்கவோ அன்றி -அது
சொர்க்கமோ நரகமோ சுத்தமா யறியேன்
கொல்வது என்றுதான் வந்தால் - பின்
கொள்வதற் காயவன் என்னவும் சொல்வான்
”அல்லன எண்ணுதல் வேண்டா - அட
அற்பனே நீ நிற்ப தேதென்று கொண்டாய்
இல்லைவே றிதுதானே நரகம் - காண்
இதுவே உன்மழலையின் சொல்லான நகரம்

கொள்வது எல்லாமே துன்பம் - வான்
கொட்டிடும் மழையிலே கொடிபோலும் மின்னல்
உள்ளதோர் அளவேயுன் இன்பம் -அதில்
ஊதி யடிக்கின்ற புயல் போலும் துன்பம்
கள்ளனும் காதகன் மூடன் - உயிர்
கொல்பவன் வன்காம லோலன் அநேகர்
உள்ளவர் ஊடேநீவாழும் -இந்த
உலகவாழ் வினிதென்று எண்ணுதல் ஏனோ

நில் இன்னும் சிறுகாலம் வாழ்வேன் - என்
நெஞ்சினி லாசையும் நிற்குது என்றேன்
நல்லதென் கூற்றினை கேளாய் -பின்
நாளை யக்கூற்றுவன் கொள்ளவென் செய்வாய்
அல்லலும் துன்பமும் கொள்ள -உனக்
கத்தனைஆசையா, அற்புதம் மனிதா!
நல்லதோர் புவி செய்ய நீவிர் அதை
நரகமென் றாக்கிந லிந்தின்பங் கண்டீர்

வெல்ல எழு! துயர் சொல்ல எழு!

தொட்டு துணிந்தவர் வெட்டிக் களித்திடப்
பட்டுத் துடிப்பதுவோ - துளி
சொட்டக் குருதியும் பட்டநிலம்விட்டு
எட்டி நடந்திடவோ
வெட்ட வெளிதெரு வீசும் பிணங்களில்
தட்டுத் தடக்கிடவோ - இதை
விட்டுப்பெண்ணும் நெஞ்சில் குத்திக்கதறிட
எத்தனை நாளின்னுமோ

முத்தி விசர்பிடித் துச்சி மரத்தினில்
பித்தம் பிடித்தவரும் - நின்று
நித்தமும் பெண்வர பொத்தென வீழ்ந்தவர்
நெஞ்சைக் கிழிப்பதுவும்
கத்திக் குரலிட்டுக் காடுறை பேயெனச்
சித்த மிழப்பதுவும் - இவை
உத்தம புத்தனும் போதி மரத்திடை
ஓதிய போதனையோ

குட்டிப் புழுதன்னும் தொட்டவர் கையினில்
கொட்டும் மயிர்கள் குத்தும் - அவை
பட்டுக் கடித்திட ரத்தச் சிவப்பிடும்
மொத்தம்வலி எடுக்கும்
கொட்டி விஷமதைப் புற்றுக் கறையானும்
கொள்ளி எறும்பதுவும் - அதை
முட்டி விட்டால்முழு மூச்சுடனே உயிர்
விட்டும் எதிர்த்து நிற்கும்

எட்டு அடிவளர் எம்மவர் இன்றுமே
தொட்டுக் கெடுத்தவனை - புது
பட்டுவிரிப்புடன் பஞ்சணைதூங்கிட
பாதம் பிடித்திருப்பர்
கட்டிய கைகளும் காலும்பிணைத்திட
சுட்டுக் கொல்லுமவனை - உள்ள
சட்டம் நெருங்கிட விட்டுவிடாதவர்
ஒட்டி உதவிசெய்வர்

சட்டம் குருடதன் கண்ணில் கருந்துணி
கட்டிவிட்ட துலகு - கரம்
தொட்டுமே அந்தகர் சொல்லென யானையை
விட்டது போலிருக்கு
முற்று மிருட்டறை மூடிக் கருமைக்குள்
கட்டியெமை யிருத்தி - தனி
தொட்டிவர் நீதியைச் சொல்லென கேட்டிட
சுத்தம் எது இருக்கு?

புற்றில் கரம்விடு, பூக்கள் பறித்திடப்
பெற்றிடு இன்பமென்றார் - இல்லை
சுற்றி உடல்பற்றிக் கொத்தும் அரவமென்
றெத்தனை நாளுரைத்தோம்
சுற்றிக் கழுத்தினில் ஒற்றைக் கயிறிட்டுச்
தூக்கிடும்போதினிலே - இன்று
முற்றும் பிழையிது மூச்சுதிணறுது
விட்டுவிடு என்கிறார்

செத்தவர் மீண்டும் சிதை பிரித்தே உயிர்
பெற்ரிட லேதுமுண்டோ - ஒரு
கொத்திப் பிரித்துடல் கொள்ளியிட்டபின்பு
கூடென ஏதுமுண்டோ
சத்தியத்தின் கண்கள் நித்திரை அல்ல, ஓர்
நித்திரபோல் நடித்தால்
எத்தனை நேரம் எழுப்பினும் தூக்கத்தை
விட்டுஎழுந்திடுமோ

தட்டி முதுகினில் வந்து சுதந்திரம்
தந்திடும் பூமியில்லை - இவன்
சட்டமதித் தெங்கள் தாயின் நிலம்தன்னை
விட்டேகப் போவதில்லை
முற்றும் உலகிது மெல்லத் திரும்பிட
இத்தனை செய்தயடா - அட
அற்புதம் தம்பிநீ அத்தனைவீறுடன்
ஆர்ப்பரித் தின்னும் எழு

பொங்கு மனத்திடை பொங்கும் கடலென
வெஞ்சினம் கொண்டுஎழு -அன்று
பொங்கி யெழுந்த எம்பெண்களின் சாபங்கள்
போய்ப் பகை வெல்ல எழு
பொங்கி வழிந்த குருதியைப்போல் நீயும்
பொங்கியெழு! புவியோர்
பங்கு எமதீழ மண்ணில் உரிமையை
பங்கிடும் மட்டும் எழு!

Sunday, September 11, 2011

என் வாழ்வு ஏனோ ?

[ என்.. என்று தொடக்கமிட்டு ஏதாவது ஒரு தலைப்பில் (என் வாழ்வு, என் நண்பன், என்ன என்ன இப்படி எதுவாகவும் இருக்கலாம் என்று) நடந்த கவியரங்கத்திற்கு எழுதியது

என் வாழவு ஏனோ

என்னென்று சொல்லாது ஏனோஇவ்வுலகிலே
என்அன்னை என்னயீந்தாள்
என்செய்வ தறியாது கண்கள்நீர் சொரியவே
என்வாழ்வை யிங்குகண்டேன்
என்நன்று என்அன்று என்னொன்றும் தெரியாமல்
என்னவோ வாழ்ந்திருந்தேன்
என்னெண்ணி என்னையும் இறைவன் படைத்தனன்
என்பதும் ஏதுமறியேன்

என்னவன் என்னிவன் என்நண்பன் அல்லவன்
எதையுமே அறிய அல்லேன்
என்மனம் வெண்பளிங் கென்றிடும் அண்மையில்
உள்ளதன் வண்ணங் கொண்டேன்
என்னவள் என்றொரு சின்னவள் வந்திட
என்வாழ்வு பங்கு கொண்டேன்
என்நலம் தன்னலம் இருவரும் கொண்டிட
எண்ணிலே மூவர் கண்டேன்

என்னது என்னது இன்பங்கள் கோடியாம்
என்றுளம் ஆவல் கொண்டேன்
என்மனம் என்னது எண்ணுவ தாற்றியே
என்புடல் கூசி நின்றேன்
என்னவோ ஆகியும் என்னமோ கூறியும்
என்மதி கெட்டலைந்தேன்
என்மன வானிலே என்மதி தேய்ந்திட
ஏனோ இருளில் நின்றேன்

என்னதான் வாழ்ந்தனன் இத்தனைகாலமும்
இன்பமாய் வாழ்ந்திருந்தும்
என்னதாய்ச் செய்தனன் என்னொரு பிள்ளை! ஆ..
இவனென்ற சொல்லுங் கேட்டேன்
என்விதி இங்கிவன் என்னுடன் சேர்ந்தனன்
என்பதும் கண்டிருந்தேன்
என்னருள்தேவிநீ என்னுடை வாழ்வெனும்
இதைநீயும் ஏன் படைத்தாய்?

நீயோடித் தீரம் கொள்!

தென்றல் அலையுது திங்களலையுது
தீபமலையுதடி
தீந்தமிழ் பேசிடும் மாந்தர் அலைவது
என்னை முறைமையடி
கன்று அலையுது காணும் குருவிகள்
காகம் அலையுதடி
கன்னித் தமிழ்மற காவிய வீரரைக்
காலம் அலைப்பதோடி

கொன்று குவித்திடக் கோழைகளாய் மனம்
வெந்து அலைவதின்றி
குற்றமிழைத்தவர் கொன்றவர் தம்மைநீ
விட்டுக் கலைத்திடடி
நின்றுயர்ஆல மரமென்ப தாய்த்தமிழ்
கொண்ட உறுதியெல்லாம்
இன்றில்லை யென்றது கண்டுமே உள்ளமும்
பொங்கி அலைகொள்ளடி

எத்தனை துன்பங்கள் இன்று, எமதிடை
நிற்கின்ற பேய்களெல்லாம்
புத்தமதக் கொள்கை போட்டுப் புடமிட்ட
சத்திய ரூபரடி
ஒத்து மகிழ்வுடன் ஒன்றாக வாழெனச்
சத்தமிட்ட உலகை
அத்தனை பேரையும் முன்னே அழைத்திது
எப்படிக் கேட்டிடடி

பேயாகஓடிப் பிணங்கொள்ள வந்தவர்
பேயரின் தம்பிகளை
நீயாக ஓட்டிக் கலைத்திடு  நெஞ்சிலே
நேர்மைத் துடிப்பெடடி
போயோடித் துன்பமும் பெண்நலம் காத்திடப்
பின்னிற்ற லாகாதடி
நீயோடித் துள்ளி எழுந்து நட இது
நின்னுடை தேசமடி

தாயோடியுள்ளம் தவித்திடக் காண்அதைத்
தானும்நீ காத்துவிடு
பூவோடு பொன்னாய் பிறந்தவர் பிள்ளைகள்
பூமியில் வாழ்வுகொடு
கோவோட மன்னனின் கூடாரம்விட்டுமே
கூறாமல் ஓடவிடு
நீயோடிசெய்திடு நெஞ்சிற்தீரமெடு
எம்தமிழ் தேசம்வெல்லு!

-கிரிகாசன்

Thursday, September 8, 2011

போரும் வாழ்வும்!


கத்தி எடுத்தவன் வெட்டவந்தால் - நாமும்
கண்கள்மூடித் தவம் செய்வதுவோ
வித்தை யேதுமுண்டோ வெட்டுபவன்- தன்னை
வேடிக்கை செய்துவிரட்ட லுண்டோ
சொத்துசுகம் யாவும் விட்டிடலாம் - ஆயின்
சொந்த உயிரையும் விட்டிடவோ
செத்துமடிவது இன்பமென்று - அவன்
தெய்வமென்று கையும் கும்பிடவோ

சத்தியம் தர்மமும் கொண்டவர்கள் - குரு
ஷேத்திரம் போர்க்கள பாண்டவ்ர்கள்
நித்திலம் எங்கிலும் பாரதப்போர் - கதை
நீதியென்று ஏற்றுக் கொண்டதன்றோ
கத்தியே நீதியும் கேட்டவளாம் - அந்தக்
காரிகை திரௌபதி ஆடையினை
ஒத்தவ கையினில் நீக்கிவிட - எஙகள்
ஊரிலெத் தனை துச் சாதனன்கள்

சித்தம் தவறிய ரத்தவெறியர் - தாம்
சத்தியம் காந்தீயம் பார்ப்பதுண்டோ
கத்தும் விலங்குக்கு கற்பூரவாசனை
காட்டிவைத்தால் உதை விட்டிடுமோ
அத்தனைபேரும் அருச்சுனாய் எண்ணி
அம்பினை கீழேயும் வைப்பதில்லை
புத்தரும் யுத்தம்பின் ஞானம்கண்டார் இன்று
பேய்களன்றோ எம்மைச் சுற்றி நின்றார்

நாடுமில்லை ஒரு வீடுமில்லை
ஒரு நாலடி ஐந்தடி மண்ணுமில்லை
காடுதானே உங்கள் சொந்தம் என்றார் - அந்தக்
கௌரவர்கள் ஆகா எத்தனைமேல்
வீடுமில்லை அந்தக்காடுமில்லை பெரு
வான்வெளியில் தனி ஆவியென
ஒடிப்பற விளையாடுஎன்று எமை
ஓங்கிவெட்டி இவர் கொல்லுகிறார்

வைத்தியம் செய்யநோய் முற்றிவிட்டால் அதை
வெட்டிப்பிரிப்பது குற்றமில்லை
சத்திரசிகிச்சை செய்வதுதான் உயிர்
தப்புமென்றால் அது பாவமில்லை
பெத்தவள் உயிரை காப்பதுவா இல்லை
பிள்ளை உயிர்தனை காப்பதுவா
வைத்தியர் கூட தருணமதில் ஒரு
வன்மை மனம்கொள்வ தாகிடுவார்

கொத்தவரும் பாம்பைக் கொல்லுவது பாவம்
கொண்ட தடியினை போடுஎன்றார்
சுத்தமாகக் கையில் ஏதுமில்லை இன்று
கொல்பவர் கூத்தாடிக் கொல்லுகிறார்
சத்தியம் பேசிய நாட்டிலெல்லாம் இன்று
சின்னத்திரை படம் ஓடுகிறார்
கொத்திய வெட்டிய கோலமெல்லாம் படம்
கொண்டு வெள்ளித்திரை காட்டுகிறரர்

இப்போதேவை வெறும் காட்சியல்ல இந்த
ஏழைகளுக்கெனத் தீர்வுஒன்று
தப்போ சரிதானோ விட்டுவிடு இன்று
தர்மம் அதை துயில் விட்டெழுப்பு
எப்போ நடுவினில் வந்துநின்று எமை
வெட்டுவர் கையில் விலங்கையிட
தொப்பெனவோர் திரைநாயகனாய் ஒரு
தேசம் துணிந்து குதித்திடுமோ

Tuesday, September 6, 2011

மூவர் உயிர்காக்க தீயில் தீய்ந்தவள்!

தீதாகிப் புன்மைகொண்ட பூமியென்றே நீயும்
தீயாகிப்போக மனம் கொண்டதென்ன
நீயாகிப்போக என்ன நேர்ந்ததம்மா- உன்
நினைவெங்கும் தீஎழுந்த காரணமா
தூதாகித் தேவரிடம் சென்றனையோ -எமன்
தோன்றாது வழிநிறுத்த தொழுதனையோ
வாதாடி வெல்லவழி இல்லையென - மூவர்
வாழவென நீஉயிரை தந்ததென்ன ?

ஆளுபவன் நீதிகொடும் ஆட்சியென்று - அதை
அழித்தவளாம் கண்ணகிக்கு தங்கையம்மா
நீளுலகில் நீதிகேட்க நீயிருந்தால் - எம்
நெஞ்சினிலே இன்னுமுரம் காணுமம்மா
வாழ்வழிந்து போகஎன்ன வைத்துவோ உன்
வயதினிலே வானழைத்து கொண்டதுவோ
பாழுமுயிர் போனபின்பு வருவதில்லை - இந்தப்
பாரினிலே வீழ்ந்த உடல் எழுவதில்லை

தேவை எங்கள் விடுதலையைக் கேட்பதற்கு ஒன்று
சேருமிளம் சந்ததியின் வீரஒலி
சாவைவிடுத் தொன்றுபட்டுச் சாதிப்பதே உனைச்
சார்ந்திருக்கும் கடமையென்று கொள்மகளே
கூவியெழ நீதிகேட்க குரல் கொடுங்கள் -விட்டு
கூடியழ வைப்பதெல்லாம் கைவிடுங்கள்
வீரமுடன் நீதுடித்துப் பொங்கியெழு அந்த
வேகுமுடல் நீசர்களை வெல்லவம்மா

முப்புரங்கள் தீயிலிட்டான் முக்கண்ணவன்- அனல்
மூளத்தீயை தீவில் இட்டான் அனுமன், ஒரு
கைப்பிடித்த சிலம்புடனே கண்ணகியோ ஆளும்
காவலனின் குற்றம் கண்டு ஊரெரித்தாள்
முப்படைகள் கண்டு தமிழ்ஈழ மண்ணை- அன்று
மேதினியில் சேர்ந்தரசு மூட்டியதீ
இப்பொழுதும் எரியுதம்மா ஈழமண்ணில் அது
ஏன் எரித்துவிட்டதுவோ உன்னைவீணில்!

Monday, September 5, 2011

நாமே கொல்வதா?

நீ நினைத்து தீயுமிட்ட தேன்மகளே நெஞ்சிலென்ன
தீசெழித்து ஆனதென்ன கோலம்
பூஎடுத்துப் போடஎம்மை நீ விதித்துப் போனதென்ன
பூமியிது செய்துவிட்ட பாவம்
மூவருக்கும் போட்டவிதி மாறுமென்று காணமுன்பு
நீமுடிச்சு போட்டதென்ன முந்தி
சாவெடுக்கச் சொன்னவர்யார் சத்தியமோ நித்திலமோ
சற்றும்காக்கவில்லை அந்தச்செந்தீ

பேய்கனக்க வாழுமெங்கள் பூமியைப்பார் வீதியெங்கும்
நோய்பிடித்த ராஜபுத்த சோரம்
தாயிருக்கப் பெண்ணை வைத்து தாகமிட்ட காமுகர்க்கு
தன்னுடலைப் பலிகொடுக்கும் கோரம்
சேய்பிரித்துக் கொல்லுவதும் சின்னவர்கள் நீக்குவதும்
சொல்லி இனம் சுத்தமாக்குங் காலை
தேய்நிலவாய் வாடுகிறோம் தேகங்காக்க ஓடுகிறோம்
தேவதையே நீஎரித்த தேனோ?

மாவினிலே பிஞ்சிருக்க மனது கொள்ளு மோபறிக்க
மாந்தரிலும் பிஞ்சு என்பர் நாளை
மேவியுயர் வாழ்வெடுத்து மேதினியில் ஆற்றல்கொள்வர்
மேனியொன்று தேவைஎன்ப தாலே
தீயெடுத்துத் தேகமிடத் தேவையில்லை உன்நினைவில்
தீயர்தமை நோக்கி எழு, காலை
நீமிதித்த தீயெனவே நெஞ்சிற்தீமை கண்டுதுடி
நீபழுக்கும் மட்டும்காணும் வாழ்வை

கோவலனைக் கொன்றவனே குற்றமென்று தானழிந்தான்
கேள்விகேட்ட கண்ணகியு மல்ல
காவலனும் வாலினிலே தீயைவைக்க நாடெரித்தான்
தானெரிக்க வில்லைராம தூதன்
சாவதெனில் தீமைதுயர் சார்ந்திருக்கும் துன்பங்களே
சற்றும்மறந் துன்னைஅழிக் காதே
பாவமதைத் தேடியழி பாசஉணர் வோடுகழி
பலமெடுத்து வெல்லுஉந்தன் வாழ்வை

செய்த குற்றமென்ன?



திங்கள் வரும் வானமதில் செய்துவிட்ட குற்றமென்ன
தேடிமுகில் மூடுகின்றதே!
மங்குஒளி தீபமது மனமெடுத்த குற்றமென்ன
மாலையிளந் தென்றல் ஊதுதே
பொங்குநதி செய்ததொரு குற்றமென்ன போகுமிடம்
பாதையெங்கும் கல்லும்முள்ளுமே
அங்கும்வளைந் தேநெளிந்து அதுநடக்கப் பாறையொன்று
அதைவிழுத்தி மகிழுகின்றதே!

செங்கமலம் வாழ்வினிலே செய்தவொருகுற்றமென்ன
சீண்டும் அலை ஆடுஎன்குதே
அங்கு படர் தாமரையின் அலைமிதக்கும் இலைவெறுத்து
ஏறியநீர் விட்டு ஓடுதே
தங்கம் எழில்தந்தபோதும் தன்னகத்தே கொண்டதென்ன
தீயழிக்க தேகம் வெந்ததே
எங்கணும்நற் சோலைதன்னில் உள்ளபூக்கள் செய்ததென்ன
ஓர்தினத்தில் காய்ந்து வீழுதே

பெண்மையெனும் மென்மைசெய்த குற்றமென்ன பூமியிலே
மேனியது போதையாகவே
கண்ணியமே அற்றவர்கள் கண்டுஅதன் தூய்மைகொல்லக்
காப்பதற்கு யாருமில்லையே
சின்னவர்கள் வாழும்தமிழ் ஈழமண்ணில் செய்ததென்ன
யாருமற்ற நாதியாகவே
மென்னுடலை ஆயிரமாய் மேதினியில் யாரும்விழி
கொள்ளமுதல் பூமிதின்குதே?

அள்ளி உடல் கொள்ளிவைத்து ஆவெனவே அலறியவர்
ஆனந்தமாய் துள்ளி ஆடுறார்
நள்ளிரவுப் பேயென்றாகி நங்கையர்கள் பெண்ணவர்முன்
நாயிலும்கீழ் இழிவு செய்கிறார்
எள்ளி நகையாடி இவர் என்னசெய்தும் பூமிகண்டு
என்னசெய்தார் தூங்குகிறார் ஏன்?
வள்ளிமணவாளனே சொல்! வாழ்வில்தமிழ் ஈழமக்கள்
செய்தபெருங் குற்றமென்ன சொல்!

Thursday, September 1, 2011

உணர்வுகள்

நீரோடும் நிலவோடும் நின்றுவெண் முகிலோடும்
நெஞ்சத்தில் எண்ணமோடும்
தேரோடும் தென்றலும் திசையெங்கும் பறந்தோடும்
தேடியே கண்கள் ஓடும்
பாரோடும் பரந்தஇப் பூமியின் இடமெங்கும்
பலரோடிச் சென்றுவாழும்
வேரோடும் உறவுகள் விளையாடும் விதியதும்
வேடிக்கையாகும் வாழ்வும்

ஏரோடும் வயல்கூடி எதிரோடும் காற்றோடு
எழுகின்ற இன்பம் யாவும்
பேரோடு வாழ்ந்திடும் பெருச்செல்வ வாழ்வினில்
பிறையாகத் தேய்ந்து போகும்
சேறோடும் மண்ணோடும் உழுதோடி பின்னாலே
சேர்ந்துண வுண்டுவாழும்
நோயோடிப் போகின்ற நிம்மதி வாழ்வினை
நினைந்தேங்கும் நெஞ்சே நாளும்

யாரோடிக் கேட்டாலும் விதியோடிச் செய்கின்ற
விளையாட்டு வேறுஆகும்
நீர்க்கூடி எழுகின்ற அலையாக ஊருக்குள்
நின்றதை அள்ளியோடும்
வேரோடு புயலுக்கு விழுகின்ற மரமாக
வீழ்த்தியே உறவுகொல்லும்
பேயாடி நடமாடிச் சிதைக்கின்ற பொருளாக
பூவுடல் கொன்று பார்க்கும்

நானோடி நடக்கின்ற நல்லதோர் பாதையில்
நாலுபேர் தூக்கிஒடும்
நாளோடி வரும்வரை நானாடி நடக்கின்ற
நாளது இன்பமாகும்
பாவோடும் பாஎண்ணும் மனதோடும் வாழ்வது
பலமான உணர்வு கொள்ளும்
பாலொடு பனியோடு பார்வையை கொள்வது
பாவி இவன் உள்ளமாகும்

மேலோடும் மதியோட முகிலோடி மறைத்திடக்
காற்றோடி ஒளியை மீட்கும்
சேலோடும் நீர்ச்சுனை சேற்றோடு தாமரை
திகழ்ந்தாலும் தூய்மைகாணும்
வேலோடு விளையாடும் முருகனின் தமிழோடு
விளையாடி நாளும்போகும்
காலோட முடியாது காடோடும் உடல்காணும்
காலமே உண்மை சொல்லும்