Thursday, March 7, 2013

எது காக்குமோ?

எழில்கொண்ட மலைமோதி யழுகின்ற முகிலேசொல்
   ஏனிந்தக் கொடுந் துன்பமோ
பொழில் நீந்துமலை நீயும் குலைந்தாயே யெதனாலலே
  போவென்று விதி சொன்னதோ
மொழி பேசுந் தமிழாநீ யழிகின்ற தேனோஉன்
  மனமொன்றத் திறனில்லையோ
பழிவந்தே யெமையாளும் பலரொன்று சேர்ந்திங்கு
   பலமோடு வழி காணீரேல்

தெளிவான பெருவானிற் திகழ்கின்ற மதிகூட
    தெரியாது பிறை யாகலாம்
வளிகொள்ள இணைகின்ற நறுவாச மலர்தானும்
   வடிவின்றி நிலம் வீழலாம்
களிகூடித் திரிகின்ற ஒளிவானின் முகிலோடி
  கதியின்றித் தொலைபோகலாம்
எளியோரி னுயிரோடு விளையாடு மிவந்தன்னை
    எதுவந்து தனதென்குமோ

பெரிதாகிப் பிளவாகி நிலமான பிரிந்தோடி
    வருவாயென் மகனென்னுமோ  
தெரியாத இரவோடு எழுமாழி உருண்டோடி
     தவழாயென் மடியென்குமோ
சரியாத மலையுச்சி சரமாரி தீபொங்கி
  சடசடத் துதிர் வாயிலோ
புரியாத தொருகுற்றம் பிறிதென்று யினியில்லை
  புகுவா யென்மகன் என்னுமோ
 
ஒருநாளில் கனவோடு  உறவாடும் மன எண்ணம்
   உயிர்கொண்ட தெனமாறுமோ
திருநாளும் பகலாகித் தெரிகின்ற ஒளிபோலத்
  தேயாமல்  நிலவோடுமோ
அருகாமை கொடியொன்று அலைந்தாடிமகிழ்வோடு
   அடடா என்றொலி கூட்டுமோ
பெருகாதோ ஒன்றாகிப் பிறந்தோமே அழகென்று
  புதிதாய்நல் வழிகாண்பமோ

கருகாதோ அருகாதோ கறை கொண்ட தினம்மாறிக்
    கரும்பெனும் வாழ்வாகுமோ
வருமாமோ மகிழ்வோடு வளைசங்கின் துளையூடே
    விளைகின்ற ஒலி கேட்குமோ
உருமாறிக் கருமாறி உலகத்தில்  வாழ்வேங்கும்
    இளையோரை யினி காப்பமோ
பெருமாரி இரவோடு பிரளயம் செய் தாயே,
    புகு நாட்டில் புரள் தீமைகொல்!

1 comment:

  1. /// உருமாறி கருமாறி உலகத்தில்...
    ஏங்கும் இளையோரை யினி காப்பமோ...? ///

    அருமை...

    ReplyDelete