Friday, August 17, 2012

இழி பிறவி

( இது மென் உணர்வுக் கவிதையல்ல . முகம் சுழிக்க செய்யும் விரும்பினால் தொடரவும்)

கருவறைக்குள் மனிதமெழக் காணும்தேவியே - எம்மை
கழிவறைக்குள் உருளவைத்த கதையும் ஏனடி
பெரு வயிற்றுள் புரளவைத்த போதும்நீந்தியே - பின்பு
பெருமையற்ற விதமுலகில் பிறப்பதேனடி
அருவருப்பில் உருவமென்று அகந்தை நீங்கவோ - நீ
அகம்நினைத்து விதித்த விதம் அழகு பாரடி
தெருவிடத்தில் சிறுமைசெய்யும் தோற்றமாகவே - உயிர்
தரும் விதத்தை செய்ததுமேன் தருமமாமோடி

விறகு வைத்து தீயெரிய வெற்றுச் சாம்பலாய் -மாறி
வரும் உடம்பில் இனிமைசுகம் வைத்ததேனடி
உறவுவைத்து உயிர் களிக்கும் உணர்வும் ஏனடி - அதில்
உயிரெடுக்கும் வதைப்படுத்தும் உயிர்கள் பாரடி
கறந்தெடுத்த கழிவுகளின் மூட்டைதானடி - இந்தக்
கருமத்துக்கென் றெமைப் படைத்தாய் கனவுதானடி
அறுசுவையும் மலர்மணமும் அழகுசந்தனம் - என
அதைமறைக்கும் அறிவுதந்து ஏய்த்ததேனடி

பிறவிதனில் ஆண்டியுடன் பெரிய மன்னரும் - யாரும்
பேதமில்லா போதுமதைப் பின்னர்கொள்வதேன்
வறியவரின் உயிர்வதைத்து வாழ்வி லுன்னதம் - என்று
வசதிகொண்ட வலிமையினர் வாழுங் காட்சிஏன்
குறையும்கொண்ட குருதிப் பையில் குணங்கள் பூசியே - பல
கொடுமைகளைத் துணையெடுக்கும் கோலமமைத்தாய்
பிற உடலை அணைப்பதிலும் சுகங்கள் அளித்தே - அதை
பிரித்தழிக்கும் உணர்விலின்பம் பிறர்க்குவகுத்தாய்

வருவதெலாம் நோயும்பிணி வருத்தம்காணடி - அது
வரும் வரையும் கனவுசுகம் போதைதானடி
பெரும் அளவு கற்பனையின் மாயைவாழ்வடி- இவர்
பிறந்தவழி தொகை பெருக்கும் பேய்களாமடி
கருகும்வரை கழிவுகளின் மோகந்தானடி - இவர்
கைபிடித்த சதைகள்ரத்தம் கனியின் சாறோடி
உருவம் மட்டும் உரிக்கமுன்பு இன்ப ஊற்றடி - அதன்
உள்ளிருப்ப கைபடவே உயிர்கொல் நோவடி

செருப்பதிலும் கேடுகெட்ட சிரசு தந்தடி அது
செருக்குடனே உலவிவரச் செய்ததேனடி
சருகைவிடச் சரசரக்கும் சிறுமைமேனியாம் அதைச்
சரசமிடச் செய்யுணர்வில் செழுமைப் பூச்சடி
வருகையிலே துயரடைவும் வாழ்வும், விட்டவர்- வானம்
விரைகையிலே இன்பமெனும் உணர்வு கொள்வதே
இருக்குமிந்த உண்மைதனும் இயல்புமாற்றியே எம்மை
இருட்டில்விட்டு அகவிளக்கை அணைத்த தேனடி

1 comment: