Wednesday, August 22, 2012

தெரியாத விடையைத் தேடி 3

இது ஒரு அசாதாரண கற்பனையாக இருக்கலாம். அதாவது இறைவனின் இந்த உலகப் படைப்பிலே  மாற்றங்கள் தேடுகிறேன்.இந்த வந்துபோகும் உலகவாழ்வால் என்ன நடக்கிறது. அது ஏன் இருளாக இருக்கிறது.  பாவம் செய்வனும் வாழ்கிறான் . புண்ணியம் செய்தவனும் வாழ்கிறான். பெரிதாக ஒன்றும் வித்தியாசம் தெரியவில்லை. அதனால் பூமியைப் படைத்தவர் புனரமைக்க வேண்டும் இதுவே என்மன எண்ணம். பாவங்களுக்கு பரிகாரம் அடுத்த பிறவிவரை வேண்டாம். உடன் தீர்வு தருக. அல்லது பாவம் செயல்களை நீக்குக. இதுஎனது வேண்டுகோள் இது பைத்தியக் காரத்தனமாக இருந்தாலும் சொல்லத்தோன்றியது எனது எண்ணத்தில் ஒரு பத்துவீதத்தை இங்கே தந்தேன் தருகிறேன்
அன்புடன் கிரிகாசன்



புது யுகம் படைப்பாய்  தேவி*


பொன்னால் எம் மேனிசெய்து பூந்தேனை ஓடவிட்டு
மின்னல் ஒளியழகும்  மேவும் மணம் மலர்வாசம்
பன்னீராய் வேர்வை விழப் பட்டபனிப் புல்லழகாய்
தன்னோ டிழைந்து செலும் தகதகத்த மேனி தந்து

கண்ணால் வழிந்தழுதால் காண்பதுவோ இன்பமென
மண்ணில் விழுந்துடலும் மாளும் வகை இல்லையென
எண்ணில் குறித்திவர்க்கு இத்தனை நாள் வாழ்வென்றும்
விண்ணேகும் காலங்கள் வேறன்றி ஒன்றமைத்து

அன்பும் அறனுடனே ஆட்சியிலா வாழ்வுமுறை
மன்னன் மணிமுடிகள் மாவதைகள்தான் நிறுத்தி
இன்னு முண்ப தென ஏழைவயல் விளைஅன்னம்
புன்மை விலங்கினுடல் போலெதுவும் இல்லாமல்

பொன்னாய் இருந்துமுடல் போரெனவே பகைகாணின்
மின்னாய் கரைந்துருகி  மெல்ல வெளிக்காற்றோடி
சின்னத் தூளாகிச்  சென்றப்பால் சேர்ந்துருவம்
தன்னால் கொளும் மாயத் தன்மையுடன் படைத்தாலென்

பிள்ளைப் பேறில்லை பேருழைச்சல் நோவில்லை
முள்ளில் பட்டாலுங்கால் மோசவலி கொள்வதிலை
உள்ளமொன் றுள்ளேவைத் துணர்வோடு மதையாக்கி
தெள்ள தெளிந்த மதி தீங்கற்ற யோசனைகள்

பள்ளிப் படிப்புடனே பல்கலைகள் கற்றிடவும்
கொள்ளும் பசிக் குணவாய் கூட்டிவலு மின்கதிர்கள்
வெள்ளைக் கதிர் வலிமை வீரமதை வேண்டுமெனில்
அள்ளிப் பசுமை மஞ்சள் அத்தோடு நீலம் என

வண்ணக் கதிர்க்கலவை வாய்ருசிக்கத் தின்றுமனம்
எண்ணும் கனவுகளில் எழும்வண்ணக் காட்சிமயம்
கண்ணும் காணுமுடல் கை தொடவோ ஒன்றுமில்லை
வண்ணம் எமைப் படைத்து வாழவென விட்டாலென்

காந்த அலைக் கட்டும் கால்நடக்க மின்னதிர்வும்
மீந்தே அதிகரித்தால் மேனியிடை சூடெழவும்
கூந்தல் அலைக் கதிர்கள்  கொண்ட மணம் எங்கிருந்து
தீய்ந்த குறுமணியா  தின்ற கதிர்மின் தெறிப்பா    

ஆய்ந்து விளையாடி அழகுக் கனவுலகில்
நீந்திக் கதைகள் சொலி நெஞ்சமதில் நன்றெண்ணி
சாந்தி கிடைத்ததெனச் சஞ்சலங்கள் விட்டொழிந்து
மாந்தர்தம் வாழ்வுதனை மாற்றிவைத்தல்ஆகாதோ

கண்ணிரண்டு மூடவுமுன் காணுமிருள் தேவையில்லை
நண்பர் உறவுகளும்  நல்லதன்றி எண்ணமில்லை
பெண்கள் சிதைவதற்குப் பேதையுடல் திண்மமில்லை
எண்ணம் பிழைத்தவனோ எட்டித்தொட ஒன்றுமில்லை

வெள்ளை முகிற்தேரினில்  விண்முழுதும் சுற்றிவந்து
அள்ளித் தெறித்த கடல் ஆர்க்கும் அலைமேல்நடந்து
கொள்ளிக் கெரியு முடல் கொண்டிருந்த வேளை விட்டு
எள்ளை நிகர்த்த சிறு  இன்னலென்ப தேதறியா

வஞ்சமும் சூதுவினை வாழ்வழிக்கும் ஆட்சிமுறை
நஞ்சுச் சதி சூழ்ச்சி நல்லவரை கொல்வதெனும்
மிஞ்சும் துயரவழி மேதினியில் இல்லையென
விஞ்சும் பெருவாழ்வு வேண்டுமதை ஆக்கிவிடு

(இது என் தனிப்பட்ட கற்பனை. தவறுகள் இருப்பின் சுட்டிக் காட்டுக. நன்றி)

2 comments:

  1. அருமையான வரிகள்...

    இதேலென்ன தவறு இருக்கிறது...?

    தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

    ReplyDelete
  2. இங்க பாருடா! படைத்தவனுக்கே புத்தி சொல்லக் கிளம்பிட்டானையா.. என்று திட்டாமல் புத்திசொல்லுங்க என்பது என் உள்ளெண்ணம். தங்கள் வாழ்த்திற்கு எப்போதும்போல் நன்றிகள்!

    ReplyDelete